அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மூலநாடி

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மூலநாடி

பொருள்

  • நடுநாடி
  • சுழுமுனை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை
நாலு நாழி உம்முளே நாடியே இருந்த பின்
பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்
ஆலமுண்ட கண்டர் ஆணை அம்மை ஆணை உண்மையே.

சிவவாக்கியர்

கருத்து உரை

மூலநாடியான சுழுமுனையை பற்றி வாசியோகம் செய்து அங்கே தோன்றி எழும் சோதியில் உள்முகமாக மனம் பொருத்தி நான்கு நாழிகை நேரம் (தோராயமாக- 1.30 மணி நேரம்) தியானம் செய்து தவம் புரியும் யோக  சாதகர்கள், அதன் பலனாய் என்றும் மாறாத இளமைத் தோற்றம் உடையவர்களாகி,  அவர்களே பரப்பிரமமாய் ஆவார்கள் என ஆலகால விஷம் உண்ட நீலகண்டர் மீதும், அம்மையான உமையவள் மீது ஆணையிட்டு சத்தியம் செய்து சொல்கிறேன்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

திருக்கடவூர் உய்ய வந்த தேவநாயனார் செய்த நூல்
திருக்களிற்றுப்படியார்

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தாதை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  தாதை

பொருள்

  • தந்தை
  • பாட்டன்
  • படைக்கும் கடவுள் – பிரமன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதிதீ தொத்ததே.

கந்தர் அந்தாதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

‘திதத்த ததித்த’ என்னும் தாளமானங்களை திருநடத்தால் காக்கின்ற உன்னுடைய தந்தையாகிய சிவபெருமானும், பிரமாவும், இடைச்சேரியில் தயிரை உண்டு பாற்கடலையும் ஆசிசேடனையும் பாயாக் கொண்ட திருமாலும் வணங்குகிற முதல்வனை! தெய்வயானை தாசனே! ஜனன மரணத்துக்கு இடமாய், எலும்பு முதலிய தாதுக்கள் மூடிய  பொல்லாத பையாகிய  இந்த உடம்பை, தீயில் வேகும் போது, உன்னைத் துதிக்கும் என் புத்தியை உன் அடி இணைக்கு ஆட்படுத்த வேண்டும்.

விளக்க உரை

  • புலமை விளையாட்டு / சொல்விளையாட்டு – செய்யுள் இயற்றுவோர் தம் சொல்லாண்மையைக் காட்டக் கையாளும் ஒரு வகை உத்தி.
  • இந்த பாட்டிற்கு உரை / பொருள் கூற முடியாமல் வில்லிபுத்தூரார் அருணகிரியாரிடம் தோல்வியுற்றதாக வரலாறு.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

மெய்கண்டார் செய்த நூல்
சிவஞான போதம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – விமலம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  விமலம்

பொருள்

  • அழுக்கின்மை
  • பரிசுத்தம்
  • தெளிவு
  • சிவாகமம் இருபத்தெட்டனுள் ஒன்று

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆயிர கோடி காமர்
  அழகெலாந் திரண்டொன் றாகி
மேயின எனினுஞ் செவ்வேள்
  விமலமாஞ்சரணந் தன்னில்
தூயநல் எழிலுக் காற்றா
  தென்றிடின் இனைய தொல்லோன்
மாயிரு வடிவிற் கெல்லாம்
  உவமையார் வகுக்க வல்லார்?

கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்து உரை

ஆயிரம் கோடி மன்மதன்கள் இந்த உலகில் பிறந்து, அவர்கள் எல்லாருடைய அழகையும் ஒன்றாகத் திரட்டி ஓர் உருவம் செய்து இருந்தால்கூட, சிவந்த மேனி உடைய இந்த முருகனுடைய தூய்மையான பாதத்தின் அழகுக்கு முன்னே அது நிற்காது!  தொன்மையான புகழைக் கொண்ட இந்த அழகிய வடிவத்துக்கு உவமை சொல்ல யாரால் இயலும்?

விளக்க உரை

  • சூரபத்மன் முருகன் அழகைப் கண்ட மாத்திரத்திலேயே தன் கையிலிருந்த ஆயுதங்களையெல்லாம் நழுவவிட்டு தன் ஞானக் கண்களால் முருகன் அழகை முழுதும் பருகி வியந்து நிற்கிறான்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அருணந்திசிவம் செய்த நூல்கள்
சிவஞானசித்தியார், இருபா இருபஃது

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பேதகம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பேதகம்

பொருள்

  • மனவேறுபாடு
  • தன்மை வேறுபாடு
  • வஞ்சனை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆதலின் நமது சத்தி அறுமுகன், அவனும் யாமும்
பேதகம் அன்றால், நம்பொற் பிரிவிலன் யாண்டும் நின்றான்
ஏதமில் குழவி போல்வான், யாவையும் உணர்ந்தான், சீரும்
போதமும் அழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான்

கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்து உரை

ஆகையினால் நம்முடைய சக்தியே அறுமுகன்; அவனும் யாம் போல் மனவேறுபாடு தன்மை இல்லாமல் நம்மைப் போல் எப்பொழுதும் எவ்விடத்திலும் பிரிவு இல்லாதவனாகி நிற்கும் குணம் உடையவன்; குற்றம் இல்லாத குழந்தையைப் போன்றவன்; எல்லாப் பொருள்களையும் அதன் தன்மைகளையும் உணர்ந்தவன்; தன்னைப் போற்றுபவர்களுக்கு பெருமை, புகழ், ஞானம் அறிவு, அழியாத வீடு பேறு ஆகியவற்றை அளிக்க வல்லவன்.

விளக்க உரை

  • ‘பேதகம் அன்றால் நம்போல் பிறப்பிலன் யாண்டும் உள்ளான்’ – என்று பல இணைய பதிப்புகளில் உள்ளன. மூலத்தில் ‘நின்றான்’ என்பது இருப்பதால் ‘நின்றான்’ எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது. ‘நின்றான்’ என்பது இறந்த காலத்தை குறிப்பதால் ‘உள்ளான்’ எனும் நிகழ் காலத்திற்கு வார்த்தை மாற்றப்பட்டிருக்கலாம். கால வரையறைக்கு உட்படாதவன் என்பதாலும், ‘உணர்ந்தான்’ எனும் சொல் அடுத்து வரும் வரிகளில் வருவதாலும்  ‘நின்றான்’ என்பதே சரியான சொல்லாகும்.  எனவே அவ்வாறு வார்த்தை மாறுதல் தேவை இல்லை என்பது என் தனிப்பட்ட கருத்து.
  • அன்றேல் – அல்லதேல்.
  • யாண்டும் – எப்பொழுதும், எவ்விடத்தும்
  • குழவி – குழந்தை
  • ஏதம் – துன்பம், குற்றம், கேடு, தீமை
  • போதம் – ஞானம், அறிவு

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

மனவாசகம் கடந்தார் செய்த நூல்
உண்மை விளக்கம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – முருகு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  முருகு

பொருள்

  • மணம்
  • இளமை
  • கடவுள்
  • தன்மை
  • அழகு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அருவமு முருவு மாகி அநாதியாய்ப் பலவா யொன்றாய்ப்
பிரமமாய் நின்ற சோதிப் பிழம்பதோர் மேனி யாகக்
கருணைகூர் முகங்க ளாறுங் கரங்கள்பன் னிரண்டுங் கொண்டே
ஒருதிரு முருகன் வந்தாங் குதித்தனன் உலக முய்ய.

கந்தபுராணம் – கச்சியப்ப சிவாச்சாரியார்

கருத்து உரை

இந்த உலகம் பிழைப்பதன் பொருட்டு, சிவபெருமானின் மூன்று நிலைகளாகிய அருவம், உருவம் மற்றும் அரு உருவம் எனும் நிலைகளில், அநாதிக் பொருளாகி, பலவாகி, ஒன்றாகி, ஐந்து வடிவங்களாகிய ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம். சத்யோஜாதம் ஆகியவற்றுடன் கூடிய அதோமுகம் எனும் ஆறு முகங்களின் அம்சமாக ஜோதி வடிவமாக  நிற்கும் ஈசனாகிய பிரமத்தின் மேனி வடிவம் கொண்டு கருணை பொழியும் முகங்கள் ஆறு, பன்னிரண்டு கைகள் கொண்டு முருகன் வந்து உதித்தான்.

விளக்க உரை

  • சிவம் வேறு, முருகன் வேறு என்று எண்ணுபவர்களுக்காக சிவ அம்சமாக முருகனின் பிறப்பு என்பது பற்றி இப்பாடல்.
  • இயற்கை மணமும், மாறா இளமையும், எல்லாப் பொருளையும் கடந்து ஒளிரும் தன்மையும், அழியா அழகும் இறைவனிடத்தில் இருப்பதால் முருகன்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

உமாபதி சிவம் அருளிய எட்டு நூல்களின் தொகுப்பு
சித்தாந்த அட்டகம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பண்டு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பண்டு

பொருள்

  • பழமை
  • முற்காலம்
  • முன்
  • தகாச்சொல்
  • நிதி (வட்டார வழக்கு)

விளக்க உரை

ஏங்க, புள்ளைங்க முன்னால பண்டு சொல் சொல்றீங்க. நாளைக்கு அப்படியே பேசும்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வம்மின்
கொண்டும் கொடுத்தும் குடிகுடி யீசற்காட்செய்மின் குழாம்புகுந்
தண்டங்கடந்த பொருள்அள வில்லதோர்ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ளபொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே

ஒன்பதாம் திருமுறை – திருவிசைபா – திருப்பல்லாண்டு – திருமாளிகைத் தேவர்

கருத்து உரை

எம் பெருமான் திறத்து உருகாத மனமுடையவர்கள் எங்களை விடுத்து நீங்குங்கள். உண்மை அடியவர்கள் விரைந்து வாருங்கள். நம்மை அடக்கியாளும் இறைவன்பால் அவனுடைய திருவருளைக் கொண்டும் நம் உடல் பொருள் ஆவி அனைத்தையும் அவனுக்கு வழங்கியும் எல்லாக்குடிகளில் உள்ளவர்களும் அடிமை செய்யுங்கள். கூட்டமாகத் திருவம்பலத்துக்குச் சென்று, `உலகங் களைக் கடந்தபொருள், எல்லையற்ற ஆனந்தப் பெருக்காகிய பொருள், பண்டும் இன்றும் என்றும் உள்ள காலம் கடந்தபொருள் ஆகிய நம் பெருமான் பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துவோமாக.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சிவப்பிரகாசத்தை அருளியவர்
உமாபதி சிவம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மிண்டு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மிண்டு

பொருள்

  • வலிமை
  • முட்டு
  • தைரியம்
  • அறிந்து செய்யும் குற்றம்
  • துடுக்கு
  • இடக்கர்ப் பேச்சு
  • செருக்கிக் கூறும் மொழி

விளக்க உரை

அவன் மிண்டு பேச்சு பேசுறான், அவனோட சேராத.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே

அபிராமி அந்தாதி

கருத்து உரை

அபிராமி அன்னையே, உனக்கும் உன் அடியார்களுக்கும் தொண்டு செய்யாமல், உன் திருப்பாதங்களை வணங்காமல், துணிவுடன் தங்கள் மனத்தில் பட்டதையே சரி என  பழங்காலத்தில் செய்தவர்கள் இப்பொழுதும் இருக்கிறார்களோ இல்லையோ தெரியாது;  அவர்களைக் கண்டு அடியேனும் அதன்படி நடந்தால் அது சரியோ அல்லது தவறோ என்பதும் அறியேன். ஆயினும் நான் தவறே செய்தாலும் என்னை வெறுக்காமல் பொறுத்தருள்.

விளக்க உரை

  • கைதவம் – தவறு அல்லது அநீதி
  • செய்தவம் – நீதி
  • இச்சையே பண்டு செய்தார் – தன் விருப்பம் கொண்டு கர்ம வினைகளுக்கு உட்பட்டு அவற்றை செய்தார். (யான் அவ்வாறு அல்ல – மறை பொருள்)

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

உண்மை விளக்கத்தை அருளியவர்
திருவதிகை மனவாசகம் கடந்தார்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மன்னுதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  மன்னுதல்

பொருள்

  • நிலைபெறுதல்
  • தங்குதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

சொன்ன இத்தொழில்கள் என்ன காரணம் தோற்ற என்னில்
முன்னவன் விளையாட்டு என்று மொழிதலும் ஆம்; உயிர்க்கு
மன்னிய புத்தி முக்தி வழங்கவும், அருளான் முன்னே
நுன்னிய மலங்கள் எல்லாம் துடைப்பதும், சொல்லலாமே

சிவஞானசித்தியார்

கருத்து உரை

முத்தொழில்களும் செய்வது சிவனின் விளையாட்டு என்று கூறுவதும் உண்டு. ஆனால்  உயிர்களுக்கு நிலையான ஞானத்தையும், முக்தியை வழங்கவும்; ஆதி தொட்டு உயிரை சேர்ந்திருக்கும் உயிரை சேர்ந்திருக்கும் மலங்களை எல்லாம் நீக்குதலும் அவன் அருளால் முத்தொழில்களாக செய்யப்படுகின்றன என்று சொல்வது அன்றோ சிறப்பு அன்றோ.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

இருபா இருப்ஃதை அருளியவர்
அருணந்திசிவம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பெட்டு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  பெட்டு

பொருள்

  • விரும்பப்பட்டது – பெள் +டு

விளக்க உரை

அவன் நிச்சயமா ஜெயிப்பான், என்னா பெட்டு கட்ற.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பெட்டடித் தெங்கும் பிதற்றித் திரிவேனை
ஒட்டடித் துள்ளமர் மாசெலாம் வாங்கிப்பின்
தட்டொக்க மாறினான் தன்னையும் என்னையும்
வட்டம தொத்தது வாணிபம் வாய்த்ததே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – ஏழாம் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

இந்த இடம், அந்த இடம் என்கின்ற பேதமின்றி, எல்லா இடங்களுக்கும் விரும்பிச் சென்று, அனுபவம் எதுவும் இல்லாமல் எனது பிடிவாதக் கொள்கையினால் வலிந்து  நான் விரும்பியபடி பிதற்றிக் கொண்டும், திரிந்து கொண்டும் இருந்த என்னை சிவகுரு எதிர்ப்பட்டு என்னிடம் உள்ள அகக் குற்றங்களை  எல்லாம் அகற்றி என்னைத் தூயவனாக்கி,  என்னையும் தன்னையும் தராசுத் தட்டுக்களில் உள்ள பொருட்களைப் போல  வைத்து கொடுத்தும், கொண்டும் மாற்றிக் கொண்டான். என்னிடம் உள்ள குற்றங்களை நீக்கியமையால், நாங்கள் இருவரும் ஒத்த வினையுடைய பொருளானோம். அதனால் கொடுத்துக் கொள்ளும் வாணிபம் தடையின்றி முடிந்தது.

விளக்க உரை

  • ஒக்க மாற்றினான் – ஒவ்வாதவனையும் மாற்றினான்
  • வாணிபம் வாய்தது – பொருந்தா வாணிபம்
  • வட்டமதொத்தது – அவ்வாறு இருப்பினும், குற்றம் நீங்கின்மையால் அது கொள்ளத்தக்கதது ஆயிற்று.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சிவஞான சித்தியாரின் முதல் நூல்
சிவஞான போதம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – உன்னுதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  உன்னுதல்

பொருள்

  • தியானித்தல்
  • நினைத்தல்
  • பேசவாயெடுத்தல்
  • எழும்புதல்
  • முன்னங்கால்விரலையூன்றி நிமிர்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பொன்னியல்கொன்றை பொறிகிளர்நாகம் புரிசடைத்
துன்னியசோதி யாகியவீசன் றொன்மறை
பன்னியபாட லாடலன்மேய பரங்குன்றை
உன்னியசிந்தை யுடையவர்க்கில்லை யுறுநோயே.

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

முறுக்கேறிய சடைமுடியில் பொன் நிறமுடைய கொன்றை மலர், ஒளி பொருந்திய பொறிகளை உடைய பாம்பு ஆகியவற்றை அணிந்து ஜோதி வடிவினனும், பழமையான வேதங்களில் அமைந்துள்ள பாடல்களைப் பாடிஆடுபவனுமாகிய ஈசன் எழுந்து அருளும் திருப்பரங்குன்றை எண்ணும் சிந்தை உடையவர்க்கு வருத்தம் தரும் நோய்கள் எவையும் இல்லை.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சிவஞான போதத்தின் சார்பு நூல் எது?
சிவப்பிரகாசம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வாதாட்டம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  வாதாட்டம்

பொருள்

  • தருக்கம் செய்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆதாரமான அடிமுடி கண்டோர்க்கு
வாதாட்டம் ஏதுக்கடி – குதம்பாய்
வாதாட்டம் ஏதுக்கடி

குதம்பைச் சித்தர்

கருத்து உரை

முக்திக்கு ஆதாரமாக இருக்கும் இறையின் பாதம் முதல் திருமுடி வரை கண்டவர்களுக்கு பிறரோடு தர்க்கம் எனப்படும் சண்டைகள் எதற்கு?

விளக்க உரை

  • பாதாதி கேசமாக இறைவடிவம் காணுதல் இயல்பு
  • இறைவடிவம் கண்டபிறகு பிறரோடு கருத்து வேறுபாடு கொண்டு சண்டையிடுதல் என்பது இறையில் பாதையில் இருந்து நம்மை விலக்கிச் செல்லும் என்பதால் அதை விலக்க வேண்டும் எனும் பொருளில்.
  • யோக மார்க்க முறைப்படி, இறை வடிவம் கண்டபிறகு மனதில் எழும் எண்ணங்களும் அதை பற்றிய வினா, விடைகள் எதற்கு அதை விலகக வேண்டும் என்பதுவும் மற்றொரு கருத்து.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சிவஞான போதத்தின் வழிநூல் எது?
சிவஞான சித்தியார்

(இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கோணுதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  கோணுதல்

பொருள்

  • வளைதல்
  • கோணலாயிருத்தல்
  • நெறிபிறழ்தல்
  • மாறுபடுதல்
  • வெறுப்புக் கொள்ளுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

காணாமல் அலைந்தோர்கள் கோடா கோடி
காரணத்தை யறிந்தோர்கள் கோடா கோடி;
வீணாகப் புலம்பினதா லறியப் போமோ?
விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும்?
கோணாமற் சுழுமுனையில் மனத்தை வைத்துக்
குருபாத மிருநான்கில் நாலைச் சேர்த்து
நாணாம லொருநினைவாய்க் காக்கும் போது
நாலுமெட்டு மொன்றாகும் நாட்டி யூதே;.

அகஸ்தியர் ஞானம்

கருத்து உரை

அறியப்பட வேண்டிய ரகசியமான விடையை அறியாமல் அலைந்தவர்கள் கோடான கோடி பேர்கள். அறியப்பட வேண்டிய ரகசியமான விடையை அறிந்து காரணத்தை அறிந்தவர்கள் கோடான கோடி. வீணாக அதைப்பற்றி புலம்புவதால் அது பற்றி அறிய இயலுமோ? ஆணவமலம் மட்டும் உள்ள ஆன்மாக்களாகிய விஞ்ஞானகலர் பேசுவது எவ்வகையினில் உதவும்? (உதவாது என்பது முடிவு). எந்த விதமான தடுமாற்ற சிந்தனையும் இல்லாமல் ஒரு நினைவாய் சூரிய, சந்திரக் கலைகளைக் கூட்டி இடைவிடாமல் சுழுமுனை நாடியில் மனதை வைத்து காக்கும் பொழுது சூரியக் கலையாகிய பன்னிரண்டு உதிக்கும். இதை உபதேசமாகக் கொண்டு நிலைத்து நில்.

விளக்க உரை 

  • நாலைச் சேர்த்து – வித்யா கலையான கர்மா, ஞானம், பக்தி, பிரபக்தி எனும் மகாவிஷ்ணு நிலையை
  • எட்டு – சிவ நிலையான யோகாக்கினி
  • யோகாக்கினி மூலம் கர்மாவை எரியச் செய்து, ஞானத்தை அடைதல்
  • இதுவே சக்தி நிலை. இந்த நிலைக்கு பதினாறு கலைகளையுடைய ஜோதிமயமான சந்திர கலையை அடையலாம். இதுவே ஆனந்தமயம்.
  • குருபாத மிருநான்கில் நாலைச் சேர்த்து – பாதம் இரண்டு, நான்கு, மற்றொரு நான்கு என மொத்தம் பத்து. பிராணன், அபானன், உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்சயன் என்ற பத்து வாயுக்கள் தச வாயுக்களைக் குறிக்கும் அவைகளை அடக்கி நெறிப்படுத்தி சுழுமுனை நாடியில் மனதை வைத்து காக்கும் பொழுது அறியப்பட வேண்டியவைகளின் விடைகள் தெரியவரும் என்பதும் மற்றொரு பேதம்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சிவப்பிரகாசத்தை அருளியவர் யார்?
உமாபதிசிவம்

(இச்சொல் சித்தர்கள் பாடலில் இடம் பெற்று இருப்பதால் பாடலை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஏயிலான்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ஏயிலான்

பொருள்

  • தமக்குமேல் தலைவன் இல்லாதவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஏயி லானையெ னிச்சை யகம்படிக்
கோயி லானைக் குணப்பெருங் குன்றினை
வாயி லானை மனோன்மனி யைப்பெற்ற
தாயி லானைத் தழுவுமென் ஆவியே.

தேவாரம் – 5ம் திருமுறை (திருக்குறுந்தொகை) – திருநாவுக்கரசர்

கருத்து உரை

தமக்குமேல் தலைவன் இல்லாதவன். அன்பாலாகிய உள்ளக்கோயிலில் உறைபவன். குணக்குன்று. வாழ்த்துவோர் வாழ்த்தும் புறக்கருவியாகிய வாயினை இயல்பான இருப்பிடமாக கொண்டவன். நவந்தரு பேதங்களில் ஒன்றான மனோன்மனி எனும்  சத்திபேதத்தை ஈன்றவன். தனக்கொரு தாய் இல்லாதவன். அவனை என்னுயிர் தழுவும்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சிவஞான சித்தியாரை அருளியவர் யார்?
அருணந்தி சிவம்

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தன்னாண்மை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  தன்னாண்மை

பொருள்

  • சுயமாக
  • எவர் தூண்டுதலும் இல்லாமல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஒருகொம் பிருசெவி மும்மதத்து நால்வாய்
கரியுரிவைக் கங்காளன் காளாப் – பரிவுடனே
கண்ணால ஓலை கடிதெழுத வாராயேல்
தன்னாண்மை தீர்ப்பன் சபித்து.

ஔவையார் தனிப்பாடல்கள்

கருத்து உரை

ஆனைமுகா! உன் தந்தங்களில் ஒன்றை முரித்து எழுத்தாணியாக ஆக்கிக்கொண்டுள்ளாய்; இரு செவி கொண்டுள்ளாய்; மதம் கொண்ட யானையின் கன்ன மதம், கைம்மதம், கோசமதம் என்ற மூவகைப்பட்ட மதநீர் கொண்டுள்ளாய்; தொங்கும் வாய்யான துதிக்கை கொண்டுள்ளாய். கஜமுகாசுரனின் தோலை உரித்துப் போர்த்திய போர்வை ஈசனின் இரக்கத்துக்கு உரித்தானவன்; இருப்பினும்  எவர் தூண்டுதலும் இன்றி சுய விருப்பம் கொண்டு அங்கவை சங்கவை திருமணத்துக்கு நீ வந்து அழைப்போலை எழுதவேண்டும். இல்லாவிட்டால் உன்னைச் சபித்து உன் ஆற்றலை அழித்துவிடுவேன்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

சிவஞான போதத்தை அருளியவர்
மெய்கண்டார்

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கிளர்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  கிளர்தல்

பொருள்

  • மேலெழுதல்
  • வளர்தல்
  • மிகுதல்
  • விளங்குதல்
  • சிறத்தல்
  • உள்ளக்கிளர்ச்சிகொள்ளுதல்
  • சினத்தல்
  • இறுமாப்புக்கொள்ளுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உத்தமராய் வாழ்வார் உலந்தக்கால் உற்றார்கள்
செத்த மரமடுக்கித் தீயாமுன் – உத்தமனாய்
நீளாழி நஞ்சுண்ட நெய்யாடி தன்திறமே
கேளாழி நெஞ்சே கிளர்ந்து.

திருமுறை 11 – காரைக்கால் அம்மையார் – திருஇரட்டைமணிமாலை

கருத்து உரை

கல்வி, செல்வம், அதிகாரம் முதலியவற்றில் உயர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் இறந்துவிட்டால் எல்லார் போலவும், காய்ந்த விறகை அடுக்கி, உறவினர்கள் எரித்து விடுவார்கள். இவ்வளவே இவ்வுலக வாழ்வு. ஆகையினால் நீண்ட கடலைக் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தினை உண்டு உலகை காத்தவனாகிய திறத்தினை, புகழை அறிந்தோர் சொல்லக் கேள். கேட்டால், நிலையான வாழ்வைப் பெறுவாய்.

விளக்க உரை

கிளர்ந்து கேள் – `ஊக்கம் கொண்டு கேள்` என உரைத்தனால், `ஊக்கம் இன்றிக் கேட்டல் பயனுடைது ஆகாது`

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கொன்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  கொன்

பொருள்

  • அச்சம்
  • பயமிலி; பயனின்றி
  • காலம்
  • பெருமை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

என்பெற்ற தாயாரும் என்னைப் ‘பிண’ மென்று இகழ்ந்து விட்டார்;
பொன்பெற்ற மாதரும் ‘போ’ மென்று சொல்லிப் புலம்பி விட்டார்
கொன்பெற்ற மைந்தரும் பின்வலம் வந்து குடம் உடைத்தார்;
உன்பற்று ஒழிய ஒருபற்றும் இல்லை உடையவனே!

பட்டினத்தார்

கருத்து உரை

என் அப்பனே! என்னைப் பெற்ற தாயும் உயிரற்று விழுந்த உடலை கண்டு ‘பிணம்’ என்று இகழ்ந்து விட்டார் , பொன் தேடி கொடுத்த போது பெற்றுக் கொண்ட மனைவியும் ‘போய்விட்டார்’ என்று அழுது புலம்பி விட்டார் . பெருமை கொட்டி வளர்த்த மைந்தரும் பின் வலம் வந்து குடம் உடைத்தார் , அனைத்து பந்தங்களும் உதறிவிட்டேன் இனி உன் பற்றை தவிர வேறு ஒரு பற்றும் இல்லை.

விளக்க உரை

ஸ்தூலமாகிய இவ்வுடல் விட்டு உயிர் விலகும் போது தாய், மனைவி, மைந்தர் என முதல் நிலை சொந்தங்கள்   கூட உதவார் எனும் பொருளில்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சீலம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சீலம்

பொருள்

  • அழகு
  • குணம்
  • வரலாறு
  • சீந்தில்
  • சுபாவம்
  • நல்லறிவு
  • அறம்
  • நல்லொழுக்கம்
  • யானையைப் பயிற்றும் நிலை
  • தண்டனை

வாக்கிய பயன்பாடு

சீலம் இல்லாதவன எல்லாம் வச்சி வேல பாத்தா இப்படித்தான் ஆவும்.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கோல மின்றிக் குணமின்றி நின்னருள்
சீல மின்றிச் சிறியன் பிழைப்பனோ
ஆல முண்டும் அமிர்துரு வாய்வந்த
கால மெந்தை கதிநிலை காண்பதே.

தாயுமானவர்

கருத்து உரை

எம் தந்தையே! நீ பெருங்கடலில்  தோன்றிய பெருநஞ்சினை உண்டும், அதனை அமிழ்தாக மாற்றி உலகுகிற்கு உணர்த்திய நின் பெருநிலையினைக் கண்டும், உன்னை அடைதற்குரிய திருவைந்தெழுத்து ஓதுதல், உடலில் திருவெண்ணீறு பூசுதல், சிவமணியை  திருக்கோலமாகக் கொள்ளுதல், சிவவொழுக்கங்கள் மேற்கொள்ளுதல் போன்றவற்றை  செய்யாமல் அடியேன் பிழைத்து உய்வனோ? (உய்யேன் என்றவாறு)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – அவா

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  அவா

பொருள்

  • பேராசை

வாக்கிய பயன்பாடு

என்ன ஓய், எப்படி இருக்கிறீர்?

நன்னா இருக்கேன், நமக்கு என்ன ஓய், படியளக்க கற்பகாம்பா இருக்கா, அவ திருவடிய அடையறது தவிர என்ன பெருசா அவா இருந்துடப் போறது.

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய், மனனே, ஒழிவாய் ஒழிவாய்
மெய் வாய் விழி நாசியொடும் செவி ஆம்
ஐவாய் வழி செல்லும் அவாவினையே.

கந்தர் அநுபூதி (மனதிற்கு உபதேசம்) – அருணகிரிநாதர்

கருத்து உரை

மனமே! உடல், வாய், கண், மூக்கு, காது  ஆகிய ஐம் பொறிகளின் வழியே சென்று வினைகளின் வழி தோன்றும் ஆசைகளை முற்றிலும் ஒழித்து, திருக்கரத்தில் ஒளிவீசும் வேலாயுதத்தை கொண்டு ஞானச் சுடரான வேலை உடைய முருகப் பெருமானின் திருவடிகளை புகலிடமாகப் பெற்று உயர்வு பெற்று வாழ்வாய்.

விளக்க உரை

பஞ்ச இந்திரியங்களின் ஆசைகளை மறுப்பது மட்டும் அல்லாமல் திருவடிகளையும் அடைதல் உயர்வுக்கு வழி எனும் பொருளில்.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சாகாக்கல்வி

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  சாகாக்கல்வி

பொருள்

  • மரணம் அடையாமல் வாழும் வாழ்க்கைப் பற்றி கற்றுக் கொள்ளும் கல்வி
  • உடல், மனம், ஆன்மா இவற்றை சுத்தப்படுத்தி ஒளியாக்கி பேரான்மாவிடம் கலப்பது
  • உள்ளே உத்தமனைக் காணும் வழி

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச்
செல்வமும் அளித்த சிவமே சிவமே
அருள் அமுதம் எனக்கே அளித்து அருள் நெறி வாய்த்
தெருள் உற வளர்க்கும் சிவமே சிவமே !

வள்ளலார்

கருத்து உரை

பிறப்பினை அறுக்கும் வழியை கற்றுத் தரும் கல்வியும், அதன் பயனாகிய மரணத்தை வெல்லும் வழியும், அதனால் பெறப்படும் அழியாத செல்வமும் எனக்கு அளித்த சிவமே, அருளாகிய அமுதத்தை  எனக்கு அளித்து அருள் நெறியை வாய்க்க அருள் செய்யும் சிவமே.

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதால் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஒத்துறு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ஒத்துறு

பொருள்

  • ஒன்றாக தாளம் போடுதல்
  • ஒன்றாக தாள வரையறை செய்தல்
  • ஒத்த வடிவம் எடுத்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

வாக்கிய பயன்பாடு

நீ ஆருடா அம்பி, ஓ! ஒத்து ஊதறவனா, சரி சரி போய் வண்டில உட்கார்.

பாடல்

சத்தியாய் விந்து சத்தி யாய்மனோன் மனிதா னாகி
ஒத்துறு மகேசை யாகி உமைதிரு வாணி யாகி
வைத்துறும் சிவாதிக் கிங்ஙன் வருஞ்சத்தி யொருத்தி யாகும்
எத்திற நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள் .

திருநெறி 2 – சிவஞான சித்தியார்

கருத்து உரை

சிவபேதம் ஏழிற்கு (சிவம் (பரநாதம்),நாதம் (அபர நாதம்),சதாசிவன்,  மகேசன், உருத்திரன்,திருமால்,  அயன்)  உரிய சத்திபேதமும் (சத்தி (பரவிந்து), விந்து (அபர விந்து), மனோன்மணி, மகேசை, உமை, திருமகள்,  கலைமகள்), என  சத்திமுதல் வாணியீறாக ஏழுவகைப்படும். எம்முடைய இறைவனாகிய பரமசிவன் சிவபேதம் ஏழினும் நின்று நடக்கச் செய்கையில், அவனோடு தானும் நிற்கும் பராசத்தியும் அவனுக்குத் துணையாய் நிற்பாள்.

விளக்க உரை

ஈசனின் அனைத்து வடிவங்களிலும்  அவனின் பேதங்களுக்கு ஏற்ப சக்தி தன் வடிவம் எடுத்து சிவ சக்தி சொரூபமாக இருப்பாள் எனும் பொருள்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!