‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – கைவல்யம்
பொருள்
- கைவல்லியம்
- ஏகமான தன்மை
- மோட்சம்
- அனுகூலம்
- நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
கல்லாத பேர்களே நல்லவர்க ணல்லவர்கள் ;
கற்றுமறி வில்லாதவென்
கர்மத்தை என்சொல்கேன் ? மதியையென் சொல்லுகேன் ?
கைவல்ய ஞான நீதி
நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று
நாட்டுவேன் ; கர்மமொருவன்
நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று
நவிலுவேன் ; வடிமொழியிலே
வல்லா னொருத்தன்வர வுந்த்ரா விடத்திலே
வந்ததா விவகரிப்பேன் ;
வல்லதமி ழறிஞர்வரி னங்ஙனே வடமொழியின்
வசனங்கள் சிறிதுபுகல்வேன் ;
வெல்லாம லெவரையு மருட்டிவிட வகைவந்த
வித்தையென் முத்திதருமோ ?
வேதாந்த சித்தாந்த சமரசநன் னிலைபெற்ற
வித்தக சித்தர்கணமே!
தாயுமானவர் பாடல்கள்
கருத்து உரை
வேதங்களின் இறுதிப் பகுதியாக உள்ள உபநிடதமாகிய வேதாந்தமும், அறுதியான முடிவான கொள்கையும் உண்மையும் ஆகிய சித்தாந்தமும் சமமாக கருதக்கூடிய சிறந்த நிலையைப் பெற்ற ஞானத்தினையுடைய சித்தர் கூட்டமே! நூலை மட்டும் கற்றவர்களை விட கல்லாதவர்களே மிகவும் நல்லவர்கள் ஆவார்; நூல்களைக் கற்றும் அதன் படி நடக்காமல் இருக்கும் அறிவில்லாத ஊழ்வினைப் பயனை என்ன என்று சொல்லுவேன்: முக்தி என்றும் வீடுபேறு என்றும் அழைக்கப்படும் கைவல்ய பதவியைக் கொடுக்கின்ற ஞானநீதி ஆகிய மெய்யுணர்வு முறைமைகளைப் பற்றி சொன்னால் கர்மமே முதன்மையானது என்று நிலை நாட்டுவேன். ஒருவன் கருமத்தை நிலைநிறுத்தினால் முன் சொன்ன ஞானமே முதன்மையானது என்று நிலை நாட்டுவேன். வடமொழியிலே புலவனான ஒருத்தன் (வாதுக்கு) வந்தால் தமிழிலே சிறப்பனைத்தும் முன்னமே வந்துவிட்டது என்று விவரித்துச் சொல்லுவேன். வல்லமை பெற்ற தமிழ் அறிஞர் ஒருவர் வந்தாலோ, அங்கே வடமொழியின் சிறப்பு பற்றிய வாக்கியங்கள் எடுத்துரைப்பேன். கருத்து அறிதல் பொருட்டு அன்றியும், நியாயமாக வெல்லாமல் எவருக்கும் அச்சத்தைத் தரக்கூடிய இந்த வித்தையானது எனக்கு வீடுபேற்றினைக் கொடுக்குமோ?