அமுதமொழி – விளம்பி – ஆடி 24 (2018)

பாடல்

உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்
   ஒழிவறநின் றெங்கு முலப்பி லான்காண்
புற்றரவே யாடையுமாய்ப் பூணு மாகிப்
   புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்
நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக
   நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினால்
செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
   சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவனாவன், உயிரோடு உடல் இயைந்து நின்றவனாகவும், எல்லா உறவுகளுமாக ஆனவனாகவும், ஒருவரிடத்தும் தனக்குப் பின் உரிமையாக இல்லாத வகையில் எவ்விடத்தும் நிறைந்து நின்றவனாகவும், அழிவில்லாதவனாகவும், புற்றில் வாழும் பாம்பை ஆடை மேல் கட்டப்படும் கச்சாகவும் ஆபரணமாகவும் கொண்டவனாகவும், சுடுகாட்டில் எரியேந்தி ஆடுதலைச் செய்தவனாகவும், நல்ல தவ வேடங்கொண்டவனாகவும், சரணடைந்த மார்கண்டேயனுக்காக  பெருங்கூற்றுவனைச் சேவடியால் உதைத்து அழித்தவனும்  ஆனவனாகவும் ஆகி கைலாச மலையில் வீற்றிருப்பவனாகவும் இருந்து  என் சிந்தைக்கு உரியவன் ஆவான்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 23 (2018)

 

பாடல்

எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

கயிலைமலையை பெயர்த்து எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவரும், தவறு உணர்ந்து பின் அவன் புகழ்ந்து போற்ற அவனுக்கு  விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் அருளியவரும், விலகாத செல்வத்தோடு கூடியவரும்,  பிறப்பு இறப்பும் அறியாதவரும், சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவரும், வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக கொண்டவரும், உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னுடைய அருள்பெருமையும், வாழ்வும் கொடுத்தவரும் ஆன பெரும்புகழையுடைய சிவபெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்து அருளுகின்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 22 (2018)

 

பாடல்

முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்

கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்

அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை

சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே

 

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

 

பதவுரை

காலத்தால் முற்பட்டு வரையறை செய்ய இயலாதவனாகவும், படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழில்களை உடைய மூவருக்கு முதலாவதாக ஆனவனாகவும், கொத்து கொத்தாக பூக்கும் சோலைகளை உடைய கூகம் என்ற ஊரில் உறைபவனாகவும், அந்தி வானத்தில் தோன்றும் பிறை சந்திரனை தன் தலையில் சூடியவனாகவும் அடியவர்களுடைய வினைகளை முழுவதுமாக நீக்குபவனாகவும் ஆன இறைவன் உறையும் இடம் திருவிற்கோலம் ஆகும்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 21 (2018)

பாடல்

தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
   சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
   சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
   போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
   ஆவ டுதுறை ஆதிஎம் மானே

தேவாரம் – ஏழாம்  திருமுறை – சுந்தரர்

பதவுரை

சுருண்ட, சிவந்த சடையை கொண்டு திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள ஆதி ஆகிய எங்கள் முதற்கடவுளே, தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று,  தனது வாயினின்று உண்டாகும் நூலால் உறுதியான அழகிய பந்தல்  ஆக்க முற்பட்ட அச் சிலந்தியை, சோழனாய்ப் பிறக்கச் செய்த திருவருளை அறிந்து, அடியேன் பழவினையாகிய சஞ்சிதம் தொலையப் பெற்றாரையும் வந்து பற்றும் வன்மையுடைய ஆகிய ஆகாமியம்  எனவும் எதிர்வினை எனவும் ஆகிய இனிச் செய்யப்படும் வினை குறித்து  அஞ்சி, உனது அழகிய மலர்போன்ற திருவடியில் விழுந்து புரண்டு, `போற்றி! போற்றி!` என்று துதித்து,  உன்னை வந்து அடைந்தேன்!  என்னை ஏற்று கொண்டு அருள்.

விளக்க உரை

  • சிலந்திக்குச் செய்த திருவருளை எடுத்து இயம்பும் பாடல்.
  • சிலந்தி,  கோச்செங்கட் சோழ நாயனார் ஆக பிறந்து வந்த வரலாற்றை பெரிய புராணத்துள் கண்டு உணர்க.
  • தெருளுதல் – உணர்வுறுதல், தெளிதல், விளங்குதல், பூப்படைதல்

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 20 (2018)

பாடல்

படையானைப் பாசுபத வேடத் தானைப்
   பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம்
அடையாமைக் காப்பானை யடியார் தங்கள்
   அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச்
சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச்
   சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்
நடையானை நம்பியை நள்ளாற் றானை
   நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பிற உயிர்கள் போல் படைக்கப்படாதவனை, அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்க வேட வடிவம் கொண்டவனை, மன்மதனை நெற்றிக் கண்ணால் நோக்கி அவனை சாம்பலாகுமாறு அவனை செய்தவனை, விதி வழி வரும் பாவங்கள் அடையாமல் காப்பவனை, அடியவர்களுக்கு அருமருந்தாகி அவர்களின் துன்பம் விலகுமாறு அருள் செய்பவனாய், தனது திருமுடிகளில் சந்திரனை தரித்தவனை, சங்கின் நிறம் ஒத்து முத்தினை கொண்டு இருப்பது போன்ற தனித்துவமான வெள்ளை நிற காளையின் நடை உடையவனை, பூரணம் நிறைந்த இறைவனை, திருநள்ளாறு எனும் திருத்தலத்தில் இருப்பவனை அடியேன் நினைந்து உய்ந்தேன்.

விளக்க உரை

  • அனங்கன் – மன்மதன்.
  • ‘ஆவா’ – இரக்கக் குறிப்பிடைச் சொல்.
  • படையானை – பலபடைக்கலங்களை உடையவனாய் என்று சில விளக்கங்களில் கூறப்பட்டு இருந்தாலும், ‘உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ..இங்கு என்னை இனிப் படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே’ எனும் அபிராமி அந்தாதி வரிகள் பற்றியும் படைக்கப்படாதவன் எனும் பொருளில் இங்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • பாசுபத வேடத் தானைப் – ‘பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய்’ என்று சில விளக்கங்களில் கூறப்பட்டு இருந்தாலும், திருவேட்டக்குடி திருத்தலத்தில் அர்ஜூனனைச் சோதிக்க சிவபெருமான் வேடுவ கோலத்தில் வந்தது பற்றி தலபுராணத்தில் இருப்பதாலும்,  அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்கப்பட்ட காதை கொண்டும் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்க வேட வடிவம் கொண்டவன் எனும் பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 19 (2018)

பாடல்

விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்
கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்
பதியா வதுபங் கயநின் றலரத்தேன்
பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மார்க்கண்டேயருக்கு விதிக்கப்பட்ட விதியானது அவரது வாழ்நாள் வயது பதினாறு எனவும், அந்த விதியின் விளைவாக வந்த மரணத்தினை, அவர் இறை வழிபாடு செய்து, விதியின் விளைவாய்  வெளிப்பட்டுச் சினந்து வந்த கூற்றுவனை உதைத்து சிவபிரான் எழுந்தருளிய தலம், தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளும், தேன்கூடுகள் நிறைந்த சோலைகளும் சூழ்ந்தது புகலிநகர் எனும் திருத்தலமாகும்

விளக்க உரை

  • கூற்றுதைத்தார் பதியாவது புகலிநகர் என்பது பற்றிய பாடல்.
  • ‘கொதியாவருகூற்றை உதைத்தவர்’  –  விதியென்னும் நியதியைப்பற்றி வந்த கூற்றுவனின் அந்நியதிக்கும் காரணம் இறைவன் என்பதை உணர்ந்து கொள்ளவைத்த பெருங்கருணை எனும் பொருள் பற்றியது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 17 (2018)

பாடல்

தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
   தவம்மு யன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற்
   பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
   மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்
   சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை அடையாமல், தவத்தொழிலைச் செய்து,  பயனில்லாத சொற்களைப் பேசி  பின்னுதல் உடைய  சடைகளைச் சேர்த்துக் கட்டிக்கொண்டும், எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டு மட்டுமே  மக்கள்  பிறவியாகிய கடலை முற்றிலும் கடந்துவிடுதல்என்பது  இயலாது; ஆதலின், அந்நிலையில் இருந்து வேறுபட்டு  நிற்க  நீ  தேவர்களுக்குத் தேவனாய் உள்ளவனும் பெருந்தேவனாகியும் ஆனவனும் கொண்டு  செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற  நன்மையின் மேல் எல்லையாய் உள்ள பெருமானை  அணுகச் சென்று  இவனே  தொன்மையான முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 16 (2018)

பாடல்

மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

திருமாணிகுழி எனும் திருத்தலமானது, சந்தன மரங்கள், கரிய அகில் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து வந்து விழுந்து, குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தாங்கிக்  கொண்டு வரும் கெடில நதியின்  மோதும் நீரானது பாயும் வயல்களில் நறுமணம் கமழ்வதுடன் கூடியதும், மலரும் நிலையிலுள்ள (அஃதாவது மொட்டான) மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரம்மச்சாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீல கண்டனான சிவபெருமான் வீற்றிருந்து அருளும் தலமும் ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 15 (2018)

பாடல்

கற்று அறியேன் கலை ஞானம்; கசிந்து உருகேன்; ஆயிடினும்,
மற்று அறியேன் பிற தெய்வம்; வாக்கு இயலால், வார் கழல் வந்து
உற்று, இறுமாந்து இருந்தேன்; எம்பெருமானே! அடியேற்குப்
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே, நின் பொன் அருளே!

திருவாசகம் – எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர்

பதவுரை

எம்பெருமானே! ஞானத்தினை வழங்கும் நூல்களைப் படித்து அவற்றின் பொருள்களை அறியவில்லை; அதன் பொருள் பற்றி மனம் கசிந்து உருகவும் இல்லை; கற்று அறிந்தது கொண்டு, வாக்கின் தன்மையால் வேறு தெய்வங்களை துதித்தும் அறியவில்லை; ஆனாலும் ஆராய்ந்து, தங்களுடைய நீண்ட திருவடிகளை பெருமிதத்துடனும், செருக்குடனும் வந்து அடைந்து  இருந்தேன் என்பதைத் தவிர எதுவும் செய்யவில்லை. அதன் பொருட்டு அடியேனாகிய எனக்கு,  உன் பொன் போன்ற திருவருளைக் காட்டியது,  நாயினுக்கு,  பொன்னால் ஆகிய ஆசனத்தை  இடுவது போன்றது அல்லவா?

விளக்க உரை

  • இறைவன் தன்னையே நினைப்பவர்களுக்கு  பேரருள் செய்வான் என்பது குறித்து கூறப்பட்டப் பாடல்.
  • கற்றறியேன் கலைஞானம் – அறிவால் பெறப்படுவதுமான கலைஞானத்தினை கற்றலாலும் கேட்டலாலும் வளர்த்துக் கொண்டாலும் அது இறைவனடி சேர்க்க துணை செய்யும் என்பது உறுதியாக கூற இயலாது.  எல்லாக் கலைகளுக்கும் மூலமாக உள்ள பொருள் எது என்ற முறையில் சிந்தனையைச் செலுத்தி, உய்யும் கதிக்கு வழிகாட்டி, அதன் இறுதிப் பயனாகவுள்ள இறையருளைப் பெறக் கூடுமேயானால் அத்தகைய ஒரு கலைஞானம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே என்பது பற்றியது.
  • ஒரு தகுதியும் இல்லாத எனக்கு இத்துணை அருமையான கருணையைப் புரிந்தது என்பது நாய்க்குப் பொன்னாசனம் இட்டது போன்றது என்று உவமையைச் சொல்லி விளக்கியது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 14 (2018)

 

பாடல்

சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லராநல் லிதழி
சழிந்தசென்னிச் சைவவேடந் தான்நினைந் தைம்புலனும்
அழிந்தசிந்தை யந்தணாளர்க் கறம்பொருளின் பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி மேயதுமு துகுன்றே

தேவாரம் – முதல் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

சுழித்து ஓடக்கூடிய கங்கை, அதனோடு ஒத்து காணப்படுவதாகிய திங்கள், மிகவும் பழமையான பாம்பு, நல்ல கொன்றை மலர் ஆகியன நெருக்கமாக உள்ள சிறப்புகளை தலையில்  உடைய முக்கண்ணனும் ஆதியும் ஆகிய சிவபிரானுடைய சைவ வேடத்தை விருப்புற்று நினைத்து, ஐம்புலன்களும் மனமும் அழிந்த சிந்தையினை உடையர்களும், இணைந்த திருவடிகளை உடையவனும், அந்தணர் குலத்தினை உடையவருமான பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்களான சனகர், சனத்குமாரர், சதானந்தர் மற்றும் சனாதனர் முதலியவர்களுக்கு  அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை உபதேசித்த திருவாயினனாய் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றம் ஆகும்.

விளக்க உரை

  • தாள் இணைத்து – கால்களைப் பத்மாசனம் முதலிய ஆசனவகைகள் பொருந்தப் பின்னி என்றும் கூறலாம். சிவசக்தி ரூபமாக எனவும் கொள்ளலாம்.
  • சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல்அரா நல்லிதழி, சழிந்த சென்னிச் சைவவேடம் என்பதை மட்டும் நினைந்து ஐம்புலனும் அழிந்த சிந்தை உடைய அந்தணர்கள்  என்ற பாடம் புதுவை பிரெஞ்சு இந்தியக் கலை நிறுவன ஆய்வுப் பதிப்பில் காணப்படுகிறது.
  • சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல்அரா நல்லிதழி, சழிந்த சென்னிச் சைவவேடம் என அகமுகமாக யோக மரபில் காணுதலும் உண்டு. ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 13 (2018)

பாடல்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து – ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு

தனிப்பாடல் திரட்டு – ஔவையார்

பதவுரை

தானம் கொடுத்தலே அறமாகும். தீவினைபற்றி தீயவழியில் பொருள் ஈட்டுதல் விடுத்து நல்வழியில் பொருள் ஈட்டுதலே பொருளாகும். எக்காலத்தும் காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஒன்றாக் கூடி முடிவு எடுப்பதே  இன்பமாகும். பரனை நினைந்து அவன் அருளால் இம்மூன்றையும் விட்டதே பேரின்ப வீட்டினை நல்கும்.

விளக்க உரை

  • சைவ சித்தாந்த கருத்துப்படி வீடு என்பது துன்ப நீக்கத்தினையும்,  பேறு என்பது இன்ப ஆக்கம் என்பதையும் குறிக்கும்.
  • செயல்கள் அனைத்தும் பரமன்  என்பதால் பரமனை நினைந்து செய்யப்படும் ஈதல் அறமாகி விடுகிறது;  தீவினைகள் விலகி நல்வினைப்பட்டு பொருளீட்டுதல் இயல்பாக நிகழும். காதலர் இருவர் கருத்து ஒருமித்தல் நிகழும்; அவன் நினைவாலே இம்மூன்றையும் விட்டு வீடுபேறடையவும் இயலும். அஃதாவது உலகியல் செயல்களும், ஆத்ம செயல்களும் பரமனாகிய ஈசனாலேயே நிகழ்கின்றன.
  • எல்லாப் பொருள்களும் பரமனது உடைமைகள் என்பதால் அவற்றை நமது உழைப்பிற்கு எற்ப அவன் அநுமதிக்கும் அளவிற்கு அநுபவிக்கலாமே தவிர, நாமாகப் பிறர்க்கு வழங்க நமக்கு உரிமை இல்லை. எனவே அவனுடைய பொருள் என்னும்போது அவனை நினைந்து ஈதலே முறையாகும். ஆகவேஅது அறமாகி விடுகிறது. ‘பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல் இறக்கும்பொழுது கொடுபோவதில்லை’ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 12 (2018)

பாடல்

ஏவும் படைவேந் தனிரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

இலக்குத் தவறாது சென்று வினையாற்றும் ஆயுதம் ஆகிய கணைகளொடுகூடிய விற் படையை உடைய இராவணனை ‘ஆ’ என்று அலறுமாறு தாக்கி அருளிய சிவபிரானுக்குரிய இடமும், தாவிச்செல்லும் மான்கன்றுகளை உடையதும், குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததுமான வேணுபுரம் ஆகும்.

விளக்க உரை

  • மறிமான் – மான்கன்று; ஆடுகளும், மான்களும் எனவும் கூறலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி – 10 (2018)

பாடல்

வாதுற்ற திண்புயர் அண்ணாமலையர் மலர்ப் பதத்தைப்
போதுற்ற எப்போதும் புகலுநெஞ் சே! இந்தப் பூதலத்தில்
தீதுற்ற செல்வமென்? தேடிப் புதைத்த திரவியமென்?
காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே!

பட்டினத்தார்

பதவுரை

இந்த உலகினில் துன்பங்களைத் தரும் செல்வத்தினாலும், பொருள் ஈட்டி அதை யாரும் அறியாமல் மறைத்து வைக்க பயன்பாடு உடையதும், தருக்கநூல்களில் கூறப்படும் பிருத்வி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம், காலம், திக்கு, ஆன்மா, மனம் ஆகிய மூலப்பொருள்கள் ஆன இந்த உடலாலும் எந்த விதத்திலும் பயன் இல்லை. இவ்வாறான நிலை இல்லா பொருள்களான செல்வமும், உடலும் நீங்கும் போது ‘உடைந்த முனை உடைய ஊசியும்’ பயன் தராது. (ஆதலினால்)  வலிமையான தோள்களை உடைய அண்ணாமலையார் மலர் பாதத்தை எப்பொழுதும் போற்றி புகழ்ந்து கொண்டிருப்பாய் நெஞ்சமே.

விளக்க உரை

  • திரவியம் என்பதற்கு பொருள், சொத்து, பொன் எனும் பொருள்கள் இருந்தாலும், ‘தீதுற்ற செல்வமென்’ என முன் வரியில் இருப்பதாலும் திரவியத்திற்கு பொருள் எனும் கருத்து விலக்கப்பட்டுள் உடல் எனும் கருத்தில் பொருள் விளக்கப்பட்டுள்ளது.
  • 27-Jul-2018 – ஆடி – உத்திராடம் – பட்டினத்தார் குரு பூஜை

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 9 (2018)

பாடல்

பொருந்தாத செய்கை பொலியக் கண்டேன்
போற்றிசைத்து விண்ணோர் புகழக் கண்டேன்
பரிந்தார்க் கருளும் பரிசுங் கண்டேன்
பாராய்ப் புனலாகி நிற்கை கண்டேன்
விருந்தாய்ப் பரந்த தொகுதி கண்டேன்
மெல்லியலும் விநாயகனுந் தோன்றக் கண்டேன்
மருந்தாய்ப் பிணிதீர்க்கு மாறு கண்டேன்
வாய்மூ ரடிகளைநான் கண்ட வாறே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

உலகத்தார்க்கு பொருந்தாத செய்கைகளாகிய சாம்பல் பூசிக் கொள்ளுதல், எலும்பும் தலைமாலையும் அணிதல், தலை ஓட்டாகிய மண்டை ஓட்டில் இரத்தல், நஞ்சை உண்ணுதல், பாம்பினை அணிதல், சடைதரித்துப் பெண்ணொரு பாகன் ஆதல் போன்றனவும் கொண்டு பொலியக் கொண்டவராய், போற்றுதலாகிய சொற்களைச் சொல்லி விண்ணோர்கள் புகழுமாறு விளங்குபவராய், தம்மிடத்தில் அன்பு கொண்ட அன்பருக்கு அருளும் தன்மை உடையவராய், நிலனொடு நீராய் (ஏனைய பூதங்களாகவும் -அவையாகி நிற்றல் ) நிற்பவராய், புதுமையாகவும், வேறிடங்களில் காணப்படாது நிறைந்து நின்று மருட்கையை விளைத்த கூட்டம் எனப்படும் பூதவேதாளங்கள் முதலிய பதினெண் கணங்களுமாகவும். உமையும் விநாயகனும் கொண்டவராய், உடல் நோயும், உயிர் நோயும் ஆகிய பிணிதீர்க்கும் மருந்தின் தன்மை கொண்டவராய் வாய்மூர் அடிகளாகிய  சிவபெருமானை நான் கண்டேன்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 8 (2018)

 

பாடல்

உலகெலா மாகி வேறாய் உடனுமாய் ஒளியாய் ஓங்கி
அலகிலா உயிர்கள் கன்மத் தாணையின் அமர்ந்து செல்லத்
தலைவனாய் இவற்றின் தன்மை தனக்கெய்த லின்றித் தானே
நிலவுசீர் அமல னாகி நின்றனன் நீங்கா தெங்கும்

திருநெறி 2 – சிவஞான சித்தியார்

பதவுரை

புவனத்தினை தோற்றுவிக்கும் போது அந்த உலகங்கள் எல்லாமாகியும், உலகில் இருந்து வேறுபட்டவனாகவும், உடலில் உயிர் சேரும் போது ஓங்கிய அறிவொளி எனப்படும் சக்திரூபமாக பிரகாசமாகவும்,  அவன் விளையாட்டை பற்றி அலகிலா உயிர்களானது, கன்மத்தினை பற்றி செலுத்தி, அந்த உயிர்களனது படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் எனும் ஐந்தொழிலினை செய்யும் போது அவ்வைந்தொழிலை நடத்தும் பதிரூபமாகியும், ஐந்தொழிலின் தன்மைக்கு ஏற்ப வேறு வேறு தொழிலை செய்பவனாய், அதன் பலன்கள் தன்னை அடையாதவனாய், எவ்விடத்திலும் தானே மலம் அத்தன்மைகளின் வேறாய் அவற்றோடு அதன் தன்மையதாய், எவ்விடத்தும் தானே இயல்பான சுயம்பிரகாசரூபம் உடையவனாய் நிற்பன்.

விளக்க உரை

  • எல்லாவற்றிலும் தோய்ந்த போதும் தானே சுயம் பிரகாசமாய் நிற்கும்  தன்னுண்மையினை சிவமெனவும், ‘உலகெலாமாகி வேறாயுடனுமாய்’ இவ்வாறு உயிர்களின் வழி நிற்கும் தன்மையில் சத்தியெனவும் சிவாகம் நூல்கள் கூறும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 7 (2018)

பாடல்

தன்னை வியப்பிப்பான் தற்புகழ்தல் தீச்சுடர்
நன்னீர் சொரிந்து வளர்ந்தற்றால் – தன்னை
வியவாமை அன்றோ வியப்பாவது! இன்பம்
நயவாமை அன்றோ நலம்

நீதிநெறி விளக்கம் – குமரகுருபரர்

பதவுரை

மற்றவர்கள் மூலமாக பிறர் வியக்கும்படித் தன்னை புகழ்ந்து பேசும்படி செய்யும்  செயலானது, எரியும் நெருப்பில் தண்ணீரை ஊற்றி வளர்ப்பது போன்றது. தன்னைத் தான் வியக்காமல் இருப்பதுதான் வியப்புக்கு உரித்தான ஒன்றாகும். எனவே அவ்வாறான் புகழ் இன்பத்தைத் விரும்பிச் செல்லாமைதான் நலம் பயக்கும்.

விளக்க உரை

  • தானே தன் புகழைக் கூறச் செய்தல் குற்றம் என்று கூறும் பாடல்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி – 6 (2018)

பாடல்

புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
     உண்டி யாய்அண்ட வாணரும் பிறரும்
வற்றி யாரும்நின் மலரடி காணா
     மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனம்மிக உருகேன்
     பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
செற்றி லேன்இன்னுந் திரிதரு கின்றேன்
     திருப்பெ ருந்துறை மேவிய சிவனே

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

பதவுரை

திருப்பெருந்துறையில் வீற்றிருந்து அமர்ந்து அருளும் பெருமானே! தேவரும், ரிஷிகளும், முனிவர்களும் மற்றவர்களும் தங்கள் உடலின்மேல் புற்று வளரப் பெற்றும், மரம் வளரப் பெற்றும், நீரும் காற்றுமே உணவாக கொண்டு மெலிந்து வாழ்ந்தாலும் அவருள் ஒருவரும் உன் தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காணமுடியாத அரசனே! அடியேனை ஒரு சொல் சொல்லி என்னை அகப்படுத்தி ஆட்கொண்டாய். இக்கருணையை உணராமல் நெஞ்சம் துடிக்கமாட்டாமல், மனம் மிகவும் உருகமாட்டாமல், உன்னிடம் அன்பு செய்யமாட்டாமல் இன்னும் உலகில் அலைந்து கொண்டிருக்கின்றேன்.

விளக்க உரை

  • ஓர் வார்த்தை – திருவைந்தெழுத்து மந்திரம். அகச் சான்றாய் ‘நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்’ எனும் திருவேசறவு பாடல் மூலம் திருவைந்தெழுத்து மந்திரம் பெற்றதை அறியலாம்.
  • கருத்து உணர்த்தாதமுன்னர் பதைத்தலும், உருகலும் போன்றவை இல்லாமை குற்றம் அல்ல; அவ்வாறு உணர்த்திய பின்னரும், அவை இல்லாது இருக்கின்றேன்` என இரங்கியவாறு.
  • பரியா உடல் – அன்பிற்கு உரிய மெய்ப்பாடுகள் இல்லா உடல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி – 5 (2018)

பாடல்

படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும்
பதியைஅடை வித்தீர்அப் பதிநடுவே விளங்கும்
கொடிகள்நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக்
கொடுத்தீர்அக் கோயிலிலே கோபுரவா யிலிலே
செடிகள்இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித்
திரும்பவும்நீர் மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
அடிகள்இது தருணம்இனி அரைக்கணமும் தரியேன்
அம்பலத்தே நடம்புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே

திருஅருட்பா – ஆறாம் திருமுறை – வள்ளலார்

பதவுரை

அம்பலத்தில் ஞான நடம் புரிகின்ற பெருமானே; நீ மேலான ஞான நடனத்தைச் செய்கின்ற அருட்பதி ஆகிய இறை தத்துவமான சுத்த தத்துவ நிலை முதல் தத்துவாதீதப் பரவெளி நிலை கடந்து உரைப்பதற்கு இயலாத வெறுவெளி வரையிலான  படிகளைக் கடந்து அதற்குரிய படிகள் எல்லாம் ஏறி அடையுமாறு அருள் செய்தாய்; அவ்வாறு அடைந்தப்பின் எனக்கு, ஒளிர்கின்ற கொடிகள் நிறைந்த மணிமாடத்தை யுடைய திருக்கோயிலையும், அவ்வருள் நிலையமாகிய திருக்கோயிலில் தலைவன் நடுவில் இருப்பதை எளியேன் காணச் செய்து, அக்கோயிலில் கோபுர வாயிலில் குற்றமில்லாத அழகிய கதவைத் திறந்து காட்டிப் பின்னர் அதனை மூடும்படி செய்து அருள் செய்தாய்; அதற்கு ஏற்ற தருணம் இதுவாக இருப்பதால் அதனைத் மீண்டும் திறந்து அடியேனுக்கு அருளுதல் வேண்டும்; அவ்வாறு இன்றி தாமதித்தால் நான் அரைக்கணமும் உயிர் தாங்க மாட்டேன்.

விளக்க உரை

  • தத்துவ ஆராய்ச்சியை மேற்கொண்டு அத்தத்துவம் முப்பத்தாறினையும் ஆராய்ந்து கடந்து, சாக்கிராதீதத்தில் யோகக் காட்சி கண்டு தத்துவாதீதப் பரவெளியில் திருவருள் ஞானக் கோயிலைக் கண்டு திருக்கதவம் திறந்து சிவதரிசனம் பெற்று இன்புற்ற திறம் பற்றி கூறியது.
  • படிகள் எலாம் – படிகளாகிய தத்துவங்கள்  – ஆன்ம தத்துவம், வித்தியா தத்துவம், சிவ தத்துவம் என மூன்று வகையாய், பின்னர் இருபத்துநாலும் ஏழும் ஐந்துமாக முப்பத்து ஆறாய் விரிந்து நிற்பதை குறிப்பிடும் வரிகள்
  • ஏற்றுவித்தீர், அடைவித்தீர் – தமது யோக நெறிக்குத் துணை புரிந்த திருவருளை சிவன் செயலாக உரைத்து அதை உடன் உணர்ந்து உரைக்கும் திறன் பற்றியது
  • செடிகள் இலாத் திருக்கதவம் – ஞானக் கோயிலுக்கு குற்றங்கள் எனும் கதவுகள் இல்லை என்பதை உரைத்தது. (செடி – குற்றம்)
  • விளங்குதல் – ஒளிர்தல், தெளிவாதல், விளக்கமாதல், பளபளப்பாதல், பெருகுதல், மிகுதல், அறிதல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி – 4 (2018)

பாடல்

ஊனைப் பெருக்கி உன்னை நினையா தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்
கானக் கொன்றை கமழ மலருங் கடிநா றுடையாய் கச்சூராய்
மானைப் புரையு மடமென் னோக்கி மடவா ளஞ்ச மறைத்திட்ட
ஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் ஆலக் கோயில் அம்மானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

காட்டில் புதியதாக மலர்ந்திருக்கும் கொன்றை மலரின் வீசுதலை உடையவனே, மான் போன்ற மெல்லிய பார்வை உடைய உமை அஞ்சும்படி பெரியதான யானைத் தோலைப் போர்த்தியவனே, ஞானக்கண்ணாய் விளங்குபவனே ஆலக் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானே, கீழ்மை நிலையில் இருக்கும் யான் அதுபற்றி உணர்வு எதுவும் இல்லாமல் உடம்பு வளர்க்கும் காரணம் பற்றி உன்னை நினையாது ஒழிந்தேன்.

விளக்க உரை

  • செடியேன் உணர்வில்லேன் – செடி போன்றவைகள் ஓரறிவு உயிர்கள். எனவே உன்னை நினைத்தல் என்பது பற்றி உண்ர்வு கூட இல்லை.
  • குறை உடைய உயிர்களின் நிலை அறிய அவைகளின் அனைத்து வினைகளைப் பற்றியும் அறிய அறிவு வேண்டும். அதனை காண ஞானக் கண் அவசியமாகிறது. உயிரின் வினைகளைக் களைபவன் என்பதனால் அவன் ஞானக் கண் உடையவனாகிறான்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி – 3 (2018)

பாடல்

மையார்நிற மேனி யரக்கர்தங் கோனை
உய்யாவகை யாலடர்த் தின்னருள் செய்த
கொய்யாமலர் சூடி குரங்கணின் முட்டங்
கையால்தொழு வார்வினை காண்ட லரிதே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மையின் நிறத்தை ஒத்து இருக்கும் கரிய நிறமுடைய மேனியை உடையவனாகிய அரக்கர்களின் தலைவனாகிய இராவணை பிழைக்க முடியாதபடி செய்து, அவனது கர்வத்தை அடக்கி, அவனுக்கு இனிய அருளைச் செய்தவனும், அடியவர் அணிவித்த மலர் மாலைகளை சூடி குரங்கணில்முட்டத்தில் எழுந்தருளிக்கும் சிவபெருமானை கைகளால் தொழுபவர்களின் வினைப்பயன்கள் இல்லாது போகும்.

விளக்க உரை

  • அஃதாவது இத்தலம் கண்டவர்களின் வினைகள் நீங்கும்.
  • மையார்மேனி – கரியமேனி.
  • அரக்கன் – இராவணன்.
  • கொய் ஆர் மலர் – கொய்தலைப் பொருந்திய மலர்.

Loading

சமூக ஊடகங்கள்