பாடல்
முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே
தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
பதவுரை
காலத்தால் முற்பட்டு வரையறை செய்ய இயலாதவனாகவும், படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழில்களை உடைய மூவருக்கு முதலாவதாக ஆனவனாகவும், கொத்து கொத்தாக பூக்கும் சோலைகளை உடைய கூகம் என்ற ஊரில் உறைபவனாகவும், அந்தி வானத்தில் தோன்றும் பிறை சந்திரனை தன் தலையில் சூடியவனாகவும் அடியவர்களுடைய வினைகளை முழுவதுமாக நீக்குபவனாகவும் ஆன இறைவன் உறையும் இடம் திருவிற்கோலம் ஆகும்.