அமுதமொழி – விளம்பி – ஐப்பசி – 4 (2018)

பாடல்

கரந்தை கூவிள மாலை
     கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்
பரந்த பாரிடஞ் சூழ
     வருவர்நம் பரமர்தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு
     திகழ்தரு வாஞ்சியத் துறையும்
மருந்த னார்அடி யாரை
     வல்வினை நலியஒட் டாரே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

திருத்தமான மாடங்கள் உடையதும்,  உயர்ந்து தோன்றுகின்றதும், பெரும் புகழ் கொண்டதும் ஆன திருவாஞ்சியத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனானவர், பகைவர் கவர்ந்து சென்ற தம் ஆநிரைகளை மீட்டுவருவதை குறிப்பிடுவதாகிய  கரந்தைப் பூவினாலும், முக்கூறுகளைக் கொண்டதும்,  திரிசூலத்தின் குறியீடாகவும் உள்ளது கூவிள இலை என்பதான வில்வ இலையாலும், மணம் பொருந்திய கொன்றை மலராலும் ஆகிய மாலைகளைச் சூடிக்கொண்டு, மிகுந்த பூதகணங்கள் புடைசூழ பரமனாகி நம் இறைவனானவரும், அமுதம் போல்பவரும், தம் அடியாரை வலிய வினைகள் வந்து துன்புறுத்தாமல் காப்பவரும் ஆவர்.

விளக்க உரை

  • மாயைக்கு உட்பட்ட பசுவாகிய உயிர்களை மீட்கும் பதி எனும் சைவ சித்தாந்த கருத்து ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 21 (2018)

பாடல்

உன்னுருவிற் சுவையொளியூ றோசை நாற்றத்
துறுப்பினது குறிப்பாகு மைவீர் நுங்கள்
மன்னுருவத் தியற்கைகளால் வைப்பீர்க் கையோ
வையகமே போதாதே யானேல் வானோர்
பொன்னுருவைத் தென்னாரூர் மன்னு குன்றைப்
புவிக்கெழிலாஞ் சிவக்கொழுந்தைப் புகுந்தென் சிந்தை
தன்னுருவைத் தந்தவனை யெந்தை தன்னைத்
தலைப்படுவேன் துலைப்படுப்பான் தருக்கேன் மின்னே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பற்றுக் கொண்டு விரும்பி நினைக்கப்படும் உடலிலே வாய், கண், உடல், செவி, மூக்கு என்ற ஐம்பொறிகளில் புலன்களாகநின்ற சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்து வகைகளே! உங்களுடைய மயக்கம் பொருந்திய மண்ணில் ஏற்படுத்தப்பட்ட உருவங்களினால் சுவைக்கின்ற உங்களுக்கு இந்தப் பரந்த உலகம் போதாதா ? யானோ தேவர்களுக்கு அழகிய பொன் போன்ற உருவத்தைத் தந்தவனும், அழகிய ஆரூரில் நிலைபெற்ற மலைபோல் வான் அளவு உயர்ந்தவனாகவும், இந்த உலகம் எல்லாவற்றிலும் அழகான சிவக்கொழுந்தாய் ஆனவனும், என் சிந்தையுள்ளே புகுந்து அதில் தன்னுருவைத் தந்த என் தலைவனை எப்பொழுதும் அணைந்திருப்பேன். ஆதலால் என்னை உம் அளவில் சிறுமை படுத்துவதற்காக செருக்கிக்கொண்டு என்பக்கம் வாராதீர்கள்.

விளக்க உரை

  • உன் உருவில் – ( விரும்பி ) நினைக்கப்படுகின்ற உடம்பு
  • உறுப்பு –  பொறி
  • குறிப்பு – புலன்
  • மன் உருவம் – ( மயக்கம் ) நிலைபெற்ற உருவம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 17 (2018)

பாடல்

தென்ன வன்னெனை யாளுஞ் சிவனவன்
மன்ன வன்மதி யம்மறை யோதியான்
முன்ன மன்னவன் சேர்வன பூழியான்
இன்னம் இன்புற்ற வின்னம்ப ரீசனே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தென் நாட்டு அரசனும், என்னை ஆள்பவனாகிய சிவனும், உலகை காக்கும் தலைவனும்,  போற்றுதலுக்கு உரிய அழகிய மறைகளை ஓதியவனும், உலகம் தோன்றுவதற்கு முன்னமே நிலைப்பெற்ற  தோற்றத்திற்கு உரித்தானவனும், சுடுகாட்டில் சேரும்  திருநீற்றினை அணிந்தவனும்,சூரியன் வழிபட்டு இன்புற்ற இன்னம்பரில் எழுந்தருளியுள்ள ஆகிய பெருமானான ஈசனாவான்.

விளக்க உரை

  • தென்னவன் – அழகியவன் எனும் பொருள் இருப்பினும், ‘தென்நாடு உடைய சிவனே போற்றி என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ எனும் வரிகளை முன்வைத்து தென் நாட்டு அரசன் எனும் பொருளில் விளக்கப்பட்டுளது. (யோக மார்க்கமான பொருளை குரு மூலமாக அறிக)
  • முன்னம் மன்னவன் – உலகத்தோற்றத்திற்கு முன் உள்ள நிலை பேறுடையோன்
  • பூழி – விபூதி
  • இனன் – சூரியன்
  • இன்னம் இன்புற்ற – சூரியன் வழிபட்டு இன்புற்ற. சூரியன் வழிபட்டதால் இனன் நம்பூர் என்ற பெயர் மருவி இன்னம்பர் ஆயிற்று

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 15 (2018)

பாடல்

பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன் அமலன் இடமாம்
இண்டை கொண்டு அன்பு இடையறாத
தொண்டர் பரவும் சோற்றுத்துறையே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

உயிர்கள் செய்த பழைய, வலிமையான வினைகள் நீங்குமாறு செய்வதும், உலகிற்கு முதல்வனும், தூயவனும் ஆகிய இறைவனது இடமானதும், ஈசனிடத்தில் அன்பு கொண்டு இடையில் விலகுதல் இல்லாத அடியார்கள், தாமரை மாலை முதலியவைகளைக் கொண்டு வழிபடுகின்ற திருத்தலம் ‘திருச்சோற்றுத்துறை’ என்னும் திருத்தலம் ஆகும்.

விளக்க உரை

  • இண்டை – தாமரை, மாலை வகை, இண்டு கொடி, முல்லை, புலிதொடக்கி, தொட்டாற்சுருங்கி; உலகம் சார்ந்த பொருட்கள்
  • அண்ட முதல்வன் – ‘அண்டம்’ என்ற பொதுமையால் எல்லா அண்டங்களும் கொள்ளப்படும், அதன் பொருட்டே  அகிலாண்டகோடி.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 7 (2018)

பாடல்

அட்ட மாமலர் சூடி யடும்பொடு
வட்டப் புன்சடை மாமறைக் காடரோ
நட்ட மாடியும் நான்மறை பாடியும்
இட்ட மாக விருக்கு மிடமிதே

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

அதிகாலை நேர சிவபூசைக்குரிய புஷ்பவிதியில் கூறியதான எட்டு மலர் வகைகளான. புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்னும் எட்டுவகை மலர்களை அரும்பு மலரோடு சூடிய வட்ட வடிவாகிய மெல்லிய சடை உடைய மறைக்காட்டுறையும் பெருமானே! நடனம் ஆடியும், நான்கு வேதங்கள் பாடியும் விருப்பமாகத் தேவரீர் எழுந்தருளியிருக்கும் இடம் இத்தலமே.

விளக்க உரை

  • அடும்பு-அடப்பமலர்
  • வட்டப் புன்சடை – வட்டமாகக் கட்டிய மெல்லிய சடை.
  • கொல்லாமை, அருள், பொறி அடக்கம், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு, என்னும் எட்டும் ஞானபூசைக்குரிய எண் மலர்கள்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 6 (2018)

பாடல்

மத்த யானை யேறி மன்னர்
   சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரு மில்லை
   சிந்தையுள் வைம்மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா
   வம்மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி
   யென்ப தடைவோமே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மத்தகம் என பொருள்படும் யானையின் உச்சிப் பகுதியின் மீது ஏறி சிற்றரசர்கள் சூழ உலா வருகின்ற பேரரசர்களே, நீங்கள் இறக்கும் காலத்தில் அப்போது உம்மோடு துணையாய் எந்த சிற்றரசர்களும் வரமாட்டார்கள். இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வைத்தபிறகு மனத்தை அந்நிலையினின்றும் வேறுபடுத்தி, மீண்டும் இந்த வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா. என் நெஞ்சீரே, நீரும் வாரும்  அவர்களுடன்  யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலாகிய ‘திருஎதிர்கொள்பாடி’  எனப்படுவதாகிய திருத்தலம் சென்று அடைவோம்.

விளக்க உரை

  • தம் நெஞ்சிற்கும், அரசர்க்கும்  அறிவுறுத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 1 (2018)

பாடல்

விலங்கலொன்று வெஞ்சிலையாக் கொண்டுவிற லரக்கர்
குலங்கள்வாழு மூரெரித்த கொள்கையிதென் னைகொலாம்
இலங்கைமன்னு வாளவுணர் கோனையெழில் விரலால்
துலங்கவூன்றி வைத்துகந்தாய் சோபுரமே யவனே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

திருச்சோபுரம் விரும்பி அடையும் இறைவனே! இலங்கையில் நிலைபெற்று வாழும் வாள் போரில் வல்லவராகிய அசுரர்களின் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் தவறு உணர்ந்து மன்னித்து வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! மேரு மலையை வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?

விளக்க உரை

  • விலங்கல் – மேருமலை
  • அரக்கர் – திரிபுராதிகள்
  • ஆணவம் கொண்டு தன் தவற்றை உணர்ந்து பின் அவனை மன்னித்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 20 (2018)

பாடல்

ஏன எயிறு ஆடு அரவொடு என்பு வரி ஆமை இவை பூண்டு இளைஞராய்
கானவரி நீடுழுவை அதளுடைய படர் சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்கள் ஆகுதியின் மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலை மிசை மாசு பட மூசும் மயிலாடுதுறையே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

சிவபெருமான், பன்றியின் கொம்பும், படமெடுத்து ஆடும் பாம்பும், எலும்பும், வரிகளையுடைய ஆமையோடும் அணிந்து, இளைஞராய், காட்டில் வாழும் வரிகளையுடைய புலித் தோலை ஆடையாக உடுத்தவர்; படர்ந்து விரிந்த சடையினை உடைய அச்சிவபெருமானைக் கண்டு தரிசிப்பதற்குரிய இடம், சிறந்த புகழையுடைய அந்தணர்கள் வளர்க்கும் வேள்வியிலிருந்து எழும்புகை, மேல் சென்றுஅழகு மிகுந்த தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலை மீது அழுக்குப்படப் படி செய்யும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.

விளக்க உரை

  • ஏன எயிறு – பன்றியின் கொம்பு
  • இளைஞர் – வாலிபர் (சதாசிவமூர்த்தத் தியானம் பதினாறு வயதினராகப் பாவிக்கச் சொல்வது காண்க.)
  • உழுவை அதள் – புலித்தோலை.
  • காணி – உரிய இடம்
  • மூசு – மூடுகின்ற மயிலாடுதுறை.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 18 (2018)

பாடல்

பாசமான களைவார் பரிவார்க்கமுதம் அனையார்
ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல்விடைமேல் வருவார்
காசைமலர்போல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்
பேசவருவார் ஒருவர் அவர்எம்பெருமான் அடிகளே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

ஐந்து மலங்களான ஆணவம், மாயை, கன்மம் இவற்றுடன் மாயேயம், திரோதான சத்தி ஆகிய மலங்களை  அடியோடு போக்குபவரும், அன்பர்களுக்கு அமுதம் போல இனிப்பவரும், மூன்று விதமான ஆசைகள் ஆகிய மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகியவைகள் அகலுமாறு அருள் கொடுப்பவரும், மாலையணிந்த விடைமீது வருபவரும், காயாமலர்போலும் மிடற்றினை உடையவரும், கடவூர் மயானத்தில் எழுந்தருளியிருப்பவரும், அவரது புகழைப் பலரும் பேசி வணங்குமானவரும், ஒப்பற்றவரும் ஆன அவர் எம் பெருமானாராகிய அடிகள் ஆவார்.

விளக்க உரை

  • பரிவார்க்கு-அன்பர்க்கு.
  • அமுதம் அனையார்-அமிர்தத்தைப் போல்பவர்.
  • அலங்கல்-மாலை.
  • காசை மலர்-காயாம்பூ.
  • பெத்தான்மாக்களுக்குள்ள ஆசைகள் தீருமாறு போகப் பொருள்களைப் பலகாலமும் கொடுத்து, அவர்களது ஆசைகள் தீருமாறு கூட்டுவித்து வினைகளை அனுபவிக்கச் செய்தல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 11 (2018)

பாடல்

மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய்; மைந்தனே! மணியே! மணவாளா!
அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால், “அழையேல், போ, குருடா!” எனத் தரியேன்;
முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன்? முக்கணா! முறையோ? மறை ஓதீ!
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

வேதங்களை அருளிச் செய்தவனே, விலைமதிப்புடைய பொருள்களை கரையிடத்துக் கொண்டு வந்து சேர்க்கும் குளிர்ச்சியும் அருளும் நிறைந்தும்  கடல் அலைகள் வந்தும் உலவுகின்ற ஒற்றியூர்என்னும் ஊரின்கண் எழுந்தருளியிருப்பவனே, என்றும் வலிமையாய் உள்ளவனே, மணி போன்றவனே, அழகுடையவனே, நீ எனக்கு, ‘மகம்என்னும் விண்மீன் கீழ் வந்த, ‘சனிஎன்னும் கோள் போன்றவன் ஆயினேன் ஆதலால் எனது குருட்டுத் தன்மை பற்றி காரியம் சொல்ல   அகத்தில் உள்ள பெண்டுகளை அழைத்தால் கண்ணிலியே நீ என்ன அறிவாய்போஎன்று சொல்வதை நான் பொறுக்கமாட்டேன்; மூன்று கண்களையுடையவனே, முகத்தில் கண் இல்லாமல் நான் எவ்வாறு வாழ்வேன்இது முறையோ!

விளக்க உரை

  • சுந்தரர், உலகியர் முன்வைத்து தம் மனைவியர் இங்குக் கூறியது போலக் கூறியது
  • சனிக்கிர சஞ்சாரம் மக நட்சத்திரத்தில் வரும்போது, நாட்டிற்கும், மக்களுக்கும் தீங்குவரும் என்பது ஜோதிட சாத்திரம்.
  • நீ மூன்று கண்களோடு இருக்கிறாய், நான் கண்கள் இழந்து துன்புறுகிறேன் என்பதைக் குறிப்பிடுகிறார்; துன்பம் அதிகம் உடையவர் என்பதாலும், இறைவனை இவ்வாறு வைது கூறினும் அவன் தன் அடியார்கள் இடத்தில் அனைத்தையும் பொறுக்கும் அருளாலன் என்பதையும் விளக்க இப்பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 9 (2018)

பாடல்

சங்கநிதி பதுமநிதி யிரண்டுந் தந்து
   தரணியொடு வானாளத் தருவ ரேனும்
மங்குவார் அவர்செல்வம் மதிப்போ மல்லோம்
   மாதேவர்க் கேகாந்த ரல்லா ராகில்
அங்கமெலாங் குறைந்தழுகு தொழுநோ யராய்
   ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்
   அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவு ளாரே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தேவி இலட்சுமியால் வரமாக அருளப்பட்டதும்,  தேவலோகத்தில் இந்திரனுக்கு கிடைக்கப்பெற்றதும், நவநிதிகளில் இருப்பதும், சக்தியை குறிப்பதும்  அதன் மூலம் ஞானத்தினை பெற்று நவநிதிகளில் இருப்பதும், சக்தியை குறிப்பதும்  அதன் மூலம் ஞானத்தினை பெற்று தரவல்லதும், தோல்வியை என்றும் தராததும் ஆன சங்க நிதியினையும், தரித்துக் கொண்ட ஒரு வீரனை எவர் ஒருவராலும் தோற்கடிக்க முடியாத பதும நிதியினையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியையும், மற்றும் வானுலகையும் தருபவராக இருப்பினும் தேவர்களுக்கு தலைவனாகிய சிவபெருமானிடத்தில்  அன்பில்லாதவர்களாய் நிலையில்லாமல் அழிபவர்களாகிய அவர்களது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறைந்து அழுகும் தொழுநோய் உடையவர்களாகவும்,  பசுவை உரித்துத் தின்று அதன் காரணம் பற்ரிய வினை கொண்டு திரியும் புலையர்கள் ஆயினும் கங்கையை நீண்ட சடையில் கொண்ட சிவபெருமானுக்கு அன்பராக இருப்பவர்கள் எவரோ அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.

விளக்க உரை

  • இத் திருத்தாண்டகம், உலகியல் பொருள்களைப் பற்றாது, மெய் நெறியையே பற்றி நிற்கும் தமது நிலையை அருளிச்செய்தது.
  • புலையர் – கீழ் செயல்கள் உடையோர். (வடமொழி -‘சண்டாளர்’)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 7 (2018)

பாடல்

சடையானைச் சந்திர னோடுசெங் கண்ணரா
உடையானை யுடைதலை யிற்பலி கொண்டூரும்
விடையானை விண்ணவர் தாந்தொழும் வெண்ணியை
உடையானை யல்லதுள் காதென துள்ளமே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

திருச்சடையின்மேல் பிறை ஆகிய சந்திரனையும், சிவந்த கண்களை உடைய பாம்பையும் உடையவனாகவும், உடைந்த தலை ஓடு ஆகிய மண்டையோட்டில் உணவு ஏற்று, ஊர்ந்து செல்லும் விடைமீது ஏறி வருபவனாகவும், தேவர்களால் வணங்கப்படும் திருவெண்ணி என்னும் தலத்தைத் தனக்கு ஊராக உடையவனாகவும் இருக்கும் அவனையன்றிப் பிறரை நினைக்காது எனது உள்ளம்.

விளக்க உரை

  • உள்காது – நினையாது

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆவணி – 5 (2018)

பாடல்

ஆதிக்கண் நான்முகத்தி லொன்று சென்று
   அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால்
சேதித்த திருவடியைச் செல்ல நல்ல
   சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை
மாதிமைய மாதொருகூ றாயி னானை
   மாமலர்மே லயனோடு மாலுங் காணா
நாதியை நம்பியை நள்ளாற் றானை
   நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

ஆதி காலத்தினை உடைய அந்தணன் எனப்படும் பிரம தேவனுடைய முகங்களில் ஒன்று உண்மை அல்லாத சொல்லினைக் கூற, அந்த முகத்தைத் தன் கையில் இருக்கும் வாளைக் கொண்டு அந்தத் தலையை போக்கிய வயிரவனாய் உள்ளவனும், அடியார்கள் அடைவதற்கு மேம்பட்டதாகிய சிவலோகம் அடையும் வழியைக் காட்டுபவனாய் உள்ளவனும், பெருமையுடைய பார்வதி பாகனாய் உள்ளவனும், தாமரை மலர் மேல் உள்ள பிரமனும், திருமாலும் காண முடியாத தலைவனாக உள்ளவனும், குண பூரணனாக திருநள்ளாற்றில் உகந்து எழுந்து அருளியிருக்கும் பெருமானை அடியேனாகிய நான் நினைந்து துன்பங்களிலிருந்து நீங்கப் பெற்றேன்.

விளக்க உரை

  • ‘சிவலோக நெறி’ –  தானே முதல்வன் என உணர்த்தியும், அவ்வாறு உணரும் நெறி தானே சிவபிரானை அடையும் நெறி என்பதும் குறித்தது
  • மாதிமைய – பெருமையுடைய
  • பிரமன் ஐந்துதலை உடையனாய் இருந்தபொழுது,’ தானே முதல்வன்’ எனச் செருக்குக் கொண்டு திருமாலுடன் கலகம் விளைத்தார். சிவபிரான் வயிரவரை அனுப்பிய போது அவரைக்கண்டு ,  ‘வா, என் மகனே’ எனப் பிரமன் அகங்காரத்துடன் அழைத்த போது வயிரவர் அவனது தலையைக் கிள்ளினார்; பின்பு பிரமனது செருக்கு நீங்கியபொழுது , சிவபெருமான் அவனுக்கு நல்வரம் அருளினார். (திருநாவுக்கரசர் காலத்தின் படி இப்பொருள் உரைக்கப்பட்டது)
  • ‘பிரம னார்சிரம் உகிரினிற் பேதுறக் கொய்தாய்’ – பிரமன் வருந்த அவனது சிரத்தை நகத்தினால் கொய்தவன் என்பது காஞ்சிப் புராணம்  வயிரவேசப்படலம் காட்டும் வரலாறு.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 24 (2018)

பாடல்

உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்
   ஒழிவறநின் றெங்கு முலப்பி லான்காண்
புற்றரவே யாடையுமாய்ப் பூணு மாகிப்
   புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்
நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக
   நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினால்
செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
   சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவனாவன், உயிரோடு உடல் இயைந்து நின்றவனாகவும், எல்லா உறவுகளுமாக ஆனவனாகவும், ஒருவரிடத்தும் தனக்குப் பின் உரிமையாக இல்லாத வகையில் எவ்விடத்தும் நிறைந்து நின்றவனாகவும், அழிவில்லாதவனாகவும், புற்றில் வாழும் பாம்பை ஆடை மேல் கட்டப்படும் கச்சாகவும் ஆபரணமாகவும் கொண்டவனாகவும், சுடுகாட்டில் எரியேந்தி ஆடுதலைச் செய்தவனாகவும், நல்ல தவ வேடங்கொண்டவனாகவும், சரணடைந்த மார்கண்டேயனுக்காக  பெருங்கூற்றுவனைச் சேவடியால் உதைத்து அழித்தவனும்  ஆனவனாகவும் ஆகி கைலாச மலையில் வீற்றிருப்பவனாகவும் இருந்து  என் சிந்தைக்கு உரியவன் ஆவான்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 23 (2018)

 

பாடல்

எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

கயிலைமலையை பெயர்த்து எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவரும், தவறு உணர்ந்து பின் அவன் புகழ்ந்து போற்ற அவனுக்கு  விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் அருளியவரும், விலகாத செல்வத்தோடு கூடியவரும்,  பிறப்பு இறப்பும் அறியாதவரும், சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவரும், வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக கொண்டவரும், உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னுடைய அருள்பெருமையும், வாழ்வும் கொடுத்தவரும் ஆன பெரும்புகழையுடைய சிவபெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்து அருளுகின்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 22 (2018)

 

பாடல்

முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்

கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்

அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை

சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே

 

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

 

பதவுரை

காலத்தால் முற்பட்டு வரையறை செய்ய இயலாதவனாகவும், படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழில்களை உடைய மூவருக்கு முதலாவதாக ஆனவனாகவும், கொத்து கொத்தாக பூக்கும் சோலைகளை உடைய கூகம் என்ற ஊரில் உறைபவனாகவும், அந்தி வானத்தில் தோன்றும் பிறை சந்திரனை தன் தலையில் சூடியவனாகவும் அடியவர்களுடைய வினைகளை முழுவதுமாக நீக்குபவனாகவும் ஆன இறைவன் உறையும் இடம் திருவிற்கோலம் ஆகும்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 21 (2018)

பாடல்

தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
   சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
   சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
   போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
   ஆவ டுதுறை ஆதிஎம் மானே

தேவாரம் – ஏழாம்  திருமுறை – சுந்தரர்

பதவுரை

சுருண்ட, சிவந்த சடையை கொண்டு திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள ஆதி ஆகிய எங்கள் முதற்கடவுளே, தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று,  தனது வாயினின்று உண்டாகும் நூலால் உறுதியான அழகிய பந்தல்  ஆக்க முற்பட்ட அச் சிலந்தியை, சோழனாய்ப் பிறக்கச் செய்த திருவருளை அறிந்து, அடியேன் பழவினையாகிய சஞ்சிதம் தொலையப் பெற்றாரையும் வந்து பற்றும் வன்மையுடைய ஆகிய ஆகாமியம்  எனவும் எதிர்வினை எனவும் ஆகிய இனிச் செய்யப்படும் வினை குறித்து  அஞ்சி, உனது அழகிய மலர்போன்ற திருவடியில் விழுந்து புரண்டு, `போற்றி! போற்றி!` என்று துதித்து,  உன்னை வந்து அடைந்தேன்!  என்னை ஏற்று கொண்டு அருள்.

விளக்க உரை

  • சிலந்திக்குச் செய்த திருவருளை எடுத்து இயம்பும் பாடல்.
  • சிலந்தி,  கோச்செங்கட் சோழ நாயனார் ஆக பிறந்து வந்த வரலாற்றை பெரிய புராணத்துள் கண்டு உணர்க.
  • தெருளுதல் – உணர்வுறுதல், தெளிதல், விளங்குதல், பூப்படைதல்

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 20 (2018)

பாடல்

படையானைப் பாசுபத வேடத் தானைப்
   பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம்
அடையாமைக் காப்பானை யடியார் தங்கள்
   அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச்
சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச்
   சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்
நடையானை நம்பியை நள்ளாற் றானை
   நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பிற உயிர்கள் போல் படைக்கப்படாதவனை, அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்க வேட வடிவம் கொண்டவனை, மன்மதனை நெற்றிக் கண்ணால் நோக்கி அவனை சாம்பலாகுமாறு அவனை செய்தவனை, விதி வழி வரும் பாவங்கள் அடையாமல் காப்பவனை, அடியவர்களுக்கு அருமருந்தாகி அவர்களின் துன்பம் விலகுமாறு அருள் செய்பவனாய், தனது திருமுடிகளில் சந்திரனை தரித்தவனை, சங்கின் நிறம் ஒத்து முத்தினை கொண்டு இருப்பது போன்ற தனித்துவமான வெள்ளை நிற காளையின் நடை உடையவனை, பூரணம் நிறைந்த இறைவனை, திருநள்ளாறு எனும் திருத்தலத்தில் இருப்பவனை அடியேன் நினைந்து உய்ந்தேன்.

விளக்க உரை

  • அனங்கன் – மன்மதன்.
  • ‘ஆவா’ – இரக்கக் குறிப்பிடைச் சொல்.
  • படையானை – பலபடைக்கலங்களை உடையவனாய் என்று சில விளக்கங்களில் கூறப்பட்டு இருந்தாலும், ‘உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ..இங்கு என்னை இனிப் படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே’ எனும் அபிராமி அந்தாதி வரிகள் பற்றியும் படைக்கப்படாதவன் எனும் பொருளில் இங்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • பாசுபத வேடத் தானைப் – ‘பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய்’ என்று சில விளக்கங்களில் கூறப்பட்டு இருந்தாலும், திருவேட்டக்குடி திருத்தலத்தில் அர்ஜூனனைச் சோதிக்க சிவபெருமான் வேடுவ கோலத்தில் வந்தது பற்றி தலபுராணத்தில் இருப்பதாலும்,  அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்கப்பட்ட காதை கொண்டும் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்க வேட வடிவம் கொண்டவன் எனும் பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 19 (2018)

பாடல்

விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்
கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்
பதியா வதுபங் கயநின் றலரத்தேன்
பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மார்க்கண்டேயருக்கு விதிக்கப்பட்ட விதியானது அவரது வாழ்நாள் வயது பதினாறு எனவும், அந்த விதியின் விளைவாக வந்த மரணத்தினை, அவர் இறை வழிபாடு செய்து, விதியின் விளைவாய்  வெளிப்பட்டுச் சினந்து வந்த கூற்றுவனை உதைத்து சிவபிரான் எழுந்தருளிய தலம், தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளும், தேன்கூடுகள் நிறைந்த சோலைகளும் சூழ்ந்தது புகலிநகர் எனும் திருத்தலமாகும்

விளக்க உரை

  • கூற்றுதைத்தார் பதியாவது புகலிநகர் என்பது பற்றிய பாடல்.
  • ‘கொதியாவருகூற்றை உதைத்தவர்’  –  விதியென்னும் நியதியைப்பற்றி வந்த கூற்றுவனின் அந்நியதிக்கும் காரணம் இறைவன் என்பதை உணர்ந்து கொள்ளவைத்த பெருங்கருணை எனும் பொருள் பற்றியது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 17 (2018)

பாடல்

தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
   தவம்மு யன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற்
   பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
   மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்
   சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை அடையாமல், தவத்தொழிலைச் செய்து,  பயனில்லாத சொற்களைப் பேசி  பின்னுதல் உடைய  சடைகளைச் சேர்த்துக் கட்டிக்கொண்டும், எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டு மட்டுமே  மக்கள்  பிறவியாகிய கடலை முற்றிலும் கடந்துவிடுதல்என்பது  இயலாது; ஆதலின், அந்நிலையில் இருந்து வேறுபட்டு  நிற்க  நீ  தேவர்களுக்குத் தேவனாய் உள்ளவனும் பெருந்தேவனாகியும் ஆனவனும் கொண்டு  செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற  நன்மையின் மேல் எல்லையாய் உள்ள பெருமானை  அணுகச் சென்று  இவனே  தொன்மையான முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.

Loading

சமூக ஊடகங்கள்