சைவத் திருத்தலங்கள் 274 – திருமுண்டீச்சரம்

 

தல வரலாறு(சுருக்கம்) / சிறப்புகள் – திருமுண்டீச்சரம்

 

  • மூலவர் சிரசில் அம்பு பட்ட தழும்போடு கிழக்கு நோக்கிய அமைப்பு, அம்பாள் சிவனாரின் வலப்புறம் தனிக்கோயிலில் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி திருக்காட்சி
  • சிவனாரின் காவலர்களாகிய முண்டி சிவனாரை வழிபட்டு அருள்பெற்ற தலம் முண்டீஸ்வரம் (மற்றது திண்டி – திண்டீஸ்வரம் ( திண்டிவனம் ). இருவருக்கும் தனித்தனி சிலைகள்
  • கல்லால மரமில்லாமல் தட்சிணாமூர்த்தி மலைமீது நந்தியை வாகனமாகக் கொண்டு திருக்காட்சி
  • துவாபர யுகத்தில் சொக்கலிங்கம் என்ற மன்னன் வேட்டைக்கு வந்த போது இங்கு குளத்தில் அதிசயமான தாமரை மலரை சேவகர்களை அனுப்பி  பறித்துவர அவர்களால் பறிக்க இயலாதவாறு மலர் குளத்தை சுற்றிவர ஆரம்பித்தது கண்டு மன்னனே நேரில் சென்று அந்த மலர் மீது அம்புவிட, குளம் முழுவதும் செந்நிறமாக மாறி மலரின் நடுவில் லிங்கம் இருப்பதைக்கண்டு, குளத்தின் கரையிலேயே கோயில் கட்டி லிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • வீரபாண்டியன் என்னும் மன்னனுக்கு இப்பெருமான் திருநீற்றுப் பை (பொக்கணம்) தந்தால் கல்வெட்டில் இறைவன் பெயர் பொக்கணம் கொடுத்த நாயனார்
  • ஆற்றின் கரையிலுள்ள கோயில் – ஆற்றுத்தளி என்பதல் .ஆற்றுதளிப் பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர்
  • கொடிமரம் அற்ற திருக்கோயில்

 

தலம் திருமுண்டீச்சரம்
பிற பெயர்கள் கிராமம், முடீச்சரம், திருமுண்டீஸ்வரம்
இறைவன் சிவலோகநாதர் முண்டீஸ்வரர், பொக்கணம் கொடுத்த நாயனார், ஆற்றுதளிப் பெருமான், ஆற்றுத்தளி மகாதேவர்
இறைவி சௌந்தர்யநாயகி, கானார்குழலி அம்மை, செல்வநாயகி, செல்வாம்பிகை
தல விருட்சம் வன்னி
தீர்த்தம் முண்டக தீர்த்தம் (அ) பிரம்ம தீர்த்தம்
விழாக்கள் சித்திரை வருடப்பிறப்பு, ஆனித்திருமஞ்சனம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, கந்தசஷ்டி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், கார்த்திகை சோமவாரங்கள், தனுர்மாதப்பிறப்பு, மார்கழி திருவாதிரை, தைப்பொங்கல், மகாசிவராத்திரி , பங்குனி உத்திரம்
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை,
மாலை 6.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு சிவலோகநாதர் திருக்கோவில்,
கிராமம் அஞ்சல், வழி உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை வட்டம்,விழுப்புரம் மாவட்டம்
PIN – 607203.
04146-206700, 98946-25154
வழிபட்டவர்கள் பிரம்மன், இந்திரன்
பாடியவர்கள் திருநாவுக்கரசர் 1 பதிகம், வள்ளலார்
நிர்வாகம்
இருப்பிடம் திருவெண்ணெய்நல்லூரில் இருந்து 2-கி. மீ.
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 209 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 19 வது தலம்.

 

 

 

 

 

பாடியவர்           திருநாவுக்கரசர்
திருமுறை         6
பதிக எண்          85
திருமுறை எண் 1

 

பாடல்

ஆர்த்தான்காண் அழல்நாகம் அரைக்கு நாணா
     அடியவர்கட் கன்பன்காண் ஆனைத் தோலைப்
போர்த்தான்காண் புரிசடைமேல் புனலேற் றான்காண்
     புறங்காட்டி லாடல் புரிந்தான் தான்காண்
காத்தான்காண் உலகேழுங் கலங்கா வண்ணங்
     கனைகடல்வாய் நஞ்சதனைக் கண்டத் துள்ளே.
சேர்த்தான்காண் திருமுண்டீச் சரத்து மேய
     சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே

பொருள்

திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகனாவன், சினம் மிகுந்த நாகத்தை அரைநாணாகக் கட்டியவன், அடியவர்களுக்கு அன்பன் ஆனவன், யானையின் தோலை உரித்து போர்வையாகக் கொண்டவம், திரண்டு சுருண்ட சடைமேல் கங்கையை ஏற்றவம், சுடுகாட்டில் ஆடுவதை விரும்பியவம், உலகங்கள் ஏழும் கலக்கம் கொள்ளாதவாறு ஒலிக்கும் கடலிடை உண்டான நஞ்சினைத் தன் கண்டத்திலே கொண்டவன் ஆவான். அவன் என் சிந்தையில் நிறைந்தவன்.

 

 

 

பாடியவர்           திருநாவுக்கரசர்
திருமுறை         6
பதிக எண்          85
திருமுறை எண் 6

பாடல்

உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்
     ஒழிவறநின் றெங்கு முலப்பி லான்காண்
புற்றரவே யாடையுமாய்ப் பூணு மாகிப்
     புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்
நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக
     நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினால்
செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
     சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே

பொருள்

திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவலோகனாவன், உயிரோடு உடல் இயைந்து நின்றவன், எல்லா உறவினருமாக ஆனவன், ஒருவரிடத்தும் தனக்குப் பின் உரிமையாக இல்லாத வகையில் எவ்விடத்தும் நிறைந்து நின்றவன், அழிவில்லாதவன், புற்றில் வாழும் பாம்பை ஆடை மேல் கட்டப்படும் கச்சாகவும் ஆபரணமாகவும் கொண்டவன், சுடுகாட்டில் எரியேந்தி ஆடுதலைச் செய்தவன், நல்ல தவ வேடங்கொண்டவன், சரணடைந்த மார்கண்டேயனுக்காக  பெருங்கூற்றுவனைச் சேவடியால் உதைத்து அழித்தவம் ஆவான். அவன் என் சிந்தையிடத்தவன் ஆவான்.  

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *