‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – வல்லடைதல்
பொருள்
- விரைந்து அடைதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
இல்லானை எவ்விடத்தும் உள்ளான் தன்னை
இனிய நினையாதார்க் கின்னா தானை
வல்லானை வல்லடைந்தார்க் கருளும் வண்ணம்
மாட்டாதார்க் கெத்திறத்தும் மாட்டா தானைச்
செல்லாத செந்நெறிக்கே செல்விப் பானைத்
திருப்புன்கூர் மேவிய சிவலோ கனை
நெல்லால் விளைகழனி நீடூ ரானை
நீதனேன் என்னேநான் நினையா வாறே
தேவாரம் -ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்து உரை
எவரிடத்து இருந்தும் ஏற்றல் செய்யாத வினைகள் இல்லாதவனை, எல்லா இடங்களிலும் உள்ளவன் தன்னை, இனியவற்றை நினையாதவர்களுக்குத் துன்பமானவனை, வலிமையுடைவனை, தன்னை விரைந்து சரண் அடைந்தவர்களுக்கு அருளுவதில் வல்லவன் ஆனவனை, ஓரிடம் விட்டு மற்றோர் இடம் பெயர்தல் வேண்டாத, வீடுபேறு அடையும் வழியில் செலுத்துபவன் ஆகிய அப்பெருமான் தன்னைச் சரணடையாதவர்களுக்கு, தானும் அருள் செய்யாதவன் ஆகிய திருப்புன்கூர் மேவிய அச்சிவலோகனை, நெல்விளையும் வயல்களை உடைய நீடூரையும் உகந்ந்து அருளியிருப்பவனாகிய அவனை நீசனாகிய அடியேன் விருப்புற்று நினையாதவாறு என்னே!
விளக்க உரை
- இல்லான் என்பது குறித்து ‘எவ்விடத்தும் பரந்திருப்பினும் ஊனக்கண்களுக்குப் புலனாகாதவன்’ எனும் பொருளில் சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது. புலனாகாதவன் எனினும் இல்லாதவன் ஆகுதல் இல்லை. எனவே இது விலக்கப்பட்டுள்ளது. குரு உரை வண்ணம் பொருள் உணர்க.
- செல்லாத செந்நெறி – பிறப்பின்றி வீடுபெறும் நெறி