
ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – பொகுட்டு
பொருள்
- கூர்முனைக்கோபுரம் போன்ற வடிவு
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
மூலம்
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையுஞ் சீரூர் பூவின்
இதழகத் தனைய தெருவம் இதழகத்
தரும்பொகுட் டனைத்தே அண்ணல் கோயில்
பத பிரிப்பு
மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும், சீர் ஊர்; பூவின்
இதழகத்து அனைய தெருவம்; இதழகத்து
அரும் பொகுட்கு அனைத்தே, அண்ணல் கோயில்;
பரிபாடல்
கருத்து உரை
எமது அழகிய மதுரை நகரமானது, திருமாலின் திருவுந்தித்தடத்தில் தோன்றி மலர்ந்த தெய்வத் தாமரைப் பூவினையே ஒத்ததாக இருக்கிறது. அப்படிப்பட்ட மதுரையில் அமைந்த தெருக்கள் அத்தாமரை மலரினது அகவிதழ்களையே ஒத்து இருக்கின்றன. அந்த மதுரையின் நடுவே அமைந்த எம் வேந்தனின் அரண்மனை, அந்த இதழ்களின் நடுவே அமைந்துள்ள அரிய அழகுடைய கூர்முனைக்கோபுரம் போன்ற வடிவினை ஒத்ததாக இருக்கிறது.
விளக்க உரை
- மாயோன் – கரிய நிறமுடையோன் என அதன் பொருள் குறியாது திருமால் என்னும் பெயராய் நின்றது.
- கொப்பூழ் – உந்தி
- அண்ணல் கோயில்’ விளக்கம் 1 – ஆலவாய் அண்ணல் என்று சிவனைக் குறிப்பிடுவார்கள். சேக்கிழார் தனது பெரிய புராணத்தில் ‘பொலங்கலப் புரவி பண்ணிப் .. தணைந்தனன் அண்ணல் கோயில்’ (திருமலைச் சருக்கம் – தடுத்தாட்கொண்ட புராணம்) என்று தியாகேசர் திருக்கோவிலைப் பற்றி கூறுகிறார். பரிபாடல், காலத்தால் முற்பட்டதால் சிவனையும், திருமாலையும் ஒரே இடத்தில் பாடலில் வைத்து போற்றுவதற்காக அவ்வாறு பாடி இருக்கலாம்.
- ‘அண்ணல் கோயில்’ விளக்கம் 2 – பாண்டிய மன்னனின் அரண்மனை – பொதுவாக தன்னலம் கருதா உயர் குணம் கொண்டவர்களை அண்ணல் என்று அழைப்பது உண்டு. (உ.ம் காந்தி அண்ணல்). அவர் இருப்பிடம் என்பதால் கோயில் என்று அழைத்திருக்கலாம். அகழ்வாராய்ச்சில், தற்போது கீழடியில் கிடைத்திருக்கும் இடமாக இருக்கலாம்.
![]()