‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – ஏற்றினை
பொருள்
- இடப வாகனத்தை உடையன்
- ஏறச் செய்தாய்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
கட்ட றுத்தெனை ஆண்டுகண் ணாரநீ
றிட்ட அன்பரொ டியாவரும் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டி னோடிரண்டும்அறி யேனையே.
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து உரை
இடப வாகனத்தை உடையனாகிய நீ, எண் மூர்த்திகளின் தத்துவங்களாகிய எட்டு தத்துவத்தையும் அர்த்த நாரீசுவரராகிய இரண்டு தத்துவத்தையும் அறிந்து கொள்ளாத என்னை, பாச கட்டுக்களைக் களைந்து, என்னை அடிமையாக ஆட்கொண்டாய். அது மட்டுமல்லாமல் காண்கின்ற கண்கள் மகிழ்வுறும்படி திருநீறு பூசிய உன் மெய் அடியார்கள் கூட்டத்தில் இருக்க நான் தகுதி வாய்ந்தவன் என்று உலகம் அறியும்படி என்னை அவர்களது சபையில் சேர்த்து வைத்தாய்.
விளக்க உரை
- இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட உயிர், சிறுமையுடைதாக இருந்தாலும் யிருந்தும் பெருமை பெறும் என்பதற்கான பாடல்
- எட்டினோடிரண்டும் அறியேனையே – எட்டும் இரண்டும் – எட்டு என்னும் எண் தமிழில் ‘அ’ என்றும், ‘இரண்டு’ என்னும் எண், ‘உ’ என்றும் குறிக்கப்படும். அகரம் சிவனைக் குறிக்கும்; உகரம் சத்தியைக் குறிக்கும். சிவம் சத்திகளை அறியாத என்னை என்பதாகவும் விளக்கம் பெறும் ( எட்டினோடு இரண்டும் – பத்து – அஃதாவது, ய – உயிர் என்றும் பொருள் கூறுதல் உண்டு; அதாவது ஆன்மா இயல்பை அறியாதவன் )
- பட்டி மன்றம் – வாதசபை – அறிவில்லாத என்னை அறிஞர் அவையிலே ஏறச் செய்தாய்’ என்று பொருள் கொள்ளுதலும் உண்டு.