அமுதமொழி – விளம்பி – ஆடி 16 (2018)

பாடல்

மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

திருமாணிகுழி எனும் திருத்தலமானது, சந்தன மரங்கள், கரிய அகில் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து வந்து விழுந்து, குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தாங்கிக்  கொண்டு வரும் கெடில நதியின்  மோதும் நீரானது பாயும் வயல்களில் நறுமணம் கமழ்வதுடன் கூடியதும், மலரும் நிலையிலுள்ள (அஃதாவது மொட்டான) மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரம்மச்சாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீல கண்டனான சிவபெருமான் வீற்றிருந்து அருளும் தலமும் ஆகும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 14 (2018)

 

பாடல்

சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லராநல் லிதழி
சழிந்தசென்னிச் சைவவேடந் தான்நினைந் தைம்புலனும்
அழிந்தசிந்தை யந்தணாளர்க் கறம்பொருளின் பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி மேயதுமு துகுன்றே

தேவாரம் – முதல் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

சுழித்து ஓடக்கூடிய கங்கை, அதனோடு ஒத்து காணப்படுவதாகிய திங்கள், மிகவும் பழமையான பாம்பு, நல்ல கொன்றை மலர் ஆகியன நெருக்கமாக உள்ள சிறப்புகளை தலையில்  உடைய முக்கண்ணனும் ஆதியும் ஆகிய சிவபிரானுடைய சைவ வேடத்தை விருப்புற்று நினைத்து, ஐம்புலன்களும் மனமும் அழிந்த சிந்தையினை உடையர்களும், இணைந்த திருவடிகளை உடையவனும், அந்தணர் குலத்தினை உடையவருமான பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்களான சனகர், சனத்குமாரர், சதானந்தர் மற்றும் சனாதனர் முதலியவர்களுக்கு  அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை உபதேசித்த திருவாயினனாய் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றம் ஆகும்.

விளக்க உரை

  • தாள் இணைத்து – கால்களைப் பத்மாசனம் முதலிய ஆசனவகைகள் பொருந்தப் பின்னி என்றும் கூறலாம். சிவசக்தி ரூபமாக எனவும் கொள்ளலாம்.
  • சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல்அரா நல்லிதழி, சழிந்த சென்னிச் சைவவேடம் என்பதை மட்டும் நினைந்து ஐம்புலனும் அழிந்த சிந்தை உடைய அந்தணர்கள்  என்ற பாடம் புதுவை பிரெஞ்சு இந்தியக் கலை நிறுவன ஆய்வுப் பதிப்பில் காணப்படுகிறது.
  • சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல்அரா நல்லிதழி, சழிந்த சென்னிச் சைவவேடம் என அகமுகமாக யோக மரபில் காணுதலும் உண்டு. ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 12 (2018)

பாடல்

ஏவும் படைவேந் தனிரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

இலக்குத் தவறாது சென்று வினையாற்றும் ஆயுதம் ஆகிய கணைகளொடுகூடிய விற் படையை உடைய இராவணனை ‘ஆ’ என்று அலறுமாறு தாக்கி அருளிய சிவபிரானுக்குரிய இடமும், தாவிச்செல்லும் மான்கன்றுகளை உடையதும், குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததுமான வேணுபுரம் ஆகும்.

விளக்க உரை

  • மறிமான் – மான்கன்று; ஆடுகளும், மான்களும் எனவும் கூறலாம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 9 (2018)

பாடல்

பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்
போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்
பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்
பாராய்ப் புனலாகி நிற்கை கண்டேன்
விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன்
மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

உலகத்தார்க்கு பொருந்தாத செய்கைகளாகிய சாம்பல் பூசிக் கொள்ளுதல், எலும்பும் தலைமாலையும் அணிதல், தலை ஓட்டாகிய மண்டை ஓட்டில் இரத்தல், நஞ்சை உண்ணுதல், பாம்பினை அணிதல், சடைதரித்துப் பெண்ணொரு பாகன் ஆதல் போன்றனவும் கொண்டு பொலியக் கொண்டவராய், போற்றுதலாகிய சொற்களைச் சொல்லி விண்ணோர்கள் புகழுமாறு விளங்குபவராய், தம்மிடத்தில் அன்பு கொண்ட அன்பருக்கு அருளும் தன்மை உடையவராய், நிலனொடு நீராய் (ஏனைய பூதங்களாகவும் -அவையாகி நிற்றல் ) நிற்பவராய், புதுமையாகவும், வேறிடங்களில் காணப்படாது நிறைந்து நின்று மருட்கையை விளைத்த கூட்டம் எனப்படும் பூதவேதாளங்கள் முதலிய பதினெண் கணங்களுமாகவும். உமையும் விநாயகனும் கொண்டவராய், உடல் நோயும், உயிர் நோயும் ஆகிய பிணிதீர்க்கும் மருந்தின் தன்மை கொண்டவராய் வாய்மூர் அடிகளாகிய  சிவபெருமானை நான் கண்டேன்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி – 4 (2018)

பாடல்

ஊனைப் பெருக்கி உன்னை நினையா தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங் கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையு மடமென் னோக்கி மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் ஆலக் கோயில் அம்மானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

காட்டில் புதியதாக மலர்ந்திருக்கும் கொன்றை மலரின் வீசுதலை உடையவனே, மான் போன்ற மெல்லிய பார்வை உடைய உமை அஞ்சும்படி பெரியதான யானைத் தோலைப் போர்த்தியவனே, ஞானக்கண்ணாய் விளங்குபவனே ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மை நிலையில் இருக்கும் யான் அதுபற்றி உணர்வு எதுவும் இல்லாமல் உடம்பு வளர்க்கும் காரணம் பற்றி உன்னை நினையாது ஒழிந்தேன்.

விளக்க உரை

  • செடியேன் உணர்வில்லேன் – செடி போன்றவைகள் ஓரறிவு உயிர்கள். எனவே உன்னை நினைத்தல் என்பது பற்றி உண்ர்வு கூட இல்லை.
  • குறை உடைய உயிர்களின் நிலை அறிய அவைகளின் அனைத்து வினைகளைப் பற்றியும் அறிய அறிவு வேண்டும். அதனை காண ஞானக் கண் அவசியமாகிறது. உயிரின் வினைகளைக் களைபவன் என்பதனால் அவன் ஞானக் கண் உடையவனாகிறான்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி – 3 (2018)

பாடல்

மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை
உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த
கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்
கையால்தொழு வார்வினை காண்ட லரிதே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மையின் நிறத்தை ஒத்து இருக்கும் கரிய நிறமுடைய மேனியை உடையவனாகிய அரக்கர்களின் தலைவனாகிய இராவணை பிழைக்க முடியாதபடி செய்து, அவனது கர்வத்தை அடக்கி, அவனுக்கு இனிய அருளைச் செய்தவனும், அடியவர் அணிவித்த மலர் மாலைகளை சூடி குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளிக்கும் சிவபெருமானை கைகளால் தொழுபவர்களின் வினைப்பயன்கள் இல்லாது போகும்.

விளக்க உரை

  • அஃதாவது இத்தலம் கண்டவர்களின் வினைகள் நீங்கும்.
  • மையார்மேனி – கரியமேனி.
  • அரக்கன் – இராவணன்.
  • கொய் ஆர் மலர் – கொய்தலைப் பொருந்திய மலர்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 31 (2018)

பாடல்

தங்கிய மாதவத்தின் தழல்
வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலியுஞ் செழு
மால்கரி யோடலறப்
பொங்கிய போர்புரிந்து பிளந்
தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழனித் திரு
நாகேச் சரத்தானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

செங்கயல் எனும் ஒரு மீன்வகையான கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களை உடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, மாற்றம் இல்லாத, நிலையான பெரிய தவத்தினால், வேள்வித் தீயினியில்  இருந்து தோன்றிய சிங்கமும், மிகப் பெரியதான புலியும், திருமாலின் நிறம் ஒத்த பருத்த பெரிய யானையும் கதறி ஒடும்படி செய்தும், அழியும்படி செய்வதுமான மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின் தோலை உரித்தும், அத்தோலைப் போர்த்தியும் செய்தற்குக் காரணம் யாது?

விளக்க உரை

  • ‘உன்னை உணரும் உணர்வில்லாதோர்க்கும் உணர்வு உண்டாக்குதல்’ என்பது பற்றிய பாடல்.
  • தவம் – தாருகாவன முனிவர்களுடையது. அட்ட வீரட்டான செயல்களில் ஒன்றான இவ்வரலாற்றினை வழுவூர் திருத்தல பெருமை கொண்டு அறிக.
  • போர்த்தல் – மறைத்தல் என்னும் பொருளில்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 27 (2018)

பாடல்

அந்தமு மாதியு மாகிநின் றீர்அண்ட
     மெண்டிசையும்
பந்தமும் வீடும் பரப்புகின் றீர்பசு
     வேற்றுகந்தீர்
வெந்தழ லோம்பு மிழலையுள் ளீர்என்னைத்
     தென்றிசைக்கே
உந்திடும் போது மறக்கினு மென்னைக்
     குறிக்கொண்மினே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

அறிவுடைப் பொருளாகிய சேதனம், அறிவற்ற பொருளாகிய  அசேதனம் ஆகியவற்றின் தொடக்கமாக இருப்பவரும், அவ்வாறான சேதனம், அசேதனம் பொருள்களுக்கு முடிவாக நின்று இருப்பவரும், பிரபஞ்சத்தின் எட்டுத் திசைகளிலும் பற்றினை ஏற்படுத்துபவரும், அப்பற்றினை விலக்கி வீடு பேற்றினை உயிர்களுக்கு அளிப்பவரும், விடையேறுதலை விரும்பி செய்பவரும், சிவந்து எரியும் தீயை போற்றி காத்து வரும் அந்தணர்கள் வாழும் மிழலை நகரில் உள்ளவரே! அடியேனைக் காலன் தென் திசையில் செலுத்தும் போது, யான் தங்களை மறந்தாலும் தாங்கள் அடியேனை மனத்தில் குறித்து வைத்துக் கொண்டு காப்பாற்ற வேண்டும்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 26 (2018)

பாடல்

மூலம்

உருவமு முயிரு மாகி யோதிய வுலகுக் கெல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய் நின்றவெம் பெருமான் மிக்க
அருவிபொன் சொரியு மண்ணா மலையுளா யண்டர் கோவே
மருவிநின் பாத மல்லான் மற்றொரு மாடி லேனே

பதப் பிரிப்புடன்

உருவமும் உயிரும் ஆகி,
     ஓதிய உலகுக்கு எல்லாம்
பெருவினை பிறப்பு வீடாய்
     நின்றஎம் பெருமான், மிக்க
அருவிபொன் சொரியும் அண்ணா
     மலைஉளாய், அண்டர் கோவே,
மருவிநின் பாதம் அல்லால்
     மற்றொரு மாடு இலேனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

அசேதனப் ப்ரபஞ்சம் மற்றும் காரண மாயை  என குறிக்கப் பெறும் சடமாகி, சேதனப் பிரபஞ்சம் எனக் குறிக்கப்படும் சித்தாகிய ஆன்மாக்களாகவும் ஆகியவனாய், அவ்வாறு குறிப்பிடப்படும் உயிர்களுக்கெல்லாம் மூலகன்மம் எனப்படும் நுண்வினையாகவும், அதன் காரணமாகவும் தொடர்ச்சியாகவும்  ஏனைய  சஞ்சீதம் எனப்படும் பழைய வினைகளையும், பிராப்தம் ஆகிய நிகழ்கால வினைகளையும், ஆகாமியம் எனப்படும் இனிவரக் கூடிய வினைகளையும் கொண்டு ஏற்படும் பிறப்பும் பெற்று கர்மங்கள் விடுத்தப் பின் ஏற்படும் வீடு பேற்றிற்கு காரணமாகவும் நின்ற எம் பெருமானே! அருவி போன்று பொன்னைச் சொரியும் அழகிய அண்ணாமலையில் உள்ள தேவர்களின் தலைவனே! உன் திருவடிகளைப் பொருந்தி நிற்றல் தவிர வேறு செல்வம் இல்லாதேன் ஆவேன்.

விளக்க உரை

  • ‘மலையுளாய்’  என்றது கண்டது உரைப்பது பற்றியதால் அருளுரை எனவே பொய்யாகாது.
  • ‘நீர் மிகுந்த அருவிகள் பொன்னைச் சொரியும்’ என சில இடங்களில் விளக்கப்பட்டுளது. பொருள்  பொருந்தாமையால் விலக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 24 (2018)

பாடல்

வரைக்குலம கட்கொரு மறுக்கம்வரு வித்தமதி யில்வலியுடை
அரக்கனது ரக்கரசி ரத்துற வடர்த்தருள் புரிந்தவழகன்
இருக்கையத ருக்கன்முத லானவிமை யோர்குழுமி யேழ்விழவினிற்
றருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் கொண்டலன சண்பைநகரே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

இமயமலையில் அவதரித்த மலையரசனின் மகளான உமாதேவிக்கு கயிலைமலையைப் பெயர்த்து  எடுத்து ஓர் அச்சத்தை உண்டாக்கிய, புத்தி இல்லாத, வலிமையுடைய இராவணனின் மார்பு , கைகள் , தலைகள் ஆகியவை இமய மலையின்கீழ் நொறுங்கும்படி தன் கால் பெருவிரலை ஊன்றி , பின் அவன் தன் தவறு உண்ர்ந்து இறைஞ்ச, ஒளிபொருந்திய வெற்றிவாளும், நீண்ட ஆயுளும் கொடுத்து அருள்புரிந்த அழகனான சிவபெருமான் வீற்றிருந்து அருளும் தலமாவதும்சூரியன் முதலான தேவர்கள் ஏழாந்திருவிழாவில் கூடிவந்து வணங்க, தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலையை நெருக்கும்படி, மேகம் படிந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த வளமிக்கதும் ஆனது திருச்சண்பைநகர் ஆகும்.

விளக்க உரை

  • அக்காலத்துத் திருவிழாக்கள் பெரும்பாலும் ஏழாம் நாளில் முடிவுற்று வந்ததை இப்பதிகத்தால் அறியலாம்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 20 (2018)

பாடல்

அலைசேர் புனலன் அனலன் அமலன்
தலைசேர் பலியன் சதுரன் விதிரும்
கொலைசேர் படையன் குடவா யில்தனில்
நிலைசேர் பெருங்கோ யில்நிலா யவனே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

குடவாயிலில் எனும் தலத்தில் நிலையாக விளங்கும் பெருங்கோயிலில் எழுந்தருளிய இறைவனானவன், அலைகள் ஏற்படுத்தும் கங்கையை அணிந்தவன்; அனலை ஏந்தியவன்; எண்குணத்துள் ஒன்றான மும்மலமில்லாதவன்; கபாலம் எனும் பிரமகபாலத்தில் யாசகம் பெறுபவன்; யகங்கள் கடந்தவன்; நடுங்கத்தக்க கொலைக்கருவியாகிய திரிசூலத்தையும்,  மழுவாயுதம் முதலியவற்றையும் ஏந்தியவன்.

விளக்க உரை

  • சதுரன் – ‘மூவர்க்கும் முதல்வன்’ என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளன.  திறமையுடையவன்; நகரவாசி; பேராசைக்காரன் போன்ற பொருள்களும் இருக்கின்றன. பொருத்தமின்மை காரணமாக இவைகள் விலக்கப்படுகின்றன.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 19 (2018)

பாடல்

நாட்பட் டிருந்தின்ப மெய்தலுற் றிங்கு நமன்றமராற்
கோட்பட் டொழிவதன் முந்துற வேகுளி ரார் தடத்துத்
தாட்பட்ட தாமரைப் பொய்கையந் தண்கழிப் பாலையண்ணற்
காட்பட் டொழிந்தமன் றேவல்ல மாயிவ் வகலிடத்தே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

இந்த உலகில் நீண்ட நெடுங் காலம் உயிர்வாழ்ந்து வாழும் காலத்தில் சிற்றின்ப நுகர்ச்சிகளைப் பொருந்தி இயமனுடைய ஏவலரால் கொல்லப்பட்டு அழிவதன் முன்னமே, குளிர்ந்த நீர் நிலைகளையும், தாளூன்றிய தாமரைப் பூக்களையுடைய பொய்கைகளையும் உடையதான  அழகிய குளிர்ந்த கழிப்பாலைப் பெருமானுக்கு அடிமையாகி  வலிமை உடையவர்களாகி  யம பயத்திலிருந்து விடுபட்டோம்.

விளக்க உரை

  • வன்மை – நமன் தமரால் கொல்லப்பட்டு ஒழிவதன் முந்திச் சிவனடிமையாகி நின்ற திறம் குறித்தது
  • நாள் பட்டிருத்தல் – நெடுங்காலம் வாழ்தல். இன்பம் எய்தல்
  • உறுதல் – சிற்றின்பம் அடைய விரும்புதல்
  • தமர் – எமதூதர்
  • கோட்படுதல் – கொள்ளப்படுதல்
  • முந்துறல் – முந்திக் கொள்ளல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆனி – 2 (2018)

பாடல்

தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு
மன்னவன் விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயாற்
கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள்
இன்னவற் கருளிச் செய்தார் இலங்குமேற் றளிய னாரே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

காஞ்சித் திருத்தலத்தில் உறையும் மேற்றளி ஆனவர், தெற்குப் பகுதியை ஆண்ட இராவணன், தனது கர்வத்தால் கயிலாய மலையைப் பெயர்த்து எடுக்க முற்பட்ட போது, சிறந்த அழகான ஆபரணங்களை அணிந்த பெண்ணாகிய  பார்வதி  நடுக்கம் கொண்டது கண்டு, நடுக்கம் நீக்குவதன் பொருட்டு தனது கால் விரல்களால் கயிலாய மலையை அழுத்த, அதனால் அவன் தலைகளை நெரியுமாறு செய்த போது, தன் தவற்றை உணர்ந்து, கரும்பு போன்று இனிய கீதங்களைப் பாடியதால் அவன் தவற்றினை மன்னித்து  அதனால் அவனுக்கு அருள் செய்தவர் ஆவார்.

விளக்க உரை

 

  • தென்னவன் –  இராவணன்
  • சேயிழை – கல் இழைத்துச் செய்யப்பட்ட அணிகளைப் பூண்டவள். இழை நூலிழையாகக் கொண்டு தாலி எனலும் கூடும்
  • மன்னவன் – என்றும் நிலையாயிருப்பவன்.(கயிலைத் தலைவன்)
  • நெரிய – நொறுங்க
  • கன்னலின் – கரும்பினைப் போலும் இனிமை தரும்
  • கீதம் – சாமகானம்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 31 (2018)

பாடல்

 

ஆரிடம் பாடில ரடிகள் காடலால்

ஓரிடங் குறைவில ருடையர் கோவணம்

நீரிடஞ் சடைவிடை யூர்தி நித்தலும்

பாரிடம் பணிசெயும் பயில்பைஞ் ஞீலியே

 

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

 

பதவுரை

சிவபெருமான் முனிவர்களுக்காக பாடலாக உடைய வேதத்தை அருளிச் செய்தவர். புறங்காடு எனப்படும் சுடுகாட்டினை ஒரு இடமாகக் கொண்டு எவ்விதமான குறையும் இல்லாமல் வாழ்பவர். இடுப்பிற்கு கீழ் ஒற்றை ஆடையை அணிபவர். திருச்சடை முடியில் கங்கையைத் தாங்குபவர். இடபத்தினை வாகனமாகக் கொண்டவர். இவ்வாறான சிவபெருமான் திருப்பைஞ்ஞீலியில் தினந்தோறும் பூதகணங்கள் சூழ்ந்து நின்று பணிசெய்யது வீற்றிருந்து அருளுகின்றார்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 30 (2018)

பாடல்

அட்டகாலன் றனைவவ் வினான்அவ் வரக்கன்முடி
எட்டுமற்றும் மிருபத்திரண் டும்இற வூன்றினான்
இட்டமாக விருப்பா னவன்போல் இரும்பைதனுள்
மட்டுவார்ந்த பொழில்சூழ்ந் தெழிலாரும் மாகாளமே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

எட்டு திசைகளிலும் சென்று மார்க்கண்டேய முனிவரின் உயிரை கவருவதற்காக போராடிய காலனின் உயிரைக் கவர்ந்தவனும், இராவணனின் பத்துத் தலைகளும் இருபது தோள்களும் நெரியுமாறு திருவடியை ஊன்றியவனும் ஆகிய சிவன் விரும்பி உறையும் இடம் தேனீகளின் ஒலிப்பு  சூழ்ந்துள்ளதுமான திருமாகாளமாகும்.

விளக்க உரை

  • எட்டும் இருபத்திரண்டும் (8+22) – பத்துத் தலைகளும் இருபது கைகளுமாகிய முப்பதும்
  • மட்டு – தேன்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 15 (2018)

பாடல்

உரியேன் அல்லேன் உனக்கடிமை
     உன்னைப் பிரிந்திங் கொருபொழுதுந்
தரியேன் நாயேன் இன்னதென்
     றறியேன் சங்கரா கருணையினாற்
பெரியோன் ஒருவன் கண்டுகொள்
     என்றுன் பெய்கழல் அடிகாட்டிப்
பிரியேன் என்றென் றருளிய அருளும்
      பொய்யோ எங்கள் பெருமானே

தேவாரம் – எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர்

பதவுரை

சங்கரனே! எம் பெருமானே! யான், உனக்கு அடிமையா இருப்பதற்கு கூட உரிய தகுதி உடைவன் அல்லேன்; கருணையில் ஒப்பற்றவனாகிய நீ, உன் கழலை அணிந்த திருவடியைப் பார்த்துக் கொள்வாயாக என்று காட்டியும், உன்னைப் பிரிய மாட்டேன் என்று அருளிச் செய்த உன் திருவருளும் பொய்தானோ? நாயேன் அதன் தன்மை இன்னதென்று அறியமாட்டேன். எனினும் உன்னை விட்டு நீங்கி இந்த இடத்தில் ஒருகணமும் தங்கியிருக்கமாட்டேன்.

விளக்க உரை

  • ‘பொழுது’ – மிகச் சிறியதான நொடிப்பொழுது. (கண் இமைப் பொழுது போன்றது)
  • ‘என்றென்று’ – வலியுறுத்தலில் பொருட்டு அடுக்குத் தொடர்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 14 (2018)

 

பாடல்

தண்டேர்மழுப் படையான்மழ

   விடையான்எழு கடல்நஞ்

சுண்டேபுரம் எரியச்சிலை

   வளைத்தான்இமை யவர்க்காத்

திண்டேர்மிசை நின்றான்அவன்

   உறையுந்திருச் சுழியல்

தொண்டேசெய வல்லாரவர்

   நல்லார்துயர் இலரே

 

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

 

பதவுரை

மழுப்படையைத் தண்டு போல கொண்டு ஏந்தியவனும், இளமையான இடபத்தை உடையவனும், தேவர்களுக்காக கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அவர்களை காத்தவனும், திரிபுரங்கள் எரியும்படி வில்லை வளைத்துத் வலிமையானதும் உறுதியானதுமான தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலில் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள், இன்பம் உடையவரும் துன்பம் இல்லாதவரும் ஆவார்கள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 13 (2018)

பாடல்

ஆகாத நஞ்சுண்ட அந்தி வண்ணர்
     ஐந்தலைய மாசுணங்கொண் டம்பொற் றோள்மேல்
ஏகாச மாவிட்டோ டொன் றேந்திவந்
     திடுதிருவே பலியென்றார்க் கில்லே புக்கேன்
பாகேதுங் கொள்ளார் பலியுங் கொள்ளார்
     பாவியேன் கண்ணுள்ளே பற்றி நோக்கிப்
போகாத வேடத்தர் பூதஞ் சூழப்
     புறம்பயம்நம் மூரென்று போயி னாரே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

தீங்கு தருகின்ற விடத்தை உண்டு, மாலையில் தோன்றும் செந்நிறத்தை போன்றதுமான பெருமான், ஐந்தலைப் பாம்பு ஒன்றனை அழகிய பொன் போன்ற தோளின் மீது மேலாடையாக அணிந்து, திரு ஓடு ஒன்றனைக் கையில் ஏந்தி, எம் இல்லத்தில் வந்து `’திருவே! உணவு இடு’ என்று கூற, உள்ளே சென்று யான் மீண்டு வர ஏதும் என்னிடத்துப் பிச்சையாகப் பெறாமல் என்னைக் கூர்ந்து நோக்கி என் கண்ணுள்ளே அவர் உருவம் நீங்காது இருக்குமாறு செய்து, பூத கணங்கள் சூழப் ‘புறம்பயம் நம் ஊர்’ என்று கூறிப் போயினார்.

விளக்க உரை

  • ஏகாசம் – ஏகம்+ஆகாசம் – ஒரே ஆகாயம் –  மேலாடை
  • ‘போகாத வேடத்தார்’ –  அவரது வேடம் என் கண்ணினின்றும் நீங்காத இயல்பானது

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 12 (2018)

பாடல்

தெற்ற லாகிய தென்னிலங் கைக்கிறை வன்மலை
பற்றி னான்முடி பத்தொடு தோள்கணெ ரியவே
செற்ற தேவனஞ் சிக்கல்வெண் ணெய்ப்பெரு மானடி
உற்று நீநினை யாய்வினை யாயின வோயவே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மனமே! தெளிந்த அறிவினை உடையவனும், தென்இலங்கைக்கு இறைவனாகவும்# விளங்கிய இராவணன், ஈசன் வீற்றிருந்து அருளும் கயிலைமலையைப் பெயர்க்க முற்படும் போது, பற்றிய அளவில் அவன் முடிகள் கொண்ட பத்து தலைகளையும், இருபது தோள்களும் நெரியுமாறு அவன் கர்வம் அழித்த தேவனாகிய நம்முடைய சிக்கல் வெண்ணெய்ப் பெருமான் திருவடிகளை, வினைகள்யாவும் தேய்ந்து ஒழிய நீ ஆராய்ந்து நினைவாயாக.

விளக்க உரை

  • தெற்றல் – அறிவில் தெளிந்தவன். இராவணன் ஒழுக்கத்தில் பிழை உடையவன் ஆயினும் பல நூல் கற்றதால் அறிவில் சிறந்தவன்.(இராவணம் கொடி வீணை என்பது கண்டு உணர்க).மாறுபாடுடையவன் என்பது இக்காலத்தார் கூறும் புதுப்பொருள் பொருந்தாமையால் விலக்கப்பட்டுள்ளது.
  • #இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பலபெயர்கள் இருபதாலும், ஈஸ்வர பட்டம் பெற்றமையாலும்  இறைவன் என்று அழைக்கப்பெற்று இருக்கலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 3 (2018)

பாடல்

கரவாடும் வன்னெஞ்சர்க் கரியானைக் கரவார்பால்
விரவாடும் பெருமானை விடையேறும் வித்தகனை
அரவாடச் சடைதாழ வங்கையினி லனலேந்தி
இரவாடும் பெருமானை யென்மனத்தே வைத்தேனே

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பெருமானை மறைத்தும் மறந்து போகச் செய்யும் படியாகிய செய்தும், உலக நாட்டத்தில் திளைக்கும் படி செய்யும் வலிய நெஞ்சினை உடையவர்களால் உணர்தற்கு அரியவனாய், வஞ்சனையில்லாத அடியவர் உள்ளத்தில் பரவி நிற்கும் பெருமானாய், காளை மேல் ஏறும் திறனுடையவனாய், பாம்புகள் படமெடுத்து ஆடவும், சடை தொங்கவும், உள்ளங்கையில் தீயினை ஏந்தி இரவினில் கூத்தாடும் பெருமானை என் மனத்தில் நிலையாக வைத்துக் கொண்டேன்

விளக்க உரை

  • கரவார் – சதா சிவசிந்தனையாளர்
  • வித்தகன் – ஞானசொரூபன்
  • இரவு – கேவலாவத்தை

சமூக ஊடகங்கள்