அமுதமொழி – விளம்பி – புரட்டாசி – 8 (2018)

பாடல்

நல்குந் திரிபரை நாத நாதாந்தங்கள்
பல்கும் பரவிந்து பார்அண்ட மானவை
நல்கும் பரை அபிராமி அகோசரி
புல்கும் அருளும் அப் போதம்தந் தாளுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

அருளுதலைத்  தருகின்ற திரிபுரையானவள்,  சத்த பிராமானமாகவும்  சிவனின் நவபேதமூர்த்தங்களுள் ஒன்றானதும் ஆன நாதமாகவும், அவ்வாறான நாதத்தின் முடிவாகவும், பலவாய் விரிவதான சிவத்தோடு ஒன்றிய சக்தி ஆகிய பரவிந்து ஆகி பெரிய அண்டம் முதலிய அளவற்ற பொருள்களை ஆக்குவாள்; ஆக்கல் தொழிலோடு அருளுதலையும் செய்வதால் அவள் அனைவர்க்கும் மேலானவள்; அவளே சிவசத்தி வடிவமான பரை, அவளே அபிராமி, அவளே வாக்குக்கும் மனத்துக்கும் அப்பாற்பட்ட, புறக்கண்களுக்கு புலப்படாதவளும் அறியப்படாதவளும் ஆன அகோசரி என்ற போதிலும் அன்புடன் நம்மைத் தழுவிக் கொண்டு நல்ல அறிவை வழங்குபவள் ஆவாள்.

விளக்க உரை

  • சத்தி போக மோட்சங்களைத் தருமாறு வகுத்துக் கூறப்பட்டப் பாடல்
  • புல்குதல் – பதிதல்
  • நாதம் – சத்தம், வாத்திய ஓசை, இசைப்பாட்டு, அரைவட்டமான மந்திரலிபி, சிவபிரானது நவபேதமூர்த்தங்களுள்ஒன்று, நாதக்குமிழிலுள்ள குமிழ், சோணிதம், தலைவனையுடைமை
  • அகோசரம் – அறியப்படாமை, புலன்களுக்குப்புலப்படாமை, புலப்படாதது

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply