பிறக்கும் பொழுது கொடுவந்ததில்லை; பிறந்து மண்மேல் இறக்கும் பொழுது கொடுபோவதில்லை; இடை நடுவில் குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது இறக்கும் குலாமருக்கு என் சொல்வேன் கச்சி ஏகம்பனே!
பட்டினத்தார்
கருத்துஉரை
கச்சி ஏகப்பனே! செல்வமானது, பிறக்கும் போது கொண்டு வந்தது இல்லை. இந்தப் பூவுலகில் பிறந்து மண்ணில் இறக்கும் போது கொண்டு போவதில்லைலை. மனித வாழ்வில் இடையில் செல்வம் எனக் குறிக்கப்படும் இது சிவன் தந்தது என பிறருக்கு கொடுக்க அறியாது இறக்கும் உலோபிகளுக்கு என்ன சொல்வேன்?
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
அழித்தல் தொழில் என்பது என்ன? தனு முதலியவற்றை மாயையில் ஒடுக்குதல்
வெம்பினா ரரக்க ரெல்லா மிகச்சழக் காயிற் றென்று செம்பினா லெடுத்த கோயில் சிக்கெனச் சிதையு மென்ன நம்பினா ரென்று சொல்லி நன்மையான் மிக்கு நோக்கி அம்பினா லழிய வெய்தா ரவளிவ ணல்லூ ராரே
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
இராவணன் சீதாபிராட்டியை வஞ்சனையால் சிறை வைத்து மிகப் பெரிய குற்றம் இழைத்தான். அவனின் இந்த செயலால் செம்பினால் உறுதியாக அமைக்கப்பட்ட அவன் அரண்மனை உறுதியாக அழிந்துவிடும் என்று நல்ல மனம் கொண்ட அரக்கர்கள் எல்லோரும் வேண்ட. ` நம்மிடத்தில் நம்மை விரும்பினவர்களுக்கு நாம் நன்மை செய்ய வேண்டும்` என்றும், இராவணனால் துன்புறுவார்க்கு இன்புறும் நன்மை செய்யவேண்டும் என்றும் அந்த நல்ல மனம் கொண்ட அரக்கர்களை விருப்பத்துடன் நோக்கி, இராமபிரான் தனது அம்புகளால் இலங்கையை அழிப்பதற்கு அவன் உள்ளிருந்து அம்பு எய்தவர் அவளிவணல்லூர்ப் பெருமான் ஆவார்.
விளக்கஉரை
இந்த தலத்துப் பதிகங்கள் முழுவதும் இராவணன் வரலாறே கூறப்படுவதால் இதிலும் அவ்வாறே கொள்ளப்பட்டது .
இராமன் வாயிலாக அவனுக்கு உயிர்த்துணையாய் நின்று அம்பை விடுத்து அருளினார் என்னும் இராமாயண வரலாற்றின் உண்மைக்கு இது சான்று.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காத்தல் என்பது என்ன? தனு முதலியவற்றை ஒரு கால எல்லை வரை நிலை பெறச் செய்தல்
தெய்வீகமாகிய யானை முகம் கொண்டவ வினாயகர் புகழ்ந்து பேசிய தம்பியே, ஒளி பொருந்திய நெற்றியில் முன்றாவது கண்ணை உடையவரும், ஆகாசத்தில் வெள்ளி செம்பு தங்கமான மதிலை உடைய திரிபுரத்தை ஜெயித்த ஈசனின் மைந்தனே, தில்லை நடேசனராகிய சிவனின் குமாரனே, தெய்வயானை மணாளனே, செல்வமுடையார் அது நிலையாக இருக்காது என்பதைத் தெரிந்து கொண்டு தானதர்மங்களைச் செய்யாவிடில் எப்படிக் கடைத்தேறுவார்கள்?
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
படைத்தல் என்பது என்ன? உயிருக்கு தனு, புவன, போகங்களை உண்டாக்கும் தொழில்.
மயிலாப்பூரில், மாசிமகநாளில், கடலாடுதலைக் கொண்ட களிப்பொடு கபாலீச்சரம் என்னும் கோயிலில் எழுந்தருளி இருப்பவனும், வலிமை பொருந்திய விடையின் மேல் ஊர்ந்து வருபவனும் ஆகிய இறைவன் புகழ் பரவி அப்பெருமானது நடனமாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?
விளக்கஉரை
மாசிமகநாளன்று கடலாட்டு விழா நிகழ்வு குறித்தப் பாடல்
நெஞ்சில் கபடம், தீய எண்ணம் ஆகியவை இல்லாமல், மணம் மிக்கதும், சிறந்த மலர்கள் உடையதுமான பலவற்றையும் பறித்துக் கொண்டு வந்து இரவும் பகலும் தொழும் அடியார்களுக்கு, தலையில் மாலை பொருந்திய செஞ்சடை உடைய சிவபெருமான் வாழும் பதியாகிய மயிலாடுதுறை மேம்பட்ட தலமாகும். இது வள்ளல் தன்மை உடையவனாகிய அவன் உகந்தருளும் திருத்தலமும் ஆகும்.
விளக்கஉரை
மயிலாடுதுறைப் பெருமான் அடியார்களுக்கு வள்ளலாக அருள் வழங்குகிறான் என்பது குறிப்பு.
ஆகாய கங்கை, வெண்மையான மணியாகிய முத்தினையும், சங்கினையும், ஒதுக்கி மந்தார மலர்களைத் தள்ளுகின்ற அணையாகிய பெருமை பொருந்தியதும், இறைவன் சடையில் தங்குதலால், ‘சிறைநீர்’ எனப்படும் தேவ கங்கை எனும் அந்நீரில், பிறையாகிய தோணி சேர்வதற்கு இடமாகிய கொன்றை மாலையை உடையவனே! (உன்னோடு) தொடர்புற்று வாழும் பெருமை அடைந்து, பழிப்பற்ற உன் திருவடியின் பழமையான தொண்டினை அடைந்து, அஃது என்னிடத்தினின்றும் தவறிவிட, உன்னை நிந்தித்துக் கொண்டு, திகைத்து இருந்த என்னை விட்டுவிடுவாயோ?
விளக்கஉரை
இறைவன் வைதாரையும் வாழ வைப்பான் என்பது கூறுவதற்காக இயற்றப்பட்ட பாடல்
பழந்தொழும்பெய்தி விழ – பழமையான தொண்டினை அடைந்தும் வினையின் காரணமாக இழந்தேன்;
‘பழித்து விழித்திருந்தேனை – அதனை இழந்த துன்பத்தால் வருந்தி வைதேன்
கட்ட றுத்தெனை ஆண்டுகண் ணாரநீ றிட்ட அன்பரொ டியாவரும் காணவே பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை எட்டி னோடிரண்டும்அறி யேனையே.
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்துஉரை
இடப வாகனத்தை உடையனாகிய நீ, எண் மூர்த்திகளின் தத்துவங்களாகிய எட்டு தத்துவத்தையும் அர்த்த நாரீசுவரராகிய இரண்டு தத்துவத்தையும் அறிந்து கொள்ளாத என்னை, பாச கட்டுக்களைக் களைந்து, என்னை அடிமையாக ஆட்கொண்டாய். அது மட்டுமல்லாமல் காண்கின்ற கண்கள் மகிழ்வுறும்படி திருநீறு பூசிய உன் மெய் அடியார்கள் கூட்டத்தில் இருக்க நான் தகுதி வாய்ந்தவன் என்று உலகம் அறியும்படி என்னை அவர்களது சபையில் சேர்த்து வைத்தாய்.
விளக்கஉரை
இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட உயிர், சிறுமையுடைதாக இருந்தாலும் யிருந்தும் பெருமை பெறும் என்பதற்கான பாடல்
எட்டினோடிரண்டும் அறியேனையே – எட்டும் இரண்டும் – எட்டு என்னும் எண் தமிழில் ‘அ’ என்றும், ‘இரண்டு’ என்னும் எண், ‘உ’ என்றும் குறிக்கப்படும். அகரம் சிவனைக் குறிக்கும்; உகரம் சத்தியைக் குறிக்கும். சிவம் சத்திகளை அறியாத என்னை என்பதாகவும் விளக்கம் பெறும் ( எட்டினோடு இரண்டும் – பத்து – அஃதாவது, ய – உயிர் என்றும் பொருள் கூறுதல் உண்டு; அதாவது ஆன்மா இயல்பை அறியாதவன் )
பட்டி மன்றம் – வாதசபை – அறிவில்லாத என்னை அறிஞர் அவையிலே ஏறச் செய்தாய்’ என்று பொருள் கொள்ளுதலும் உண்டு.
பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில், நின் கழல் புணை கொண்டு, இழிகின்ற அன்பர்கள் ஏறினர், வான்; யான், இடர்க் கடல்வாய்ச் சுழி சென்று, மாதர்த் திரை பொர, காமச் சுறவு எறிய, அழிகின்றனன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
திருமுறை 8 – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்துஉரை
இறைவனே! (வினை பற்றி) பெரும் துன்பமாகிய வெள்ளத்தில் இழிவான அன்பர்கள் உன் திருவடி துணையைப் பற்றிக் கொண்டு வானில் வாழும் பெரும் பதவி அடைந்தார்கள்; அடியேன் துன்பமாகிய கடலில் சுழியில் அகப்பட்டு, மாதராகிய அலை மோத, காமமாகிய சுறாமீன் கவரும்படி அழிய நின்றேன். அடியேன் உன் அடைக்கலமே!
விளக்கஉரை
இறைவன் வினைபற்றி நின்ற பிறவிக் கடலுக்குத் தோணியாய் இருக்கிறான் என்பது விளக்கும் பாடல்
துன்ப வெள்ளம், பிறவிப் பெருங்கடல் – பிறவி; புயல் – வினை; மேகம் பற்றி மழை வருதல் போல் வினைபற்றி தொடரும் பிறவிகள்; துன்பத்தைச் சொரிகின்ற மேகத்தின் மூலம் உண்டாகும் வெள்ளம் என்றும் துன்ப வெள்ளமே` என்பது மறைபொருள்
இழிகின்ற அன்பர்கள் – என்னோடு ஒன்றாக இருந்த அடியார்கள் கரை ஏறிவிட்டார்கள்; நான் இன்னும் கரை ஏறவில்லை எனும் பொருள் பற்றியது.
உடல் தோலின் சுருக்கம் கொண்டது பற்றி மாதரும், அலையும். (சில இடங்களில் அலைதலை உடைதல் பற்றி மாதரும், அலையும் என்று விளக்கப்பட்டிருக்கிறது)
சுறாவின் வாய்ப்பட்டோர் திரும்ப முடியாதது போல, காமத்தின் வசப்பட்டோரும் திரும்ப முடியாது
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – பொருப்பு
பொருள்
மலை
பக்கமலை
கொல்லி மலை
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே எறிதரங்கம் உடுக்கும் புவனம் கடந்து நின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழகு ஒழுக எழுதிப் பார்த்து இருக்கும் உயிர் ஓவியமே மதுகரம்வாய் மடுக்கும் குழற் காடேந்தும்இள வஞ்சிக் கொடியே வருகவே மலயத் துவசன் பெற்ற பெரு வாழ்வே வருக வருகவே
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்
கருத்துஉரை
இமய மலையில் விளையாடும் பெண் யானையைப் போன்றவளும், உலகத்தைக் கடந்த ஒப்பற்றவனாகிய இறைவனின் திரு உள்ளத்தில் எழுதிப் பார்த்திருக்கும் உயிர் ஓவியம் போன்றவளும், மதுவை வாயாகிய கரத்தால் உண்பவை ஆகிய வண்டுகள் தேனைக் குடித்துக் கூந்தலில் துயில் கொள்ளுவதைப் போன்றதுமான கூந்தலாகிய காட்டைத் தாங்கி நிற்கும் வஞ்சிக் கொடி போன்றவளும், மலயத்துவசன் பெற்றெடுத்த பெருவாழ்வுக்கு நிகரானவளும் ஆன மீனாட்சியே வருக வருக.
யான்றானெ னுஞ்சொல் லிரண்டுங் கெட்டாலன்றி யாவருக்குந் தோன்றாது சத்தியந் தொல்லைப் பெருநிலஞ் சூகரமாய்க் கீன்றான் மருகன் முருகன் க்ருபாகரன் கேள்வியினாற் சான்றாரு மற்ற தனிவெளிக் கேவந்து சந்திப்பதே.
சொல் பிரிவு
யான், தான் எனும் சொல் இரண்டும் கெட்டால் அல்லது யாவருக்கும் தோன்றாது சத்தியம் தொல்லைப்பெருநிலம் சூகரம் ஆய் கீன்றான் மருகன் முருகன் கிருபாகரன் கேள்வியினால் சான்று ஆரும் அற்ற தனி வெளிக்கே வந்து சந்திப்பதே.
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்துஉரை
கேள்விகளால் எல்லாவற்றையும் சாதிக்கலாம் என்று நினைப்பவர்களுக்கு இறை அனுபவம் வராது. சொல் எனும் சுட்டு என்ற ஒன்று இருக்கும் வரை இன்ப அநுபூதி இல்லை. சுட்டிக்காட்ட பயன்பாடு உரிய சொற்களில் ‘யான்’ எனும் தன்னிலை சொல்லும், ‘தான்’ என்னும் படர்க்கை சொல்லும் அடங்கிய பிறகே சத்தியமாகிய அனுபவம் தலைப்படும். அப்பொழுது பழமை பொருந்திய பெரிய பூமியை வராகமாய் உருவெடுத்து பிளந்தவராகிய திருமாலின் திருமருகனும் முருகனின் கருணைக்கு உறைவிடமாகிய கிருபாகரனது உபதேசக் கேள்வியினால் சாட்சி ஒருவரும் இல்லாத ஒப்பற்ற ஞான வெளியில் திருமுருகப்பெருமானின் திருவருளால் சொல் இறந்த அனுபவமாகிய முருகன் தனி வெளியே வந்து சந்திப்பது எனும் அனுபவம் கிட்டும்.
விளக்கஉரை
‘யான் ஆகிய என்னை விழுங்கி, வெறும் தானாய் நிலைநின்றது தற்பரமே எனும் கந்தர் அநுபூதிப்பாடல் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
இரண்டற்ற அத்துவித நிலையில் யான் தான் என்னும் சொற்களுக்கு இடம் இல்லாமல் இரண்டும் ஒன்றாகி சொல்ல அற்ற அனுபவ நிலை உண்டாகிறது.
முதலை பிடியில் சிக்கிய கஜேந்திரனின் அபயக் குரலைக் கேட்டவுடன் அங்கு நேரில் தோன்றி யானைக்கு மோட்சம் அளித்தவனும், சங்கை ஊதுபவனும், கரிய மேகம் போன்றவனும், பட்சிகளின் அரசனான கருடன் மேல் ஏறி வந்தவனும், இவ் உலகின் தலைவனுமாகிய திருமால் துதித்து ஏத்தும் மருமகனே! பரந்த சடையை உடையவனும், கடவுள் உண்டென்று நம்புவோர்க்கு அதன் பொருளாகவும் உள்ள சிவபெருமான் அன்பு கொள்ளும் வகையில், அரக்கர்கள் கடலில் கூச்சலிட்டு அலறும்படிச் செலுத்திய வேலால் அவர்கள் அழியும்படி செய்வித்து, தன்னைப் பணிந்த பொன்னுலகத்தில் வாழும் தேவர்களின் தலைவனான இந்திரனை மீண்டும் குடி ஏற்றிய பெருமாளே! ‘வீட்டில் கிடக்கும் பிணத்தை அங்கேயே இருக்க விடாமல், அழுகிப் போவதற்கு முன்னமேயே வீட்டுக்கு எதிரில் சிறப்புடன் பாடையை அழகாகக் கட்டுங்கள்; நன்கு கட்டப்பட்ட பறை வாத்தியங்களை வரவழையுங்கள்; அழுகையை நிறுத்துங்கள்; பிணம் கெட்டு அழியும் முன்னர் உடலை எடுத்துச் செல்லுங்கள்’ என்று கூறி சுடுகாட்டில் தீயின் இடையே கொண்டு போய்ச் சுற்றத்தார் சுட்டு எரிக்கும் அந்த நாளில், வேடுவர் குலத்தைச் சேர்ந்த, உத்தம குணம் உடைய வள்ளியோடு மயில் மேல் ஏறி விரைவாக என் உயிரைக் காப்பதற்கு வரவேண்டும்.
வறுமையால் இளைத்தவர்க்குப் பெருகும் படியான இன்பம் அளித்து இவ்வுலகத்துள் இருக்கும்படி அருள்புரிபவன். என்னையும் ஆட்கொடு அருளும் உரிமையன். நிலங்கள் எங்கும் செல்வத்தை குறிக்கும் மாடி வீடுகள் சூழ்ந்த திருமணஞ்சேரியில் உண்மைப்பொருளாய் விளங்குபவன். இவ்வாறான அவனை விரும்பி வழிபடுபவர்கள் வினைகள் நீங்கும்.
வினைகளை அழிக்கும் கடவுளது மலை என்றும் திருக்கயிலை மலைக்குப் பெயரானதும் ஆன நொடித்தான் மலை எனும் தலத்தில் வீற்றிருந்தருளும் முதல்வன், தானே முன்பு என்னை இவ்வுலகில் படைத்தான்; அக் குறிப்பினை உணர்ந்து அவனது பொன்போன்ற திருவடிகளுக்கு, என்னளவில் பாடல்கள் செய்தேன் ! நாய் போன்ற இழிவான என்னின் அத்தகைய குறையை எண்ணாது, என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்து எண்ணி, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு, பெரிய யானை ஊர்தியை எனக்கு அளித்து, எனது உடலொடு உயிரை உயர்வுபெறச் செய்தான்; என்னே அவனது திருவருள்!
விளக்கஉரை
எண்ணில்லாத தேவர் யாவரையும் வந்து எதிர்கொள்ளுமாறு அருள் செய்தல் – கடைப்பட்ட எனக்கும் அருளினான்; அவ்வண்ணமே உங்களுக்கும் அருளுவான் எனும் பொருளில் இயற்றப்பட்டது.
உலகாயத மதத்தினை முன்வைத்து அதன் போதனையால் தம் புகழை விரும்பி நிற்பார்; மண்ணவர், விண்ணவர், முத்தேவர் முதலிய யாவர்களாலும் தொழப்படுவானாகிய சிவபெருமானைப் பாடிப் பரவிப் பணியவும் மாட்டார். தம்மிடம் வந்து யாசித்தவர்களுக்குச் சிறிதும் கொடுக்க மாட்டார்; பொருள் அற்று இறந்தவர்களுக்கு ஈயின் தலையளவு ஆன சிறுபொருளைக்கூட கொடுக்கவும் மாட்டார்கள். வழிப்போக்கர் தங்கி சிரமப் பரிகாரம் செய்து செய்ய சரீரப் பிரயாசை கொண்டு குடத்தினால் நீர்விட்டுச் சோலைகளை வளர்க்கவும் செய்ய மாட்டார்கள்; நீர் எடுத்து வந்து எல்லார்க்கும் நல்ல பல பயன் தரும் சோலைகளை வளர்க்க மாட்டார்கள். இத்தகைய நல்ல எண்ணம் கொண்டவர்களே! நரகத்தில் நிலையான வாசம் விரும்பியுள்ளீர்களோ?
விளக்கஉரை
நல்நெஞ்சினீர் – வஞ்சப் புகழ்ச்சி.
நல்லறம் புரியாது நாளை வீணாளாக்கிச் சாவை நெருங்கினீரே என்பது பற்றியது
வேதங்களின் இறுதிப் பகுதியாக உள்ள உபநிடதமாகிய வேதாந்தமும், அறுதியான முடிவான கொள்கையும் உண்மையும் ஆகிய சித்தாந்தமும் சமமாக கருதக்கூடிய சிறந்த நிலையைப் பெற்ற ஞானத்தினையுடைய சித்தர் கூட்டமே! நூலை மட்டும் கற்றவர்களை விட கல்லாதவர்களே மிகவும் நல்லவர்கள் ஆவார்; நூல்களைக் கற்றும் அதன் படி நடக்காமல் இருக்கும் அறிவில்லாத ஊழ்வினைப் பயனை என்ன என்று சொல்லுவேன்: முக்தி என்றும் வீடுபேறு என்றும் அழைக்கப்படும் கைவல்ய பதவியைக் கொடுக்கின்ற ஞானநீதி ஆகிய மெய்யுணர்வு முறைமைகளைப் பற்றி சொன்னால் கர்மமே முதன்மையானது என்று நிலை நாட்டுவேன். ஒருவன் கருமத்தை நிலைநிறுத்தினால் முன் சொன்ன ஞானமே முதன்மையானது என்று நிலை நாட்டுவேன். வடமொழியிலே புலவனான ஒருத்தன் (வாதுக்கு) வந்தால் தமிழிலே சிறப்பனைத்தும் முன்னமே வந்துவிட்டது என்று விவரித்துச் சொல்லுவேன். வல்லமை பெற்ற தமிழ் அறிஞர் ஒருவர் வந்தாலோ, அங்கே வடமொழியின் சிறப்பு பற்றிய வாக்கியங்கள் எடுத்துரைப்பேன். கருத்து அறிதல் பொருட்டு அன்றியும், நியாயமாக வெல்லாமல் எவருக்கும் அச்சத்தைத் தரக்கூடிய இந்த வித்தையானது எனக்கு வீடுபேற்றினைக் கொடுக்குமோ?
புன்புலால் உடம்பின் அசுத்தமும் இதனில் புகுந்துநான் இருக்கின்ற புணர்ப்பும் என்பொலா மணியே எண்ணிநான் எண்ணி ஏங்கிய ஏக்கம்நீ அறிவாய் வன்புலால் உண்ணும் மனிதரைக் கண்டு மயங்கிஉள் நடுங்கிஆற் றாமல் என்பெலாம் கருக இளைத்தனன் அந்த இளைப்பையும் ஐயநீ அறிவாய்.
திருவருட்பா – இராமலிங்க அடிகள் எனும் வள்ளலார்
கருத்துஉரை
துளைக்கப் படாத மணியாகிய என் உயிராகிய பெருமானே! புலால் மணக்கும் இந்த உடம்பிலுள்ள அசுத்தத்தையும், இந்த உடம்பினுள் கலந்திருக்கின்ற மாயையும் பலகாலம் நினைந்து நினைந்து நான் வருந்தி ஏங்கிய ஏக்கத்தையும் நீ அறிந்திருக்கின்றாய்; கொடுமையை தறுவிக்கும் புலால் உண்ணும் மனிதர்களைக் கண்டு, அறிவு மயங்கி, மனம் நடுங்கி அக்கொடுமையை ஆற்றாமல் என்னுடம்பின் எலும்பெல்லாம் கருகும்படி நான் இளைத்திருக்கின்ற இளைப்பையும் நீ நன்கு அறிவாயன்றோ. (அறிந்தாய் – மறை பொருள்).
விளக்கஉரை
புலால் வெறுக்கும் தன்மை எடுத்துரைத்தல்
புன் புலால் உடம்பு – புலால் நாறும் பொருள்களில் இருந்து உடம்பு தோன்றுவதால் உடலில் எழும் நாற்றம்
பசுவினடத்திலிருந்து உண்டாகும் பால், தயிர், நெய், கோமியம் மற்றும் சாணம் என்ற ஐந்துபொருள்களைக்கொண்டு மந்திர பூர்வகமாகச் சேர்க்கப்படுவதாகிய பஞ்சகவ்வியத்தில் நீராடுபவனே! திருமாலும் பிரமனும் ஒன்று சேர்ந்து முயன்றும் காண இயலாத வகையில் ஜோதியாக நின்றவனே! நீரை ஏந்திய மேகங்கள் அசைகின்ற உச்சியை உடைய அளவு வளர்ந்த பாக்குமரங்கள் அழகு செய்யும் அண்ணாமலையில் உள்ளவனே! வெண்மை நிற காளைவாகனனே! உன்னுடைய மலர் போன்ற பாதங்களை அடியேன் மறவேன்.