‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – தெருள்
பொருள்
- தெரிந்துகொள்
- உணர்வுறு
- தெளிவு பெறு
- ஐயமற அறி
- பிரசித்தமாகு
- விளங்கு
- அறிவின் தெளிவு
- ஞானம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அருளுடைச் சுடரே அளிந்ததோர் கனியே
பெருந்திறல் அருந்தவர்க் கரசே
பொருளுடைக் கலையே புகழ்ச்சியைக் கடந்த
போகமே யோகத்தின் பொலிவே
தெருளிடத் தடியார் சிந்தையுட் புகுந்த
செல்வமே சிவபெரு மானே
இருளிடத் துன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து உரை
அருட் சுடரே! உண்ணத்தக்கவாறு இருக்கும் பக்குவப்பட்ட ஒப்பற்ற கனியே! பேராற்றலை உடைய சிறந்த தவத்தினை உடையவர்களுக்கு அரசனே! உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும் அழகியல் கலைகள் ஆனவனே! புகழ்ச்சிக்கு அடங்காத இன்பமே! யோகக் காட்சியில் சிறப்பாக விளங்குகின்றவனே! அறிவால் ஆராய்ந்து சிறப்பான இடத்தையுடைய அடியார்களது சித்தத்தில் தங்கிய செல்வமே! சிவபிரானே! இருள் நிறைந்த இந்த உலகத்தில் உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?
விளக்க உரை
- இறைவன் அடியார் மனத்தினை கோயிலாகக் கொண்டு அருளுவான் என்பது பற்றிய பாடல்
- பொருளுடைக் கலை – மெய்ந்நூல் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது; `அவற்றின் பொருளாய் இருப்பவனே` என்று விளக்கப்பட்டுள்ளது. மெய்யை தானாக உணர்தல் வேண்டும் என்பதால் இது விலக்கப்பட்டுள்ளது. (கற்றறிந்தோர் விளக்கினால் பெரு மகிழ்வு)
- இருள் இடம் – அறியாமையை உடைய இந்த உலகம்