முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 3

 
 
சிவனின் மைந்தன் / பெருமாளின் மருமகன் என்ற வகையில் இக்கட்டுரை.
 
 
 
 
 
 
 
 
 
 
1.
பாடல்
மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன்வந்தா லென்முன்னே
தோகைப் புரவியிற் றோன்நிற் பாய்சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே. 80
விளக்கம்
மாகம் – ஆகாயம்
கூற்றன் – எமன்
த்ரிபுராந் தகன் – மூன்று புரங்களையும் அழித்தவன் – சிவன்
பொருள்
எமன் வருங்காலத்தில் மாசு அற்றவரும், நிலைத்த முக்தியை அளிப்பவரும் முப்புரங்களை அழித்தவரும், கொடைத் தன்மை உடையவரும் மூன்று கண்களை உடையவருமான சிவனை வலது பாகத்தில் கொண்ட மேலான கல்யாண குணங்களை உடைய பார்வதியின் புத்திரரே, ஆகாயம் தொடும் அளவு கொண்ட எமன் வரும் காலத்தில் தோகைகளை உடைய மயில் மீது வந்து நின்று அருள் புரிவீர்.


கருத்து
முப்புரம் அழித்தல் – மும்மல காரியம் (விளக்கம் – திருமந்திரம்)
முக்தி – ஜீவன் முக்தி, விதேஹ முக்தி என்று பலவகைப்பட்டாலும் அழியாத முக்தியை அருள்பவர்
சிவனை வலப்பக்கம் வைத்திருக்கும் – பார்வதியைக் குறிக்கும்.
கல்யாணி – கல்யாண் என்பதன் பெண் வடிவம்.
கல்யாண என்னும் வடசொற்கு அழகிய, மனத்திற்கேற்ற,சிறந்த, உயர்ந்த, நல்ல, நலமான, மங்கல, மகிழ்ச்சியான, ஆக்கமான என்னும் பொருள்களும், மகிழ்ச்சி, ஆக்கம், தழைப்பு, நல்லொழுக்கம், அறப்பண்பு என்னும் பொருள்களும் கூறப்பட்டிருக்கின்றன. மங்கலம் என்ற தன்மையில் ஆளப்படுகிறது. அஃதாவது, இப்படிப்பட்ட குணங்களை உடைய பரம கல்யாணியின் பாலகன்
தோகைப் புரவி – வெகு விரைவில் வந்து என்னை ஆதரிப்பாய் என்பதன் வெளிப்பாடு.
இப்பாடல் சோமாஸ்கந்த மூர்த்தத்தை நினைவு கூறும்.
2. 
பாடல்
பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும்
மாலே கொண்டுய்யும் வகையறி யேன் மலர்த்தாள் தருவாய்
காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின்
மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ்வேலவனே. 41
விளக்கம்
காலே இலாத – பாம்பு
மாலோன் மருக – திருமாலில் மருமகனே
பொருள்
காற்றை உண்டு கால்கள் அற்ற ஆதிசேஷன் மீது துயில் கொள்ளும் பள்ளி கொண்டிருக்கும் மாலோனில் மருமகனே, செந்நிறமுடைய வேலை உடையவரே, பால் போன்ற இனிமையான மொழிகள் பேசும் பெண்களுடன் கலந்து(சிற்றின்பத்தில் மூழ்கியவனாக) அதை விரும்புவனாக இருக்கிறேன். அதில் இருந்து விலகி முக்தி மார்கம் அடைய வழிகாட்டுவாயாக. ஆதலால் உன் மலர் பதத்தை தருவாயாக. (இறைவனின் பாதங்கள் முக்தியை தரும் என்பது துணிபு)
சீரடி சென்னி வைக்க – அபிராமி அந்தாதி
நாதன் தாள் வாழ்க – மணிவாசகப் பெருமான்
கருத்து
காலே இலாத – பாம்பு
மாலோன் மருக – திருமாலில் மருமகனே
காலே மிக உண்டு – காற்றை ஏற்று, இது சித்தர்கள் வழி காற்றினை சுவாத்தலைக் குறிக்கிறது. இங்கு உள் இழுத்தலை மட்டுமே குறிக்கிறது. சுவாசித்தலில் அளவு குறையும் போது, வாழும் காலம் அதிகரிக்கும்.
ஆண்டிற்கு ஒன்றாய் மூவாயிரம் பாடல் எழுதிய திருமூலரது வாழ்வு இங்கு நினைவு கூறத்தக்கது.

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *