மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை அடையாமல், தவத்தொழிலைச் செய்து, பயனில்லாத சொற்களைப் பேசி பின்னுதல் உடைய சடைகளைச் சேர்த்துக் கட்டிக்கொண்டும், எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டு மட்டுமே மக்கள் பிறவியாகிய கடலை முற்றிலும் கடந்துவிடுதல்என்பது இயலாது; ஆதலின், அந்நிலையில் இருந்து வேறுபட்டு நிற்க நீ தேவர்களுக்குத் தேவனாய் உள்ளவனும் பெருந்தேவனாகியும் ஆனவனும் கொண்டு செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற நன்மையின் மேல் எல்லையாய் உள்ள பெருமானை அணுகச் சென்று இவனே தொன்மையான முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.
வெள்ளை பாஷாணத்தால் ஆன அர்த்தநாரீஸ்வரர் மூலவர். திருவடிவம் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி திருக்காட்சி. (இலிங்க வடிவமில்லை) பாதி புடவை – பாதி வேஷ்டி அலங்காரம்; இந்த கோலத்திலேயே (மூலவர்) காட்சி முழு வடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.
அர்த்தநாரீஸ்வரர் பாதத்தின் அடியில் தேவ தீர்த்தம் எனப்படும் நீர் சுரந்தவாறு உள்ள அமைப்பு
ஆண் பாகமான வலக்கையில் தண்டம் ஏந்தியும், பெண் பாகமான இடக்கையை இடுப்பிலும் வைத்தவாறும் கால்களிலும் ஒருபுறம் சிலம்பும் , மறுபுறம் கழலும் அணிந்தவாறு திருக்காட்சி கொண்ட அர்த்தநாரீஸ்வரர் உற்சவ திருமேனி
வெள்ளைபாஷாணத்தால் செய்யப்பட்ட திருவடிவம் ஆன செங்கோட்டு வேலவர் வலக்கையில் வேல் ஏந்தி , இடக்கையை இடுப்பில் வைத்தவாறு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி திருக்காட்சி; அடியில் உள்ள பீடம் சதுர வடிவிலானது
கேதாரகௌரியம்மை மரகதலிங்கத்தை வழிபாட்டு சிவனாரின் இடப்பாகத்தை பெற்ற தலம்
கிழக்கு நோக்கிய ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆதிகேசப்பெருமாள் சந்நிதி
ஆமை வடிவத்தின் மேல் அமைந்த நந்தி மண்டபம்
ஆதிசேஷனுக்கும், வாயுவிற்கும் நடந்த சண்டையில் சிதறிய மேருமலையின் சிகரங்களில் இத்தலமும் ஒன்று
மேலமாடவீதியிலிருந்து பார்ப்பதற்கு நாகம் போன்று காட்சியளிப்பதால் நாகாசலம், நாககிரி.
மலை சிவந்த நிறமாக காட்சியளிப்பதால் செங்கோடு
விறன்மிண்ட நாயனார் பிறந்து, வாழ்ந்து, முக்திப்பெற்ற தலம்
திருஞானசம்பந்தர், திருநீலகண்டப்பதிகம் பாடிய தலம்
திருஞானசம்பந்தர், கொங்கு நாட்டுத் தல யாத்திரையின் போது, முதலில் இப்பதியை வணங்கி, பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களை ‘நளிர்சுரம்’ பற்றி வருத்த ‘அவ்வினைக் கிவ்வினை’ என்னும் பதிகம் பாடி, ‘தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்’ என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு.
பாண்டிப்புலவரேறு என்ற புலவருடன் குணசீலர் என்ற புலவர் புலமையை நிருபிக்கும் போது “சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே” – என்று பாடி அதற்குமேல் எழுதமுடியாது திண்டாடிய போது, குணசீலர் என்ற அந்த புலவருக்காகச் செங்கோட்டுவேலர் மாடு மேய்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டு “அஃது குமரன் திருமால் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே” என்று பாட்டினை முடித்து திரும்பிப் போகும்படிச் செய்தார்
1200 படிகள் மேல் திருக்கோயில் உள்ளது. பாம்பு உருவங்கள் கொண்ட படிக்கட்டுகள்; ஓரிடத்தில் நீளமான 20 அடி பாம்பு வடிவத்திலேயே ஏறும் வழி
இத்தலம் பற்றிய குறிப்புக்கள் உள்ள நூல்கள் – சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம்
கிழக்கு நோக்கிய ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆதிகேசப்பெருமாள் சந்நிதி
அலைகள் நிறைந்ததும், குளிர்ந்த கங்கை நதி, பாம்பு ஆகியவற்றை தனது திருச்சடையில் அணிந்து, தனது திருமேனியில் மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டுள்ளவனும், மலையில் வளரும் குலைகள் நிறைந்துள்ள இளவாழை மரங்களை உடையதும், குளிர்ந்த சோலைகள் சூழ்ந்து விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தலைவனுமாகிய சிவபிரானைத் தொழுபவர்களது தடுமாற்றம் விலகும்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 1
பதிக எண் 107
திருமுறை எண் 6
காட்டில் புதியதாக மலர்ந்திருக்கும் கொன்றை மலரின் வீசுதலை உடையவனே, மான் போன்ற மெல்லிய பார்வை உடைய உமை அஞ்சும்படி பெரியதான யானைத் தோலைப் போர்த்தியவனே, ஞானக்கண்ணாய் விளங்குபவனே ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மை நிலையில் இருக்கும் யான் அதுபற்றி உணர்வு எதுவும் இல்லாமல் உடம்பு வளர்க்கும் காரணம் பற்றி உன்னை நினையாது ஒழிந்தேன்.
விளக்கஉரை
செடியேன் உணர்வில்லேன் – செடி போன்றவைகள் ஓரறிவு உயிர்கள். எனவே உன்னை நினைத்தல் என்பது பற்றி உண்ர்வு கூட இல்லை.
குறை உடைய உயிர்களின் நிலை அறிய அவைகளின் அனைத்து வினைகளைப் பற்றியும் அறிய அறிவு வேண்டும். அதனை காண ஞானக் கண் அவசியமாகிறது. உயிரின் வினைகளைக் களைபவன் என்பதனால் அவன் ஞானக் கண் உடையவனாகிறான்.
செங்கயல் எனும் ஒரு மீன்வகையான கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களை உடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, மாற்றம் இல்லாத, நிலையான பெரிய தவத்தினால், வேள்வித் தீயினியில் இருந்து தோன்றிய சிங்கமும், மிகப் பெரியதான புலியும், திருமாலின் நிறம் ஒத்த பருத்த பெரிய யானையும் கதறி ஒடும்படி செய்தும், அழியும்படி செய்வதுமான மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின் தோலை உரித்தும், அத்தோலைப் போர்த்தியும் செய்தற்குக் காரணம் யாது?
விளக்கஉரை
‘உன்னை உணரும் உணர்வில்லாதோர்க்கும் உணர்வு உண்டாக்குதல்’ என்பது பற்றிய பாடல்.
தவம் – தாருகாவன முனிவர்களுடையது. அட்ட வீரட்டான செயல்களில் ஒன்றான இவ்வரலாற்றினை வழுவூர் திருத்தல பெருமை கொண்டு அறிக.
நாககிரி, சங்ககிரி, மங்களகிரி, வேதகிரி என்ற நான்கு மலைகளுக்கு நடுவில் பத்மகிரி மலையில் அமைந்துள்ள திருத்தலம்.
தேவர்களும், அசுரர்களும் திருமாலின் உதவியோடு பாற்கடலைக் கடைந்து இறுதியில் அமுதம் எடுத்தப் பின் பராசர முனிவர் நாராயணனிடமிருந்து சிறிது அமுதத்தைப் பெற்று வரும்போது, வழியில் அசுர்கள் அந்த அமுத்தை அவரிடமிருந்து பறிக்க முற்படுகையில் பவானி கூடுதுறையில் காயத்ரி தீர்த்தம் என்று ஒரு தீர்த்த கட்டத்தில் அமுதம் கொண்ட கலசத்தைப் புதைத்து வைத்துவிட்டதால், அந்த அமுதமே பின்பு காயத்ரி லிங்கம் என்று லிங்க உருவாக மாறி இருக்கிறது.
திருஞானசம்பந்தர் இத் திருதலத்திற்கு வருகை தந்த போது அவருடைய அடியார்களை ஜுரநோய் பீடிக்க, இங்குள்ள மூன்று கால்கள், மூன்று கைகள், மூன்று தலைகளுடன் கூடிய ஜ்வரஹரேஸ்வரரை வழிபட்டு அவர்கள் நோய் நீங்கப் பெற்றத் திருத்தலம்.
பள்ளியறையில் தந்தந்தினாலான ஊஞ்சலில் அம்மை
வேதங்களுக்கு தலைவியாக விளங்குவதாலும், நான்கு வேதங்களால் பூஜை செய்யப்பட்டதாலும் வேதவல்லி எனும் திருநாமத்துடன் அம்பாள்
பவானி ஆறு, கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி காவிரி இவைகள் சேருமிடத்தில் இத்தலம்அமைந்துள்ளதால் இத்தலம் தென்திரிவேணி சங்கமம்
விஸ்வாமித்திர முனிவரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்டதால் காயத்ரி லிங்கேஸ்வரர்
வழிபடுவோருக்கு யாதொரு தீங்கும் நிகழா வண்ணம் காக்கும் (நண்ணுதல் – கிட்டுதல்) பதி என்பதால் நணா.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றால் ஆகியவற்றால் அழைக்கப்படும் திருத்தலம்.(பவானி)
குபேரன், பல திருத் தலங்களை தரிசித்தப்பின் இங்கு வந்த போது அனைத்து உயிர்களும் எவ்வித பேதமும் இல்லாமல் ஒன்றாக இருப்பது கண்டு தவம் செய்து சிவன், திருமால் ஆகியோரால் தரிசனம் கிடைக்கப்பெற்று ‘ பக்தர்களுக்கு வேண்டிய வரம் அருள வேண்டும்’ என வேண்டிப் பெற்றத் திருத்தலம். (தட்சண அளகை)
இராவணன் வழிபாடு செய்தது சகஸ்ரலிங்கம்
வேணு கோபாலர் சன்னதிக்குப் பின் ஒரு உடல், இரு தலைகளுடன் பசுக் காட்சி
வில்லியம் காரோ என்ற ஆங்கிலேயர் கலெக்டராக இருந்த போது (1802ம் ஆண்டு) அம்பிகையை காணும் தீராத ஆவலால் அம்பிகை சந்நதிக்கு நேரே இருந்த மதிலில் மூன்று துவாரங்கள் செய்து அத்துவாரங்கள் வழியே அலங்கரிக்கப்பட்ட அம்பிகையை தரிசித்ததன் பலனாக தன் இருப்பிடத்தில் தனியாக உறங்கிக் கொண்டிருந்த போது கூரை இடிந்து விழும் முன் அவர் கனவில் அம்பிகை வேதநாயகியைப் போலத் தோற்றம் கொண்டிருந்த ஒரு பெண் தோன்றி, ‘பங்களாவைவிட்டு உடனே வெளியேறு’ என்று ஆணையிட்டு காப்பாற்றிய பெருமை கொண்ட தலம். ( நன்றி காணிக்கை – தந்தத்தினால் ஆன கட்டில்)
சைவ வைணவ ஒற்றுமைக்கு ஒரு எடுத்துக்கட்டாக ஆதிகேசவப் பெருமாள், சௌந்திரவல்லி தாயார் ஆகியோருக்கு தனி சந்நிதிகள்
மாசி மாதம் மூன்றாவது நாளில் சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்பிரமணியர் ஆகிய மூவருக்கும் சூரிய வழிபாடு நடைபெறும் திருத்தலம்.
ஆறு காலப் பூஜைகள் நடைபெறும் திருக்கோயில்
நூல்கள்
கூடற்புறான வசனம் – புலவர் கு.குமாரசாமிப் பிள்ளை
பவானிப் பதிற்றுப்பத்தந்தாதி – புலவர் கு.குமாரசாமிப் பிள்ளை
பவானி வேதநாயகி அம்மன் பிள்ளைத்தமிழ் – திருமுகவூர் மு.ரா. கந்தசாமிக்கவிராயர்
காலை 6:00 மணி முதல் – 01:00 மணி வரை
மாலை 4:00 மணி முதல் – 08:30 மணி வரைஅருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோவில்
பவானி, ஈரோடு மாவட்டம் – 638301
04256 – 230192, 09843248588.
வழிபட்டவர்கள்
திருமால், குபேரன், விஸ்வாமித்திரர், பராசரர்
பாடியவர்கள்
அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
சேலத்தில் இருந்து 56 கிமீ தொலைவு, ஈரோட்டில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 207 வது தலம்
கொங்கு நாட்டுத் தலங்களில் வது தலம்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 72
திருமுறை எண் 2
அழகிய கண்ணான நெற்றிக்கண் பொலிந்து விளங்கும் நெற்றியினை உடையவரும், ஒருகையில் வீணை ஏந்தியவரும், ஆகாமியகன்மம் முதல் சஞ்சிதம் பிராரப்தம் வரையிலான பழைய வினைத் தொகுப்பினைத் தீர்த்து அருள்பவரும் ஆகிய எம் இறைவன் உறையும் இடம், இலைகள் அடர்ந்த காட்டில் வேகமானதும், இசை போல் ஒலிப்பதுமான அருவிகளுடன் கூடியதும், மூங்கில்கள் உராய்ந்து ஓசை எழுப்புவதும், கரைபுரளும் அலைகள் வழியே சேர்க்கும் திருநணாவாகும்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 72
திருமுறை எண் 8
மன்நீர் எனப்படும் பெருகிய கடல் நீரால் சூழப்பட்ட இலங்கை மன்னன் இராவணனின் வலிமை அழியுமாறு கால் விரலை ஊன்றி அவனை வருந்தச் செய்தவரும், கடலிடையே தோன்றிய நஞ்சினை உண்டவருமாகிய சிவபெருமானுக்குரிய இடம், பகை கொண்டும், கோபம் கொண்டும் மலைக்குகையில் வாழும் சிங்கம் தன் தன்மைகுன்றி அதனோடு போரிட்டு முற்றத்தில் படிந்த அதனது குருதியைக் கண்டு தன் வலிமையில் பெருமை பெற்ற யானை சென்று மறையும் திருநணாவாகும்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
விடிவ தறியார் வெளிகாண மாட்டார் விடியில் வெளியில் விழிக்கவும் மாட்டார் கடியதோர் ஊன்இமை கட்டுமின் காண்மின் விடியாமை காக்கும் விளக்கது வாமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
புறப் பொருளைக் காணும் கண் இல்லாதவர்கள் இருளிலும், விடி காலை புலர்ந்தாலும், விடிந்தப் பின்னும் அதை அறியாமல் இருப்பதோடு விடிந்தபிறகும் ஒளியில் பொருள்களை கண்டு பயன்பாடு கொள்ளவும் மாட்டார்கள். அதுபோலத் திருவருளை உணரும் பக்குவம் இல்லாதவர்கள், தமக்குத் திருவருள் முன்னின்று அருளுதலை உணரமாட்டாமல் இருந்து, அவ்வாறு அருளிய பின்னும் அந்த அருள் நலத்தை நுகரவும் மாட்டார்கள். ஆதலினான் நீங்கள் ஊனக் கண்ணை விலக்கி, நுண்ணிதாகிய ஞானக் கண்ணைத் திறந்து திருவருளைக் காண்டால், அத்திருவருளே அறியாமையாகிய இருள் வாராதபடிக் காக்கின்ற ஒளியாகி முன் நிற்கும்.
விளக்கஉரை
இருளில் அழுத்துவதாகிய அபக்குவம் நீங்குமாறு முயல வேண்டும் என்பது பற்றிய பாடல்.
‘திருவருளே விளக்கு’ – நீங்கள் அவ்விளக்கையே உமக்குக் காட்டாகக் கொள்ளுதல் வேண்டும்` எனும் பொருளில்.
பஞ்ச ஈச்சரங்களில் ஒன்று. இலங்கையின் நான்கு திசைகளிலும் காவல் காத்ததாகக் கூறப்படும் நான்கு ஈச்சரங்கள் – 1. நகுலேச்சரம், 2. திருக்கோணேச்சரம், 3. திருக்கேதீச்சரம், 4. தொண்டேச்சரம்
கேது ஈசனை வழிபாட்டு அருள்பெற்ற தலம் திருக்கேதீஸ்வரம். கேது+ஈச்சரம்=கேதீச்சரம் (திருக்கேதிச்சரம்) 1
சூரபதுமனின் வழியில் வந்த துவட்டா, பிள்ளைப் பேறின்றித் திருக்கேதீச்சரத்தில் உள்ள பாலாவித் தீர்த்ததில் நீராடிக் கேதீச்சரத்தானை வழிபட்டு திருவருள் கைகூடி பிள்ளைப் பேறு பெற்றத் தலம். துவட்டா உருவாக்கியதால் துவட்டா, காலப் போக்கில் பெருநகரமாய் ஆனதால் மாதுவட்டா
மாந்தை என வழங்கப்பட்ட தமிழ்ப்பெயரின் பாளி மொழிபெயர்ப்பே மகாசித்தா..மகா – பெரிய, , தித்தா – இறங்குதுறை அல்லது துறைமுகம். பெரிய துறைமுகம்
இராமர் சிவபக்தனான இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட பிரமகத்தி தோஷம் போக்க வெள்ளிலிங்கம் செய்து வழிபட்டத் தலம்
நாகர்கள் வழிபாடு செய்த திருத்தலமானதால் நாகநாதர்
பஞ்சபாண்டவர்களுள் ஒருவராகிய அர்ஜுனன், தீர்த்தியாத்திரையின் போது தென்னகத்தலங்களை வழிபட்டபின்னர் வழிபட்டத்தலம்.
உலகிலேயே மிகபெரிய வடிவிலான சோமாஸ்கந்தர் மூர்த்தம் உள்ள தலம்
‘பொங்கரவர் சங்கரர்வெண் குழையோர் காதர் கேதீச்சர மேவினார் கேதாரத்தார்..’ என்று திருநாவுக்கரசரால் பாடப்பெற்றத் திருத்தலம் (திருவீழிமிழலைப்பதிகம் – ஆறாம் திருமுறை)
‘..நன்னகர் மாந்தை முற்றத்து ஒன்னார்..’ என்று அகநானூறிலும், ‘…புன்னாகச்சோலை புனற்றெங்கு சூழ் மாந்தை…’ என்று முத்தொள்ளாயிரத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளத் தலம்.
‘ஆர்கலிசூழ் தென்னிலங்கை அழகமர் மண்டோதரிக்குப் பேரருள் இன்பமளித்த பெருந்துறை மேயபிரான்’ எனும் குயிற்பத்தில்(திருவாசகம்) உள்ள பெருந்துறை என்று மாந்தை நகரம் குறித்த வரிகள்.
கோயிலுக்கு அருகினில் உள்ள மடங்கள் – சம்மந்தர் மடம், சுந்தரர் மடம், மலேசியா மடம், அடியார் மடம், சிவபூஜை மடம், நாவலர் மடம்
காலை 7.00 மணி முதல் 1.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு திருக்கேதீஸ்வரர் திருக்கோயில், மாதோட்ட நகரம், மன்னார் மாவட்டம், இலங்கை
தென்னிலங்கை குலத்தலைவனாகவும் மன்னனாகவும் ஆன இராவணன் கயிலைமலையை நெருக்கி எடுத்தபோது அவன் முடி,வலிமை வாய்ந்த தோள்கள் ஆகியனவற்றை நெரித்து அவன் தலைக்கனம் அழித்துப் பின் அவனது பாடல்கேட்டு அவனுக்கு அருள் செய்த தலைவனான ஈசன், பொன், முத்து, மாணிக்கம், மணிகள் நிறைந்த மாதோட்ட நன்னகரில் அன்போடு அன்பர்கள் தியானித்து வழிபடும் கேதீச்சரத்தில் உள்ளார்.
பாடியவர் சுந்தரர்
திருமுறை 7
பதிக எண் 80
திருமுறை எண் 8
அட்ட மூர்த்தங்களாகிய நிலம், நீர், தீ, காற்று, வானம், சூரியன், சந்திரன் மற்றும் ஆன்மா ஆகிய எண் பொருள்களாக நிற்பவனாகிய திருக்கேதீச்சரத்தில் எழுந்தருளியிருக்கின்ற பெருமான், தனது இடுப்பில் பாம்பினை கட்டிக்கொண்டு, வண்டுகள் தேனை உண்டு ஆரவாரம் செய்கின்ற சோலைகளையுடைய ‘மாதோட்டம்’ என்னும் நல்ல நகரத்தில், பட்டத்தை அணிந்த அழகிய நெற்றியை உடையவளோடு , பாலாவி ஆற்றின் கரைமேல் மேலானவனாயும், நம்மை ஆளுபவனாயும் இருக்கின்றான்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
இசை போன்று இனிய சொல்லை உடைய உமையினை ஒரு பாகத்தில் உடையவனே! உனக்கு என்று உரிமை ஆனவர்களுக்கு, உண்ணுதலுக்கு ஏற்ற அருமையான அமுதமே! உடையவனே! அடியேனை, மண் உலகில் பொருந்திய எல்லா பிறப்புகளையும் அறுத்து, ஆட்கொள்ளுதல் பொருட்டு ‘நீ வருக’ என்று அழைத்ததனால் உன் திருவடிகளைக் கண் கொண்டு அடியேன் உய்ந்த முறை ஏற்பட்டது.
விளக்கஉரை
மண்ணார்ந்த பிறப்பறுத்திட்டாள்வாய்நீ – எண்பத்து நான்கு நூறாயிர யோனி பேதங்கள் – 1. தேவர் – 11,00,000 யோனி பேதம், 2. மனிதர்- 9,00,000 யோனி பேதம், 3. நாற்கால் விலங்கு – 10,00,000 யோனி பேதம்,
4. பறவை – 10,00,000 யோனி பேதம், 5. ஊர்வன – 15,00,000 யோனி பேதம், 6. நீர்வாழ்வன – 10,00,000 யோனி பேதம். 7. தாவரம் – 19,00,000 யோனி பேதம் ஆக மொத்தம் 84,00,000 யோனி பேதம். .அத்தனை யோனி பேதங்களும் மனித பிறப்பினை அடிப்படையாக கொண்டவை. ஒலி, தொடு உணர்வு, உருவம், சுவை, வாசனை ஆகியவை கொண்டு மண்ணின் தத்துவமாக கருத்தில் கொண்டு அது விரிந்து தொண்ணுற்று ஆறு தத்துவங்களையும் கடந்து நின்று வினை நீக்கி அருளுபவன் என்றும் கொள்ளலாம்.
உடையவன் – உரியவன், பொருளையுடையவன், கடவுள், செல்வன், தலைவன்
ஆதிசேடனும் வாயுபகவானும் தங்கள் வலிமையைக் காட்ட முயன்று, ஆதிசேடன் மகாமேருவின் சிகரத்தை மூடிக் கொள்ள, வாயுபகவான் மகாமேருவின் சிகரங்களில் ஒன்றை பெயர்த்து கடலில் வீச, அது இலங்கையின் கிழக்குக் கரையோரமாக விழுந்து உருவானது இத்திருத்தலம்.
கச்சியப்பரால் குறிப்பிடப்படும் ஆதி சிவனின் இருப்பிட திருத்தலங்களில் கயிலாயம், சிதம்பரம் இவற்றிற்கு பிறகானது இத்தலம்
திருமால் மச்சவதாரத்தில் தட்சணகைலாயம் என்ப்படும் இத்தலத்தை அடைந்து தனது மீன் உருவத்தை விட்டு நீங்கி மகேஸ்வரனை வணங்கியதால் மச்சகேஸ்வரம்
தாமரைத்தண்டு நூலினால் விளக்கேற்றி வழிபாடு செய்ததால் திரிதாய்
குறிஞ்சி, முல்லை, நெய்தல் ஆகியவை ஒன்று சேர்கின்ற இடத்தில் அமைந்துள்ளதால் திருக்குணமலை
வரலாற்றின்படி, 30௦௦ வருடங்களுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த கோயில்; பழைய கோயில் உச்சியிலும், இடையிலும், அடிவாரத்திலும் என்று மூன்று பெருங்கோயில்கள் கொண்டது
தட்சண கயிலாய புராணப்படி, இராவணன் தன் தாயாரின் சிவ பூஜைக்காக தட்சண கயிலாயமான இம்மலையை பெயர்த்தது
சிறப்புடைய இக்கோயிலின் அழகினை கேள்விப்பட்ட திருஞானசம்பந்தர் ஞானக்கண் கொண்டு திருஇராமேஸ்வரத்தில் இருந்து பதிகம் பாடிய தலம்
மனுநீதிகண்டசோழனால் பூசைகளும், விழாக்களும் நடத்தி, பொற் குவியலை திருக்கோணேஸ்வரத்தின் ஒரு கிணறு தோண்டி அதில் பாதுகாப்பாக வைத்து சிவகதி அடைந்தப் பின்,ஓர் அந்தணன் கனவில் பூதம் தோன்றி மனுநீதிகண்டசோழன், கோணேசர் ஆலயப் பணி செய்த செய்தியைக் கூறி, பொற்குவியல் புதைக்கப்பட்ட செய்தியையும் கூறி, செய்தி அனைத்தையும் பெருமை மிக்க சோழ மன்னான குளக்கோட்டனிடம் கூறச் செய்து, மன்னன் அங்கு வந்த போது மனுநீதிகண்ட சோழன் அடையாளமாக எழுதி வைத்திருந்த ஒரு செப்பேட்டை கொடுத்து அந்தப் பொருள் மூலம் திருப்பணிகள் செய்விக்கப்பட்டத் தலம்.
1624 ம் ஆண்டில் ஏற்பட்ட போர்த்துகீசிய படை எடுப்பால் தகர்க்கப்பட்டு, கோயில் சூரையாடப்பட்ட போது, சிவபக்தர்களால் தம்பல்காமம் எனும் இடத்தில் பூஜை செய்யப்பட்ட முக்கிய விக்ரகங்கள்; தற்போதைய பெயர் ஆதிகோணநாதர்
1952 பிறகு பிரதிஷ்டை செய்யப்பட்டு புதிப்பிக்கப்பட்ட கோயில்
Temple of thousand pillars என்று அழைக்கப்பட்டத் தலம்.
திருகோணமலை வரலாற்றைக் கூறும் தொல் தமிழ் இலக்கியங்கள் – பெரியவளமைப்பத்தி, கைலாசபுராணம், கோணேசர் கல்வெட்டு, குளக்கோட்டன் கம்பசாத்திரம், திருக்கோணாச்சல பராணம், கைலாயமாலை, வையா பாடல், திருக்கோணாச்சல வைபவம், கோணமலை அந்தாதி, திருக்கரைசைப் புராணம், கதிரமரைப்பள், கோணேஸ்வரர் குறவஞ்சி திருக்கோணேஸ்வரர் அகவல் திருக்கோணமலை அந்தாதி,
சோழர் காலச் சாசனங்கள் – கந்தளாய்க் கல்வெட்டு, பாலமோட்டைக் கல்வெட்டு, பிரடறிக் கோட்டைக் கல்வெட்டு, நிலாவெளிப் பிள்ளையார் கல்வெட்டு , மானாங்கேணிக் கல்வெட்டு, காளி கோவில் கல்வெட்டு
வலத் திருவடியில் வீரக்கழலும், இடத் திருவடியில் சிலம்பும் ஒலிக்குமாறு அவற்றை அணிந்தவரும், இயல்பாகவே பாசங்களின் நீங்கியவராகவும், திருநீறு அணிந்த திருமேனி உடையவராகவும், மலைமகளை ஒரு பாகமாகக் கொண்டவராகவும், இடபக்கொடி உடையவராகவும், சந்தனக் கட்டைகளும், கரிய அகில் கட்டைகளும், மாணிக்கக் கற்களும் அளவின்றிக் கரையில் சேர, ஆரவார ஒலி எழுப்பும் கடலின் அலைகளும், முத்துக்கள் கொழிக்கும் திருக்கோண மாமலையில் சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்றார்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 3
பதிக எண் 123
திருமுறை எண் 8
பாடல்
எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும் கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே
பொருள்
கயிலைமலையை பெயர்த்து எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவரும், தவறு உணர்ந்து பின் அவன் ஏத்திப் போற்ற அவனுக்கு விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் அருளியவரும், செல்வத்தோடு கூடியவரும், பிறப்பு இறப்பும் அறியாதவரும். சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவரும், வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக வைத்தவரும் உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னுடைய அருட்பெருமையும், வாழ்வும் கொடுத்தவரும் ஆன பெரும்புகழையுடைய சிவபெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்து அருளுகின்றார்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)
மூலவர், சற்று இடப்புறம் சாய்ந்து காணப்படும் சுயம்பு மூர்த்தி
ஆதி காலத்தில் பசுக்கள் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டதால் தெய்வப் பசுவாகிய காமதேனுவும் மற்ற ஆனிரைகளும் தங்களை அழிக்க வரும் மிருகங்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கொம்புகள் வேண்டும் என்று நந்திதேவரிடம் முறையிட, அவர் வன்னி வனத்தில் சுயம்பு மூர்த்தியாக இருக்கும் அபிராமேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கும் சிவபெருமானை வணங்கி வழிபடும்படி கூறியபடி பசுக்கள் பல நாள் தவம் செய்து கொம்புகள் பெற்றத் தலம். (திரு+ஆ+மத்தூர்)
பசு பூஜை செய்ததின் அடையாளமாக சுயம்பு லிங்கத்தின் மேல் சந்திர பிறை போல் வளைந்த பசுவின் கால் குளம்பின் அமைப்புடம் கூடிய சுவடு
அகழி அமைப்பு கொண்ட கருவறை
பூதம் தாங்குவது போன்ற அமைப்புள்ள கோமுகம்
அன்னையவள் அபயகரம் ஒன்றும், தொடைமீது வைத்த மற்றொரு கரமுமாக மற்ற இரண்டில் தாமரையும் நீலோற்பலமுங் கொண்டு நான்கு கரங்களுடன் கூடிய திருக் காட்சி
அன்னையின் சாபத்தால் பிருங்கி முனிவர் வன்னிமர தலவிருட்சமாக ஆனத் தலம்
அண்ணன் தனது தம்பியை ஏமாற்றி சொத்து அபகரித்து பொய் சத்தியம் செய்து கர்வ மேலிட்டால் அன்னையை பற்றி தவறாக பேச கரும்பாம்பு கடித்து இறந்த சம்பவம் முன்னிட்டு அம்பாளின் மார்பில் பாம்பின் வால் சிற்பம்
இராமாயணத்தில் வாலியைக் கொல்வதற்கு முன் இராமபிரானும், சுக்ரீவனும் அனுமன் சான்றாக நட்பு கொண்டபோது, இந்த வட்டப் பாறை முன் உடன்பாடு செய்துகொண்ட வட்டப் பாறை அம்மன் சன்னதி.
சீதையைத் தேடி வந்த ராமன் வழியில் அகத்திய முனிவரைச் சந்தித்த போது அவரது வழிகாட்டுதலின் படி ஈஸ்வரனை வழிபட்டு ராவணனை வென்று சீதையை மீட்டு சீதையுடன் திரும்பியபோது, மீண்டும் இங்கு வந்து, தனது அம்பினால் ‘தண்ட தீர்த்த’த்தை உருவாக்கி அபிஷேக ஆராதனை செய்த தலம்
தல விநாயகர் – மால் துயர் தீர்த்த விநாயகர்
விநாயகர், பூசை செய்யும் அமைப்பில் கையில் மலருடன் சந்நிதியில் திருக்காட்சி
தற்கால நிகழ்வு – நான்கு திருக்கரங்களுடன் கூடிய வலம்புரி விநாயகர் சிலை, தனது இடக் கை ஒன்றில் அமிர்தக் கலசம் தாங்கி தாமரை மலரில் அமர்ந்த நிலையில் காட்சி அமைப்பு
முருகன் சூரபதுமனை அழிக்கும்முன் ஈசனையும், அம்மையையும் வழிபட்ட தலம்
தீர்த்தம் – மதங்க முனிவரால் உருவாக்கப் பெற்றது
ஊருக்கு வெளியே ஓடிக் கொண்டிருந்த பம்பை நதி, இரட்டைப் புலவர்கள் கலம்பகம் பாடியதால், நதி திசை மாறி ஊருக்குள் வந்து திருக்கோயிலைச் சுற்றி ஓடும் அமைப்பு
‘நிலாவு புகழ் திருவோத்தூர் திரு ஆமாத்தூர் நிறைநீர்..‘ என்று திருவேகம்பர் திருவந்தாதியில் பட்டினத்தடிகளால் குறிப்பிடப்பட்ட தலம்.
‘…அன்னமலி வயல் தடங்கள் சூழ்ந்த திரு ஆமாத்தூர்‘ என்று சேக்கிழாரால் வர்ணிக்கப்பட்ட தலம்
மேலக்கோபுரவாயில் கல்லில் செதுக்கப்பட்ட ஜேஷ்டாதேவி உருவம் (அழிந்த நிலையில்)
இத் தலத்திற்கு அருகில் நின்ற நிலையில் கையில் தண்டூன்றிய கோலத்தோடு, தலை மாலையுடனும் கோவணத்தொடும் காட்சிதருகின்ற வண்ணச்சரபம் அருள்மிகு தண்டபாணி சுவாமிகளின் சமாதி
காலை 7.30 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு அபிராமேஸ்வரர் திருக்கோவில்
திருவாமாத்தூர் அஞ்சல், விழுப்புரம் வட்டம்
விழுப்புரம் மாவட்டம். PIN – 60540204146-223319, 04146-223379, 98430-66252
தைத்த கோவணத்தையும், யானைத் தோலையும் ஆடையாக கொண்டு பின்னல் கொண்ட சடைமீது இளம் பிறையைச் சூடி, அன்னங்கள் வாழும் குளிர்ந்த சோலைகளைக் கொண்டுள்ள திருஆமாத்தூரில் விளங்கும் இறைவனின் பொன் போன்ற அழகிய திருவடிகளைப் பரவாதவர் பொலிவு பொலிவாகுமா?
பாடியவர் திருநாவுக்கரசர்
திருமுறை 5
பதிக எண் 44
திருமுறை எண் 1
காலை மாலை ஆகிய சந்தி பொழுதுகளில் வணங்கப் படுவானும், யோகநெறி உட்பட்டு தலைப்படுவாருடைய மனதில் உறைபவனும், தேவர்களால் தொழப்படுவானும், அந்தி வானத்தைப்போன்ற செம்மேனி உடையவனும் (அழகிய தீயின் உருவினன்) ஆகிய ஆமாத்தூர் அழகனைச் சிந்திக்காதவர்கள் தீவினையாளர்களே ஆவார்கள்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
சிவபெருமானை விலக்கி தக்கன் செய்த வேள்விக்குச் சென்று அவிர்ப்பாகம் உண்ட அனைத்துத் தேவர்களும் சிவபெருமான் கோபத்துக்கு ஆளாயின பின்னர், அகோர வீரபத்திரர் சிவபெருமான் கட்டளைப்படி தக்கனது வேள்விச் சாலைக்குச் சென்று தேவர்களுக்குத் தண்டனை தந்த போது, தண்டனை பெற்று ஒளி இழந்த சூரியன் தான் செய்த தவறுக்கு வருந்தி வழிபாடுகள் செய்து உலகனைத்திற்கும் ஒளியூட்டும் தனது பழைய உருவத்தை இறைவனிடம் வேண்டிப் பெற்றத் தலம்
பனையைத் தல விருட்சமாக கொண்டு விளங்கும் பஞ்ச தலங்களில் இத்தலமும் ஒன்று.(மற்றவை வன்பார்த்தான் பனங்காட்டூர் (திருப்பனங்காடு), திருப்பனையூர், திருப்பனந்தாள், திருவோத்தூர்)
புறாவுக்காக உயிரைக் கொடுத்த சிபிச்சக்ரவர்த்தி முக்தி பெற்ற தலம்
சூரியன் கண்ணொளி பெற்றதால் இறைவன் நேத்ர உத்ராரனேஸ்வரர் (கண்களை காத்து அருளியவர்)
ஆண்டுதோறும் சித்திரைத் திங்கள் முதல் ஏழு நாட்கள் காலை வேளையில் முதலில் சிவனாருக்கும் , பின்பு அம்மைக்கும் சூரிய வழிபாடு செய்யும் தலம்
திருநீலகண்டர் தம் மனைவியுடன் சேர்ந்து, இருவருமாகத் தண்டினைப் பிடித்தவாறே கைகூப்பி நிற்கும் சிலா ரூபங்கள் கொண்ட அமைப்பு
காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு பனங்காட்டீசர் திருக்கோவில்
பனையபுரம் அஞ்சல், முண்டியம்பாக்கம்
விழுப்புரம் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
PIN – 605603
94448-97861, 99420-56781
வழிபட்டவர்கள்
சூரியன்
பாடியவர்கள்
திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம்
விக்கிரவாண்டியில் (திண்டிவனம் – விழுப்புரம் சாலை) இருந்து 2 கி.மீ. விழுப்புரத்தில் இருந்து சுமார் 1௦ கிமீ தொலைவு. முண்டியம்பாக்கம் அருகில்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 210 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 20 வது தலம்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 53
திருமுறை எண் 1
அழகிய சிறகுகளோடு மென்மையான நடையை உடைய அன்னப்பறவைகள் நிறைந்த தூய மலர்ப் பொய்கைகளின் பரப்பில் வண்டுகள் ஒலிசெய்யும் புறவார்பனங்காட்டூரில் நிலையாக அமர்ந்தவனாய், இராவணனின் தோள்களை அடர்த்து, அவன் பாடல் கேட்டு அருள் வழங்கிய பெருமானே எனப்போற்றும் அடியவர்களுக்கு அருள்புரிவாயாக.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
திரிபுரை சுந்தரி அந்தரி சிந் தூரப் பரிபுரை நாரணி ஆம்பல வன்னத்தி இருள்புரை ஈசி மனோன்மனி என்ன வருபல வாய்நிற்கும் மாமாது தானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
மகாதேவியாகிய சிவசத்தி, திரிபுரை முதலிய பல காரணப் பெயர்களைப் பெற்று, மிக்க அழகுடையவளாகிய சுந்தரி, ஆகாயத்தில் விளங்குபவளாகிய அந்தரி, சிந்துரத்தையும், சிலம்பணிந்தவள் அணிந்தவள், நாரணன் தங்கை ஆகிய நாரணி, அம்பலம் நிற வடிவத்தையும் உடையவள், சிறப்பான நீல நிறத்தை உடையவளாய் `ஈசுவரி, மனோன்மணி` என்னும் பெயர்களைப் பெற்று அந்த அந்த வகையில் எல்லாம் விளங்குவாள்.
விளக்கஉரை
ஆம் – பொருந்திய, பல வன்னத்தி – பல்வேறு நிற வடிவத்தையும் உடையவள் எனும் பொருளில் சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆம்பல வன்னத்தி – நீட்டல் அதிகாரம் பற்றி அம்பலம் என்பது ஆம்பலம் எனக் கொண்டும் சிவசக்தி ஐக்கிய பேதம் கொண்டு பின்னர் வரும் ஈசுவரி,மனோன்மனி என்று வருவதாலும் அம்பல வண்ணமுடையவள் என்று இவ்வாறு விளக்கப்பட்டுள்ளது.
ஒன்பது திருப்பெயரும் ஒன்பது ஆற்றல்களை குறிக்கும். அனைத்தும் ஒன்றாகி மும்மலம் நீங்க அருளச்செய்பவள் சத்தியாகிய திரிபுரை
ஆண்கள் காதில் அணியும் ஆபரணமாகிய குண்டலம், கழுத்தணி ஆபரணமாகிய உருத்திராட்சமாலை, வாயினால் ஊதி நல்ல ஒலி உண்டாக்கும் திருச்சங்கு, மகா மேரு, கைகளில் திருவோடு, ஓதுதல் உடைய தவச் சாலை, கால்களில் அணியக்கூடிய பாதுகை, யோகம் தரதக்கதான இருக்கை, நெற்றியில் அணியப்படும் குற்றமற்ற யோக பட்டம் மற்றும் கைகளில் கொள்ளப்படும் யோக தண்டம் என்னும் பத்தும் தவம் உடையவர்களுக்கு உரித்தான வேடங்களாகும்.
விளக்கஉரை
உயர்கட்டி – மகா மேரு – மாபெரும் துறவிகள் போன்றோர் அணிவது. (உ.ம் பெரும்பாலான ஆதினங்கள் குரு பரம்பரையாக இதை அணிவார்கள்)
மழுப்படையைத் தண்டு போல கொண்டு ஏந்தியவனும், இளமையான இடபத்தை உடையவனும், தேவர்களுக்காக கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அவர்களை காத்தவனும், திரிபுரங்கள் எரியும்படி வில்லை வளைத்துத் வலிமையானதும் உறுதியானதுமான தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலில் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள், இன்பம் உடையவரும் துன்பம் இல்லாதவரும் ஆவார்கள்.
மூலவர் சிரசில் அம்பு பட்ட தழும்போடு கிழக்கு நோக்கிய அமைப்பு, அம்பாள் சிவனாரின் வலப்புறம் தனிக்கோயிலில் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி திருக்காட்சி
சிவனாரின் காவலர்களாகிய முண்டி சிவனாரை வழிபட்டு அருள்பெற்ற தலம் முண்டீஸ்வரம் (மற்றது திண்டி – திண்டீஸ்வரம் ( திண்டிவனம் ). இருவருக்கும் தனித்தனி சிலைகள்
கல்லால மரமில்லாமல் தட்சிணாமூர்த்தி மலைமீது நந்தியை வாகனமாகக் கொண்டு திருக்காட்சி
துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்ற மன்னன் வேட்டைக்கு வந்த போது இங்கு குளத்தில் அதிசயமான தாமரை மலரை சேவகர்களை அனுப்பி பறித்துவர அவர்களால் பறிக்க இயலாதவாறு மலர் குளத்தை சுற்றிவர ஆரம்பித்தது கண்டு மன்னனே நேரில் சென்று அந்த மலர் மீது அம்புவிட, குளம் முழுவதும் செந்நிறமாக மாறி மலரின் நடுவில் லிங்கம் இருப்பதைக்கண்டு, குளத்தின் கரையிலேயே கோயில் கட்டி லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு இப்பெருமான் திருநீற்றுப் பை (பொக்கணம்) தந்தால் கல்வெட்டில் இறைவன் பெயர் பொக்கணம் கொடுத்த நாயனார்
ஆற்றின் கரையிலுள்ள கோயில் – ஆற்றுத்தளி என்பதல் .ஆற்றுதளிப் பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர்
கொடிமரம் அற்ற திருக்கோயில்
தலம்
திருமுண்டீச்சரம்
பிற பெயர்கள்
கிராமம், முடீச்சரம், திருமுண்டீஸ்வரம்
இறைவன்
சிவலோகநாதர் முண்டீஸ்வரர், பொக்கணம் கொடுத்த நாயனார், ஆற்றுதளிப் பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர்
காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை,
மாலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்,
கிராமம் அஞ்சல், வழி உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை வட்டம்,விழுப்புரம் மாவட்டம்
PIN – 607203.
04146-206700, 98946-25154
வழிபட்டவர்கள்
பிரம்மன், இந்திரன்
பாடியவர்கள்
திருநாவுக்கரசர் 1 பதிகம், வள்ளலார்
நிர்வாகம்
இருப்பிடம்
திருவெண்ணெய்நல்லூரில் இருந்து 2-கி. மீ.
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 209 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 19 வது தலம்.
பாடியவர் திருநாவுக்கரசர்
திருமுறை 6
பதிக எண் 85
திருமுறை எண் 1
திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகனாவன், உயிரோடு உடல் இயைந்து நின்றவன், எல்லா உறவினருமாக ஆனவன், ஒருவரிடத்தும் தனக்குப் பின் உரிமையாக இல்லாத வகையில் எவ்விடத்தும் நிறைந்து நின்றவன், அழிவில்லாதவன், புற்றில் வாழும் பாம்பை ஆடை மேல் கட்டப்படும் கச்சாகவும் ஆபரணமாகவும் கொண்டவன், சுடுகாட்டில் எரியேந்தி ஆடுதலைச் செய்தவன், நல்ல தவ வேடங்கொண்டவன், சரணடைந்த மார்கண்டேயனுக்காக பெருங்கூற்றுவனைச் சேவடியால் உதைத்து அழித்தவம் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆவான்.
(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)
திரிபுரை ஆனவள், மா மாயை என பெரியதாக குறிப்பிடப்படும் சுத்த மாயை, மாயை என குறிப்பிடப்படும் அசுத்த மாயை, சுத்த மாயை மற்றும் விந்து ஆகியவற்றால் குறிப்பிடப்படும் சுத்த தத்துவங்களின் காரியங்களாகிய வயிந்தவம், வைகரி, மத்திமை, பைசந்தி, சூக்குமை முதலிய நால்வகை வாக்குகள் ஆகிய நாத வடிவங்கள் #, அசுத்த மாயையிலிருந்து தோன்றிய ஆன்ம தத்துவங்கள் தோன்றுதற்கு முதலாகிய பிரகிருதி மாயை எனப்படும் ‘மூலப் பிரகிருதி’ ஓராறு கோடி மந்திரங்களின் முடிவாகிய ஏழனுள், `ஹும், பட்` என்று இரண்டுமாகவும் சில இடங்களில் ஒன்றாக எண்ணப்படுவதும் ஆன சத்தியின் வேறுபாடுகள், சிவன் நினைத்தவிடத்து சிவன் அசையா பொருளாகவும், ‘ஆம்’ அசை நிலை கொண்டு அசையும் பொருள், பிற பொருள்களில் கலப்பினால் ஒன்றாயும், பொருள் தன்மையால் வேறாயும் நிற்பாள்.
விளக்கஉரை
சொல்லப்படும் பொருள்கள் அனைத்திலும் தானேயாயும், அல்லாதவாறும் சிவ சத்தி வடிவம் கொண்டு நிற்பாள் என்பது பற்றியது.
அசுத்த மாயையின் காரியங்கள் ‘மாயேயம்’ , பிரகிருதியின் காரியங்கள் ‘பிராகிருதம்’ ஆகியவற்றை இங்கு உணர்க
ஓவுதல் – நீங்குதல்
# ஞானசத்தி, இச்சாசத்தி, கிரியாசத்தி`, ஆரணி, ஜெனனி, உரோதயித்திரி, வாமை, ஜேஷ்டை, இரௌத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரமதனி, சருவபூததமணி, மனோன்மனி, சத்தி, விந்து, மனோன்மணி, மகேசுவரி, உமை, திரு, வாணி` எனவும் பல்வேறு வடிவங்கள்
ஆறுகோடியிற்றாமான மந்திரம் – ஆறு ஆதாரங்களுக்கு உரித்தான மந்திர எழுத்துக்கள்
இறைவனின் திருக்கண்ணை இறைவி மூடிய தவறுக்காக மனம் வருந்தி இறைவனை அரூபமாக பூசித்து, இடது கண், இடது தோளும் துடித்து சாபம் நீங்கப் பெற்றத் தலம்.
அம்மை பாதிரி மரத்தினடியில் தவம் செய்து சிவனாரை மணந்து கொண்ட தலம்.
நாள் தோறும் அம்பிகையே பள்ளியறைக்கு எழுந்தருளும் தனிச்சிறப்பான சுவாமி கோயில்.
கடலில் இருந்து கரையேறிய திருநாவுக்கரசர் ‘ஈன்றாளுமாய்’ எனத் தொடங்கும் பதிகத்தில் ‘அதான்றாத்துணையார் இருந்தனன் தன் அடியோங்களுக்கே’, என்று குறிப்பிடுவதால் இப்பெருமான் ‘தோன்றாத்துணை நாதர்’
திருநாவுக்கரசரை திருஞானசம்பந்தர் முதன்முதலில் ‘அப்பர்’ என்று அழைத்த தலம்
திருநாவுக்கரசரை கல்லில் பூட்டிக் கடலில் இட்டபோது ‘சொற்றுனை வேதியன்’ என்ற பதிகம்பாடி அவர் கரையேறிய இடம் கரையேறவிட்டகுப்பம் (தற்போது வண்டிப்பாளையம்) இத்தலத்திற்கு அருகாமையில் உள்ளது.
திருநாவுக்கரசர் அமர்ந்தகோலத்தில் காட்சி.
வியாக்ரபாதர் வழிபட்டு அருள்பெற்ற பஞ்சபுலியூர் தலங்களில் ஒன்றானதும், புலியின் பாதங்களை வேண்டிப்பெற்றதும் ஆனது இத் திருத்தலம்.
பாதிரியைத் தலமரமாகக் கொண்டதாலும், புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்) வழிபட்டதாலும் (பாதிரி+புலியூர்).
வெளிப்பிரகாரத்தில், தல விருட்சமான இரண்டு பாதிரிமரங்கள்
பூத்து காய்க்காத தலவிருட்சமான பாதிரி (சித்திரை மாதம் முழுவதும்). கவசத்துடன் – தலவிருட்சமான ஆதிபாதிரிமரம்
மங்கண முனிவர், இறை வழிபாட்டிற்காக மலர் பறித்து, மகிழ்வுடன் திரும்பி வரும்போது தூமாப்ப முனிவரை கவனிக்காமல் அவரிடம் தான் பெற்ற முயல் வடிவ சாபம் நீங்கப்பெற்றத் தலம். பின் நாளில் வியாக்ரபாதர் (புலிக்கால் முனிவர்)
கன்னி விநாயகர் வலம்புரிமூர்த்தி. அம்பிகை இறைவனை வழிபட்டபோது உதவி செய்தமையால் கையில் பாதிரி மலருடன் திருக்காட்சி
துர்க்கை சன்னதியில் அம்மை அருவவடிவில் தவஞ்செய்த இடம் அருந்தவநாயகி சந்நிதி. அதன் பொருட்டு உருவமில்லாமல் பீடம்.
திருக்கோயிலூர் ஆதீன சுவாமி அதிஷ்டானம் – வண்டிப்பாளையம் ஊத்துக்காட்டு அம்மன் கோயிலுக்குப் அருகில் உள்ள சாமியார் தோட்டம் அருகில்.
‘கடை ஞாழலூர்’ என்பது மருவி ‘கடலூர்’
சந்நிதிவீதியில் ஸ்ரீமத் ஞானியார் சுவாமிகள் மடாலயம்
மகாசிவராத்திரி, ஆடிப்பூரம், நவராத்திரி, சஷ்டி, கார்த்திகை சோமவாரங்கள், மார்கழி திருவாதிரை , தை அமாவாசை / மாசிமகம் கடலில் தீர்த்தவாரி, பௌர்ணமி பஞ்சபிரகார வலம், சித்திரையில் வசந்தோற்சவம், வைகாசி 1௦ நாட்கள் பிரம்மோற்சவம், சித்திரை சதயத்தில் அப்பர் சதயவிழா,
வண்டிப்பாளையம் அப்பர்சாமி குளத்திற்கு ஒருநாள் தீர்த்தவாரி
மாவட்டம்
கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 7.00 மணி முதல் 11 மணி வரை
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு பாடலேஸ்வரர் திருக்கோயில்
திருப்பாதிரிப் புலியூர் – அஞ்சல்
கடலூர் – 607 002.
04142-236728, 98949-27573, 94428-32181
திருஞானசம்பந்தர் 1 பதிகம், திருநாவுக்கரசர் 1 பதிகம், அருணகிரிநாதர், ஸ்ரீ பாடலேஸ்வரர் தலபுராணம் – திருவாடுதுறை ஆதீனம், இலக்கணம் சிதம்பர முனிவர் ,கலம்பக நூல்
நிர்வாகம்
திருக்கோவலூர் ஆதீனத்தைச் சேர்ந்த வீர சைவமடம்
இருப்பிடம்
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் 201 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 18 வது தலம்.
பாடியவர் திருஞானசம்பந்தர்
திருமுறை 2
பதிக எண் 121
திருமுறை எண் 8
திரிபுரையானவள், தண்டனை தருவதற்கு ஏற்ற வராக முகத்தை உடையவள் (வராகி); இழிகுணம் படைத்த தீயவர்களது உடலங்களை அவர்களின் காலத்தில் அழிப்பதற்காக உலக்கையோடு சங்கு, சக்கரம், ஏர், அங்குசம், பாசம் ஆகிய ஏழு ஆயுதங்களை ஏந்தி அபயம், வரதம் ஆகியவையும் கொண்டு இருப்பாள்; தங்கள் இடர்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் சிரித்த முகத்தையுடையவளாக விளங்குவாள்.
காயத்தேர் ஏறி மனப்பாகன் கைகூட்ட மாயத்தேர் ஏறி மயங்கும் அவை உணர் நேயத்தேர் ஏறி நிமலன் அருள்பெற்றால் ஆயத்தேர் ஏறி அவன்இவன் ஆகுமே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
உடம்பு ஆகிய நிலையில்லாத தேரின்மேல் ஏறி, மனமாகிய பாகன் தன் கையைப் பொருத்தி, கண்ட இடங்களில் செலுத்துதலினால் வழியறியாது மாயைக்கு உட்பட்டு மயங்குகின்ற உயிர்கள், சிறிதே உணர்வு பெற்றுச் தூயவனாகிய சிவன் மேல் அன்பாகிய தேரில் ஏறிச்சென்று அவனது அருளைப்பெற்றால், ஆயத்தேர் எனும் சமாதி யோக வழியில் சீவன் சிவனை அடைந்து அவனாகி விடும்.
விளக்கஉரை
சிவன் அருள் பெற்று, சாயுஜ்யம் எனும் இறைத்தன்மையில் சிவமாவதற்கு முதலில் அன்பு வேண்டும் என்பதை வலியுறுத்தி எழுதப்பட்ட பாடல்.
உடம்பை தேராக உருவகம் செய்ததினால், அதன் இயல்யு ‘மாயத் தேர்’ ஆனது.
ஆத்மா ஓர் தேகம் அடைந்து சில காலம் பயணிப்பதை பயணம் என்று கவிதை நடையில் குறிப்பர். நம் ஆத்மாவானது காயம் எனும் தேர் ஏறி அதனை இயக்கும் மனம் எனும் பாகன் கைகொடுக்க மாயம் எனும் நிலையின்மையில் பயணிக்காது எது உண்மையென்று உணர்விக்கும் நேயம் எனும் மார்க்கம் பற்றி அதில் பயணித்தால் அழிவில்லாத மெய்ப்பொருளாகிய சர்வேஸ்வரனின் அருள் கிடைக்கப் பெற்றால் மட்டுமே அடைய இயலும் ஆய்தல் அதாவது உட்தேடல் எனும் கிட்டுதற்கறிய பாக்கியம் பெற்று அதன் மூலம் நான் எனும் நிலையறுத்து நானே அவன் எனும் மிக உயர்ந்த அஹம் பிரஹ்மாஸ்மி எனும் அத்வைத நிலை அல்லது ஒருமை நிலை அண்டும்.
உன்னை இடையறாது நினைத்து, உன்னைப் பற்றி அறிந்து, அதன் உட்பொருளை பொருள் மாறாது உரைக்கும் அடியார்கள் தங்கள் தலை உச்சியாக இருப்பவனே, இடுப்பில் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லா வகையிலும் முதலும் முடிவும் ஆனவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள `அவினாசி` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, காலனையும், முதலையையும், இக்குளக்கரையில் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.
விளக்கஉரை
`காலனை முதலையிடத்தும், முதலையைக் கரையிடத்தும் தரச்சொல்லு ` என்ற பொருளில் சுந்தரர் இவ்வாறு இப்பாடலை அருளிச்செய்து முடிக்குமுன்பே, நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அங்கு வந்து, சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது வரலாறு
உள்குதல் – உள்ளுதல், நினைதல், ஆராய்தல், நன்கு மதித்தல், மீண்டும் நினைத்தல், இடைவிடாது நினைத்தல்
‘உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே’ எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டுளது. இறைவன் புகழ் சொல்லை விரும்பாதவன் எனும் பொருளிலும், உரைப்பார், உரைப்பவை உரைப்பார், உள்கி உரைப்பவை உரைப்பார் எனும் பொருளிலும் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
தங்கள் உச்சியாய் – யோக தொடர்புள்ளவர்கள் குரு மூலமாக அறிக