கதை – 1
முன்னொருகாலத்தில் ஒரு ஆசிரமம் இருந்தது. அதில் ஒரு குருவும் சில சீடர்களும் இருந்தார்கள்.
பயிற்சிக்காலம் முடிந்தது.
குரு : உங்கள் பயிற்சி முடிந்தது.
மாணவன் : உங்களை விட்டுப் பிரிவது வருத்தம் தருவதாக இருக்கிறது.
குரு : காலம் எல்லாவற்றையும் மாற்றும் வல்லமை உடையது.
மாணவன் : ……
குரு : இன்று இரவு உங்களுக்கு ஒரு வாழைப் பழம் தருவேன். அதை யாருக்கும் தெரியாமல் உண்டுவிட்டால் உங்கள் அனைத்து பயிற்சிகளும் முடிவுற்று விடும்.
குரு : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : கிணற்றடியில், அப்போது யாரும் இல்லை.
குரு : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : மரத்தடியினில் அப்போது யாரும் இல்லை.
குரு : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : ஆற்றங்கரை அருகினில். அப்போது யாரும் இல்லை.
குரு : நீ எங்கு உண்டாய்.
மாணவன் : உண்ணவில்லை.
குரு : ஏன்?
மாணவன் : நீங்கள் யாருக்கும் தெரியாமல் உண்ணச் சொன்னீர்கள். கடவுள் எல்லா இடங்களிலும் இருப்பவர் என்றும் நீங்கள் தானே பயிற்றுவித்தீர்கள். அப்படி இருக்க நான் எப்படி யாருக்கும் தெரியாமல் உண்ணமுடியும்.
குரு : நீயே என் பிரதான சீடன்.
எனது தோழமை குறிப்பிட்டதைப் போல் இருப்பு/இல்லை என்பதை பல வழிகளில் விளக்க முற்படலாம்.
ஓளி என்பது இருளின் மறைவு
வெப்பம் என்பது குளிரின் மறைவு
2907 –
உளன் அலன் எனில் அவன் உருவம் இவ் வுருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் வருவுகள்
உளன் என விலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமை யொடு ஒழிவிலன் பரந்தே
அவன் இருக்கிறான் என்றாலும், இல்லை என்றாலும் அனைத்தும் ‘அவன்’ என்ற ஒன்றில் அடங்கி இருக்கிறது. அஃதாவது ஸ்தூலமாகவும், சூட்சமாகவும் இருக்கிறான் என்பதே பொருள். இஃது அவனது குணம் ஆகும்.
பலவித வேதங்களும், வேதாந்தங்களும் ஒரு பொருளையே குறிப்பிடுகின்றன்.(உ.ம். ப்ரம்மம், புருடன்)
இதை சிறிது விளக்க முற்படுவோம்.
நாடக்காட்சி ஒன்று நடந்து கொண்டிருக்கிறது. அதில் சில அழுகைக் காட்சிகள் வருகின்றன. மனதை உருக்குவதாக இருப்பின் நாமும் அழுகிறோம். எனில் காட்சி மற்றும் பிம்பம் என்ற வேறுபாடு அன்றி மனம் ஒரு நிலை கொள்கிறது.
சாந்தி மந்திர கூற்றுப்படி அவர் நம் இருவரையும் காக்கட்டும்.
மீண்டும் தொடர்வோம்.
கடவுட் கொள்கை – வாதங்கள் -2
கடவுட் கொள்கை – வாதங்கள் -1