நின்மல மேனி நிமலன் பிறப்பு இலி என்னுளம் வந்து இவன் என் அடியான் என்று பொன் வளர் மேனி புகழ் கின்ற வானவன் நின்மலம் ஆகென்று நீக்க வல்லானே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
சிவபெருமான் இயல்பாகவே மலங்கள் அற்றவனாகிய தூயமேனியன்; இயல்பாகவே பாசங்களினின்று நீங்கியவன் ஆனதால் அழுக்கு இல்லாதவன்; என்றும் பிறப்பு இல்லாதவன்; திருவருளால் என் உள்ளத்தே வந்து வெளிப்பட்டு ‘இவன் என் அடியான்’ என்று அறிவித்து அருளினன்; .அனைவராலும் புகழத்தக்க பொன்போன்ற திருமேனியையுடைய உயர்ந்தவனாகவும் வானவனாகவும் ஆன அவன் அடியானென்று என்று கொண்டது மட்டுமல்லாமல் ‘என்னைப் போல மலம் நீங்கித் தூயன் ஆகுக’ என்று மல பாகம் நீக்கியும் அருளினன்.
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, நீ உண்மையாக விளங்கும் மெய் அன்பர்களிடத்தில் பரந்து இருக்கும் அருட்கடலாகவும், ஞானத்தின் வடிவாக தோன்றும் ஞானத்தாமரையில் விரிவாய்ப் பொருந்தும் பரநிதியாகவும், தன்னை வழிபடுவர்களின் அடியார்களின் வினைகளை அகற்றும் திருவடிகளை உடையவளாகவும், பிறவிப் பிணி நீக்கம் கைவரப் பெற்ற தவத்தோர்களும், உயர்ந்தவர்களான வானோர்களும் உறுதியுடன் மகிழ்கின்ற பதிப்பொருளாகவும், யோக நிலையில், இறைவனோடு ஒன்றிய சிவசக்தி ரூபமான வடிவத்தில் ஒளி வடிவமாகவும், துவாத சாந்த பெருவெளியாகவும் தோன்றி காணப்படுபவளாகவும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம்மாவின் சக்தியாகிய சரஸ்வதியால் தினமும் வழிபாடு செய்யப்படுபவளாகவும், உடலோடு கூடியனவாகவும், கூடாதனவாகவும் ஆகிய உயிர் வர்க்கங்களின் வகைகளாகிய முட்டையில் தோன்றுவன ஆகிய அண்டசம், வியர்வையில் தோன்றுவன ஆகிய சுவேதசம், வித்து வேர் முதலியவைகளில் தோன்றுவன ஆகிய உற்பிசம், கருப்பையில் தோன்றுவன ஆகிய சராயுசம் ஆகியவற்றின் * அறிவுக்கு அறிவாய் விளங்கும் ஞான சொரூபமாக விளங்குபவளாகவும், வையகத்தில் இருப்பவர்களால் அளவிட முடியா அருள் மலையாகவும் (வையகத்தினை விட பெரிய அளவிலான அருள் மலையாக எனவும் கொள்ளலாம்) துவாதசாதித்தருளுபவர்களில் ஒருவனாகவும், சூரியனின் ஒளி வடிவமாகவும் செந்திறம் கொண்ட துவாதசாதித்தருளுபவர்களில் ஒருவனாகவும், பல நிறம் கொண்ட சூரியனின் ஒளி வடிவமாகவும் விளங்குகிறாய்.
விளக்கஉரை
அடுத்து வரிகளில் வரும் ‘விளையும் ஞான முளரியினில்’ என்பதனை முன்வைத்து உடலில் தோன்றிய அருட்கடலே என்னும் கருத்து விலக்கப்பட்டுள்ளது.
எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது புண்ணியம் வந்து எய்த போது அல்லால்-கண் இல்லான் மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே ஆங்காலம் ஆகும் அவர்க்கு
நல்வழி – ஔவையார்
பதவுரை
செய்துமுடிக்கும் செயலெல்லாம் செய்த புண்ணியத்தால் நிறைவேறியது என்பது அன்றி எவ்வொருவராலும் செயல் பற்றி எண்ணி அந்த செயலை தான் முடித்துவிடோம் என எண்ண இயலாது. காலம் சரியானதாக இருந்து நேரம் கூடிவரும் போது, கண் தெரியாத ஒருவன் தன் கையிலிக்கும் கோலை வீசி மாங்காய் விழுவது போன்று அது நிறைவேறும்.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல் பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும் ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை
மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை – கபிலதேவ நாயனார்
பதவுரை
குற்றமற்ற செல்வம், செய்த, செய்யப்படுகின்ற இனி செய்ய இருக்கும் அனைத்து கர்மங்கள் ஆகியவற்றை எவ்விதமான இடையூறும் இல்லாமல் முடியச் செய்தல், பெருமையின் ஆக்கம், குற்றமற்ற சொற்களை தரும் உயர்ந்த சொற்கள் ஆகியவற்றை மூத்த பிள்ளையார் ஆன ஆனை முகத்தான் தருவான். ஆதலால் அவனைக் காதலால், வானோரும் தம்முடைய கை கூப்பி தொழுவார்.
விளக்கஉரை
‘செய் கருமம் கை கூட்டும்; ஆதலால் கைகூப்புவர்` என்பது புலனாகும். `பிள்ளையாரைத் தொழாதபொழுது செய் கருமம் கை கூடுதல் அரிது` என்னும் குறிப்பும் புலப்படும்.
அறிவார் அறிவன அப்பும் அனலும் அறிவார் அறிவன அப்பும் கலப்பும் அறிவான் இருந்து அங்கு அறிவிக்கின் அல்லால் அறிவான் அறிந்த அறிவு அறியோமே
பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்
பதவுரை
மெய் தத்துவங்களின் தோற்றமுறை ஆய்தலை உடைய மெய் உணர்ந்த மேலோர் அருளால் அறிவது நீர் என்றும் திருவருள் என்றும் குறிக்கப்பெறும் அப்புவும், தீ எனவும் சிவபெருமான் எனவும் குறிக்கப் பெறும் அனலும்; அவ்வாறு அதன் பொருள் நுட்பம் உணர்பவர்கள் அவற்றின் பண்பும் கலப்பும் ஒடுக்கமும் ஆய்ந்து உணர்வார்கள்; இவ்வாறு அறிவது எல்லாம் ஒருங்கே உணரும் தன்மையும், எண் குணமும், முற்றுணர்வும் இயல்பாகவே அமைந்த சிவபெருமானாலே வாய்க்கப் பெறுகிறது. அஃதாவது அவன் உடனிருந்து இயங்கி அவன் இடம் அறிவித்தாலன்றி ஆருயிர்கள் அறியாது; அவனையின்றி அறிவு வசப்பட்ட ஆருயிர் அறிந்ததென்பதை எவரும் அறியார்.
விளக்கஉரை
மெய்ப் பொருள் அறிவு ஆசிரியனை இல்லாமல் உண்டாகாது எனும் பொருள் உடைக்கும் பாடல்
அருள் ஆகிய சக்தியும் சிவமும் கலந்து அருளுபவன் எனும் நிலையில் நின்று, அனைத்து உலகினையும் மற்றும் அவற்றின் தொழில் செய்வதைக் குறிக்கும் குறிப்பாகும்.
தாமாக அறியும் பொருள் அனைத்தும் காட்சிப் பொருள்களே. அவை மட்டும் அல்லாமல் கருத்துப் பொருள்களும் உள்ளன. அவற்றை அறிவிப்பவன் ஒருவன் இருந்துகொண்டு அறிவித்தாலன்றி, அறிபவன் தானே அறிந்து பெற்ற அறிவாக நாம் எந்த அறிவையும் அறிய இயலாது.
‘உலகாயதர்’ என்றும், ‘சாருவாகர்’ என்றும் ‘பூத வாதிகள்’ என்றும் கூறுபவர்களின் கருத்தாகிய ‘காட்சிப் பொருளன்றிக் கருத்துப் பொருள் இல்லை` எனும் விளக்கம் சைவ சித்தாந்த கருத்துப்படி மறுக்கப்பட்டுள்ளது
முதலில் வரும் ‘அறிவான்’ என்பது `முன்பே அறிந்துள்ளவன்` எனவும், பின்னது, `இனி அறிபவன்` எனவும் பொருள் தரும்.
அருளுதலைத் தருகின்ற திரிபுரையானவள், சத்த பிராமானமாகவும் சிவனின் நவபேதமூர்த்தங்களுள் ஒன்றானதும் ஆன நாதமாகவும், அவ்வாறான நாதத்தின் முடிவாகவும், பலவாய் விரிவதான சிவத்தோடு ஒன்றிய சக்தி ஆகிய பரவிந்து ஆகி பெரிய அண்டம் முதலிய அளவற்ற பொருள்களை ஆக்குவாள்; ஆக்கல் தொழிலோடு அருளுதலையும் செய்வதால் அவள் அனைவர்க்கும் மேலானவள்; அவளே சிவசத்தி வடிவமான பரை, அவளே அபிராமி, அவளே வாக்குக்கும் மனத்துக்கும் அப்பாற்பட்ட, புறக்கண்களுக்கு புலப்படாதவளும் அறியப்படாதவளும் ஆன அகோசரி என்ற போதிலும் அன்புடன் நம்மைத் தழுவிக் கொண்டு நல்ல அறிவை வழங்குபவள் ஆவாள்.
விளக்கஉரை
சத்தி போக மோட்சங்களைத் தருமாறு வகுத்துக் கூறப்பட்டப் பாடல்
அதிகாலை நேர சிவபூசைக்குரிய புஷ்பவிதியில் கூறியதான எட்டு மலர் வகைகளான. புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, நீலோற்பலம், பாதிரி, அலரி, செந்தாமரை என்னும் எட்டுவகை மலர்களை அரும்பு மலரோடு சூடிய வட்ட வடிவாகிய மெல்லிய சடை உடைய மறைக்காட்டுறையும் பெருமானே! நடனம் ஆடியும், நான்கு வேதங்கள் பாடியும் விருப்பமாகத் தேவரீர் எழுந்தருளியிருக்கும் இடம் இத்தலமே.
விளக்கஉரை
அடும்பு-அடப்பமலர்
வட்டப் புன்சடை – வட்டமாகக் கட்டிய மெல்லிய சடை.
கொல்லாமை, அருள், பொறி அடக்கம், பொறை, தவம், வாய்மை, அன்பு, அறிவு, என்னும் எட்டும் ஞானபூசைக்குரிய எண் மலர்கள்
மத்த யானை யேறி மன்னர் சூழ வருவீர்காள் செத்த போதில் ஆரு மில்லை சிந்தையுள் வைம்மின்கள் வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்மின் மனத்தீரே அத்தர் கோயில் எதிர்கொள்பாடி யென்ப தடைவோமே
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
பதவுரை
மத்தகம் என பொருள்படும் யானையின் உச்சிப் பகுதியின் மீது ஏறி சிற்றரசர்கள் சூழ உலா வருகின்ற பேரரசர்களே, நீங்கள் இறக்கும் காலத்தில் அப்போது உம்மோடு துணையாய் எந்த சிற்றரசர்களும் வரமாட்டார்கள். இதனை உங்கள் மனத்தில் நன்கு பதிய வைத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு வைத்தபிறகு மனத்தை அந்நிலையினின்றும் வேறுபடுத்தி, மீண்டும் இந்த வாழ்க்கையை உறுதியதாக நினைக்க வேண்டா. என் நெஞ்சீரே, நீரும் வாரும் அவர்களுடன் யாவர்க்கும் தந்தையாராகிய இறைவரது திருக்கோயிலாகிய ‘திருஎதிர்கொள்பாடி’ எனப்படுவதாகிய திருத்தலம் சென்று அடைவோம்.
மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவளே, வினை பற்றி மயக்கம் தருவதாகிய பிறவிப் பிணி நோயை தீர்க்கும் மருந்து போன்றவளே, தேவாமிர்தம் போன்றவளே, தேவர்களாலும் அறிய முடியாத கிருஷ்ணனின் சகோதரி ஆனவளே, உன்னை ஆராதிப்பவர்களும், உன்னை பக்தியுடன் பூசிப்பவர்களும், உனது திருநாமத்தை நினைப்பவர்களும் இன்ப சுகம் அனைத்தும் பெறுவார்கள் என்று முடிவாகிய வேதம் உரைப்பதற்கு ஏற்ப இருப்பவளே, அவ்வாறு அடியார்கள் பெறப்படும் இன்பத்தை நேரே இருந்து களிப்பவளே, நிலை பெற்ற சுகப் பொருளாகவும் ஆனவளே, முறையாகவும், அதன் வழி நிற்பவளாகி அதன் அடையாளமாகவும், குற்றம் அற்றவளாகி எனை ஆளக் கூடியவளாகவும், மிக்க பேரின்பம் வழங்கக் கூடியவளாகவும், வாராகினி தேவியாகவும், துன்பத்தைத் தரும் துட்டர்களின் மனதினை கோபத்தால் அழிப்பவளாகவும் இருக்கிறாய்.
விளக்கஉரை
முன்னர் மருந்து என்ற சொல் பயன்படுத்தப்படுள்ளதால் அருமையான மருந்து எனும் பொருள் விலக்கப்பட்டுள்ளது.
தேவர்களாலும் அறிய முடியாதவள் என்று சில இடங்களில் விளக்கப்பட்டுள்ளது ‘அறியா கிருஷ்ணன்’ எனும் பதம் கொண்டு ‘தேவர்களாலும் அறிய முடியாத கிருஷ்ணனின்’ என்று விளக்கம் தரப்பட்டுள்ளது.
தன்னிடம் செல்வம் மிகுதியா இருக்கிறது எனும் கர்வத்துடன் அதை விரும்பி அடையும் பாவிகளே, உடைக்கப்பட்ட மரமாகி விறகுடன் இந்த உடலையும் வெந்து போவதை நீங்கள் அறியவில்லையா? தனது வாரிசுகள், தன் மனைவி மற்றும் சுற்றம் என்று கண்ணால் காணப்படுபவை எல்லாம் மாயை ஆகிய இவைகள் கூற்றுவன் வந்து அழைத்தபோது இவைகள் சேர்ந்து வருமா?
விளக்கஉரை
கர்வம் கொண்ட உடலை தீயினில் இட்டு என்றும் பொருள் கொள்ளலாம்.
எங்கும்தான் வியாபியாய் நின்று உணரும் இவ் ஆன்மா என்னின் தங்கிடும் அவத்தை போக்கு வரவுகள் சாற்றல் வேண்டும் பங்கம் ஆர் புலன் ஒன்று ஒன்றாகப் பார்த்திடல் பகரல் வேண்டும் இங்கு எலாம் ஒழிந்தால், நிற்பது எங்கனம்? இயம்பல் வேண்டும்
சிவஞானசித்தியார் – சுபக்கம்
பதவுரை
ஐம்பொறிகளின் வாயிலாக உணரப்படும் உயிர் எங்கும் வியாபித்து நிற்கும் எனில் காரிய அவத்தைகளான நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படக்கம் ஆகியவற்றில் அது எங்கும் அறிவோடு இருக்க வேண்டும்; அது பற்றி தொடக்கம் மற்றும் முடிவு பற்றி உரைத்திடல் வேண்டும்; உயிர் எங்கும் வியாபித்து நிற்பின் குற்றம் நிறைந்த புலன் பற்றியும், குற்றமற்ற புலன் பற்றியும் எனத் தனித்தனியே அவைகளைப் பார்த்து சொல்ல வேண்டும்; பூவுலகில் உடல் அழிந்தால் உயிர் எவ்வாறு எங்கு நிலைபெற்று இருக்கும் என்பதை சொல்ல வேண்டும்; அவ்வாறு இல்லாமல் இருப்பதால் எங்கும் வியாபித்து நிற்பது உயிர் அல்ல
‘ஔஷதம்’ எனப்படும் மருந்தான அஷ்ட வர்க்க மருந்து வகைகளை அறிந்திலேன்; மணி எனப்படுவதும், நவமணிகளால் குறிக்கப்படுவதும் ஆன ரச மணியை பற்றியும் அறிந்திலேன்; மனோதிடத்தையும், தைரியத்தையும் தரக்கூடியதான உபதேசம் செய்யப்பட்டதுமான மந்திரம் என்பது பற்றி எதுவும் அறிந்திலேன்; வினைவழிச் செலுத்தும் எண்ணங்களைப் பற்றி அறிந்திலேன்; அவ்வாறு செலுத்தும் எண்ணம் பற்றி நடக்கும் நிகழ்வுகளாகிய விதிபற்றியும் அறிந்திலேன்; இதனால் வாழ்வில் ஏற்படும் நிலை மாற்றங்களை அறிந்திலேன்; வழி மாறி நடப்பது வினைபட்டு இருப்பதால் அதில் இருந்து திருந்துவதற்கு அறிந்திலேன்; அருளை எப்பொழுதும் வழங்கிக் கொண்டிருக்கும் திருவருள் பற்றியும் அறிந்திலேன்; இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டும் அறச் செயல்களை செய்ய அறிந்திலேன்; மனமடங்கும் திறம் அறிந்து எந்த ஒரு இடத்திலும் நிலையாக இருக்க அறிந்திலேன்; அவ்வாறு இருப்பவர்களை அறிந்து அவர்களை புகழ்ந்து துதிக்க அறிந்திலேன்; என்னுடைய பிரானாகிய இருப்பிடமாகிய மணிமன்றம் * இருக்கும் இடம் அறிந்திலேன்; அவன் இருந்த திசை சொல்வதற்கு அறிந்திலேன்; எவ்வாறு அவன் இடம் அறிந்து அங்கு செல்வேன்; இதுபற்றி யாரிடத்தில் உரைக்க வேண்டும் என்று அறிந்திலேன்; என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் அறியாதவனாக இருக்கிறேன்.
திருச்சோபுரம் விரும்பி அடையும் இறைவனே! இலங்கையில் நிலைபெற்று வாழும் வாள் போரில் வல்லவராகிய அசுரர்களின் தலைவனாகிய இராவணனைத் தனது அழகிய கால் விரலால் நடுங்குமாறு ஊன்றிப் பின் அவன் தவறு உணர்ந்து மன்னித்து வேண்ட மகிழ்ந்து அருள்புரிந்தவனே! மேரு மலையை வில்லாகக் கொண்டு வலிமை பொருந்திய அரக்கர் குலங்கள் வாழ்கின்ற திரிபுரங்களாகிய ஊர்களை எரித்து அழித்தற்குக் காரணம் என்னவோ?
விளக்கஉரை
விலங்கல் – மேருமலை
அரக்கர் – திரிபுராதிகள்
ஆணவம் கொண்டு தன் தவற்றை உணர்ந்து பின் அவனை மன்னித்தல்
மட்டுப்படாத யமதூதர் வந்து வளைத்துடலைச் சுட்டுப் பல பொடியாக்கு முன் காத்தருள் தோடணிந்த பட்டுப் புயத்தினும் தண்டாயுதத்தினும் பாதத்தினும் தட்டுப் புழுகணியுங்காழி யாபதுத்தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
பதவுரை
காதில் தோடு அணிந்தவனும், கைகளின் மேற்பகுதி ஆகிய தோள்களின் மேல் பட்டு உடுத்தியவனும், தனது திருக்கரத்தில் தண்டாயுதமும், பாதத்தில் புனகு அணியும் ஆபதுத்தாரணனே, வரையறைக்கு உட்படாத யமதூதர்கள் இந்த உடலை சிதையால் எரியூட்டி அதை பொடியாக்கும் முன்னம் வந்து காத்து அருள வேண்டும்.
விளக்க உரை
ஸ்ரீ ல ஸ்ரீ 10 வது குருமூர்த்திகள் மிகப் பெரிய பைரவ உபாசகர் என்றும் காசி சென்ற போது அங்கிருந்து உபாசனை முறைகளை கற்றுவந்ததாகவும் செவி வழி செய்தி. இந்த ‘ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை’ மொத்தம் 30 பாடல்கள் கொண்டது.
உந்தி பற – ஆடும் மகளிர், பறவையைப் போல நிலத்தில் இருபாதங்கள் மட்டும் படிய, இருகைகளையும் மடக்கி இருந்து, பின் விரைவாக எழுந்து,தன் இருகைகளையும் இருபக்கங்களில் சிறகுபோல நீட்டி, பறவைகள் பறப்பதுபோலப் பாவனை செய்து ஓடி, வேறோர் இடத்தில் முன் போல அமர்ந்து, பின்னும் அவ்வாறே ஆடும் விளையாட்டு.
தோழியராய் ஒத்த நிலையில் இருக்கும் மகளிர் தம்மில் இவ்வாறு அழைத்துப் பாடியும், மற்றவர் அக்கருத்து ஒத்து ஆடுவர். இறைவனை விளிப்பவனாகவும், தன்னை ஆடுபவனாகவும் கொண்டு இயற்றப்பட்ட பாடல்.
( சித்தர் பாடல் பொருள் விளக்கம் அத்தனை எளிதானது அல்ல என்பதாலும், மானிடப் பிறப்பு பிழை உடையது என்பதாலும் எழுத்துக்களில், கருத்துக்களில் பிழை நேரலாம். அது என் பிழை. நிறை எனில் அது குருவருள்)