அமுதமொழி – விளம்பி – ஆடி 20 (2018)

பாடல்

படையானைப் பாசுபத வேடத் தானைப்
   பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம்
அடையாமைக் காப்பானை யடியார் தங்கள்
   அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச்
சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச்
   சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்
நடையானை நம்பியை நள்ளாற் றானை
   நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பிற உயிர்கள் போல் படைக்கப்படாதவனை, அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்க வேட வடிவம் கொண்டவனை, மன்மதனை நெற்றிக் கண்ணால் நோக்கி அவனை சாம்பலாகுமாறு அவனை செய்தவனை, விதி வழி வரும் பாவங்கள் அடையாமல் காப்பவனை, அடியவர்களுக்கு அருமருந்தாகி அவர்களின் துன்பம் விலகுமாறு அருள் செய்பவனாய், தனது திருமுடிகளில் சந்திரனை தரித்தவனை, சங்கின் நிறம் ஒத்து முத்தினை கொண்டு இருப்பது போன்ற தனித்துவமான வெள்ளை நிற காளையின் நடை உடையவனை, பூரணம் நிறைந்த இறைவனை, திருநள்ளாறு எனும் திருத்தலத்தில் இருப்பவனை அடியேன் நினைந்து உய்ந்தேன்.

விளக்க உரை

  • அனங்கன் – மன்மதன்.
  • ‘ஆவா’ – இரக்கக் குறிப்பிடைச் சொல்.
  • படையானை – பலபடைக்கலங்களை உடையவனாய் என்று சில விளக்கங்களில் கூறப்பட்டு இருந்தாலும், ‘உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ..இங்கு என்னை இனிப் படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே’ எனும் அபிராமி அந்தாதி வரிகள் பற்றியும் படைக்கப்படாதவன் எனும் பொருளில் இங்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • பாசுபத வேடத் தானைப் – ‘பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய்’ என்று சில விளக்கங்களில் கூறப்பட்டு இருந்தாலும், திருவேட்டக்குடி திருத்தலத்தில் அர்ஜூனனைச் சோதிக்க சிவபெருமான் வேடுவ கோலத்தில் வந்தது பற்றி தலபுராணத்தில் இருப்பதாலும்,  அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்கப்பட்ட காதை கொண்டும் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்க வேட வடிவம் கொண்டவன் எனும் பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *