கந்தலாடைக்காரனிடம் கனவுகள்;
கனவான்களிடம் கடன் அட்டைகள்.
வாழ்வு எதைச் சொல்ல முற்படுகிறது?
Photo : Devadhai Thozhan(a) Mahendran Thiru
![]()
உருவேறத் திருவேறும்
நீண்ட நாட்களுக்கான பிறகான
சந்திப்பு உன்னுடன்.
காற்று உன் கூந்தலைத் தழுவிச் செல்கிறது.
‘என்ன வேண்டும்’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
‘வண்ணமும் வாசமும்
சுவையுடன் கூடிய உணவா வேண்டும்’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
நிறைந்த மலர்கள் வேண்டுமா’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
‘சிறந்த உடைகள் வேண்டுமா’ என்கிறேன்.
மௌனத்திருக்கிறாய்.
நாட்களின் நகர்தலை
ஒத்து இருக்கிறது என் கேள்விகள்.
அப்போதும் மௌனத்திருக்கிறாய்.
‘என்னதான் வேண்டும்’ என்கிறேன்.
பெண்களால் மட்டுமே அறியப்படும்
ரகசிய புன்னகையைச் சிந்தி
‘நீ வேண்டும்’ என்று
என் கன்னத்தில் இதழ் பதிக்கிறாய்.
ரகசியமாய் அழும் ஆண்களின்
வரிசையினில் நானும்.
![]()
2038ல் – எரிபொருள்கள்
(இது முழுவதும் கற்பனையே. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் அல்ல.
இவைகள் நடக்கலாம் அல்லது நடக்காமலும் போகலாம்.)
1.
பெட்ரோல் விலை – இன்று காலை 11.00 மணி நிலவரம் – ரூ. 568/லி. அடுத்த விலை அறிவிப்பு 12.00 மணி செய்திகளில்.
2.
என்ன சார் எல்லா பெட்ரோல் பங்க்லேயும் கூட்டம் 2 கி.மிக்கு நிக்குது.
உங்களுக்கு தெரியாதா, பெட்ரோல் விலை அடுத்த அரை அவர்ல 0.13 காசு குறையப் போகுது.
3.
என்ன சார் பேப்பர்ல விசேசம்.
25 லி. பெட்ரோல் போட்டா 0.100கி வெங்காயம் இலவசமாம்.
4.
பேங்க் வாசலில்
பெட்ரோல் அடகு வைக்க எங்கள் கிளைகளை அணுகவும். 1லி. 511/- ரூ.
5.
அரசியல்வாதிகள் – மற்றவர்கள் கூறுவது போல் எங்களிடம் நேற்று ஒரு பேச்சும் இன்று ஒரு பேச்சும் இல்லை. பெட்ரோலிய நிறுவனங்களின் நஷ்டத்தைப் போக்க இன்று முதல் எரிபொருள் விலை ரூ.25 ஏறுகிறது.
![]()
(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).
எனது நண்பர் ஒரு படத் தயாரிப்பாளர்.
ஒரு முறை எனது நண்பர் ரிக்கார்டிங் தியேட்டருக்கு சென்றிருக்கிறார். அங்கிருந்த ஒலி எஞ்ஜினியர் இளைய ராஜா ஒரு பாடலை முடித்து விட்டு மிகவும் சந்தோஷமாக சென்றதாக கூறியிருக்கிறார்.
எனது நண்பர் அப்பாடலை ஒலிக்கச் சொல்லி இருக்கிறார். கேட்டவுடன் எனது நண்பரும் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.
அப்பாடல் – என்னைத் தாலாட்ட வருவாளா…
![]()
ஆகாய கங்கை – இந்த பாடலை எத்தனை முறை கேட்டிருப்பேன் என்று தெரியவில்லை. ஆனாலும் அதன் தாக்கம் இன்று வரை தீர வில்லை.
படம் : தர்ம யுத்தம்(தலைவர் படம்).இசை: இசை ஞானி. எனக்கு மிகவும் விருப்பமான மலேஷியா வாசுதேவன்.(கணவனை மிகவும் விரும்பும் மனைவியின் ஆரத்தழுவுதல் -அந்த குரலுக்கு இன்னும் உருவகம் தேடிக் கொண்டிருக்கிறேன்).
மெல்லியதாய் ஆரம்பிக்கிறது பாடல்.
ஆண் : துணையை விரும்புவதாக சொல்கிறான்.
பெண் : தேடிய ராமனை கண்டதாக உரைக்கிறாள்.
ஆண் : ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி பொன்மான் விழி தேடி
மேடை கட்டி மேளம் தட்டி பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்
பெண் : குங்குமத் தேரில் நான் தேடிய தேவன் சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்
நான் என்றும் தனித்து இல்லை. என் வாழ்வு உன் துணையோடுதான் என்கிறாள் துணை.
மிக அழகாக தன் காதலைச் சொல்கிறாள்.
பெண் :
தேவை யாவும் ஹே ஹே ஹே
தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
பூவை நெஞ்சில் நாணம் போராடும்
ஆண் நாசுக்காக மறுத்து பதில் சொல்கிறான்.
ஊர்கூடியே உறவானதும்
தருவேன் பலநூறு
பல பாடல்கள் நினைவில் நீங்காமல் இருந்தாலும், இது முக்கிய இடத்தில்.
காலம் கடந்து இருப்பவை பொருள்கள் மட்டும் அல்ல. பாடல்களும் அதன் தாக்கங்களும்.
![]()
காற்றினில், கருமை இருளில்
கரைந்திருந்தன உன் கண்கள்
தங்கக் கூந்தலாய் உன் கேசம்.
அனைத்தும் அளிக்கும் உள்ளத்தோடு நீ.
கலங்கிய மனதுடம் நான்,
வினாக்களோடு விடிகின்றன
விடியல்கள் என்று
எனக்கான வினாக்களை அடுக்குகிறேன்.
விழி அசைத்து அனைத்துக்கும்
விடைஅளிக்கிறாய்.
உறு பொருள் உரைக்குமாறு கேட்கிறேன்.
காற்றில் ஆடுகின்றன வார்த்தைகள்
‘வட்டி காசுக் கட்டச் சொல்லி
வக்கில் நோட்டீஸ் வந்திருக்குன்னு
உங்கப்பனான்ட சொல்லு.
![]()
(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).
ஒரு முறை இசைஞானி ஜப்பான் சென்றிருந்தார். அப்போது ஒரு இசையை கேட்க நேர்ந்தது. அந்த வாத்தியத்தை பற்றியும், அதை வாசிக்கும் கலைஞரைப் பற்றியும் கேட்டறிந்தார். அவரை சந்தித்து சென்னை வரும் போது தன்னை சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
அந்த கலைஞர் சென்னை வந்த போது 5 நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து, அந்த கருவியை 15 நாட்களில் வாசிக்கும் திறமையை பெற்றார்.
அந்த கருவியை வாசிக்க முழுமையாக 2 ஆண்டுகள் ஆகும்.
![]()
வினாயகர் சிலையை கரைப்பு ஏன்?
ஆன்மீகம் – முன்பெல்லாம் பெரும்பாலான சிலைகள் குளம் சார்ந்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்டு களிமண்ணால் செய்யப்பட்டன. வேதிப் பொருள்களால் செய்யப்பட்டவை அல்ல. ப்ரம்மத்திலிந்து தோன்றியவை மீண்டும் ப்ரம்மத்தில் என்பதே அடிப்படை.
அறிவியல் :
1. வினாயகர் சிலையுடன் சேர்த்து பூக்கள் மற்ற பொருள்களையும் குளத்தில் இடுவார்கள். அவைகள் மீன்களுக்கு உணவாகும். மீன்கள் இனப் பெருக்க காலம் மற்றும் வளர்ச்சி அடையும் காலம் இம் மாதம். எனவே பொருள்கள் குளத்தில் இடப்படும்.
2. மீண்டும் குளத்தில் அவை சேர்க்கப்படுவதால் மண் அரிப்பு தடுக்கப்படும்.
மற்றவை :
1. அந்த அந்த பகுதி மக்கள் சிறு வியாபாரம் செய்து பலன் அடைவார்கள்.
2. பால கங்காதர திலகர் சுதந்திர போராட்டத்தில் மக்களை ஒன்று சேர்ப்பதற்காக இவ் விழாவினை சிறப்பாக கொண்டாடத் துவங்கினார்.
![]()
ஆதியில் மரங்களும் மனிதர்களும்
நேசம் கொண்டவர்களாக இருந்தனர்.
ஒருமித்த மொழியில்
பகிர்ந்து கொண்டனர் தங்கள் உணர்வுகளை.
தன்னை கொடுக்க தயங்கவில்லை மரங்கள்
அதனை விலக்க தயங்கவில்லை மனிதர்கள்.
நாளின் ஒரு பொழுதுகளில்
மனக்கசப்புகள்.
பெருங் காற்றின் வழி இலைகளை உதிர்ப்பதாக
மனிதனின் குரல்கள்.
நித்தமுமான கவனிப்புகள்
அநித்தியமானது என்று மரங்களின் குரல்கள்.
பிறிதொரு சந்ததியில்
மனிதனில் மொழியறிவு குறைந்து, குலைந்து
தான் மட்டும் அனைத்தும் அறிந்தவனாக
கர்வம் கொண்டிருந்தான்.
உலகில் அனைத்து மரங்களையும் அழித்து
கடைசி மரம் அழித்தலில் மரம் சொன்னது;
‘என்னை அழித்தால், நீயும் அழிவாய்’ என்று.
கோடாலியின் கடைசி வெட்டிதலில்
உலகம் தனித்திருந்தது.
![]()
நான்மணிக்கடிகை – நான்கு விஷயங்களை சொல்லும். அவை அனைத்தும் ஒன்று சேர்ந்து மிக நுட்பமானப் பொருளைத் தரும். நான்கு வித மலர்கள் ஒரு மாலை போல்.
கள்ளி வயிற்று இன் அகில் பிறக்கும்; மான் வயிற்று ஒள் அரிதாரம் பிறக்கும்; பெருங் கடலுள் பல் விலைய முத்தும் பிறக்கும்;
அறிவார் யார், நல் ஆள் பிறக்கும் குடி?
பொருள் அனைவரும் அறிந்ததே.
கள்ளி போனற செடியில் வாசனை மிகுந்த அகில் பிறக்கும். வாசனை திரவியங்கள் மானின் வயிற்றில் இருந்து பிறக்கும். விலை உயர்ந்த முத்துக்கள் கடலில் இருந்து கிடைக்கும்.நல்ல மனிதர்களின் குடிப் பிறப்பினை எவர் அறியக் கூடும்.
எனவே மனித வாழ்வே மகத்துவம், குடிப் பிறப்பு அன்று.
![]()
சொற்களின் வேர் தேடி புறப்பட்டன
சிந்தனைகள்.
உன்னிடம் இருந்தா பிறக்கிறது என்று
ஆகாயத்திடம் வினவினேன்.
காற்று என்னுள் இருப்பதால் காற்றினை
கேட்கச் சொன்னது.
பற்றி எரிவதாலும், படர்ந்து எரிவதாகும்
நெருப்பு பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது காற்று.
கடந்து செல்ல துணைசெய்வது நீராவதால்
நீர் பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது நெருப்பு.
இயக்கம் அனைத்தும் பூமியில் என்பதால்
நிலம் பெரியது என்றும் அதனிடம்
கேட்கச் சொன்னது நீர்.
பிரபஞ்சங்களின் சேர்க்கையால் ஆனது
மனிதக் கூடு என்பதால்
மனிதனிடம் கேட்கச்சொன்னது நிலம்.
நாபிச் சுழியில் இருந்து சூல் கொள் வார்தைகள்
தொண்டைதாண்டி,
வாயினின் வழி வரத்துவங்குகையில்
சொற்களின் முடிவுகள் பூரணத்துவத்துடன்.
![]()
![]()