தானே அமைந்தஅம் முப்புரந் தன்னிடைத் தானான மூவுரு ஓருருத் தன்மையள் தானான பொன்செம்மை வெண்ணிறத் தாள் கல்வி தானான போகமும் முத்தியும் நல்குமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
சத்தியானவள், எங்கும் நிறைந்தவளாகவும், உருத்திர லோகம், விஷ்ணுலோகம், ப்ரம்மலோகம் ஆகியவற்றிற்கு தலைமையாக இருக்கும் இருக்கும் உருத்திரன், விஷ்ணு, பிரமன் ஆகியவர்களை தோற்றம் ஒடுக்கம் செய்பவர்களாக இருந்து அது தாண்டியதான நான்காவது வடிவமாக நிற்பாள்; அவள் ஓருத்தியே பொன்னிறம் கொண்ட சத்தியாக நின்று முத்தியையும், செந்நிறம் கொண்ட திருமகளாய் நின்று செல்வத்தையும், வெண்ணிறம் கொண்ட கலைமகளாய் நின்று கல்வியையும் தருவாள்.
விளக்கஉரை
மூவுரு ஓர் உரு – மூவுன்று உருவத்தையும் அடக்கி உள்ள ஓர் உரு.
இதனால், ஒருத்தியே மூவராய் நின்று முத்தொழில் செய்பவளாகவும், ஐவராய் இருந்து ஐந்தொழில் இயற்றி அதன்படி நின்றொழுகும் முதன்மையானவர்கள் அனைவர்க்கும் தலைவியாய் உயிர்கட்குப் போக மோட்சங்களைத் தந்து நிற்கும் திறன் பெறப்படும்.
தேவி இலட்சுமியால் வரமாக அருளப்பட்டதும், தேவலோகத்தில் இந்திரனுக்கு கிடைக்கப்பெற்றதும், நவநிதிகளில் இருப்பதும், சக்தியை குறிப்பதும் அதன் மூலம் ஞானத்தினை பெற்று நவநிதிகளில் இருப்பதும், சக்தியை குறிப்பதும் அதன் மூலம் ஞானத்தினை பெற்று தரவல்லதும், தோல்வியை என்றும் தராததும் ஆன சங்க நிதியினையும், தரித்துக் கொண்ட ஒரு வீரனை எவர் ஒருவராலும் தோற்கடிக்க முடியாத பதும நிதியினையும் தந்து, ஆட்சி செய்யப் பூமியையும், மற்றும் வானுலகையும் தருபவராக இருப்பினும் தேவர்களுக்கு தலைவனாகிய சிவபெருமானிடத்தில் அன்பில்லாதவர்களாய் நிலையில்லாமல் அழிபவர்களாகிய அவர்களது செல்வத்தை யாம் ஒருபொருளாக மதிக்க மாட்டோம். உறுப்புக்கள் எல்லாம் அழுகிக் குறைந்து அழுகும் தொழுநோய் உடையவர்களாகவும், பசுவை உரித்துத் தின்று அதன் காரணம் பற்ரிய வினை கொண்டு திரியும் புலையர்கள் ஆயினும் கங்கையை நீண்ட சடையில் கொண்ட சிவபெருமானுக்கு அன்பராக இருப்பவர்கள் எவரோ அவரே நாம் வணங்கும் கடவுள் ஆவார்.
விளக்கஉரை
இத் திருத்தாண்டகம், உலகியல் பொருள்களைப் பற்றாது, மெய் நெறியையே பற்றி நிற்கும் தமது நிலையை அருளிச்செய்தது.
புலையர் – கீழ் செயல்கள் உடையோர். (வடமொழி -‘சண்டாளர்’)
தங்கும் அடியார் இதயமதில் தழைத்த மணியே தவமணியே தரணிக் கொளியாய் இரவுபகல் தானே வளர்ந்த தளிர்மணியே
மங்குங் கருத்தை நிலைநிறுத்தி வதன வெளியில் படர்மணியே மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே
அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்
பதவுரை
பிரபஞ்சம் எங்கும் நிறைந்து அருளைப் பொழியும் அருள் மணியாகவும், உருத்திராக்கம் என்றும் கண்டமணி என்றும் பொருளாகி கழுத்தில் கட்டி இருக்கும் ஏகமணியாக இருப்பவளும் (நீலகண்ட வடிவம்) ஆக்கினை அடிப்படையாகக் கொண்டு ஒளிரும் மணியாகவும், இறைவனிடத்தில் நடனமிடும் இமைய மணியாகவும், சைலபுத்ரீ, பிரம்மசாரிணி, சந்திரகண்டா, கூஷ்மாந்தா, ஸ்கந்தமாதா, காத்யாயினி, காலராத்ரி, மகா கவுரி, சித்திதாத்ரீஎன்ற அம்பாளின் பல்வேறு வடிவங்களாக இருப்பவளாகவும், இரவு, பகல் ஆகி ஆகாச வெளியில் பிரபஞ்ச சக்தியான 32 கலையில், உடல் கலை 28 போக மீதமிருக்கும் பயன்பாடு இல்லாத கலையாகிய நான்கு கலையையும் சேர்த்துக் கொண்டு பிறவா நிலை அருளும் திருமணியாகவும், காட்சியினை அருளும் கண்ணின் மணியாகவும், பொன்னால் ஆன அணிகலன் கொண்டவளாகவும், தாமரை மலரில் வீற்றிருந்து சூரியனின் ஒளிக்கிரணங்களைக் கொண்டவளாகவும், உன்னை மனதில் கொண்ட அடியார்களது இதயத்தில் உயர்ந்த பொன்னால் திறம்பட அமைத்துக் கட்டப்பட்ட மணி போன்றவளாகவும், இரவு பகல் என்று இல்லாமல் தானே வளரும் சுய ஒளி விளக்காகி என்றும் இளமையாகிய மணியாகவும், மாயைக்கு உட்பட்டு மனம் அதன் வழியில் செல்லாமல் அதை நிலை நிறுத்தி முக்கோணத்தின் மேற்கோண்ட வெளியில் படரும் மணியாகவும், மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் விளங்குகிறாள்.
விளக்கஉரை
1ஆக்கினை
2சிவசக்தி நடன சொரூபக் காட்சி
3கோமேதகம், நீலம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து,புட்பராகம், வைடூரியம், வைரம் ஆகிய ஒன்பது வகை மணிகள் என்று பொருந்தாமையால் இவ்விளக்கம் விலக்கப்படுகிறது.
4விளக்கு சுடர்விட்டப் பிறகு சுடர் குறையும்; அது குறையாமல் இருப்பவள் என்பதால் தளிர்மணி என்ற சொற்சொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சடையின்மேல் பிறை ஆகிய சந்திரனையும், சிவந்த கண்களை உடைய பாம்பையும் உடையவனாகவும், உடைந்த தலை ஓடு ஆகிய மண்டையோட்டில் உணவு ஏற்று, ஊர்ந்து செல்லும் விடைமீது ஏறி வருபவனாகவும், தேவர்களால் வணங்கப்படும் திருவெண்ணி என்னும் தலத்தைத் தனக்கு ஊராக உடையவனாகவும் இருக்கும் அவனையன்றிப் பிறரை நினைக்காது எனது உள்ளம்.
நான்எனவும் நீஎனவும் இரு தன்மை
நாடாமல், நடுவே சும்மா
தான் அமரும் நிலை இதுவே சத்தியம் சத்-
தியம் என, நீ தமியனேற்கு
மோனகுரு ஆகியும், கை கட்டினையே,
திரும்பவும் நான் முளைத்துத் தோன்றி,
மானத மார்க்கம் புரிந்து இங்கு அலைந்தேனே,
பரந்தேனே, வஞ்சனேனே.
தாயுமானவர்
பதவுரை
நான் என்னும் நிலையும், நீ என்னும் நிலையும் கொண்டு அதை நான் நாடாமல், மௌனத்தில் அந்த இருநிலைகளுக்கும் இல்லாமல் நடுநிலை கொண்டு ஏகத்துவம் ஆகியதும், இறை கூட்டுவிக்க தானே அமரும் நிலையானதும் ஆன இந்த நிலையே உண்மை இது சத்தியம், சத்தியம் என்று எனக்கு மௌன குருவாகி என்னை கட்டினாய்; ஆனால் நான் திரும்பவும் இங்கு பிறப்பு கொண்டு குற்றம் புரிவதானதும், மனம் போன மார்க்கமாகமான மானக்கேடாகவும் உள்ள மார்கமாக வஞ்சகம் உடையவனாகி, அலைந்து இங்கு வந்து பரந்து விரிகின்றேன்.
விளக்கஉரை
சத்தியம் உரைக்கும் கால் அதுவே இறுதி என்பதை உரைக்க இருமுறை உரைத்தல் மரபு
ஆதிக்கண் நான்முகத்தி லொன்று சென்று அல்லாத சொல்லுரைக்கத் தன்கை வாளால் சேதித்த திருவடியைச் செல்ல நல்ல சிவலோக நெறிவகுத்துக் காட்டு வானை மாதிமைய மாதொருகூ றாயி னானை மாமலர்மே லயனோடு மாலுங் காணா நாதியை நம்பியை நள்ளாற் றானை நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே
தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்
பதவுரை
ஆதி காலத்தினை உடைய அந்தணன் எனப்படும் பிரம தேவனுடைய முகங்களில் ஒன்று உண்மை அல்லாத சொல்லினைக் கூற, அந்த முகத்தைத் தன் கையில் இருக்கும் வாளைக் கொண்டு அந்தத் தலையை போக்கிய வயிரவனாய் உள்ளவனும், அடியார்கள் அடைவதற்கு மேம்பட்டதாகிய சிவலோகம் அடையும் வழியைக் காட்டுபவனாய் உள்ளவனும், பெருமையுடைய பார்வதி பாகனாய் உள்ளவனும், தாமரை மலர் மேல் உள்ள பிரமனும், திருமாலும் காண முடியாத தலைவனாக உள்ளவனும், குண பூரணனாக திருநள்ளாற்றில் உகந்து எழுந்து அருளியிருக்கும் பெருமானை அடியேனாகிய நான் நினைந்து துன்பங்களிலிருந்து நீங்கப் பெற்றேன்.
விளக்கஉரை
‘சிவலோக நெறி’ – தானே முதல்வன் என உணர்த்தியும், அவ்வாறு உணரும் நெறி தானே சிவபிரானை அடையும் நெறி என்பதும் குறித்தது
மாதிமைய – பெருமையுடைய
பிரமன் ஐந்துதலை உடையனாய் இருந்தபொழுது,’ தானே முதல்வன்’ எனச் செருக்குக் கொண்டு திருமாலுடன் கலகம் விளைத்தார். சிவபிரான் வயிரவரை அனுப்பிய போது அவரைக்கண்டு , ‘வா, என் மகனே’ எனப் பிரமன் அகங்காரத்துடன் அழைத்த போது வயிரவர் அவனது தலையைக் கிள்ளினார்; பின்பு பிரமனது செருக்கு நீங்கியபொழுது , சிவபெருமான் அவனுக்கு நல்வரம் அருளினார். (திருநாவுக்கரசர் காலத்தின் படி இப்பொருள் உரைக்கப்பட்டது)
‘பிரம னார்சிரம் உகிரினிற் பேதுறக் கொய்தாய்’ – பிரமன் வருந்த அவனது சிரத்தை நகத்தினால் கொய்தவன் என்பது காஞ்சிப் புராணம் வயிரவேசப்படலம் காட்டும் வரலாறு.
நாறுமீனைப் பலதரம் நல்ல தண்ணீரால் நாளும் கழுவினும் அதன் நாற்றம் போமோ கூறும் உடல் பல நதியாடிக் கொண்டதால் கொண்ட மலம் நீங்காதென்று ஆடுபாம்பே
பாம்பாட்டி சித்தர்
பதவுரை
நாற்றம் உடைய மீனைப் பல தரம் நல்ல தண்ணீர் கொண்டுக் கழுவினாலும் அதனது இயல்பான நாற்றம் போகாது; அது போல அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோமய கோசம், விஞ்ஞானமய கோசம், ஆனந்தமய கோசம் ஆகிய பல கூறுகளை கொண்டு உடலால் ஆக்கப்பட்ட மனிதர்கள் என்னதான் தான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடினாலும் அதன் குற்றம் நீங்காது என்று ஆடு பாம்பே.
விளக்கஉரை
எத்தனை புனித நீராடினாலும் செய்த பாவங்கள் தண்டனைக்குரியவை என்றும், அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு என்று கூறும் பாடல்
தங்கம், வெள்ளி, இரும்பு ஆகியவற்றினால் ஆன கோட்டைகளை அமைத்துக் கொண்டு கொடுமை செய்த அரக்கர்களான வித்துன்மாலி, தாரகாட்சன், கமலாட்சன் ஆகியவர்களின் முப்புரத்தினையும் புன்னகை செய்து தீயினால் வெந்து அழியுமாறு செய்த வில்லை உடையவனும் எமது தந்தையும் ஆகிய திருப்பெருந்துறை முதல்வன், தாம் இட்ட பணியைச் செய்யும் தேவர்களது முன்னிலையில், கடிக்கின்ற நாய்கள் சூழ்ந்து வர, தான் வேடுவனாகிச் சென்ற காட்டிலே, அம்பு தைக்கப்பட்டு இறந்த தாய்ப் பன்றிக்குத் திருவுளம் இரங்கி அக்காலத்தில் அற்ப செயலாகிய தாய்ப்பன்றியாகி அதன் குட்டிகளுக்குப் பால்கொடுத்த திருஉளப் பாங்கை அறிய வல்லவர்கள் எமக்குத் தலைவர் ஆவார்கள்.
விளக்கஉரை
‘வேவ’ முதல், “இயங்கு காட்டில்“ என்றது வரை, சிவபெருமான் அர்ச்சுனன் பொருட்டுப் பன்றியின் பின் வேடனாய்ச் சென்ற வரலாற்றைக் குறிப்பது.(பாசுபதாஸ்திரம் வழங்கிய காதை). அக்காலத்தில் தேவர்கள் ஏவல் செய்யும் வேடுவராய் வந்தனர் என்பதும் வரலாறு.
கேழல் – பன்றி
இறைவன் பன்றிக் குட்டிகளுக்குப் பால் கொடுத்த திருவிளையாடல்
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச் சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும் சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப் பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும்.
விநாயகர் அஷ்டகம் – கச்சியப்பர்
பதவுரை
மேலே கூறப்பட்ட விநாயகர் அஷ்டகம் எனும் தோத்திரப் பாடல்களை தொடர்ந்து மூன்று தினங்கள் காலையும் மாலையும் சந்திக்கும் நேரமான சந்தியா நேரத்தில் யார் பாராயணம் செய்கின்றார்களோ, அவர்கள் செய்யும் காரியங்களில் வெற்றிபெறுவார்கள்; தொடர்ந்து எட்டு தினங்கள் படித்தால் மனம் மகிழும் படியான நலம் பெறுவார்கள்; சதுர்த்தியன்று நல்ல சிந்தையுடன் எட்டுத் தடவவைகள் பாராயணம் செய்தால் அணிமா, கரிமா, இலஹிமா, பிராப்தி, பிராகாமியம், ஈசிதை, வசீதை எனும் எட்டு வகையான அட்டமாசித்திகளையும் பெறுவார்கள்.
விளக்கஉரை
சந்தியாக்காலம் என்பது திரேதா யுகத்திற்கும் துவாபர யுகத்திற்கும் இடையிலான பயங்கரமான பஞ்சக்காலம் என்பதும் அக்காலகட்டத்தில் அரசமுனியான விஷ்வாமித்திரர் நாயிறைச்சி உண்டு வாழ்ந்தார் என்ற குறிப்புகளும் சில இடங்களில் காணப்படுகின்றன. இப்பாடல்கள் வறுமையை விலக்கி பஞ்சத்தினை போக்குபவைகள் என்றும் கொள்ளலாம்.
வினா : சில நாமாவளிகள் கணபதிக்கும், பைரவருக்கும் பொதுவாக இருக்கின்றன.
உ.ம் ஓம் நாக யக்ஞோபவீதவதே நமஹ
இது போன்றவைகளை முன்வைத்து கணபதியை உக்ர வழிபாட்டு தெய்வமாக (தாந்திரிக் வழிபாடு) எண்ணலாமா?
அறிதலின் பொருட்டே இக்கேள்வி.
திரு. ஸ்ரீனிவாசன் : Even Bhairavar is not ugra devata in all the forms.
அடியேன்: யோக, போக மற்றும் வேக வடிவங்களில் பைரவர் வேக வடிவமாக தான் குறிப்பிடப்படுகின்றது.
மதனா அண்ணா : மிக மிக சுருக்கமாக கூற வேண்டுமென்றால் கணபதி ஆதி பைரவர் அந்தம். இந்த இரு தெய்வ வடிவங்களுமே வாசியுயர்த்தும் முயற்சிகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. நாகம் என்பது மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியைக் குறிக்கும். இதை வாசியோகத்தால் உயரெழுப்பி சகஸ்ராரமாகிய அந்தத்தை அடையச் செய்வதே யோகத்தில் தலையுயர்ந்த யோகமாக குறிக்கப்படுகிறது. காணாபத்யம் மற்றும் வைரவ வழிபாடுகளின் குறிக்கோள் இதுவே ஆகும். பாதை மாறினும் பயணக் குறி ஒன்றே.
ஐசுவரியம் உயைவன் எனவும் உயிர்களாகிய அறிவுடைப் பொருள்களை அடிமைகளாகவும், ஏனை அறிவிலாப் பொருள்களை உடைமைகளாகவும் உடையவனும், முழு முதல் தலைவனும் ஆன ஈசன் அல்லாது பிற தெய்வம் இல்லை எனத் துணிந்து, தம்மையும் தான் அல்லாத ஏனையோரையும் முதன்மையானவர்களாக எண்ணிக் கொள்வதற்கு வெட்கப்பட்டு, அவனையே மனத்தில் வைத்திருந்து, மறவாமல் அவன் புகழ் பேசுபவர்களை, ஒருபோதும் பிறவித் தளையில் சிக்கவிடாமல் காப்பவர் நம் இறைவன்.
விளக்கஉரை
சிவனை நினைந்து, அவனை மறவாது நினைவாரை அவன் பிறவி வராமல் காப்பான்` என்பதை விளக்கும் பாடல்.
அருள் திரண்டு, செம்பொன் போன்ற நிறமுடைய ஒளியை கொண்ட சிற்றம்பலத்தில் ஆனந்தக் கூத்தாடும் நீலகண்டனாகிய எம்பெருமானுடைய அடியவர்கள் மீது அன்பு செலுத்தாமல் துடுக்கு உடையவர்களையும், துடுக்கான வார்த்தைகளைப் பேசும் குற்றம் உடையவர்களையும், கழுகுகள் போன்று பிறர் பொருளை நயவஞ்சமாகப் பறித்து உண்ணும் நெறி தவறியவர்களையும் என் கண்கள் காணது; என் வாய் அப்பேய்களோடு உரையாடாது.
விளக்கஉரை
`அருளினது திரளாகிய அம்பலம்` எனவும், `இருளினது திரளாகிய கண்டம்` எனவும் மாற்றி உரைக்க.
காண்டல் வாயில் மனம்தன்வே தனையோ(டு) யோகக் காட்சியென ஈண்டு நான்காம் அனுமானம் தனக்கும் பிறர்க்கு மென்றிரண்டாம் மாண்ட உரைதந்த் ரமந்த்தரத்தோ டுபதே சச்சொல் லெனமூன்றாம் பூண்ட அளவைக் கெதிர்புலன்தன் னியல்பு பொதுவென் றிரண்டாமே
திருநெறி 2 – சிவஞானசித்தியார்
பதவுரை
பொருளை அறிவதற்குக் கண்ணால் காணுகின்ற நிலையைக் கருவியாக்கிப் பொருளை அறிவதை குறிப்பிடும் பிரத்தியட்ச பிரமாணம் என்றும் காண்டல் அளவை என்றும் குறிக்கப் பெறும் காட்சியளவை வாயிற்காட்சி, மானதக்காட்சி, தன்வேதனைக்காட்சி, யோகக்காட்சி என நான்கு வகைப்படும்; கருதலளவை தன்பொருட்டு எனவும், பிறர் பொருட்டெனவும் இருவகைப்படும்; உரையளவை தந்திரகலை, மந்திரக்கலை, உபதேசக்கலை என மூன்று வகைப்படும்; இதுவே பிரமாணங்கள் என்று அறியப்படும். பிரமேயங்கள் சிறப்பியல்பு, பொதுவியல்பு என இருவகைப்படும்.
விளக்கஉரை
காட்சி அளவை, கருதல் அளவை மற்றும் உரையளவை ஆகியவற்றின் பாகுபாடுகள் பற்றி கூறப்பட்டது
சஞ்சலமும், சலனமும், குழப்பமும் பின்னிப் பிணைந்து இருக்கும் மனித வாழ்க்கையை புறந்தள்ளி வெற்றி அடையச் செய்பவளாகவும், வளர்பிறை ஏகாதசி திதிக்கும் தேய்பிறை பஞ்சமி திதிக்கும் அதிதேவதை ஆகியவளும் ஐந்து திருமுகம் கொண்டவளும் ஆன ஸ்ரீ நீலபதாகா நித்யா எனும் தேவி ஆனவளும், ஒன்பது எனும் எண்ணிக்கையை குறிக்கும் நவ வகையான சக்தியாக ஆகி பூரணமாக இருப்பவளும், தவ வாழ்வினை நிறைவு செய்யும் பாதத் தாமரைகளை உடையவளும், உலக உயிர்களை காப்பதற்காக காவல் மேடையில் வீற்றிருப்பவளும், பரமேஸ்வரின் வாம பாகமாக இருக்கும் பரமேஸ்வரியாக இருப்பவளும், ஈஸ்வரனின் அங்கமாக இருக்கும் ஈஸ்வரியாக இருப்பவளும், பஞ்சாட்சரமாக இருப்பவளும், தாமரையில் வீற்றிருப்பவளும், எண்சாண் உடம்பில் இருக்கும் தொண்ணூற்று ஆறு தத்துவங்களும் ஒன்றாக இணைந்து புலப்படுத்தும் ஏக தத்துவ முகம் உடையவளாகவும், இறைவன் இடத்தில் நடனம் இடும் இமைக்காதவர்கள் எனும் பெயர் பெற்ற தேவர்களுக்கு தலைவியாகவும் இருப்பவளேஅண்ட வெளி ஆகிய ஆகாயத்தில் கைத்தாளம் இட்டு நிலையாக இருப்பவளும், அருள், கருணை ஆகியவற்றை எப்பொழுதும் கொண்டு அதில் உறைபவளும், கரும்பு வில்லையும், மன்மதனுக்குரிய ஐந்து அம்புகளாகிய தாமரை மலர், அசோக மலர், குவளை மலர், மாம்பூ, முல்லை மலர் ஆகியவற்றை கொண்டவளும், அன்னமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம், மனோமயகோசம், ஆனந்தமய கோசம் என்பதை நீங்கிய அடியார்கள் மனதில் உறையும் அருள் கடவுளாகவும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் விளங்குகிறாள்.
விளக்கஉரை
அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’ என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
1ஐந்து முகங்களுக்கும் ஐந்து ஆபரணங்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
2நவ சக்தி பீடங்களில் வசிப்பவள் என்றும் பொருள் கொள்ளலாம்.
3தாமரை போன்ற ஆயுதம் கொண்டவள் என்றும் கூறலாம்.
4கஞ்சம் என்பது கைத்தாளம் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
அம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.
குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குரு அருள்.
திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவனாவன், உயிரோடு உடல் இயைந்து நின்றவனாகவும், எல்லா உறவுகளுமாக ஆனவனாகவும், ஒருவரிடத்தும் தனக்குப் பின் உரிமையாக இல்லாத வகையில் எவ்விடத்தும் நிறைந்து நின்றவனாகவும், அழிவில்லாதவனாகவும், புற்றில் வாழும் பாம்பை ஆடை மேல் கட்டப்படும் கச்சாகவும் ஆபரணமாகவும் கொண்டவனாகவும், சுடுகாட்டில் எரியேந்தி ஆடுதலைச் செய்தவனாகவும், நல்ல தவ வேடங்கொண்டவனாகவும், சரணடைந்த மார்கண்டேயனுக்காக பெருங்கூற்றுவனைச் சேவடியால் உதைத்து அழித்தவனும் ஆனவனாகவும் ஆகி கைலாச மலையில் வீற்றிருப்பவனாகவும் இருந்து என் சிந்தைக்கு உரியவன் ஆவான்.
எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும் கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே
தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்
பதவுரை
கயிலைமலையை பெயர்த்து எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவரும், தவறு உணர்ந்து பின் அவன் புகழ்ந்து போற்ற அவனுக்கு விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் அருளியவரும், விலகாத செல்வத்தோடு கூடியவரும், பிறப்பு இறப்பும் அறியாதவரும், சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவரும், வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக கொண்டவரும், உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னுடைய அருள்பெருமையும், வாழ்வும் கொடுத்தவரும் ஆன பெரும்புகழையுடைய சிவபெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்து அருளுகின்றார்.
காலத்தால் முற்பட்டு வரையறை செய்ய இயலாதவனாகவும், படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழில்களை உடைய மூவருக்கு முதலாவதாக ஆனவனாகவும், கொத்து கொத்தாக பூக்கும் சோலைகளை உடைய கூகம் என்ற ஊரில் உறைபவனாகவும், அந்தி வானத்தில் தோன்றும் பிறை சந்திரனை தன் தலையில் சூடியவனாகவும் அடியவர்களுடைய வினைகளை முழுவதுமாக நீக்குபவனாகவும் ஆன இறைவன் உறையும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
சுருண்ட, சிவந்த சடையை கொண்டு திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள ஆதி ஆகிய எங்கள் முதற்கடவுளே, தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று, தனது வாயினின்று உண்டாகும் நூலால் உறுதியான அழகிய பந்தல் ஆக்க முற்பட்ட அச் சிலந்தியை, சோழனாய்ப் பிறக்கச் செய்த திருவருளை அறிந்து, அடியேன் பழவினையாகிய சஞ்சிதம் தொலையப் பெற்றாரையும் வந்து பற்றும் வன்மையுடைய ஆகிய ஆகாமியம் எனவும் எதிர்வினை எனவும் ஆகிய இனிச் செய்யப்படும் வினை குறித்து அஞ்சி, உனது அழகிய மலர்போன்ற திருவடியில் விழுந்து புரண்டு, `போற்றி! போற்றி!` என்று துதித்து, உன்னை வந்து அடைந்தேன்! என்னை ஏற்று கொண்டு அருள்.
விளக்கஉரை
சிலந்திக்குச் செய்த திருவருளை எடுத்து இயம்பும் பாடல்.
சிலந்தி, கோச்செங்கட் சோழ நாயனார் ஆக பிறந்து வந்த வரலாற்றை பெரிய புராணத்துள் கண்டு உணர்க.
பிற உயிர்கள் போல் படைக்கப்படாதவனை, அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்க வேட வடிவம் கொண்டவனை, மன்மதனை நெற்றிக் கண்ணால் நோக்கி அவனை சாம்பலாகுமாறு அவனை செய்தவனை, விதி வழி வரும் பாவங்கள் அடையாமல் காப்பவனை, அடியவர்களுக்கு அருமருந்தாகி அவர்களின் துன்பம் விலகுமாறு அருள் செய்பவனாய், தனது திருமுடிகளில் சந்திரனை தரித்தவனை, சங்கின் நிறம் ஒத்து முத்தினை கொண்டு இருப்பது போன்ற தனித்துவமான வெள்ளை நிற காளையின் நடை உடையவனை, பூரணம் நிறைந்த இறைவனை, திருநள்ளாறு எனும் திருத்தலத்தில் இருப்பவனை அடியேன் நினைந்து உய்ந்தேன்.
விளக்கஉரை
அனங்கன் – மன்மதன்.
‘ஆவா’ – இரக்கக் குறிப்பிடைச் சொல்.
படையானை – பலபடைக்கலங்களை உடையவனாய் என்று சில விளக்கங்களில் கூறப்பட்டு இருந்தாலும், ‘உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ..இங்கு என்னை இனிப் படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே’ எனும் அபிராமி அந்தாதி வரிகள் பற்றியும் படைக்கப்படாதவன் எனும் பொருளில் இங்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
பாசுபத வேடத் தானைப் – ‘பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய்’ என்று சில விளக்கங்களில் கூறப்பட்டு இருந்தாலும், திருவேட்டக்குடி திருத்தலத்தில் அர்ஜூனனைச் சோதிக்க சிவபெருமான் வேடுவ கோலத்தில் வந்தது பற்றி தலபுராணத்தில் இருப்பதாலும், அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்கப்பட்ட காதை கொண்டும் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்க வேட வடிவம் கொண்டவன் எனும் பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மார்க்கண்டேயருக்கு விதிக்கப்பட்ட விதியானது அவரது வாழ்நாள் வயது பதினாறு எனவும், அந்த விதியின் விளைவாக வந்த மரணத்தினை, அவர் இறை வழிபாடு செய்து, விதியின் விளைவாய் வெளிப்பட்டுச் சினந்து வந்த கூற்றுவனை உதைத்து சிவபிரான் எழுந்தருளிய தலம், தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளும், தேன்கூடுகள் நிறைந்த சோலைகளும் சூழ்ந்தது புகலிநகர் எனும் திருத்தலமாகும்
விளக்கஉரை
கூற்றுதைத்தார் பதியாவது புகலிநகர் என்பது பற்றிய பாடல்.
‘கொதியாவருகூற்றை உதைத்தவர்’ – விதியென்னும் நியதியைப்பற்றி வந்த கூற்றுவனின் அந்நியதிக்கும் காரணம் இறைவன் என்பதை உணர்ந்து கொள்ளவைத்த பெருங்கருணை எனும் பொருள் பற்றியது.