சைவத் திருத்தலங்கள் 274 – திருவலிதாயம்

தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள்
·   சிவன் சுயம்பு மூர்த்தி
·   பாரத்துவாஜ முனிவர் கருங்குருவி (வலியன்) யாக வந்து வழிபட்ட தலம்
·   இராமன் வழிபட்டத் தலம்
·   மார்க்கண்டேய மகரிஷி உபதேசத்தின்படி வியாழன் தன் தவறு உணர்ந்து  சிவனை வணங்கி பாவன் நீங்கப் பெற்ற தலம்
·   பிரம்மாவின் பெண்கள் கமலியும், வல்லியும் இறைவனை பூஜித்து விநாயகரை மணம் புரிந்த தலம்
·   கஜ பிருஷ்ட விமானம்
 
 
 
 
 
தலம்
திருவலிதாயம்
பிற பெயர்கள்
பாடி
இறைவன்
வலிதாய நாதர், வல்லீஸ்வரர், திருவல்லீஸ்வரர், திருவலிதமுடையநாயனார்
இறைவி
ஜகதாம்பாள், தாயம்மை,
தல விருட்சம்
பாதிரி, கொன்றை
தீர்த்தம்
பரத்துவாஜ தீர்த்தம்
விழாக்கள்
சித்திரைபிரம்மோற்ஸவம், தைகிருத்திகை, குரு பெயர்ச்சி
மாவட்டம்
சென்னை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7 மணி முதல் 12 மணி வரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
அருள்மிகு திருவல்லீஸ்வரர் திருக்கோயில்,                         
பாடி, சென்னை – 600050.
+91-44 -2654 0706
பாடியவர்கள்
 திருஞானசம்மந்தர், அருணகிரியார்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னை  ‘பாடி’க்கு அருகில். டி.வி.எஸ், லூகாஸ்’ நிறுத்தத்தில் இருந்து மிக அருகில்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 254வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 21வது தலம்.
திருவல்லீஸ்வரர்
 
 
 
தாயம்மை

பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    003
திருமுறை எண்               1

பாடல்
 

பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல்தூவி

ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்தவுயர்சென்னி
மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலிதாயம்
சித்தம்வைத்தவடி யாரவர்மேலடை யாமற்றிடர்நோயே.
பொருள்
பல சிவனடியார்களும் பொலிவுடன் விளங்கும் மலர்களை உள்ளங் கையினில் ஏந்தி, வார்த்தைகளால் மாறுபாடு இல்லாமல் மந்திரங்கள் சொல்லி, நீர் வார்த்து , ஊமத்தை மலர்களைச் சூடி பூஜிக்கிறார்கள்.  அவர்களை உயர் அடையச் செய்யும் பெருமான் உடன் உறையும் வலிதாயம் என்ற தலத்தை மனதில் வைத்த அடியவர்களை துன்பம் என்ற நோய் தாக்காது.
 
வலிதாயத்தை மனத்தால் நினைத்த அடியவர்களை துன்பம் தாக்காது என்பது துணியு.
கருத்து
பத்தர் – சிவன் அடியார்காள்
பொலியம்மலர்  – பொலிவுடன் விளங்கும் மலர்
புனல் தூவி  – நீர் இட்டு
பிரியாதுறை கின்ற – உமையம்மையை பிரியாதிருக்கும் சிவன்
பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    1ம் திருமுறை 
பதிக எண்                    003
திருமுறை எண்               8
பாடல்

கடலினஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநடமாடி
அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மான்அமர்கோயில்
மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலிதாயம்
உடலிலங்குமுயி ருள்ளளவுந்தொழ வுள்ளத்துயர்போமே.
பொருள்


திருபாற்கடலைக் கடந்த பொழுது எழுந்த நஞ்சினை உண்டு தேவர்கள் தொழுது ஏத்தும் படி செய்து நடனம் ஆடி, வலிமை மிக்க இலங்கை செருக்குடன் கூடிய ஆற்றலை அழித்து பின் அவனுக்கு அருள் புரிந்த இறைவன் உறையும் கோயில்களை உடையதும், தேன் சுவை போன்ற கமுகு மற்றும் பலா மரங்களை உடையதுமான வலிதாயம் என்ற இத்தலத்தை வணங்குபவர்களில் துயரானது உடலில் உயிர் வரை இருக்கும் துன்பம் என்ற நிலையை நீக்கும்.

Photo : Dinamalar

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – வடதிருமுல்லைவாயில்

தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள்
 
·   சிவன் சுயம்பு மூர்த்தி – தீண்டாத் திருமேனி
·   வாணன், ஒணன் எனும் அசுரர்களும் முனிவர்களிக்குமான மனக்கசப்புகள். முனிவர்களுக்காக தொண்டை மன்னன் போர். அதலால் தோல்வி. பட்டத்து யானை முல்லைக் கொடியில் மாட்டிக் கொள்ளுதல். அதன் பொருட்டு மன்னன் கொடிகளை நீக்குதல். அதனால் ரத்தம் வெளியேற்றம். தன் நிலை குறித்து வருந்தி மரணம் விரும்பி மரணிக்க எண்ணுதல். இறைவன் காட்சி
·   தலையில் வெட்டுப்பட்ட காயங்களுடன் காட்சி. ஆதலால் வருட முழுவதும் சந்தனக் காப்பு. சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் திருக்காப்பு நீக்கப் படும்
·   நந்தி அசுரர்களை அழிக்க மன்னனுடன் சென்றதால் சுவாமிக்கு எதிர் திசையில் உள்ளது.
·   அசுரர்கள் வைத்திருந்த வெள்ளெருக்கு மரங்கள் தூண்களாக
·   ப்ரமன் வழிபட்ட தலம்
·   கண்ணிழந்த சூரியன் நற்கதி அடைந்த இடம்
·   சந்திரன் (ஷயரோகம்) சாபம் நீங்கப் பெற்ற இடம்
·   27 நட்சத்திரங்கள் நற்கதி அடைந்த இடம்
·   வசிஷ்டர் காம தேனுவைப் பெற்ற இடம்
·   பிருகு முனிவர் தவம் செய்து ரத்தினங்களை மழையாகப் பெற்ற இடம்
·   துர்வாசர் கோபம் நீங்கிய இடம்
·   இந்திராணி பூசை செய்து இந்திரனை அடைந்த இடம்
·   ஐராவதம் துயர் நீங்கப் பெற்றத் தலம்
·   தேவமித்திரன் , சம்புதாசன் , சித்திரதன்மன் – இறைவனை அடைந்து முக்தி அடைந்த தலம்
·   சுந்தரர் கண்பார்வை இழந்த பின் முதலில் தரிசனம் செய்த தலம்.
·   நவக்கிர சன்னதி இல்லை
·   பௌர்ணமி தின வலம் வருதல் – மூன்று தேவியர்களில் ஒரு தேவி
·   லவ குசர்கள் வணங்கிய சிவன் – குசலபுரேஸ்வரர்
·   கஜ பிருஷ்ட விமானம்
தலம்
வடதிருமுல்லைவாயில்
பிற பெயர்கள்
திருமுல்லைவாயில், மணிநகர்
இறைவன்
மாசிலாமணீஸ்வரர், நிர்மலமணீஸ்வரர், பாசுபதேஸ்வரர்,
இறைவி
கொடியிடை நாயகி
தல விருட்சம்
முல்லை
தீர்த்தம்
அக்னி தீர்த்தம், கல்யாண தீர்த்தம், சுப்ரமண்ய தீர்த்தம், மானத தீர்த்தம், குகனருந்தடம், அயிராவத தீர்த்தம், இஷ்டசித்தி தீர்த்தம், மங்கல தீர்த்தம், அரதனத் தீர்தம், சிவஞான தீர்த்தம், பிரம தீர்த்தம் – தீர்த்தம் ஒன்று, பெயர்கள் பல.
விழாக்கள்
வைகாசி பிரம்மோற்ஸவம்,
மாசித்தெப்ப விழா,
ஆனியில் வசந்த உற்சவம்
மாவட்டம்
செங்கல்பட்டு
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6.30 மணி முதல் 12 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில்,                       வட திருமுல்லைவாயில், சென்னை – 609113.
+91-44- 2637 6151
 
பாடியவர்கள்
சுந்தரர், அருணகிரிநாதர், வள்ளலார், மாதவச் சிவஞானயோகிகள், இரட்டைப் புலவர்கள்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
சென்னையில் இருந்து 26 கி.மீ தூரம்.
சென்ட்ரலில் இருந்து மின்சார ரெயிலில் ஆவடி சென்று அங்கிருந்து பேருந்தில் செல்லலாம்.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 255வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது 22வது தலம்.
கொடியிடை நாயகி உடனாகிய மாசிலாமணீஸ்வரர்
 
 
 
பாடியவர்                     சுந்தரர்      
திருமுறை                    7ம் திருமுறை 
பதிக எண்                    69
திருமுறை எண்               1
பாடல்

திருவும் மெய்ப் பொருளும் செல்வமும்எனக்கு உன் சீர் உடைக் கழல்கள்” என்று எண்ணி,
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும்ஊடியும்உறைப்பனாய்த் திரிவேன்;
முருகு அமர் சோலை சூழ் திரு முல்லைவாயிலாய்வாயினால் உன்னைப்
பரவிடும் அடியேன் படு துயர் களையாய்பாசுபதாபரஞ்சுடரே! .
பொருள்
தேன் பொருந்திய சோலைகளால் சூழப்படிருக்கும் திரு முல்லை வாயிலில் உறைபவனே, பாசுபதா அஸ்திரம் உடையவனே, பரம் சுடரே,  வீடு பேறு, அதற்கு காரணமான மெய் பொருள், செல்வம் இவைகள் அனைத்தும் உனது திருவடியினால் அமையப் பெற்றவை என்று எண்னம் கொண்டு யாரையும் துணையாகக் கொள்ளாமல், அவர்களை விலக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இவ்வாறு உன்னை வாயால் பாடும் அடிவனாகிய நான் படும் துயரத்தினை நீ களைவாயாக.
கருத்து
·   அனைத்தும் இறைவனால் அமையப் பெற்றன என்பதில் முடிவான எண்ணம் உடையவர் .
·   ஒருவரை மதியாது – மற்றவர்கள் இவற்றை ஒத்துக் கொள்ளாததால் அவர்களை மதியாது
·   படு துயர் – வினைத் தொகை. (எல்லாக் காலங்களுக்கும் பொதுவானதால் – துயரம் எல்லாக் காலங்களுக்கும் பொதுவானது)
பாடியவர்                 சுந்தரர்        
திருமுறை                7ம் திருமுறை
பதிக எண்                 69        
திருமுறை எண்           8 

பாடல்
நம்பனேஅன்று வெண்ணெய் நல்லூரில் நாயினேன் தன்னை ஆட்கொண்ட
சம்புவேஉம்பரார் தொழுது ஏத்தும் தடங்கடல் நஞ்சு உண்ட கண்டா!
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லை வாயில்தேடியான் திரிதர்வேன்கண்ட
பைம்பொனேஅடியேன் படு துயர் களையாய்பாசுபதாபரஞ்சுடரே! .
பொருள்
ஆணில் சிறந்தவனே(சிவன்), சிறந்த பொன் போன்றவனே, அன்றைக்கு என்னை திருவெண்ணை நல்லூரில் நாய் போன்ற என்னை ஆட் கொண்ட சம்புவே, வானத்தில் உறைபவர் வணங்கி துதிக்கும் பெரிய கடலில் உண்டான நஞ்சினை உண்ட கண்டத்தை உடையவனே, செம் பொன்னால் ஆன மாளிகையால் சூழப்பட்டிருக்கும் திருமுல்லைவாயில் நான் தேடி திரிகின்றேன். இவ்வாறு திரிவதால் ஏற்படும் துன்பத்தைக் களைவாயாக.
கருத்து
நம்பன் – ஆணில் சிறந்தவன், சிவன்
பைம்பொன் – பண்புத் தொகை(பசுமை+பொன்) 
Image courtesy: Internet

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவான்மியூர்

தல வரலாறு(சுருக்கம்)
 
·   வான்மீகி நாதருக்கு வன்னி மரத்தடியில் காட்சி அருளிய இடம்.
·   அகத்தியருக்கு நோய்களைப் பற்றியும் அதற்கா மருந்துகளையும் ஈசன் உபதேசித்த இடம்.
·   அபயதீட்சிதருக்கு கடும் மழை வெள்ளப் பெருக்கால் காண முடியா முகத்தை காண்பிப்பதற்காக மேற்கு நோக்கிய தரிசனம்
·   காமதேனு சிவனுக்கு பால் சுரந்து பாப விமோசனம் பெற்ற இடம் – பால்வண்ண நாதர்.
 
 
 
 
தலம்
திருவான்மியூர்
பிற பெயர்கள்
தியாகராஜர், வான்மீகிநாதர், வேதபுரீஸ்வர, அமுதீஸ்வரர், பால்வண்ணநாதர்
இறைவன்
மருந்தீஸ்வரர்
இறைவி
திரிபுர சுந்தரி, சொக்க நாயகி
தல விருட்சம்
வன்னி
தீர்த்தம்
பஞ்ச தீர்த்தம்
சிறப்புகள்
மாவட்டம்
சென்னை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
 காலை 6மணி முதல் மணி 12வரை, மாலை 4மணி முதல் இரவு 9 மணி வரை
 அருள்மிகு மருந்தீஸ்வரர் திருக்கோயில்,
திருவான்மியூர், சென்னை-600 041.
சென்னை மாவட்டம்.
 +91 – 44 – 2441 0477.
பாடியவர்கள்
 திருஞானசம்மந்தர், திருநாவுக்கரசர், அருணகிரியார்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத் துறை
இதர குறிப்புகள்
 தேவாரப் பாடல் பெற்ற தொண்டை நாட்டுத் தலங்களில் 25வது தலம்.
திரிபுரசுந்தரி உடனாகிய மருதீஸ்வரர்
 
 
பாடியவர்                    திருஞானசம்மந்தர்      
திருமுறை                   இரண்டாம் திருமுறை 
பதிக எண்                    4
திருமுறை எண்              1509
 
பாடல்
 
தக்கில் வந்த தசக்கிரி வன்றலை பத்திறத் 
திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த் 
தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர் 
பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே.       
பொருள்
 
முறையற்ற நெறியில் பல திசைகளிலும் மலை போன்ற பத்து தலைகளை உடைய இராவணன் பெயர்க்க முற்படும் போது அவை அலறுமாறு அடர்ந்தவரே, திருவான்மியூர் திருத்தலத்தில் உமையோடு வீற்றிருந்து அருளினிர். பல பூதக் கணங்களும் பேய்களும் உங்களைச் சூழ்ந்து உங்களிடம் பயிலக் காரணம் என்ன?
கருத்து
தகு இல்தகுதியில்லாத நெறியினில்
தசக்கிரி – மலை போன்ற பத்துத் தலைகளை
பலபாரிடம் – பூதகணம்.
 
 
பாடியவர்                     திருநாவுக்கரசர்     
திருமுறை                    5ம் திருமுறை 
பதிக எண்                    82
திருமுறை எண்               1881
 
பாடல்
பொருளுஞ் சுற்றமும் பொய்ம்மையும் விட்டுநீர்
மருளும் மாந்தரை மாற்றி மயக்கறுத்
தருளு மாவல்ல ஆதியா யென்றலும்
மருள றுத்திடும் வான்மியூ ரீசனே.
 
பொருள்
 
வான்மீகி நாதரே,,தேடிப் பெற்ற பொருள், சுற்றம், பொய் இவைகளை  வியக்கும் மனிதர்கள் விலக்கி மயக்கம் நீக்கி அருள் தரும் ஆதியாய் என்று அருளும் அளித்திடுவாய்.
 
 
Image courtesy: Internet
 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவொற்றியூர்

தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள்
 
·   சிவன் சுயம்பு மூர்த்தி – தீண்டாத் திருமேனி
·   சிவன் வடிவம் – பாணலிங்க வடிவம்
·   மூலவர் – படம்பக்க நாதர் – கவச திருமேனி – கார்த்திகை பௌர்ணமி ஒட்டிய மூன்று நாட்கள் மட்டும் கவசம் விலக்கப்படும்.
·   அம்பிகை ஞான சக்தி வடிவம்
·   மகிஷாசூரன் அற்ற துர்க்கை
·   அம்மனின் 51வது சக்தி பீடங்களில் இஷூ பீடம்
·   தேவாரப் பாடல் வரிசைகளில் 253வது தலம்
·   சப்த விடத் தலங்களில் ஒன்று
·   கஜ பிருஷ்ட விமானம்
·   பைரவர் நாய் வாகனம் இல்லாமல் காட்சி
·   சிவனில் வடிவங்களில் ஒன்றான ஏகபாத மூர்த்தி – வெளிப் பிரகாரத்தில்
·   சுந்தரர் சங்கிலி நாச்சியாரை திருமணம் செய்து கொண்ட இடம்
·   ஏலேலே சிங்கர் மன்னருக்கு தருவதாக வைத்திருந்த மாணிக்கங்களை காசி சிவ பக்தர்களிக்கு தந்ததால் ‘மாணிக்க தியாகர்’
·   உபமன்யு முனிவரின் ஆலோசனைப்படி வாசுகி முக்தி வேண்டி வழிபட்டு முக்தி அடைந்த இடம் – படம்பக்க  நாதர்
·   கண்ணகியின் உக்கிரம் குறைக்க சிவனும் பார்வதியும் தாயம் ஆடி, கட்டைகளை கிணற்றில் இட்டு கண்ணகியை கிணற்றினுள் இட்டு கோபம் குறைத்த இடம்
·   63 நாயன் மார்களில் ஒருவரான கலிய நாயனார் வறுமையின் காரணமாக தனது கழுத்தை அறுத்து ரத்தத்தை எடுத்து விளக்கு எரித்து முக்தி அடைந்த தலம்.(குருபூசை நாள்: ஆடி – கேட்டை)
·   63 நாயன் மார்களில் ஒருவரான ஐயடிகள் காடவர்கோன் நாயனார் பாடிய தலம்
·   நுனிக் கரும்பை இனிக்க வைத்து பட்டினத்து அடிகளுக்கு முக்தி அளித்த தலம்.
·   நந்திக்காக சிவன் பத்ம தாண்டவம் ஆடிய இடம்
·   வட்டப்பாறை அம்மனின் உக்கிரம் குறைய ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் ஸ்தாபிதம் செய்த இடம்
 
தலம்
திருவொற்றியூர்
பிற பெயர்கள்
முக்தி தலம், ஆதிபுரி, பூங்கோயில், பூவுலகச் சிவலோகம்
இறைவன்
படம்பக்கநாதர், ஒற்றீஸ்வரர், ஆதிபுரீஸ்வரர், புற்றிடங்கொண்டார், எழுத்தறியும் பெருமாள், தியாகேசர்,
இறைவி
வடிவுடை அம்மன், திரிபுரசுந்தரி
தல விருட்சம்
மகிழம், அத்தி
தீர்த்தம்
பிரம்ம, நந்தி தீர்த்தம்
சிறப்புகள்
 சித்திரையில் வட்டப்பாறையம்மன் உற்சவம், வைகாசியில் வசந்தோற்ஸவம், சிவராத்திரி, திருக்கார்த்திகை, மாசி மகம்.
மாவட்டம்
சென்னை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
அருள்மிகு தியாகராஜர் திருக்கோவில்
திருவொற்றியூர்
சென்னை
PIN – 600019
+91-44 – 2573 3703.  +91-94444-79057
வெள்ளிகாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை
பெளர்ணமி –  காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை
மற்ற நாட்கள்காலை 5 மணி முதல் பகல் 12 மணி வரை
மாலை – 4 மணி முதல் இரவு 8 30 மணி வரை
பாடியவர்கள்
சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர்,
நிர்வாகம்
இந்து அறநிலையத்துறை
இதர குறிப்புகள்
ஐயடிகள் காடவர்கோன், முசுகுந்தன்,, பிரமன், திருமால், நந்திதேவர், சந்திரன், வால்மீகி முனிவர், 27 நட்சத்திரங்கள் ஆகியவர்கள் வழிபட்ட தலம்.
காளமேகப்புலவர், இரட்டைப்புலவர்கள், தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், மறைமலையடிகளார் ஆகியவர்கள் பாடி உள்ளனர்
வடிவுடைஅம்மன்
 
பாடியவர்                      திருநாவுக்கரசர்     
திருமுறை                     4ம் திருமுறை 
பதிக எண்                     45
திருமுறை எண்                7
பாடல்
 
பிணமுடை யுடலுக் காகப் பித்தராய்த் திரிந்து நீங்கள்
புணர்வெனும் போகம் வேண்டா போக்கலாம் பொய்யை நீங்க
நிணமுடை நெஞ்சி னுள்ளா னினைக்குமா நினைக்கின் றாருக்கு
உணர்வினோ டிருப்பர் போலு மொற்றியூ ருடைய கோவே
கருத்து
மரணம் உடையதும், விரும்பத் தக்காத நாற்றம் உடைய உடலை பாதுகாக்க பைத்தியம் போல் திரிந்து மறுமையைத் தரும் சிற்றின்பத்தை விலக்குக. நீக்குவதற்கு உரித்தான எளிதான வழி நெஞ்சில் உறையும் இறைவனையும் நினைத்தல். அவ்வாறு செய்தால் ஒற்றிவூர் உறையும் அரசனைப் போன்ற ஒற்றியூர்ப் பெருமான் அக்குறைகளை நீக்குவான்.
 
பாடியவர்                  சுந்தரர்         
திருமுறை                7ம் திருமுறை
பதிக எண்                 91          
திருமுறை எண்           9   
பாடல்
 
பற்றி வரையை யெடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றுந் திரைவாய் ஒற்றி யூரே.
பொருள்
மலையை அசைத்த அரக்கனாகிய இராவணின் உறுப்புகள் ஏதும் இல்லாதவாறு செய்தவர் சிவன். அவர் இதனை அவர் தனது பெரு விரலால் செய்தார். அவர் கடல் சூழ்ந்த இந்த திருவொற்றியூரில் இருந்து வினைகளை நீக்கி அடியவர்களுக்கு அருள் செய்கிறார்.
 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – சிறு குறிப்பு

திருஞான சம்மந்தர் தனது எல்லா பாடல் அமைப்புகளிலும் ஒரு ஒழுங்கு முறையைக் கையாண்டிருக்கிறார்.

8 வது பாடல்இராவணன் பற்றிய நிகழ்வு

9 வது பாடல்ப்ரம்மா மற்றும் திருமால்

10 வது பாடல்சமணர்

11 வது பாடல்நூல் பயன்

இராவணன் சிறந்த சிவபக்தன் என்றாலும் அவனிடத்தில் அதிகமாக ஆணவமும், மாயையும், கண்மமும் இருந்தது.

இதனால் சிவத்தலங்கள் பற்றிய பாடல்கள்களில், திருஞான சம்மந்தர் பாடி இருப்பின் அதில் 8 பாடலை விளக்கப் பாடலாக எடுக்க உள்ளேன்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருமயிலாப்பூர்

தல வரலாறு (சுருக்கம்) – திருமயிலாப்பூர்
·   உமை அம்மை மயிலாக இருந்து பூஜித்த இடம். மயில் + ஆர்ப்பு + ஊர்= மயிலாப்பூர். மயில்கள் நிறைந்த இடம் அல்லது மயில்கள் ஆரவாரம் செய்யும் ஊர்
· சிங்கார வேலர் சூரனை அழிக்க அம்மை அப்பனை பூஜித்து சக்தி வேல் பெற்ற இடம்
· பிரம்மனின் கர்வம் நீங்கி படைப்பு ஆற்றல் பெற்ற இடம்
· சுக்ராச்சாரியார் தனது கண்களை மீண்டும் பெற்ற இடம்
· மனதினைக் கோயிலாக கொண்டு வழிபட்ட வாயிலார் நாயனார் தோன்றிய தலம்.
·   சோமுக அசுரன் களவாடிச் சென்ற வேதங்களை மகா விஷ்ணு மீட்டு வந்து இங்கு சேர்த்ததால் – வேதபுரி,
· சுக்ராச்சார்யார்  ஈசனை வழிபட்டு அருள் பெற்றதால் – சுக்ரபுரி
· மயிலை மற்றும் திருவொற்றியூரில் வாழ்ந்த கபாலிகர்கள் ஈசனை போற்றி வழிபட்டதால் – கபாலீச்சரம்
· திருஞானசம்மந்தப் பெருமான் எலும்புகளை ஒன்று சேர்த்து பூம்பாவை ஆக்கிய தலம்
· கலிங்க தேச அரசன் தருமனின் மகன் சாம்பவன்  தனது பெரும் பாவங்கள் தீர பங்குனி உத்திரத்தன்று இந்தத் தீர்த்தத்தில் நீராடி முக்தி அடைந்த தலம்
· ஈசான மூலையில் காக வாகனத்தின் மீது வீற்றிருக்கும் சனீஸ்வரருக்குத் தனிச் சந்நிதி
·   நின்ற திருக் கோலத்தில் அம்பிகை ஸ்ரீகற்பகாம்பாள் அபய-வரத ஹஸ்தத்துடன்
·  கபாலீஸ்வரரை போற்றிப் பாடப்பட்ட நூல்கள் – திருமயிலை உலா, திருமயிலைக் கலம்பகம், திரு மயிலை யமக அந்தாதி, கபாலீசர் பதிகங்கள், திருமயிலைக் கபாலீசர் இரட்டை மணிமாலை, திருமயிலைப் பதிற்றுப் பத்தந்தாதி, திருமயிலாப்பூர் பதிகங்கள், கங்காதர நாவலர் இலக்கியங்கள், ஸ்ரீகபாலீச்சரர் தோத்திரம், சென்னைத் திருமயிலை ஸ்ரீகபாலீச்சரர் துதிப்பா மாலை, கபாலீசர் குறுங்கழி நெடில், திருமயிலை நான்மணிமாலை, பாபநாசம் சிவன் கீர்த்தனைகள், திருமயிலைக் குறவஞ்சி, திருமயிலைக் கபாலீசன் மாலை, திருமயிலை வெண்பா அந்தாதி, திருமயிலை ஸ்ரீகபாலீசுவரர் துதி
· ஸ்ரீகற்பகாம்பாள் மீது பாடப்பட்ட இலக்கியங்கள் – கற்பகவல்லியம்மை பதிகம், திருமயிலைக் கற்பகவல்லி அஷ்டகம், கற்பகவல்லி மாலை, கற்பகவல்லியார் பஞ்சரத்தினம், ஸ்ரீகற்பகாம்பாள் பாடல்கள், கற்பகாம்பிகை அந்தாதிப் பதிகம், திருமயிலாபுரிக் கற்பகாம்பிகை மாலை, திருமயிலைக் கற்பகாம்பிகை பிள்ளைத் தமிழ்
· ஸ்ரீசிங்காரவேலரை போற்றிப் பாடப்பட்ட நூல்கள் – திருமயிலை சிங்காரவேலர் பிள்ளைத் தமிழ், திருமயிலைக் கோவை, சிங்கார வேலர் மாலை, திருமயிலைக் குகன் பதிகங்கள், மயிலைச் சண்முகப் பஞ்சரத்தின மாலை, அருட்புகழ், மயிலைச் சிங்காரவேலர், இரட்டை மணிமாலை, திரு மயிலைச் சிங்கார வேலர் பதிகம்
·   மயிலைவாழ் தெய்வங்களைப் போற்றும் நூல்கள் –  திருமயிலைப் பிள்ளைத் தமிழ், திரு மயிலைக் கோவை, திருமயிலை உவமை வெண்பா, திருமயிலை வெண்பா, வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளின் பதிகங்கள், திருக்குருகூர் ஞானசித்த சுவாமிகளின் பதிகங்கள், தாச்சி அருணாசல முதலியார் பதிகங்கள், கி.ஊ.பா. கங்காதர நாவலரின் நூல்கள்
தலம்
மயிலாப்பூர்
பிற பெயர்கள்
வேதநகர், சுக்கிரபுரி, பிரம்புரம், சுந்தரபுரி,  கபாலி மாநகர்,கபாலீச்சரம், திருமயிலாப்பூர், கந்தபுரி, புன்னை வனம். பிரம்மபுரி , வேதபுரி, மயூரபுரி, மயூரநகரி, பத்மநாதபுரம், வாமநாதபுரம்
இறைவன்
கபாலீசுவரர், புன்னை வனத்து ஈசன், வேத நகரினான், சுக்கிர புரியான், கபாலீச்சரத்தினான், பூம்பாவை ஈசன், புன்னை வன மயூரநாதன், கபாலி மாநகரான்
இறைவி
கற்பகாம்பாள்
தல விருட்சம்
புன்னை
தீர்த்தம்
கபாலீ தீர்த்தம், கடவுள் தீர்த்தம், வேத  தீர்த்தம், வாலி  தீர்த்தம், கங்கை  தீர்த்தம்,வெள்ளி  தீர்த்தம், இராம  தீர்த்தம்
விழாக்கள்
சித்ரா பௌர்ணமி,வசந்த உற்சவம், வைகாசி – லட்ச தீபம்; விசாகம்; ஞானசம்பந்தர் விழா 10-ஆம் நாள்; ஆனி – 1008 சங்காபிஷேகம் (கும்பாபிஷேக திரு நட்சத்திரம்); பவித்ரோத்சவம்; ஆனித் திருமஞ்சனம், ஆடி – ஆடிவெள்ளி 5 வாரம்; பன்னிரு திருமுறை 12 நாள் விழா, ஆவணி – விநாயகர் சதுர்த்தி; லட்சார்ச்சனை, புரட்டாசி – நவராத்திரி விழா; நிறைமணிக் காட்சி, ஐப்பசி – கந்தர்சஷ்டி விழா 6 நாள்; சிங்காரவேலர் லட்சார்ச்சனை; ஐப்பசி திருவோணத்தன்று ஸ்ரீராமன், கபாலீஸ்வரரை வணங்கி வழிபட்டு அமுதூட்டிய ஐதீக விழா, கார்த்திகை – கார்த்திகை சோமவாரம்; சங்காபிஷேகம் 5 வாரம்; கார்த்திகை தீபம்; சுவாமி லட்சார்ச்சனை, மார்கழி – உஷத்கால பூஜை; திருவெம்பாவை 10 நாள் விழா; ஆருத்திரா தரிசனம், தை – அம்பாள் லட்சார்ச்சனை; தெப்பத் திருவிழா 3 நாள், மாசி – மகா சிவராத்திரி; மாசி மகம் கடலாட்டு விழா, பங்குனி- பிரம்மோற்சவம் 10 நாள்; விடையாற்றி 10 நாள்.
மாவட்டம்
சென்னை
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 5 மணி முதல் 12.30 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை.
நிர்வாக அதிகாரி,
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை – 600 004.
+91- 44 – 2464 1670.
வழிபட்டவர்கள்
சிங்கார வேலர்,பிரம்மன், சுக்ராச்சாரியார்
பாடியவர்கள்
திருநாவுக்கரசர், சுந்தரர், திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர், சேக்கிழார், பாபநாசம் சிவன்
நிர்வாகம்
இந்து சமய அறநிலையத்துறை
இருப்பிடம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 266 வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் 24 வது தலம்
கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரர்
 
ஓவ்வொரு மாதமும் வரும் திருவிழாவினைச் சொல்லி காண வாராயோ என்று திருஞான சம்மந்தர் பூம்பாவையை அழைக்கிறார்.
 
பூரட்டாதி – அன்ன தானம்
ஐப்பசி – ஓணம்
கார்த்திகை – விளக்கீடு
மார்கழி – திருவாதிரை
தை – பூசம்
மாசி – மகம் – கடலாடுதல்
பங்குனி – உத்திரம்
சித்திரை – அஷ்டமி
ஊஞ்சமல் திருவிழா

பாடியவர்                            திருஞான சம்மந்தர்  
திருமுறை                        இரண்டாம் திருமுறை  
பதிக எண்                           47  
திருமுறை எண்               1
 
பாடல்
 
மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக் 
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான் 
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க் 
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.  
பொருள்
 
தேன் பொருந்திய அழகிய புன்னை மரங்கள் நிறைந்து இவ்விடம். இள மயில்கள் ஆர்ப்பரிக்க கூடியது இவ்வூர். இவ்வூரில் விருப்பமுடன் அமர்ந்தவன் இந்த இறைவன். அவன் மீது விருப்பமுடன் அவன் அடியார்களுக்கு அமுது செய்விக்கும் காட்சியைக் காணாமல் போவாயோ? பூம்பாவாய்.
 
கருத்து
  • இள மயில்கள் ஆர்ப்பரித்தல் – மழை வரும் காலத்தில் மயில் ஆர்ப்பரிக்கும். இது தொடந்து நிகழ்வதால் மயில்கள் ஆர்ப்பரிக்கின்றன. (அஃதாவது – மாதம் மும்மாரி பெய்கிறது)
  • விருப்பமுடன் அமர்ந்தவன் என்பதனால் மயிலையே கயிலையே என்பது விளங்கும்.
  • உருத்திர பல்கணத்தார்-மாகேசுரர் – அடியவர்
  • விழாக் காலங்களில் அமுது செய்வித்தல் – அன்னம் படைப்பு
  • அட்டு-திருவமுது
  • இட்டல்-இடுதல்
  • இது பூரட்டாதியில் நிகழ்வது.
பாடியவர்                            திருஞான சம்மந்தர்  
திருமுறை                        இரண்டாம் திருமுறை  
பதிக எண்                           47  
திருமுறை எண்               4
பாடல்
 
ஊர்திரை வேலை யுலாவு முயர்மயிலைக்
கூர்தரு வேல்வல்லார் கொற்றங்கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச் சரமமர்ந்தான்
ஆர்திரைநாள் காணாதே போதியோ பூம்பாவாய்.
 
பொருள்
 
ஊர்ந்து வரும் அலைகள் உடையட கடலை அடுத்தது உயர்வான மயிலாப்பூர்.  அங்கு கூரிய வேல் வித்தையில் வல்லவர்களும் வெற்றி கொள்பவர்களும் உடைய சேரிகள்(சிறு குழக்கள் வாழும் இடம்) இருக்கின்றன. அங்கு மழை தரும் சோலைகள் இருக்கின்றன. அதில் அமர்ந்திருக்கும் கபாலீச்சரத்தின் ஆதிரை(திருவாதிரை) நாள் காணாமல் போவாயோ பூம்பாவாய்.
 
கருத்து
  • உயர் மயிலை என்பதனால் – மயிலையின் சிறப்பு விளங்கும்.
  • கூர்தரு வேல்வல்லார்  – கூர்மையான வேல்களை உடையவர் – வெற்றி கொள்பவர் அஃதாவது – தோல்வி அற்றவர்கள்
  • கார்தரு சோலை – மழையத் தரும் சோலைகள் உடைய
 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274

விக்னங்களை தீர்க்கும், மங்களைத் தரும் விநாயகர் அருள் புரியட்டும். தமிழ் தலைவனும், சித்தர்களின் நாதனும் ஆறுமுகங்களையும் உடைய செந்தில் நாதன் அருள் புரியட்டும்.
முழு முதற் கடவுளும், சைவத் தலைவனும், பிறவிப் பிணிகளை நீக்குபவனும், ஐந்தொழிலுக்கு உரியவனும், பிறப்பிலியும், ஆதி நாயகனுமான சிவனும் வாம பாகத்தில் என்றும் நிறைந்திருக்கும் அம்பாளின் துணை கொண்டு இக்கட்டுரைகளை எழுதத் துவங்குகிறேன்
 
எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் என்றும் என்னை வழிநடத்தும் தாயைப் போல் எனக் காத்து எனை வழி நடத்தும் என் குருநாதர் எனக்கு அருள் புரியட்டும்.
இது சமயக் குறவர்கள் நால்வரால் பாடல் பெற்ற  தலங்கள் பற்றிய செய்திகள். இது குறித்து சைவத் திருத்தலங்கள் 274 என்ற தலைப்பில் எழுத உள்ளேன். சிறு குறிப்புகளுடன் தலத்திற்கு 2 பாடல் வீதம் எழுத உள்ளேன்.
 
தலம்
பிற பெயர்கள்
இறைவன்
இறைவி
தல விருட்சம்
தீர்த்தம்
விழாக்கள்
மாவட்டம்
திறந்திருக்கும் நேரம் /முகவரி
நிர்வாகம்
பாடியவர்கள்
இருப்பிடம்   
இதர குறிப்புகள்
பாடல்
விளக்கம்
குறைகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள்.
காவிரிக்கு வடகரையிலுள்ள திருத்தலங்கள்    – 63
காவிரிக்கு தென்கரையிலுள்ள திருத்தலங்கள் – 127
ஈழநாட்டிலுள்ள திருத்தலங்கள்              – 2
பாண்டிநாட்டிலுள்ள திருத்தலங்கள்           – 14
மலைநாட்டிலுள்ள திருத்தலங்கள்                          – 1
கொங்கு நாட்டிலுள்ள திருத்தலங்கள்                     – 7
நடுநாட்டிலுள்ள திருத்தலங்கள்                                – 22
தொண்டை நாட்டிலுள்ள திருத்தலங்கள்               – 32
துளுவ நாட்டிலுள்ள திருத்தலங்கள்                        – 1
வட நாட்டிலுள்ள திருத்தலங்கள்                              – 5
ஆக மொத்தம்                             – 274
கோவில் என்றதும் என் நினைவில் என்றைக்கும் வரும் கற்பகாம்பாள் உடனுறை கபாலீஸ்வரன் உறைவிடமாகிய மயிலையில் பயணம் தொடங்குகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 3

 
 
சிவனின் மைந்தன் / பெருமாளின் மருமகன் என்ற வகையில் இக்கட்டுரை.
 
 
 
 
 
 
 
 
 
 
1.
பாடல்
மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன்வந்தா லென்முன்னே
தோகைப் புரவியிற் றோன்நிற் பாய்சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே. 80
விளக்கம்
மாகம் – ஆகாயம்
கூற்றன் – எமன்
த்ரிபுராந் தகன் – மூன்று புரங்களையும் அழித்தவன் – சிவன்
பொருள்
எமன் வருங்காலத்தில் மாசு அற்றவரும், நிலைத்த முக்தியை அளிப்பவரும் முப்புரங்களை அழித்தவரும், கொடைத் தன்மை உடையவரும் மூன்று கண்களை உடையவருமான சிவனை வலது பாகத்தில் கொண்ட மேலான கல்யாண குணங்களை உடைய பார்வதியின் புத்திரரே, ஆகாயம் தொடும் அளவு கொண்ட எமன் வரும் காலத்தில் தோகைகளை உடைய மயில் மீது வந்து நின்று அருள் புரிவீர்.


கருத்து
முப்புரம் அழித்தல் – மும்மல காரியம் (விளக்கம் – திருமந்திரம்)
முக்தி – ஜீவன் முக்தி, விதேஹ முக்தி என்று பலவகைப்பட்டாலும் அழியாத முக்தியை அருள்பவர்
சிவனை வலப்பக்கம் வைத்திருக்கும் – பார்வதியைக் குறிக்கும்.
கல்யாணி – கல்யாண் என்பதன் பெண் வடிவம்.
கல்யாண என்னும் வடசொற்கு அழகிய, மனத்திற்கேற்ற,சிறந்த, உயர்ந்த, நல்ல, நலமான, மங்கல, மகிழ்ச்சியான, ஆக்கமான என்னும் பொருள்களும், மகிழ்ச்சி, ஆக்கம், தழைப்பு, நல்லொழுக்கம், அறப்பண்பு என்னும் பொருள்களும் கூறப்பட்டிருக்கின்றன. மங்கலம் என்ற தன்மையில் ஆளப்படுகிறது. அஃதாவது, இப்படிப்பட்ட குணங்களை உடைய பரம கல்யாணியின் பாலகன்
தோகைப் புரவி – வெகு விரைவில் வந்து என்னை ஆதரிப்பாய் என்பதன் வெளிப்பாடு.
இப்பாடல் சோமாஸ்கந்த மூர்த்தத்தை நினைவு கூறும்.
2. 
பாடல்
பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும்
மாலே கொண்டுய்யும் வகையறி யேன் மலர்த்தாள் தருவாய்
காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின்
மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ்வேலவனே. 41
விளக்கம்
காலே இலாத – பாம்பு
மாலோன் மருக – திருமாலில் மருமகனே
பொருள்
காற்றை உண்டு கால்கள் அற்ற ஆதிசேஷன் மீது துயில் கொள்ளும் பள்ளி கொண்டிருக்கும் மாலோனில் மருமகனே, செந்நிறமுடைய வேலை உடையவரே, பால் போன்ற இனிமையான மொழிகள் பேசும் பெண்களுடன் கலந்து(சிற்றின்பத்தில் மூழ்கியவனாக) அதை விரும்புவனாக இருக்கிறேன். அதில் இருந்து விலகி முக்தி மார்கம் அடைய வழிகாட்டுவாயாக. ஆதலால் உன் மலர் பதத்தை தருவாயாக. (இறைவனின் பாதங்கள் முக்தியை தரும் என்பது துணிபு)
சீரடி சென்னி வைக்க – அபிராமி அந்தாதி
நாதன் தாள் வாழ்க – மணிவாசகப் பெருமான்
கருத்து
காலே இலாத – பாம்பு
மாலோன் மருக – திருமாலில் மருமகனே
காலே மிக உண்டு – காற்றை ஏற்று, இது சித்தர்கள் வழி காற்றினை சுவாத்தலைக் குறிக்கிறது. இங்கு உள் இழுத்தலை மட்டுமே குறிக்கிறது. சுவாசித்தலில் அளவு குறையும் போது, வாழும் காலம் அதிகரிக்கும்.
ஆண்டிற்கு ஒன்றாய் மூவாயிரம் பாடல் எழுதிய திருமூலரது வாழ்வு இங்கு நினைவு கூறத்தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

மார்கழிக் கோலம்

மார்கழிக் கோலம் எதற்கு.

ஆன்மீகம்
மார்கழி மாதம் பீடு உடைய மாதம். சைவத்திலும், வைணவத்திலும் அது பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப் பட்டிருக்கிறது. தேவர்களின் துவக்க நாள். அதனால் அதைக் கொண்டாடுகிறோம்.

அறிவியல்
1. மார்கழி மாதத்தில் அதிக அளவு ஆக்ஸிஜன் விடியற் காலையில் வெளிப்படும். அதை சுவாசிப்பதால் உடற் பிணிகள் நீங்கும்.

2. இறை வழிபாட்டிற்கு செல்வதால் மற்றவர்களோடு கலந்து பழக வாய்ப்பு வரும். இதனால் நீண்ட நாள் மனக் கசப்புகள் விலகும்.

3. இந்தக் காலங்களில் சிறு சிறு விலங்குகளுக்கு இரை தேடுதல் கடினம். அதை எளிமையாக்கும் வழி. (பூசணிப் பூ – கோல நடுவில்)

Click by : Gayu Venkat

Loading

சமூக ஊடகங்கள்

மற்று நான் பெற்றது..

வடதிருமுல்லைவாயில் எழுதப்பட்ட சுந்தரர் தேவாரம்.

செய்த சபதம் மறந்து சங்கிலி நாச்சியாரை விட்டு திருவொற்றியூர் எல்லையைக் கடந்ததால் சுந்தரர் இரு கண்களையும் இழக்கிறார். காஞ்சிபுரம் செல்லும் வழியில் வடதிருமுல்லைவாயில் வருகிறார்.

இத்திருத் தலத்தில் 10+1 பாடல்கள் பாடுகிறார்.

அனைத்துப் பாடல்களும்  அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே என்று முடிகின்றன.

இதில் ஒரு பாடல் மட்டும் இப்போது.

மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார்? வள்ளலே! கள்ளமே பேசிக்
குற்றமே செயினும், குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்;
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய்! அடியேன்
பற்று இலேன்; உற்ற படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .

இப்பாடல் சாதாரண மனிதனை வைத்து எழுதப் பட்டதாகவே தோன்றுகிறது.

மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் – எனக்கு கிடைக்கப் பெற்றது யாருக்கு கிடைக்கும்.

வள்ளலே – பெறுபவரின் நிலை அறியாமல் விரும்பிய அனைத்தையும் கொடுக்கக் கூடியவன்.

கள்ளமே பேசிக் குற்றமே செயினும் – என் உள்ளம் கள்ளத் தன்மை உடையது, குற்றம் புரியக் கூடியது.

குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – இது எனது பிறவிக் குணம். ஆதலால் இன்னும் பல தீமைகள் புரிந்தேன்.

செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய் – செருக்கு கொண்டவர்களின் கர்வத்தை திரிபுர தகனமாக(மும் மல காரியம்) செய்தவனே

அடியேன் பற்று இலேன் – பற்றுவதற்கு எதுவும் இல்லாதவன்.

என்னுடைய துயரத்தை களைவாய்.

Loading

சமூக ஊடகங்கள்

சிவவாக்கியர்

தத்துவங்கள் அனைத்தும் நிலையாமை என்ற நிலையில்  உருவாகின்றன.

சிவவாக்கியரின் கீழ்க் கண்ட பாடல் அதை விளக்குகிறது.

பாடல்

வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நந்தினால்
விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே;
நாடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!

விளக்கம்

அழகிய வடிவம் கொண்ட தான் விரும்பும் ஒரு பெண்ணை மற்றொருவன் விரும்புகிறான் என்றால் அவனை விடுவேனா, அவனை    வெட்டி விடுவேன் என்று கூறுபவன் இருக்கிறான். அவன் எமன் வாயிலில் விழும் போது நாற்றம் கொண்ட இந்த உடல் மண்ணில்  விழும். அதன் பிறகு இந்த உடலை மயானத்தில் இருக்கும் வெட்டியானிடம் கொடுத்து விடுவார்கள்.

இதில் பல கருத்துக்கள் அடங்கி உள்ளன.

அழகிய வடிவம் கொண்ட பெண்ணை விரும்புதல் – இயற்கை. அது காமத்துடன் கூடிய மாயையின் காரியம்.

விரும்புவனை வெட்டிவிடுவேன் – ஆணவம்

இறப்பு தீர்மானிக்கப்பட்டது. எனவே அதில் ஆணவம் கொள்ள எதுவும் இல்லை.

எனவே மும்மல காரியம் கொண்டவனுக்கு முக்தி இல்லை. நிலையற்ற எண்ணம் விடுத்து அஃதாவது மும்மலம் நீக்கி இறைவனை நாடச் சொல்கிறது இப்பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

குற்றமற்ற ஒன்றும், இயக்க வல்லமை உடையதும், முற்றும் உணர்ந்த ஒருவன் இருக்க வேண்டும். அவனால் மட்டுமே குற்றம் உடைய ஆன்மாக்களை சரி செய்ய முடியும். (தேர்வு எழுதுவனை கண்காணிக்கும் கண்காணிப்பாளர் போல்). அந்த நிலைக்குப் பெயர் சர்வஞ்ஞத்வம்.

எல்லா பொருள்களை அறிவிக்கவும் அதனை அசைவிக்கவும் அவனால் முடியும் எனவே அவன் சர்வவியாபகன்.

பசுவாகிய தன்னை கட்டுப்படுத்த வேறு ஒரு பதி வேண்டும். அவன் எல்லா காலங்களிலும் (பிரளய காலம் உட்பட) எல்லா காலத்திலும் இருப்பதால் நித்யதத்துவம் உடையவன்.

Loading

சமூக ஊடகங்கள்

பெண் – இளமை துறத்தல்

வந்த சிவனடியார் அமுது உண்டு சென்றார்.

பரம தத்தன் பசியோடு வீடு திரும்பினான். புனிதவதியார் அமுது படைத்தார். அதோடு மாங்கனியையும் படைத்தார்.

மிகுந்த பசியோடு இருந்ததால் அவன் சொன்னான் ‘இன்னொன்றை எடுத்து வந்து இடுக’.  கணவன் மனைவி இருவருக்கும் இரட்டைகள் என்பது பொதுவானது. (இன்பத்திலும் துன்பத்திலும், வாழ்விலும் தாழ்விலும் – திருமண மந்திரம்). இது விடுத்து அவன் தான் மட்டும் உண்ண  நினைத்தது  தவறானது.

புனிதவதியார் திகைத்தார். இறைவனிடம் சென்று வேண்டினார். மற்றொன்று கிடைத்தது. அதனை அவனிடம் கொடுத்தார் புனிதவதியார். இது வரை அறையா சுவையாக இருந்தது. காரணம் வினவினான் பரம தத்தன்.

நடந்ததை விளக்கிச்சொன்னார் புனிதவதியார்.

பரம தத்தன் நம்பவில்லை. அவன் கூறினான். ‘அப்படி எனில் மற்றொன்றை இடுக’.

புனிதவதியார் இறைவனிடம் வேண்டினார். மற்றொன்று கிடைத்தது.

அதைக் கொண்டுவந்து பரம தத்தனின் கைகளில் அதை இட்டதும் அவன் அதை வாங்கினான். வாங்கியதை உணர்ந்ததும் அது மறைந்து விட்டது. பரம தத்தன் திகைத்தான். அவன் சொன்னது ‘மற்றொன்றை இடுக’ என்றுதானே அன்றி அதை தான் உண்ண வேண்டும் என்று சொல்லவில்லை. எனவே இட்ட உடன் மறைந்து விட்டது.

பரம தத்தன் தெய்வத்திற்கு தீங்கு இழைத்து விட்டதாக நினைத்தான். எனவே வியாபார நிமித்தமாக கடல் மார்க்கமாக பயணம் தொடந்தான்.

நம் பயணமும் கடல் மார்க்கமாக தொடர்கிறது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

ஆன்மா குற்றங்கள் உடையது என்று கண்டோம்.
சுதந்திரமின்மை கொண்டது ஆன்மா. நினைத்தபடி ஒரு காரியத்தை முடியாமல் இருப்பதைக் கொண்டு இதை அறியலாம். 
பொருள் மீது ஆசை கொள்ளுதல் என்பது அதிருப்தியை உண்டாக்கும். பக்குவமற்ற ஆன்மாக்கள் இச்சை கொண்டு உழலுவதால் அது அதிருப்தி உடையது என அறியலாம்.
தன்னை அறிதல் இயற்கை. தன்னை அறியும் அறிவு இருந்தும் தன்னை அறியும் சக்தி இல்லாமையால் ஆன்மா செயற்கை உணர்வு உடையது.
பிறப்புகள் பலவகைப்படும்.தாவரம்,நீர்வாழ்வன, ஊர்வன, பறவை, விலங்கு, மனிதர் மற்றும் தேவர். (புல்லாகி புழுவாகி என்ற மணிவாசக் பெருமானின் வரிகள் நினைவு கூறத்தக்கவை. 
பஞ்ச பூதங்களின் வயப்பட்டு(பிருதிவி, அப்பு, தேயு,வாயு மற்றும் ஆகாயம்) ஆன்மா குற்றங்களை உடையது. எனவே குற்றமற்ற வேறு ஒன்று அதை இயக்க வேண்டும்.  அதன் பொருட்டே ஆன்மாக்களின் பிறப்பு.

Loading

சமூக ஊடகங்கள்

பெண் – இளமை துறத்தல்

காரைக்கால் அம்மையார்

இவர் காரைக்காலில் பிறந்தவர். இயற்பெயர் – புனிதவதி. வணிகர் மரபினை சார்ந்தவர்.

இளமை முதலே சிவ பக்தியில் சிறந்தவராக விளங்கினார். சிவ பத்தர்களை சிவனாகவே எண்ணி வணங்குவார்.

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பரமதத்தன் என்பவருக்கு புனிதவதியை மணம் செய்து வைத்தார் அவர் தந்தையார்.

தந்தையாருக்கு புனிதவதியை கணவன் வீட்டிற்கு அனுப்ப மனம் இல்லை. எனவே காரைக்காலில் பரமதத்தன் தனது வியாபாரத்தை தொடர்ந்தார்.

பரமதத்தனை சந்திக்க வந்தவர்கள் அவனிடம் இரண்டு மாம்பழங்களை கொடுத்துச் சென்றனர்.(இதில் பல்வேறு கருத்துகள் இருக்கின்றன. இவைகள் இரட்டை என்ற கருத்துக்கு வலிமை சேர்க்கின்றன.கணவன் – மனைவி, பரமாத்மா – ஜீவாத்மா)

பரமதத்தன்  வேறு ஆள் மூலமாக அந்தப் பழங்களை புனிதவதியிடம் கொடுத்து அனுப்பினான்.புனிதவதி மதிய உணவு தயாரித்துக் கொண்டிருந்தார்.

ஐந்தொழில் புரிவோன் நாடகத்திற்கு தயாரானார்.

அப்போது வாயிலில் குரல் கேட்டது. ‘சிவாயா நம’

காரைக்கால் அம்மையார்,’திரு அமுது(சோறு) தயாராக இருக்கிறது. கறிஅமுது இன்னும் தயாராகவில்லை, சற்று பொருத்திருங்கள்’

சிவனடியார் – ‘மிக்க பசியாக இருக்கிறது. இருப்பதைப் படையுங்கள்’.

எனவே அமுது படையல் பரமதத்தன்  அனுப்பிய ஒரு மாங்கனியோடு நிகழ்தது.

காத்திருங்கள்.. நாயகனின்  நாடகத்திற்கு..

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

சைவ சித்தாந்தம் மிகப் பெரியது என்பதால் இனி இத்தொகுப்புகள் – ‘சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்’ என்ற தலைப்பில் வரும்.

ஆன்மாக்கள் நித்தியமனவைகளாக இருக்கின்றன. தேகம் அழிவதால் அது அநித்தியம். கர்ம வினைகளின் காரணமாக பல பிறப்புகள் எடுக்கும், ஆத்மா மாற்றம் மட்டுமே கொள்கிறது. அது அழிவதில்லை. பல பிறப்புகளுக்கு காரணமாக மட்டும் அமைகிறது.

காமம், குரோதம், லோப மோக மதம் மாற்சரியம் இவற்றின் காரணமாக (அக்காரணிகள்) ஆன்மா குற்றங்களை உடையாதாக இருக்கிறது.

காமம்: பற்றினால் உண்டாகும் பாசம்

குரோதம்: கோபம்

லோபம்: பேராசை

மதம்: மிகு கோபம்/வெறி பிடித்த நிலைமை.

மாத்ஸர்யம்: பொறாமை

மேற் கூரிய காரணங்களால் ஆன்மா, மலத்தால் சூழப்பட்டிருக்கிறது.

‘செம்புல பெயல் நீர் போல்’ என்பது வாசகமாகும். அது போல் ஆன்மா வினைகளின் காரணமாக அதன் வடிவம் பெறுகிறது. இது ஆன்மாவிற்கு இயற்கை உணர்வு இல்லை என்பதை உணர்த்துகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

பெண் – இளமை துறத்தல்

நான் அறிந்த வரையில் (மிக மிக சிறிய அளவு) பக்தி இலக்கிய காலத்திலிருந்து தற்காலம் வரை இரண்டு பெண்கள் தனது இளமையை துறந்திருக்கிறார்கள்.  (பல ஆண்கள் விரும்பி இருக்கிறார்கள்.  உ.ம் யயாதி – புரு – மஹாபாரதம்)

1. ஔவையார்,
2. காரைக்கால் அம்மையார்.

இருவருக்குமே இளமையின் மீது ஏன் அந்த வெறுப்பு ஏற்பட்டது?

1.சமூகம்
2.பொருளாதாரம்
3.வீடு
4.இறைமை குறித்த சிந்தனைகள்
5.காரைக்கால் அம்மையாருக்குப் பின் பல நூற்றாண்டுகள் கழித்து வரும் திருநீல கண்ட நாயனார் முலமாக வெளிப்பட்ட /பதிவு செய்யப்பட்ட ‘இளமை மீதூற இன்பத்துறையில் எளியன் ஆனார்’ என்ற எண்ணங்களின் துறத்தலா?
6.துறக்கப்பட்ட விஷயத்தில் இருந்த வலிகள்/காயங்கள்/வடுக்கள்.
7.இலக்கு நோக்கிய பயணம்.

நோக்கம் இருவருக்கும் ஒன்றாகத்தான்  இருந்திருக்கிறது.

காரைக்கால் அம்மையார் – என் சிறுவயதில் சொல்லப்பட்ட கதை இது.  இந்த பிரமிப்பு மற்றும் வலிகள் இன்றும் தொடர்கிறது.

ஒரு சராசரி ஆண் எப்படி வாழ்க்கையை நடத்தினான்,  இறையருளால் ‘அம்மா’ என்று அழைக்கப்பட்ட பெண் எப்படி அடைய முடியா இலக்கை அடைந்தாள் என்பது மிக நீண்ட வரலாறு.

காலத்தினை கருத்தில் கொண்டு காரைக்கால் அம்மையார் சரிதத்தை எழுத இருக்கிறேன். தவறு இருப்பின் தெளியப் படுத்துங்கள்.

Photo – Shivam

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம்

உடம்பு அழியக்கூடியது. (தேகம்) – எனில் அதைப் பகுக்க முடியுமா?

ஜடப் பொருள்கள் அழியக்கூடியது.

பிருதிவி, அப்பு, தேயு, வாயு மற்றும் ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களின் சேர்க்கை. எனவே இது அழியும்.  எனவே இவை ஜடப் பொருள்கள். எனவே அது சித்து ஆகாது.

அப்படி எனில் மனத்தின் வேலை எது –
கீழே குறிப்பிட்டவைகளின் தொடர்கலவையே செயல்.

மனம்  – நினைக்கும்.
புத்தி  – விசாரிக்கும்.
சித்தம்  – நிச்சயிக்கும்.
அகங்காரம் – துணியும்.

எனவே சித்தம் என்பது பூதங்களின் சேர்க்கை தவிர்த்த மற்றொன்று. சில நேரங்களில் கனவு காண்கிறோம். அவை நிச்சம் என்றும் நம்புகிறோம். விழித்தவுடன் அது கனவு என்பது பற்றிய தெளிவு வருகிறது.

அது போலவே ‘நான்’ தேகம் என்னும் நிலை மாறும் போது, அசித்து பற்றிய எண்ணம் தெளிவுறுகிறது. அது உலகியல் நிலையாமை என்னும் கருத்தை வலியுறுத்தி நிச்சயப்படுத்துகிறது.

கருத்து கனமானது என்பதால் மீண்டும் தொடர்வோம்.
(மிக அதிக அளவில் இக்கருத்துக்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக)

Loading

சமூக ஊடகங்கள்

பட்டினத்தார்

பட்டினத்தார் என்ற பெயரில் பல புலவர்களும், கவிஞர்களும் வாழ்ந்திருக்கிறார்கள். காலம் 2ம் நூற்றாண்டு, 10ம் நூற்றாண்டு மற்றும் 17 – 18 ம் நூற்றாண்டு.

பட்டினத்தாருக்கு ஞானம் மகன் மூலமாக கிடைக்கிறது. கடல் கடந்து பொருள் ஈட்டி வரும் மகன், எருவிராட்டியையும், தவிட்டையும் எடுத்து வருகிறான். அவன் கொடுத்ததாக இருந்த பேழையை(பெட்டி) திறந்து பார்க்கிறார். ஒலை ஒன்றும், உடைந்த ஊசி ஒன்றும் இருக்கிறது. அந்த ஓலையில்  “காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே”  என்று எழுதப்பட்டிருக்கிறது.

இடரது பாடல்கள் மிக எளிமையானவை.

பிறக்கும்பொழுது கொடுவந்த தில்லை, பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவ தில்லை; இடைநடுவில்
குறிக்குமிச் செல்வஞ் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்குங் குலாமருக் கென்சொல்லுவேன் ? கச்சியேகம்பனே 

இவ்வுலகில் பிறக்கும் போது எதையும் எடுத்து வரவில்லை. அது போலவே இறக்கும் போதும். இடைக்காலத்தில் பெறும் இச்செல்வம் சிவன் கொடுத்தது என்று அறியாமல் இறக்கும் கீழ் தரமானவர்களுக்கு என்ன சொல்வேன்.

முதல் பட்டினத்தார் தவிர மற்ற இருவரின் பாடல்களுக்கு விளக்கம் தேவை இருக்காது.

வாசித்தால் வாழ்வின் நிலைமை புரியும்.

Image – Internet

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம்

சைவ சித்தாந்தம் – சிந்தனை

பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில் – என்று ஆரம்பிக்கிறது. பதி குறித்தே தொடக்கம் எனினும், ‘பசு'(உயிர்) குறித்த அறிவு ஏற்பட்ட பின் ‘பதி’ குறித்த உணர்வு வரும் என்பது என் கருத்து.

எனவே பசு தொடங்கி விளக்கம் ஆய்வோம்.

பொதுவாக உயிர்களின் நிலையாமையைச் சொல்லி இறைவனை நாடச் சொல்லுதல் சைவ மரபு. (உ.ம் – திருமந்திரம் – உயிர் நிலையாமை, யாக்கை நிலையாமை )

நிலைத்திருத்தல் என்பது எல்லா காலங்களிலும் நிலைத்திருத்தல் (அழிவற்றதாக) என்பதாகக் குறிக்கப்படும்.
அவ்வாறு அல்லாது,
1. உடம்பு அழியக்கூடியது. (தேகம்)
2. பிரபஞ்சம் அழியக்கூடியது. (உ.ம் பிரளயம், ஊழிப் பெருங்காற்று)
3. பிரபஞ்சதின் உட் பொருட்களும் அழியக் கூடியது. (மரம், செடி)

அழியும் பொருள் ஒன்று எனில், அழியாப் பொருளும் இருக்கக் கூடும்.
எனவே அவைகள் அசித்து எனவும், சித்து எனவும் வழங்கப்படும்.
சித்து          – அழியாதது.
அ – சித்து  – அழியக் கூடியது.

கருத்து கனமானது என்பதால் மீண்டும் தொடர்வோம்.
(மிக அதிக அளவில் இக்கருத்துக்களை அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் என்னை மன்னிப்பார்களாக)

Loading

சமூக ஊடகங்கள்