
பாடல்
விண்ணவராலும் அறிவரி யான்றன்னைக்
கண்ணற உள்ளே கருதிடில் காலையே
எண்ணுற வாகும் முப் போதும் இயற்றிநீர்
பண்ணிடில் தன்மை பராபர னாகுமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்து – சிவன் சாராதவர்களுக்கு அரியவன் என்பதும், சார்ந்தார்க்கு எளியன் என்பதையும் உணர்த்தி, அவனைச் சார்ந்து பயன் அடைக என்று கூறப்பட்ட பாடல்
பதவுரை
தேவர்களாலும், மூவர்களாலும் அறிவதற்கு அரியவனாகிய சிவனை இடைவெளி இன்றி உள்ளத்தால் பற்றுங்கள்; அவ்வாறு பற்றினால் பற்றிய அக்கணத்திலே அவன் உங்களால் விரும்பப்படும் பொருளாய் வெளிப்படுவான். அதன் பின்பு எக்காலத்திலும் நீங்கள் அவனை அகத்திலும், புறத்திலும் வழிபட்டால், உங்களது தன்மை சிவத்தன்மை ஆகிவிடும்.
விளக்க உரை
- கண் – காலம் பற்றிய இடைவெளி என்று சில இடங்களில் விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கின்றது. ‘கண்ணற உள்ளே’ என்பதை முன்வைத்து ஆக்கினையில் நின்று தவம் செய்வதை குறிக்கும் என்றும் கொள்ளலாம்
- காலை – காலம் `
- இயற்றுதல், பண்ணுதல் – அகம், புறம் பற்றியது
- பராபரன் – சிவனது தன்மையைக் குறித்தது