‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – பொழிதல்
பொருள்
- சொரிதல்
- ஈதல்
- மிகச் செலுத்துதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
மூலம்
பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத் தில்நின்கழற்புணைகொண்
டிழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான்இடர்க்கடல்வாய்ச்
சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச்சுறவெறிய
அழிகின் றனன்உடை யாய்அடி யேன்உன்அடைக்கலமே.
சொல் பிரிவு
பொழிகின்ற துன்பப் புயல் வெள்ளத்தில், நின் கழல் புணை கொண்டு,
இழிகின்ற அன்பர்கள் ஏறினர், வான்; யான், இடர்க் கடல்வாய்ச்
சுழி சென்று, மாதர்த் திரை பொர, காமச் சுறவு எறிய,
அழிகின்றனன்; உடையாய்! அடியேன் உன் அடைக்கலமே.
திருமுறை 8 – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து உரை
இறைவனே! (வினை பற்றி) பெரும் துன்பமாகிய வெள்ளத்தில் இழிவான அன்பர்கள் உன் திருவடி துணையைப் பற்றிக் கொண்டு வானில் வாழும் பெரும் பதவி அடைந்தார்கள்; அடியேன் துன்பமாகிய கடலில் சுழியில் அகப்பட்டு, மாதராகிய அலை மோத, காமமாகிய சுறாமீன் கவரும்படி அழிய நின்றேன். அடியேன் உன் அடைக்கலமே!
விளக்க உரை
- இறைவன் வினைபற்றி நின்ற பிறவிக் கடலுக்குத் தோணியாய் இருக்கிறான் என்பது விளக்கும் பாடல்
- துன்ப வெள்ளம், பிறவிப் பெருங்கடல் – பிறவி; புயல் – வினை; மேகம் பற்றி மழை வருதல் போல் வினைபற்றி தொடரும் பிறவிகள்; துன்பத்தைச் சொரிகின்ற மேகத்தின் மூலம் உண்டாகும் வெள்ளம் என்றும் துன்ப வெள்ளமே` என்பது மறைபொருள்
- இழிகின்ற அன்பர்கள் – என்னோடு ஒன்றாக இருந்த அடியார்கள் கரை ஏறிவிட்டார்கள்; நான் இன்னும் கரை ஏறவில்லை எனும் பொருள் பற்றியது.
- உடல் தோலின் சுருக்கம் கொண்டது பற்றி மாதரும், அலையும். (சில இடங்களில் அலைதலை உடைதல் பற்றி மாதரும், அலையும் என்று விளக்கப்பட்டிருக்கிறது)
- சுறாவின் வாய்ப்பட்டோர் திரும்ப முடியாதது போல, காமத்தின் வசப்பட்டோரும் திரும்ப முடியாது