பாடல்
புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
உண்டி யாய்அண்ட வாணரும் பிறரும்
வற்றி யாரும்நின் மலரடி காணா
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
பற்றினாய் பதையேன் மனம்மிக உருகேன்
பரிகி லேன்பரி யாவுடல் தன்னைச்
செற்றி லேன்இன்னுந் திரிதரு கின்றேன்
திருப்பெ ருந்துறை மேவிய சிவனே
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
பதவுரை
திருப்பெருந்துறையில் வீற்றிருந்து அமர்ந்து அருளும் பெருமானே! தேவரும், ரிஷிகளும், முனிவர்களும் மற்றவர்களும் தங்கள் உடலின்மேல் புற்று வளரப் பெற்றும், மரம் வளரப் பெற்றும், நீரும் காற்றுமே உணவாக கொண்டு மெலிந்து வாழ்ந்தாலும் அவருள் ஒருவரும் உன் தாமரை மலர் போன்ற திருவடிகளைக் காணமுடியாத அரசனே! அடியேனை ஒரு சொல் சொல்லி என்னை அகப்படுத்தி ஆட்கொண்டாய். இக்கருணையை உணராமல் நெஞ்சம் துடிக்கமாட்டாமல், மனம் மிகவும் உருகமாட்டாமல், உன்னிடம் அன்பு செய்யமாட்டாமல் இன்னும் உலகில் அலைந்து கொண்டிருக்கின்றேன்.
விளக்க உரை
- ஓர் வார்த்தை – திருவைந்தெழுத்து மந்திரம். அகச் சான்றாய் ‘நானேயோ தவஞ்செய்தேன் சிவாயநம எனப்பெற்றேன்’ எனும் திருவேசறவு பாடல் மூலம் திருவைந்தெழுத்து மந்திரம் பெற்றதை அறியலாம்.
- கருத்து உணர்த்தாதமுன்னர் பதைத்தலும், உருகலும் போன்றவை இல்லாமை குற்றம் அல்ல; அவ்வாறு உணர்த்திய பின்னரும், அவை இல்லாது இருக்கின்றேன்` என இரங்கியவாறு.
- பரியா உடல் – அன்பிற்கு உரிய மெய்ப்பாடுகள் இல்லா உடல்