‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – பண்டு
பொருள்
- முற்காலம்
- முன்
- தகாச்சொல்
- நிதி
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
புகுவேன் எனதே நின்பாதம் போற்றும் அடியா ருள்நின்று
நகுவேன் பண்டு தோள்நோக்கி நாண மில்லா நாயினேன்
நெகுமன் பில்லை நினைக்காண நீஆண் டருள அடியேனுந்
தகுவ னேஎன் தன்மையே எந்தாய் அந்தோ தரியேனே.
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து உரை
என் தந்தையே! அரிதானவனே! என்னை ஆட்கொண்ட நாளில் வெட்கம் இல்லாத நாய் போன்றவனாகிய யான், உன்னை வணங்குகின்ற அடியார் நடுவில் நின்று, மூர்த்தியாய் எழுந்தருளியிருந்த கோலமாகிய அடியார் உள்ளத்தைக் கவரும் தன்மையதாய் இருக்கும் உன் திருத்தோள்களின் அழகை நோக்கி, முன்னொரு காலத்தில், தகாச்சொற்களைச் சொல்லி ஒன்றுமே செய்யாதவனாக இருந்தேன்; உன்னை காண்பதற்கு உள்ளம் உருகுகின்ற அன்பு உடையவனாகவும் இல்லை; நீ ஆண்டு அருளுவதற்கு அடியேனும் தகுதியுடையனாக இல்லாதிருக்கும் இத் தன்மை அறிந்தும் என்னை ஆட்கொண்டாய். உன்னுடைய திருவடி எனக்கு உரியதே! அதைப் பிரிந்து வாழ முடியாது.
விளக்க உரை
- இறைவன் திருவடிக்காட்சி பெற்றோர், அவரைப் பிரிந்து வாழ ஒருப்படார்.
- ‘எனதே நின்பாதம்’ – இறைவன் திருவடியில் தமக்கு உள்ள உரிமை பற்றியது.
- ‘பண்டு தோள் நோக்கி நகுவேன்’ – இறைவன் குருவாய் வந்த பொழுது அவனது தோற்றப் பொலிவைக் கண்டு மகிழ்ந்து இருந்தது அல்லாமல் ஞானத்தைப் பெற்று அன்பு செய்யவில்லை.