அமுதமொழி – விளம்பி – ஆடி 14 (2018)

 

பாடல்

சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லராநல் லிதழி
சழிந்தசென்னிச் சைவவேடந் தான்நினைந் தைம்புலனும்
அழிந்தசிந்தை யந்தணாளர்க் கறம்பொருளின் பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி மேயதுமு துகுன்றே

தேவாரம் – முதல் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

சுழித்து ஓடக்கூடிய கங்கை, அதனோடு ஒத்து காணப்படுவதாகிய திங்கள், மிகவும் பழமையான பாம்பு, நல்ல கொன்றை மலர் ஆகியன நெருக்கமாக உள்ள சிறப்புகளை தலையில்  உடைய முக்கண்ணனும் ஆதியும் ஆகிய சிவபிரானுடைய சைவ வேடத்தை விருப்புற்று நினைத்து, ஐம்புலன்களும் மனமும் அழிந்த சிந்தையினை உடையர்களும், இணைந்த திருவடிகளை உடையவனும், அந்தணர் குலத்தினை உடையவருமான பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்களான சனகர், சனத்குமாரர், சதானந்தர் மற்றும் சனாதனர் முதலியவர்களுக்கு  அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை உபதேசித்த திருவாயினனாய் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றம் ஆகும்.

விளக்க உரை

  • தாள் இணைத்து – கால்களைப் பத்மாசனம் முதலிய ஆசனவகைகள் பொருந்தப் பின்னி என்றும் கூறலாம். சிவசக்தி ரூபமாக எனவும் கொள்ளலாம்.
  • சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல்அரா நல்லிதழி, சழிந்த சென்னிச் சைவவேடம் என்பதை மட்டும் நினைந்து ஐம்புலனும் அழிந்த சிந்தை உடைய அந்தணர்கள்  என்ற பாடம் புதுவை பிரெஞ்சு இந்தியக் கலை நிறுவன ஆய்வுப் பதிப்பில் காணப்படுகிறது.
  • சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல்அரா நல்லிதழி, சழிந்த சென்னிச் சைவவேடம் என அகமுகமாக யோக மரபில் காணுதலும் உண்டு. ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

Author: அரிஷ்டநேமி

எல்லா அனுபவங்களும் நிச்சயக் குறிப்பொன்றை எழுதிச் செல்கின்றன அலைகளின் மீதான இலைகளின் பயணங்களாய்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *