பாடல்
வேங்கட நாதனை வேதாந்தக் கூத்தனை
வேங்கடத் துள்ளே விளையாடு நந்தியை
வேங்கடம் என்றே விரகறி யாதவர்
தாங்கவல் லாருயிர் தாமறி யாரே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – உயிர் நிலையாமை – திருமூலர்
கருத்து – ஈசனை அறியாமையால் உணர்வினை தரும் உயிர் நிலையாமையையும் அறியார்கள் என்பதைக் கூறும் பாடல்.
பதவுரை
உடல் வேகின்ற காட்டில் (சுடுகாட்டில்) ஆடும் கடவுளானவரும், வேதத்தின் முடிவாகிய வேதாந்த வடிவமாக இருந்து கூத்து நிகழ்த்துபவனாகவும் இருப்பவனை, வெந்து ஒழிவது இந்த உடல் என்று அறியாமலும், வெந்து ஒழிவதாகிய நம் உடம்பினுள்ளே உறைந்து விளையாடும் நந்தியாகவும் இருப்பதை உபாயத்தால் அறியாதவர் தம் உயிரைத் தாங்கி நிற்கின்ற அரிய உயிரையும் அறியாதவரே ஆவர்.
விளக்க உரை
- வேம் கட நாதன் – வேகின்ற காட்டில் (சுடுகாட்டில்) ஆடும் கடவுள்.
- வேம் கடத்துள்ளே – வெந்தொழிவதாகிய நம் உடம்பினுள்
- வேம் கடம் என்று – வெந்தொழியும் உடம்பு
- விரகு – உபாயம்
- தாங்க வல்லதாகிய ஆருயிர் – உயிரை அதற்கு உயிராய் நின்று எப்பொழுதும் காக்கும் இறைவன்; சிவன் உயிர்க்குயிராய் நின்று உணர்த்தாவிடில், உயிருக்கு உணர்வு நிகழாது