‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – நொதி
பொருள்
- அருவருக்கத்தக்கசேறு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
அடியில்வி டாப்பிண மடையவி டாச்சிறி
தழியுமுன் வீட்டுமு …… னுயர்பாடை
அழகொடு கூட்டுமி னழையுமின் வார்ப்பறை
யழுகையை மாற்றுமி …… னொதியாமுன்
எடுமினி யாக்கையை யெனஇடு காட்டெரி
யிடைகொடு போய்த்தமர் …… சுடுநாளில்
எயினர்கு லோத்தமை யுடன்மயில் மேற்கடி
தெனதுயிர் காத்திட …… வரவேணும்
மடுவிடை போய்ப்பரு முதலையின் வாய்ப்படு
மதகரி கூப்பிட …… வளையூதி
மழைமுகில் போற்கக பதிமிசை தோற்றிய
மகிபதி போற்றிடு …… மருகோனே
படர்சடை யாத்திகர் பரிவுற ராட்சதர்
பரவையி லார்ப்பெழ …… விடும்வேலாற்
படமுனி யாப்பணி தமனிய நாட்டவர்
பதிகுடி யேற்றிய …… பெருமாளே.
திருப்புகழ் – அருணகிரிநாதர்
கருத்து உரை
முதலை பிடியில் சிக்கிய கஜேந்திரனின் அபயக் குரலைக் கேட்டவுடன் அங்கு நேரில் தோன்றி யானைக்கு மோட்சம் அளித்தவனும், சங்கை ஊதுபவனும், கரிய மேகம் போன்றவனும், பட்சிகளின் அரசனான கருடன் மேல் ஏறி வந்தவனும், இவ் உலகின் தலைவனுமாகிய திருமால் துதித்து ஏத்தும் மருமகனே! பரந்த சடையை உடையவனும், கடவுள் உண்டென்று நம்புவோர்க்கு அதன் பொருளாகவும் உள்ள சிவபெருமான் அன்பு கொள்ளும் வகையில், அரக்கர்கள் கடலில் கூச்சலிட்டு அலறும்படிச் செலுத்திய வேலால் அவர்கள் அழியும்படி செய்வித்து, தன்னைப் பணிந்த பொன்னுலகத்தில் வாழும் தேவர்களின் தலைவனான இந்திரனை மீண்டும் குடி ஏற்றிய பெருமாளே! ‘வீட்டில் கிடக்கும் பிணத்தை அங்கேயே இருக்க விடாமல், அழுகிப் போவதற்கு முன்னமேயே வீட்டுக்கு எதிரில் சிறப்புடன் பாடையை அழகாகக் கட்டுங்கள்; நன்கு கட்டப்பட்ட பறை வாத்தியங்களை வரவழையுங்கள்; அழுகையை நிறுத்துங்கள்; பிணம் கெட்டு அழியும் முன்னர் உடலை எடுத்துச் செல்லுங்கள்’ என்று கூறி சுடுகாட்டில் தீயின் இடையே கொண்டு போய்ச் சுற்றத்தார் சுட்டு எரிக்கும் அந்த நாளில், வேடுவர் குலத்தைச் சேர்ந்த, உத்தம குணம் உடைய வள்ளியோடு மயில் மேல் ஏறி விரைவாக என் உயிரைக் காப்பதற்கு வரவேண்டும்.