ஓவியம் : இணையம்
‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ – ஏலுதல்
பொருள்
- இயலுதல்
- பொருந்துதல்
- தகுதியாதல்
- கூடுதல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
இல்லை நின்கழற் கன்ப தென்கணே
ஏலம் ஏலுநற் குழலி பங்கனே
கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்
டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய்
எல்லை யில்லைநின் கருணை யெம்பிரான்
ஏது கொண்டுநான் ஏது செய்யினும்
வல்லை யேயெனக் கின்னும் உன் கழல்
காட்டி மீட்கவும் மறுவில் வானனே.
எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்
கருத்து உரை
நான் எதனைக் கருவியாகக்கொண்டு (ஐம் புலன்கள்) எத்தீய செயலைச் செய்தாலும் (புலன் வழி தொழில்கள்), இனியும் உன்னுடைய திருவடியை எனக்குக் காட்டி மீட்டு ஆட்கொள்ளவும் ஆற்றலுடையவனே! ‘மறு இல்லாத வானம் எனப்படும்’ ஐம் பெரும் பூதங்களும் பொருள் பிரபஞ்சமாகத் தோன்ற இடம் தந்து நிற்கும் குற்றமில்லாத வானமாகிய சிவலோகத்தை உடைய சிவமே! வாசனை திரவியங்கள் பொருந்திய அழகிய கூந்தலையுடைய தேவியை தன்னுடைய ஒருபாகமாக உடையவனே! எம் பெருமானே! உன்னுடைய திருவடியை போற்றுவதற்கு உரிய அன்பு என்னிடம் இல்லை (எனினும்) கல்லை உண்பதற்கு ஏற்ற பழமாகச் செய்கின்ற வித்தையைக் கொண்டு என்னை உன்னுடைய திருவடிக்கு அன்புடையனாகச் செய்தாய் உன்னுடைய திருவருளுக்கு ஓர் அளவுவே இல்லை.
விளக்க உரை
- இதனால், பசு கரணத்தை, பதி கரணமாக மாற்றித் ‘திருவடி இன்பத்தை நல்கும் ஆற்றலுடையவன் இறைவன்’ என்பது கூறப்பட்டது.
- எட்டுவகையான குணங்களில் ஒன்றான ‘பேரருள் உடைமையை’ முன்வைத்து சிவபெருமான் தான் படைத்த எல்லா உயிர்கள் மீதும் வைத்த எல்லையில்லா பெரும் கருணையினால் அந்த உயிர்களுக்கு அவனே தலைவன் ஆகிறான்.
- ‘கல் நார் உரித்தென்ன’ எனவும் ‘கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிகல்லைப் பிசைந்து கனியாக்கி தன் கருணை வெள்ளத்து அழுத்தினான் ” எனும் வரிகளும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
- ‘விச்சைகொண்டு’ – வித்தை கொண்டு – கல்லை மென்கனியாக்குதல் வித்தையால் நிகழ்தப் பெறும். அதைப் போல எனது வன்மையான மனத்தை நெகிழ்வித்து நின்தாளுக்கு உரிய அன்பனாக்கியது பெரிய வித்தை எனும் பொருள் பற்றி.
- ‘வல்லையே’ எனும் ஏகாரம் தேற்றம் பற்றி நின்றதால் `இனியும் என்னை மீட்க நீ வல்லாய் என்னும் துணிவுடையவன் ஆனேன்` எனும் பொருள் பற்றி.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
காரியத்தை உண்டாக்கும் கர்த்தா எது? அதன் வேறு பெயர் என்ன?
நிமித்த காரணம், காரண கர்தா.