‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – நொடித்தல்
பொருள்
- சொல்லுதல்
- கோள்சொல்லுதல்
- பழித்தல்
- அழித்தல்
- கட்டுக்குலைதல்
- நடக்கும்போது கால் சிறிது வளைதல்
- ஒடித்தல்
- உறுப்பாட்டுதல்
- பால் முதலியன சுரத்தல்
- இழப்படைதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
தானெனை முன்படைத்தான் அத
றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயி
னேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்த
யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்
தான்மலை உத்தமனே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
கருத்து உரை
வினைகளை அழிக்கும் கடவுளது மலை என்றும் திருக்கயிலை மலைக்குப் பெயரானதும் ஆன நொடித்தான் மலை எனும் தலத்தில் வீற்றிருந்தருளும் முதல்வன், தானே முன்பு என்னை இவ்வுலகில் படைத்தான்; அக் குறிப்பினை உணர்ந்து அவனது பொன்போன்ற திருவடிகளுக்கு, என்னளவில் பாடல்கள் செய்தேன் ! நாய் போன்ற இழிவான என்னின் அத்தகைய குறையை எண்ணாது, என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்து எண்ணி, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு, பெரிய யானை ஊர்தியை எனக்கு அளித்து, எனது உடலொடு உயிரை உயர்வுபெறச் செய்தான்; என்னே அவனது திருவருள்!
விளக்க உரை
- எண்ணில்லாத தேவர் யாவரையும் வந்து எதிர்கொள்ளுமாறு அருள் செய்தல் – கடைப்பட்ட எனக்கும் அருளினான்; அவ்வண்ணமே உங்களுக்கும் அருளுவான் எனும் பொருளில் இயற்றப்பட்டது.