மக மாயை களைந்திட வல்ல பிரான் முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும் சகமாயையுள் நின்று தயங்குவதே.
கந்தர் அனுபூதி – அருணகிரிநாதர்
கருத்துஉரை
மிகப் பெரியதான வலிமைமிக்க மாபெரும் மாயைகளை எல்லாம் நீக்க வல்லவராக முருகப் பெருமான், தன் அறுமுகத்தில் இருக்கும் ஆறு வாயினால் உபதேசங்களை தந்து அருளிய போதிலும், வீடு, பொன் (செல்வம்), மாதர் என்று இவைகளை எப்பொழுதும் நினைத்து சோர்வு அடையச் செய்கிற உலக மாயைக்குள் கிடந்து கலங்குவதை நான் இன்னும் விடவில்லையே.
விளக்கஉரை
முருகப் பெருமான் தன்னுடைய திருவாக்கால் ஷடாச்சர உபதேசம் செய்தும் நான் தேறவில்லையே என்கிறது மற்றுமொரு உரை.
‘எனக்கு சம்சார மாயை நீங்கவில்லையே’ என பொருள் கொண்டால் முருகனின் பரதத்துவத்திற்கு இழுக்கு ஏற்படும் என்றும் உபதேசம் செய்தவர் எப்படிப்பட்டவர், செய்த உபதேசம் எப்படிப்பட்டது என்பதின் தரமே குறைந்துவிடும் என்று சில குறிப்புகளில் காணப்படுகிறது. அருளாளர்களின் பாடல்கள் அனைத்தும் அவர்களுக்காக எழுதப்பட்டவை அல்ல. சாதாரணமாக இருக்கும் கடை நிலை மனிதர்களின் நிலையில் இருந்து அவர்கள் உய்வதன் பொருட்டு எழுதப்பட்டவை.
மும்மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவை கொண்டு ஐந்து இந்திரியங்களும் மத யானைகள் போன்று தறியில் கட்டுபடாது பிளிறிக்கொண்டு தாம் நினைத்தபடி செல்லும் இயல்பான தன்மை உடையவை. அதை அறிந்து நான் அவைகளை அடக்கி நேர் வழியில் செலுத்துவதன் பொருட்டு அறிவு எனும் ஞானமாகிய அங்குசத்தைப் பயன்படுத்தினேன். எனினும் அவைகள் அதையும் மீறித் தம் விருப்பப்படி ஓடித் தமக்கு விருப்பமானவைகளை மிகுதியாக பெற்று, அதனால் மேலும் மதம் மிகுந்து தீய குணத்தை மிக அடைந்து என்னை நிலைகுலையச் செய்யுமாறு பெரிது.
விளக்க உரை
ஞானத்தின் வழி சென்றாலும் ஐந்து இந்திரியங்களை அடக்காமல் புறக்கணித்தால் அவற்றால் பெருங்கேடு விளையும் எனும் பொருள் பற்றியது இப்பாடல்.
இந்திரியங்களால் அடைப்பெறும் சுகங்கள் அனைத்தும் மேலும் மேலும் துன்பம் தருபவையே.
செம்மையான தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தை என்றும் திருப்பெண்ணாகடம் என்றும் அழைக்கப்பெறும் தூங்கானைமாடத்தில் உறையும் எம் புண்ணியனே! இரக்கக்துடன் கூடிய ஆனந்தம் கொண்டு ‘இச்சிறு தொண்டன் என்னை விருப்புற்று நினைத்தான்’ என்று திருவுளம் பற்றிப் பெரிய பிணிகளும் நோய்களும் தாக்காதவாறு அடியேனைப் பாதுகாக்காமல் விடுத்தால் புண்ணியனாகிய உனக்குப் பழி வந்து சேரும். ஆதலினால் விரும்பும் அடியவர் தலைவனாகிய நீ உன் திருவடிகளில் பற்றித் தோய்ந்த திருநீற்றினை அடியேன் மீது பூசுவாயாக.
விளக்க உரை
சிறு தொண்டன் – தொண்டர்களில் சிறியேன்; சிறு தொண்டு புரிவேன்
அரும் பிணி நோய் – அகற்றுதற்கு இயலா பிணியையும் நோயையும்
பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த கன்னிப் பெண்கள் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள திரு மாமயிலையில், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் கபாலிச்சரர் எனும் பெருமானை பூச்சுக்களை உடைய இளமகளிர் கொண்டாடும் திருவிழாவாகிய கார்த்திகைத் திங்களில் நிகழும் கார்த்திகை விளக்கீடு விழாக்களின்போது திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?
விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெங்கணையால் சுட்டாய்; என் பாசத்தொடர்பு அறுத்து ஆண்டுகொள்!-தும்பி பம்பும் மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும் சிட்டா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!
தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்
கருத்துஉரை
சிவக்கொழுந்தே! வண்டுகள் விரும்பிச் செல்லும் தேன் பொருந்திய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதியின் வழிபாட்டினை விரும்பும் மேம்பட்டவனே! பகைவருடைய மூன்று மதில்கள் கைந்நொடிப் பொழுதாகிய ஒரு மாத்திரையில் வெந்து போகுமாறு கொடிய அம்பினால் சுட்டு நீறாக்கினாய், அதுபோல் அடியேனுடைய உலகப்பற்றாகிய தொடர்பை நீக்கி அடிமை கொள்வாயாக!
உணர்வும் அவனே உயிரும் அவனே புணர்வும் அவனே புலவி அவனே இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான் துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
ஒரு பிரபஞ்ச பொருள்களை உணர்வதற்கு கருவியாகிய இருக்கும் உணர்வும், அந்த உணர்வினால் பொருள்களை உணர்கின்ற உயிரும், உணரப்பட்ட பொருள்களை விரும்பும் விருப்பமும், வெறுக்கின்ற வெறுப்பும் எல்லாம் ஆகியவன் சிவன். அனைத்துப் பிரபஞ்சப் பொருள்களையும் ஒன்றாக்கி இணைத்து செயற்படுத்துகின்ற அவன் பிறர் ஒருவராலும் பிரபஞ்சத்தில் இருந்து தனியே வேறுபடுத்தி நினைக்க வரமாட்டான். ஆயினும் கொத்தாய் உள்ள வாசனை மிக்க மலர்களிடம் இருந்து மணம் கமழ்வது போல அனைத்துப் பொருளின் செயல் பாட்டிலும் அவன் விளங்குகிறான்.
விளக்க உரை
எல்லாப் பொருள்களிலும் அவன் நீக்கமற நிறைந்து நிற்றல் பற்றியும், அனைத்துப் பொருள்களின் செயல் பாட்டையும் அவனது செயலாக உணர்தல் பற்றியதும் குறித்தது இப்பாடல்.
ஒரு காரிய நிகழ்ச்சிக்கு முதல் காரணம், துணை காரணம், நிமித்த காரணம் என்னும் மூன்று காரணங்கள் தேவைப்படும். இவைகளில் முதல் காரணமும், துணை காரணமும் தனியே தனித்து இயங்காது. காட்சிக்கு புலப்படும் குடம் முதலிய காரியத்திற்கு பஞ்ச பூதத்தில் ஒன்றான மண் முதல் காரணமாகவும், குலாச் சக்கரம் எனும் திரிகை துணைக் காரணமாகவும் இருக்கும். குயவன் நிமித்த காரணமாக இருப்பான். ஆராய்ந்து பார்ப்பின் மண் மாயையாகவும், திரிகை அருட்சக்தியாகவும், குயவனை சிவனாகவும் எடுத்து உலகம் தோற்றுவிக்கப்படும்.
விளக்க உரை
உலக படைப்பிற்கு சிவனே நிமித்த காரணம் என்பதை விளக்கும் பாடல்
மாயையில் இருந்து சிவன் தனது அருள் தன்மையினால் உலகங்களை தோற்றுவிக்கிறான் என்பது விளங்கும்.
புறப்புறச் சமயம், புறச் சமயம், அகப்புறச் சமயம் கொள்கைகள் மறுதலிக்கப்பட்டு அகச்சமய கருத்துக்கள் நிலை நிறுத்தப் பெறும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
அளவை எனும் பிரமாணத்திற்கு அடிப்படை எவை? அளவை, அளக்கும் கருவி
எந்த விதமான பற்றும் இல்லாமல் விட்டு ஒழிப்பதற்கு அரிதான இவ்வுடம்பை விடுத்துக் கொடிய காலதூதருடைய செயல்களால் இறப்பேன். அவ்வாறு இறந்தால் மேலுலகம் அடைவேன். மேலுலகம் சென்று வந்து மீண்டும் பூமியில் இறங்கி மீண்டும் பிறப்பேன். அவ்வாறு பிறந்தால் பிறைச்சந்திரனை அணிந்த நீண்ட சடையை உடைய தலைக்கோலத்தை அணிந்த பெருமானுடைய பெயரை மறந்து விடுவேனோ என்று என் உள்ளம் கிடந்து வருந்துகிறது.
விளக்க உரை
துறக்கப்படாத உடல் – மும்மலங்களின் காரணமாக பற்று இல்லாமல் விட்டொழிக்க எளியதாக இல்லாத உடம்பு..
கைகளில் பாசம், அங்குசம், அபூபம்(அப்பவகை), விளாம்பழம், நாவல்பழம், தனது ஒரு தந்தம், நெற்கதிர் மற்றும் கரும்பு ஆகிய இந்த எட்டு பதார்த்தங்களையும் வைத்துக் கொண்டிருப்பவரும், நண்பகலில் விளங்குகின்ற கதிரவனின் ஒளியைக் கொண்டவருமான தருண கணபதி எப்பொழுதும் உங்களைக் காப்பாற்றுவாராக.
‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ – பரதுரியம்
பொருள்
முத்துரியத்தில் ஒன்று (சீவதுரியம், பரதுரியம், சிவ துரியம்)
விழிப்பு, கனவு, உறக்கம் எனும் மூன்றிற்கும் அப்பாற்பட்ட நான்காவது நிலை துரியம்; இதற்கு மேல் அதி நுட்பமானது பரதுரியம்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
பரதுரி யத்து நனவும் படிஉண்ட விரிவில் கனவும் இதன்உப சாந்தத்(து) உரிய சுழுனையும் ஓவும் சிவன்பால் அரிய துரியம் அசிபதம் ஆமே.
எட்டாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
பரதுரியத்தில் உலகத்தை அனுபவிக்கும் கேவல சகல அஞ்சவத்தைகள் ஆகிய (விழிப்பு, உறக்கம், கனவு, துரியம், துரியாதீதம்) எப்பொழுதும் நிகழாது முழுவதுமாக நீங்கும். ஆயினும் நின்மல துரியத்தில் அவை ஒரு சில நேரங்களில் நிகழ்ந்தாலும் நிகழும். ஆகவே, நின்மல துரியம் என்பது `அசி` பத அனுபவமாய் நிற்பதே ஆகும்.
விளக்க உரை
‘அதையும் கடந்த அனுபவம் ஆதல் இல்லை’ எனும் பொருளில் இப்பாடல்.
நின்மல துரியம் – கேவல அவத்தைகள் நீங்கி, அருளாலே தன்னையும் கண்டு அருளையும் கண்டு அதன் வயமாய் நிற்கும் நிலை.
நனவு, கனவு, சுழுத்தி, துரியம் ஆகிய நான்கு வேறு வேறு நிலைகள் ஒன்றோடு ஒன்று முடியும் இடத்திலேயே மற்றொன்று (சீவதுரியம், பரதுரியம், சிவ துரியம்) தொடங்கிவிடும்.
அதனால் பன்னிரண்டு நிலைகள் (குணம் மூன்றும் ( சாத்வீகம், ராட்சத, தாமச), நான்காகிய அந்தக்கரணங்கள்(மனம், சித்தம், புத்தி, அகங்காகரம்) இவைகள் ஐம்பொறிகள் வழியே கலந்து) சுருங்கிப் பத்து நிலைகள் (மெய், வாய், கண்,மூக்கு,செவி,பகுத்தறிவு ஆகிய ஆறறிவு மற்றும் குறிப்பறிவு, மெய்யறிவு, நுண் மாண் நுழை புலம் என்னும் அறிவு (சிற்றம்பலம் நுழைய தேவையான அறிவு), வாலறிவு (இறை அறிவு)) ஆகக் குறைந்துவிடும். சீவதுரியம் முடியும் இடத்தில் பரநனவு நிலை தொடங்கும். பரதுரியம் முடியும் இடத்தில் சிவதுரியத்தின் நனவு நிலை தொடங்கி விடும்.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காரணத்தில் இருந்து தோன்றும் காரிய வளர்ச்சி வகைகள் எவை? பரிணாமம், விருத்தி
(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)
ஆசு இல் பர தாரம்அவை அம் சிறை அடைப்பேம்; மாசு இல் புகழ் காதலுறுவேம்; வளமை கூரப் பேசுவது மானம்; இடை பேணுவது காமம்; கூசுவது மானுடரை; நன்று, நம் கொற்றம்!
கம்பராமாயணம் – யுத்த காண்டம்
கருத்துஉரை
ஒரு குற்றமும் இல்லாத ஒருவன் மனைவியை அழகிய சிறையில் அடைத்து வைப்போம்; குற்றமற்ற புகழ் அடையவும் விரும்புவோம்; மற்றவர்கள் பெருமைப்படும் படியாக பேசுவதோ வீர உரைகள்; அதற்கிடையிலே விரும்புவது காமம்; மானிடர்களைப் கண்டு அஞ்சுகிறோம்; நமது வெற்றி நன்றாய் இருக்கிறது.
விளக்க உரை
இராவணனைப் பார்த்து கும்பகர்ணன் கூறியது இப்பாடல். ‘நாம் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதே நம் பெருமை, என்ன ஓர் ஆட்சி!’ என இடித்துரைக்கிறான்.
வாக்கிய அமைப்பில் எதிரும் புதிருமான கருத்துக்கள் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் / மனிதர்களின் மனநிலையை எடுத்துக்காட்டும் பாடல்
அசையும் பாம்பினை மார்பில் சூடி, வெண்ணிறக் காளையில் அமர்ந்து உலகங்களைச் சுற்றி உலவும் மேம்பட்ட யோகியாய், ஆரவாரிக்குமாறு இருக்கும் கங்கையைச் சடையில் சூடியவராய், பார்வதி பாகராய், ஆண்மையின் இலக்கணம் கொண்டவராய், காமவேட்கையை தரும் ஐந்து மலரம்புகளை உடைய மன்மதன் சாம்பலாகி விழுமாறு வெகுண்டு மூன்றாம் கண்ணில் இருந்து தீப் புறப்பட விழித்த பெருமானாய், வேள்விகளோடு நான்கு வேதம் ஓதுதலும் நீங்காத ஞான ஒளி விளங்கும் ஒற்றியூரில் உகந்து அருளுகின்றார்.
கோடிக்கரையில் எழுந்தருளியுள்ள அழகனே! இங்கு இருக்கும் காடோ மிகப் பெரிது; உன் தேவி அச்சம் கொள்ளுமாறு எப்பொழுதும் மரப் பொந்தில் உள்ள ஆந்தைகளும், கூகைகளும் பல கூடி இடையறாது கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்கின்றன. வேட்டைத் தொழில் செய்தும், வஞ்சனையுடையவராகவும் இங்கு வாழ்பவர் மிகவும் கொடியவர்கள்; இவ்விடத்தை உறை விடத்தைக் கொண்டாயே இது என்?
இல்லை நின்கழற் கன்ப தென்கணே ஏலம் ஏலுநற் குழலி பங்கனே கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண் டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய் எல்லை யில்லைநின் கருணை யெம்பிரான் ஏது கொண்டுநான் ஏது செய்யினும் வல்லை யேயெனக் கின்னும் உன் கழல் காட்டி மீட்கவும் மறுவில் வானனே.
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்துஉரை
நான் எதனைக் கருவியாகக்கொண்டு (ஐம் புலன்கள்) எத்தீய செயலைச் செய்தாலும் (புலன் வழி தொழில்கள்), இனியும் உன்னுடைய திருவடியை எனக்குக் காட்டி மீட்டு ஆட்கொள்ளவும் ஆற்றலுடையவனே! ‘மறு இல்லாத வானம் எனப்படும்’ ஐம் பெரும் பூதங்களும் பொருள் பிரபஞ்சமாகத் தோன்ற இடம் தந்து நிற்கும் குற்றமில்லாத வானமாகிய சிவலோகத்தை உடைய சிவமே! வாசனை திரவியங்கள் பொருந்திய அழகிய கூந்தலையுடைய தேவியை தன்னுடைய ஒருபாகமாக உடையவனே! எம் பெருமானே! உன்னுடைய திருவடியை போற்றுவதற்கு உரிய அன்பு என்னிடம் இல்லை (எனினும்) கல்லை உண்பதற்கு ஏற்ற பழமாகச் செய்கின்ற வித்தையைக் கொண்டு என்னை உன்னுடைய திருவடிக்கு அன்புடையனாகச் செய்தாய் உன்னுடைய திருவருளுக்கு ஓர் அளவுவே இல்லை.
விளக்க உரை
இதனால், பசு கரணத்தை, பதி கரணமாக மாற்றித் ‘திருவடி இன்பத்தை நல்கும் ஆற்றலுடையவன் இறைவன்’ என்பது கூறப்பட்டது.
எட்டுவகையான குணங்களில் ஒன்றான ‘பேரருள் உடைமையை’ முன்வைத்து சிவபெருமான் தான் படைத்த எல்லா உயிர்கள் மீதும் வைத்த எல்லையில்லா பெரும் கருணையினால் அந்த உயிர்களுக்கு அவனே தலைவன் ஆகிறான்.
‘கல் நார் உரித்தென்ன’ எனவும் ‘கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிகல்லைப் பிசைந்து கனியாக்கி தன் கருணை வெள்ளத்து அழுத்தினான் ” எனும் வரிகளும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
‘விச்சைகொண்டு’ – வித்தை கொண்டு – கல்லை மென்கனியாக்குதல் வித்தையால் நிகழ்தப் பெறும். அதைப் போல எனது வன்மையான மனத்தை நெகிழ்வித்து நின்தாளுக்கு உரிய அன்பனாக்கியது பெரிய வித்தை எனும் பொருள் பற்றி.
‘வல்லையே’ எனும் ஏகாரம் தேற்றம் பற்றி நின்றதால் `இனியும் என்னை மீட்க நீ வல்லாய் என்னும் துணிவுடையவன் ஆனேன்` எனும் பொருள் பற்றி.
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காரியத்தை உண்டாக்கும் கர்த்தா எது? அதன் வேறு பெயர் என்ன? நிமித்த காரணம், காரண கர்தா.
அஞ்சுமுகத் தான்மகன்மால் அஞ்சுமுகத் தான் அருள்வான் அஞ்சுமுகத் தான்அஞ் சணிகரத்தான் – அஞ்சுமுக வஞ்சரையான் காணா வகைவதைத்தான் ஓர் அரையோ டஞ்சரையான் கண்கள் அவை.
திருவருட்பா – இராமலிங்க அடிகள் எனும் திருவருட்பிரகாச வள்ளலார்
கருத்துஉரை
ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்களையுடைய சிவனுக்கு திருமகனும், திருமால் சக்கரப் படையை இழந்து பெற மாட்டாது அஞ்சிய போது அதனைப் பெறுவித்து அருளியவனும், ஐம்புலன் வழி செல்லும் ஆசைகளை அன்பர்கள்பால் செல்லாதவாறு அவைகளை விலக்கி அருளும் ஐந்தாகிய அழகிய கைகளை உடையவனும், கண்கள் மூன்று உடையவனுமாகிய விநாயகப் பெருமான் அஞ்சத்தக்க இயல்பையுடைய வஞ்சகர்களை யான் கூடிக்கெடாதவாறு காத்து அருளுவான்.
விளக்க உரை
விநாயகப் பெருமான் வஞ்சரோடு கூடிக் கெடாதவாறு அருளியது குறித்தது வியந்து போற்றியது இப்பாடல்.
திருமாலின் சக்கரப் படையை விநாயகரின் கணங்களில் ஒன்று வாயில் கவ்விக் கொள்ள அதனைப் பெறும் வழி அறியாது அஞ்சியபோது செய்வகையை தெரிவித்து அதனைப் பெறுவித்தவர் விகடச் சக்கர விநாயகர் – காஞ்சிப் புராண விகடச் சக்கர விநாயகர் வரலாறு
ஓர் அரையோ டஞ்சரையான் கண்கள் – ஓரு அரையோடு(0.5) அஞ்சரை (5.5), ஆக மொத்தம் 6.0, ஆறரையாய் (ஆறில் பாதியான மூன்று கண்கள் உடையவன்)
கண்கள் மூன்று உடையவனுமாகிய விநாயகப் பெருமான் – ஓம் ஈச புத்ராய நம: எனும் நாமாவளியோடு ஒப்புமை படுத்தி சிந்திக்கத் தக்கது
விநாயகன் ஐந்து கரம் – தன்பால் அன்பு செய்யும் ஆன்மாக்களின் ஆசைகளை(பஞ்ச இந்திரியங்களில் எழும் ஆசைகளை) விலக்குதல் பொருட்டானது
துக்கடா – சைவசித்தாந்தம்வினாவிடை
காரியம் தோன்றும் வரை இருந்து பின் நீங்கும் காரணம் எது? துணைக்காரணம்
அந்திப்பன் திங்கள் அதன்பின்பு ஞாயிறு சிந்திப்பன் என்றும் ஒருவன் செறிகழல் வந்திப்பன் வானவர் தேவனை நாடொறும் வந்திப்ப தெல்லாம் வகையின் முடிந்ததே.
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
கருத்துஉரை
இடநாடியாகிய சந்திர கலை வழியாகவும், பின்பு வல நாடியாகிய சூரிய கலை வழியாகவும், பிராண வாயுவை அடக்கியும், வெளியே விட்டும் ஒப்பற்ற நிறைவு உடைய ஒருவனாகி, வானில் அரசாளும் தேவர்களின் தலைவனாக இருந்து வழிபாடு செய்யத்தக்கதாகவும் இருக்கும் சிவனது திருவடிகளை என்றும் வணங்கி தியானிப்பேன். அவனை புறத்திலும் கண்டு வழிபடுவேன். இவை எல்லாமும் இங்குக் கூறிய தாசமார்க்கத்தில் சொல்லப்பட்டவை.
விளக்க உரை
‘பின்பு அவனைப் புறத்திலும் சில இடங்களில் கண்டு வழிபடுவேன்’ எனு சில இடங்களில் விளக்கம் தரப்பட்டுள்ளன. ‘சில இடங்களில் கண்டு வழிபடுவேன்’ எனும் பொழுது பல இடங்களில் கண்டு வழிபட மாட்டேன் எனும் பொருள் விளக்கமுறும். சித்தர் என்பதாலும், அக மற்றும் புற வழிபாட்டு முறைகளை அறிந்து கூறுவதாலும் ‘அவனை புறத்திலும் கண்டு வழிபடுவேன்’ எனும் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. (இறை அன்பர்கள் தகுந்த விளக்கம் அளித்தால் பொருள் உணர்ந்து மகிழ்வுறுவேன்)
‘வந்திப்பவர் உன்னை வானவர் தானவர் ஆனவர்கள்’ எனும் அபிராமி அந்தாதி வரிகளும் ‘வந்திப்பன் வானவர் தேவனை’ எனும் இப்பாடல் வரிகளும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
எமது அழகிய மதுரை நகரமானது, திருமாலின் திருவுந்தித்தடத்தில் தோன்றி மலர்ந்த தெய்வத் தாமரைப் பூவினையே ஒத்ததாக இருக்கிறது. அப்படிப்பட்ட மதுரையில் அமைந்த தெருக்கள் அத்தாமரை மலரினது அகவிதழ்களையே ஒத்து இருக்கின்றன. அந்த மதுரையின் நடுவே அமைந்த எம் வேந்தனின் அரண்மனை, அந்த இதழ்களின் நடுவே அமைந்துள்ள அரிய அழகுடைய கூர்முனைக்கோபுரம் போன்ற வடிவினை ஒத்ததாக இருக்கிறது.
விளக்க உரை
மாயோன் – கரிய நிறமுடையோன் என அதன் பொருள் குறியாது திருமால் என்னும் பெயராய் நின்றது.
கொப்பூழ் – உந்தி
அண்ணல் கோயில்’ விளக்கம் 1 – ஆலவாய் அண்ணல் என்று சிவனைக் குறிப்பிடுவார்கள். சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் ‘பொலங்கலப் புரவி பண்ணிப் .. தணைந்தனன் அண்ணல் கோயில்’ (திருமலைச் சருக்கம் – தடுத்தாட்கொண்ட புராணம்) என்று தியாகேசர் திருக்கோவிலைப் பற்றி கூறுகிறார். பரிபாடல், காலத்தால் முற்பட்டதால் சிவனையும், திருமாலையும் ஒரே இடத்தில் பாடலில் வைத்து போற்றுவதற்காக அவ்வாறு பாடி இருக்கலாம்.
‘அண்ணல் கோயில்’ விளக்கம் 2 – பாண்டிய மன்னனின் அரண்மனை – பொதுவாக தன்னலம் கருதா உயர் குணம் கொண்டவர்களை அண்ணல் என்று அழைப்பது உண்டு. (உ.ம் காந்தி அண்ணல்). அவர் இருப்பிடம் என்பதால் கோயில் என்று அழைத்திருக்கலாம். அகழ்வாராய்ச்சில், தற்போது கீழடியில் கிடைத்திருக்கும் இடமாக இருக்கலாம்.
படிக்கின்றிலை பழநித் திருநாமம், படிப்பார் தாள் முடிக்கின்றிலை, முருகா என்கிலை, முசியாமல் இட்டு மிடிக்கின்றிலை, பரமானந்தம் மேற்கொள விம்மிவிம்மி நடிக்கின்றிலை, நெஞ்சமே தஞ்சம் ஏது நமக்கு இனியே?
கந்தர் அலங்காரம் – அருணகிரிநாதர்
கருத்துஉரை
நெஞ்சமே, பழநியில் எழுந்தருளியுள்ள திருமுருகப்பெருமானின் திருநாமங்களை ஓதவில்லை. அவ்வாறு பழநி ஆண்டவரது திருநாமங்களை ஓதுகின்ற அடியார்களின் திருவடிகளைத் தலையில் சூடிக் கொள்ளவில்லை. (அஃதாவது பாதம் பணிந்து வணங்கவில்லை). அனைத்தும் அறிந்த பரம்பொருளாகிய திருமுருகப்பெருமானை ‘முருகா’ என்று அழைக்கவில்லை. யாசிப்பவர்கள் பசிப் பிணி கொண்டு மெலிவடையாமல் இருக்கும் பொருட்டு அவர்களுக்குப் உணவு வழங்கி, அக்காரணம் பற்றி நீ வறியவனாகிவிடவில்லை. பேரின்பம் மிகுதியாக வரும்பொருட்டு விம்மி விம்மி அழவில்லை. இனி நமக்கு அடைக்கலம் தரும் பற்றுக்கோடு எங்கு உள்ளது?
ஐயா! மனதில் நினைத்ததை தரும் சதுரகிரியில் வளரும் அறப்பளீசுர தேவனே! தலைவனே! முப்புரங்களை நீறுபடச் செய்த பெரியோனே!, தூயவனே! தலைவனாகிய எமது தேவனே! வைதாலும், ஏதேனும் கொடுமை இழைக்கினும், மாறாமல் சினந்து இழிவுபடுத்தினும், சிறிதும் மனம் கோணாமலும் வெட்கப்படாமலும், உண்மையாக எனக்கு அன்னையும் தந்தையும் நீயேயென்று கூறி, ஆசிரியனுக்கு மனங்கனிந்து வழிபாடு செய்து, என் பொருளும் உடலும் உயிரும் உன்னுடையவை என்று கூறி அனைத்தையும் கொடுத்து, இரவும் பகலும் விடாமல் வணங்கி, ஆசிரியனின் மலர்போன்ற திருவடிகளில் உண்மையாகவே வீழ்ந்து புகழ்ந்து கூறி, அறிவுபெற விரும்புவோர் நல்ல மாணாக்கராவர். அவர்களுக்கு வினையின் வேருடன் கெடும்படி அருள் செய்வது சிறந்த ஆசிரியரது கடமையாகும்.
விளக்கஉரை
நன்மாணாக்கர் இயல்புகளை விளக்கும் பாடல்
ஆசிரியரின் திருவடியை வணங்குதல் அனைத்து வினைகளையும் அழிக்கும்.
தேகம் விட்டதும், ஒன்றிலும் பற்றில்லாதும், காட்சிக்கு அகப்படாததுமான ஆத்மாவை எடுத்து எமன் அருகில் கொண்டு செல்வது எப்படி?
சிவன்
கர்மவசியம், போகவசியம், துக்கவசியம் என மூன்றுவகைத் காரணதேகங்கள் உண்டு.
கர்மவசியம் என்பது மானிட தேகம்
போகவசியம் என்பது தேவலோகத்தில் உள்ள தேகம்
துக்கவசியம் என்றும் யாதனாவசியம் என்றும் கூறப்படும் மாயையால் உண்டாக்கப்படும் தேகம்
யாதனாவசியம் எனும் தேகம் எமலோகம் தவிர எங்கும் காணப்படவில்லை. உயிர்கள் மறித்தப்பின் யாதனாவசியம் எனும் தேகம் சேர்த்து மாயையினால் உயிர்கள் எம பட்டணத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர். நிராபாதம் எனும் மார்க்கம் கொண்டு இராணுவ வீரர் வேஷத்துடன் இரண்டாவது பிரிவு உடைய உயிர்களை கொண்டு செல்கின்றனர். அதர்ம மார்கம் உடையவர்களை சண்டாள வேஷத்துடன் பாசங்களினால் கட்டி அடித்து பயமுறுத்தி துர்த்தசம் எனும் வழியில் கொண்டு செல்கின்றனர்.
இவ்வாறு மூன்று வகைகளாக எமலோகம் எடுத்துச் செல்கின்றனர். அங்கு சென்றப்பின்னர் தர்மாசனத்தில் தனது மந்திரிகளோடு இருக்கும் எமனிடம் அழைத்துவந்த உயிர்களை குறித்து விபரம் தெரிவிக்கின்றனர்.
எமனானவன், வந்தவர்களில் இருக்கும் உத்தமர்களை முறைப்படி பூஜித்து, அவர்களை வரவேற்று அவர்களின் கர்மத்தை எடுத்துரைத்து அவர்களுக்கு தகுந்த லோகங்களை குறித்து கட்டளையிட்டு அவர்களை சுவர்க்கம் செல்ல அனுமதிக்கிறான்.
நடுத்தரமானவர்களின் கர்மங்களைக் கேட்டப்பின் சரியாக விசாரித்து அவர்களை மானிட பிறப்பில் பிறக்க கட்டளை இடுகிறான்.
அதர்மர்களை எமன் பார்ப்பதே இல்லை.யாதனா வசியம் சேர்ந்த மாயை கொண்ட உயிர்களை வெட்டியும், மோதியும், குழிகளில் தள்ளியும், ஸம்யாமினி எனும் பாறைகளில் மோதச் செய்தும் துன்புறுத்துகின்றனர். இரும்பு போன்று உறுதியான அலகு உடையதும், மிகக் கொடியதுமான கழுகுகள் அந்த உயிர்களை துன்புறுத்துகின்றன. அவர்களில் சிலர் அஸிபத்ரவனத்தின் வழியே நடந்து செல்கின்றனர். அங்கே கூரான பற்களுடன் கூடிய நாய்கள் அவர்களை கடித்து துன்புறுத்துகின்றன. மலக்கழிவுகளால் நிரம்பி பிரவாகமாக செல்வதும், அருவருக்கத் தக்கதும், முதலைகள் நிரம்பியதும், ஆழமானதும் ஆன வைதரணி நதி இருக்கிறது. எமதூதர்கள் கொண்டு சென்ற உயிர்களை அதில் குளிக்கச் செய்து அந்த நதி நீரையே குடிப்பிக்கச் செய்கின்றனர். செக்கு இயந்திரங்களில் அரைக்கப்பட்டும், தணல்களில் எரிக்கப்பட்டும், மூடி வேகவைக்கப்பட்டும் துன்புறுத்தப்படுகின்றனர். வாள் முதலிய ஆயுதங்களால் அறுக்கப்பட்டும், வெட்டப்பட்டும், துண்டாக்கப்பட்டும், சூலங்களாலும், சிறிய ஊசிகளால் குத்தப்பட்டும் துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வாறு தண்டிக்கும் போது இன்ன பாவத்திற்காக இன்ன தண்டனை என்றும் கூறி தண்டிக்கின்றனர். இவ்வாறு யாதனாவசியம் எனும் தேகத்தால் துன்புறும் உயிர்கள் துன்பத்தை அடைந்து இது தாங்கள் செய்த பாவத்தினால் வந்து என்று உணர்ந்து கதறி அழுது தண்டனைகளை அனுபவிக்கின்றனர். அங்கே துன்பங்களை அனுபவித்தப்பின் அழுக்கற்றவர்களாகி பாவத்தில் இருந்து விடுபடுகின்றனர்.
(இந்த விளக்கங்கள் மிக நீளமாக இருப்பதாலும், கருட புராணத்தில் விபரமாக விளக்கப்பட்டிருப்பதாலும் மேல் விபரம் தேவைப்படுபவர்கள் படித்து அறிந்து கொள்க)
உமை
அசுபகர்மம், சுபகர்மம் எப்படிப்பட்டது? அதனை விளக்குங்கள்.