ஓவியம் : இணையம்
உமை
தேகம் விட்டதும், ஒன்றிலும் பற்றில்லாதும், காட்சிக்கு அகப்படாததுமான ஆத்மாவை எடுத்து எமன் அருகில் கொண்டு செல்வது எப்படி?
சிவன்
கர்மவசியம், போகவசியம், துக்கவசியம் என மூன்றுவகைத் காரணதேகங்கள் உண்டு.
- கர்மவசியம் என்பது மானிட தேகம்
- போகவசியம் என்பது தேவலோகத்தில் உள்ள தேகம்
- துக்கவசியம் என்றும் யாதனாவசியம் என்றும் கூறப்படும் மாயையால் உண்டாக்கப்படும் தேகம்
யாதனாவசியம் எனும் தேகம் எமலோகம் தவிர எங்கும் காணப்படவில்லை. உயிர்கள் மறித்தப்பின் யாதனாவசியம் எனும் தேகம் சேர்த்து மாயையினால் உயிர்கள் எம பட்டணத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர். நிராபாதம் எனும் மார்க்கம் கொண்டு இராணுவ வீரர் வேஷத்துடன் இரண்டாவது பிரிவு உடைய உயிர்களை கொண்டு செல்கின்றனர். அதர்ம மார்கம் உடையவர்களை சண்டாள வேஷத்துடன் பாசங்களினால் கட்டி அடித்து பயமுறுத்தி துர்த்தசம் எனும் வழியில் கொண்டு செல்கின்றனர்.
இவ்வாறு மூன்று வகைகளாக எமலோகம் எடுத்துச் செல்கின்றனர். அங்கு சென்றப்பின்னர் தர்மாசனத்தில் தனது மந்திரிகளோடு இருக்கும் எமனிடம் அழைத்துவந்த உயிர்களை குறித்து விபரம் தெரிவிக்கின்றனர்.
எமனானவன், வந்தவர்களில் இருக்கும் உத்தமர்களை முறைப்படி பூஜித்து, அவர்களை வரவேற்று அவர்களின் கர்மத்தை எடுத்துரைத்து அவர்களுக்கு தகுந்த லோகங்களை குறித்து கட்டளையிட்டு அவர்களை சுவர்க்கம் செல்ல அனுமதிக்கிறான்.
நடுத்தரமானவர்களின் கர்மங்களைக் கேட்டப்பின் சரியாக விசாரித்து அவர்களை மானிட பிறப்பில் பிறக்க கட்டளை இடுகிறான்.
அதர்மர்களை எமன் பார்ப்பதே இல்லை.யாதனா வசியம் சேர்ந்த மாயை கொண்ட உயிர்களை வெட்டியும், மோதியும், குழிகளில் தள்ளியும், ஸம்யாமினி எனும் பாறைகளில் மோதச் செய்தும் துன்புறுத்துகின்றனர். இரும்பு போன்று உறுதியான அலகு உடையதும், மிகக் கொடியதுமான கழுகுகள் அந்த உயிர்களை துன்புறுத்துகின்றன. அவர்களில் சிலர் அஸிபத்ரவனத்தின் வழியே நடந்து செல்கின்றனர். அங்கே கூரான பற்களுடன் கூடிய நாய்கள் அவர்களை கடித்து துன்புறுத்துகின்றன. மலக்கழிவுகளால் நிரம்பி பிரவாகமாக செல்வதும், அருவருக்கத் தக்கதும், முதலைகள் நிரம்பியதும், ஆழமானதும் ஆன வைதரணி நதி இருக்கிறது. எமதூதர்கள் கொண்டு சென்ற உயிர்களை அதில் குளிக்கச் செய்து அந்த நதி நீரையே குடிப்பிக்கச் செய்கின்றனர். செக்கு இயந்திரங்களில் அரைக்கப்பட்டும், தணல்களில் எரிக்கப்பட்டும், மூடி வேகவைக்கப்பட்டும் துன்புறுத்தப்படுகின்றனர். வாள் முதலிய ஆயுதங்களால் அறுக்கப்பட்டும், வெட்டப்பட்டும், துண்டாக்கப்பட்டும், சூலங்களாலும், சிறிய ஊசிகளால் குத்தப்பட்டும் துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வாறு தண்டிக்கும் போது இன்ன பாவத்திற்காக இன்ன தண்டனை என்றும் கூறி தண்டிக்கின்றனர். இவ்வாறு யாதனாவசியம் எனும் தேகத்தால் துன்புறும் உயிர்கள் துன்பத்தை அடைந்து இது தாங்கள் செய்த பாவத்தினால் வந்து என்று உணர்ந்து கதறி அழுது தண்டனைகளை அனுபவிக்கின்றனர். அங்கே துன்பங்களை அனுபவித்தப்பின் அழுக்கற்றவர்களாகி பாவத்தில் இருந்து விடுபடுகின்றனர்.
(இந்த விளக்கங்கள் மிக நீளமாக இருப்பதாலும், கருட புராணத்தில் விபரமாக விளக்கப்பட்டிருப்பதாலும் மேல் விபரம் தேவைப்படுபவர்கள் படித்து அறிந்து கொள்க)
உமை
அசுபகர்மம், சுபகர்மம் எப்படிப்பட்டது? அதனை விளக்குங்கள்.
தொடரும்..