உடலில் இருக்கும் ஆதார சக்ரங்களில் ஒன்றானது மூலாதாரம்; அதில் முக்கோண வட்டம் உடையதாக இருக்கும்; தூய வடிவமாக இருக்கக்கூடிய கணேசனுக்கு அது ஆதார இடமாகும்; அங்கு வல்லபை எனும் சக்தியுடன் அவர் அங்கு இருக்கிறார்.
அன்னம் இட்ட பேரெலாம் அநேக கோடி வாழவே சொன்னம் இட்ட பேரெலாம் துரைத்தனங்கள் பண்ணலாம் விண்ணம் இட்ட பேரெலாம் வீழ்வார் வெந் நரகிலே கன்னம் இட்ட பேரெலாம் கடந்து நின்ற திண்ணமே!
அருளிய சித்தர் : சிவவாக்கியர்
பதவுரை
பசித்து வந்தவர்களுக்கு அன்னதானம் செய்தவர்கள் காலம் கடந்து வாழ்வதை அறியாமல், அன்னதானம் செய்வதற்கு பொன், பொருள் ஈந்தவர்கள் பொருள் ஈதல்பற்றி கர்வம் கொண்டு அதிகாரம் செய்யலாம்; ஐம்புலக் கள்வர்களை விலக்காமல் அவைகளைக் கடந்து நின்ற பரம்பொருளை அறியாதவர்கள் இறைவன் அனைத்து உயிர்களிலும் கலந்து இருப்பதை அறியாமல் அன்னதானம் செய்வதை குறித்து எதிர்மறை கருத்துக்கள் பேசி, குற்றம் என்று கூறி துன்பம் தரத்தக்க பாழும் நரகக் குழியில் வீழ்ந்து துயறுருவார்கள்.
ஐந்தெழுத்தால் இந்த உலகம் படைக்கப்படது; அந்த ஐந்தெழுத்தில் இருந்தே சீவன்கள் படைக்கப்பட்டது; ஐந்தெழுத்து கொண்டே இந்த நாள் எனப்படுவதும் உகம் முடிவுக்கு வரும்; ஐந்தெழுத்து கொண்டே நாளின் தோற்றம் உறுதி செய்யப்படும்.
இறைவனாகிய கச்சி ஏகம்பரனே! நல்ல கயிற்றினால் கட்டிய பொம்மை அந்த கயிற்றியில் இருந்து விடுபட்டால் அது தன்னால் ஆட இயலுமோ? அதுபோலவோ உன்னால் நான் இங்கு இயக்கப்படுகிறேன் என்பது தாண்டி உன்னைப் பிரிந்தால் என்னால் இங்கு ஏதாவது செய்யப்படுவதற்கு ஏதாவது உண்டோ?
ஒன்றைப் பிடித்தோர்க்கே பசுவே உண்மை வசப்படுமே நின்ற நிலைதனிலே பசுவே நேர்மை யறிவாயே
அருளிய சித்தர் : இடைக்காடர்
பதவுரை
பசு எனப்படும் மனமே, எக்காலத்திலும் நிலையானதும், அழியாதும் ஆன ஒன்றைப் பிடித்தவர்களுக்கே பதி பற்றிய உண்மை வசப்படும். (சுவாசமே அனைத்தையும் தீர்மானிக்கிறது என்பதால் சுவாசம் கைவரப் பெற்றவர்களுக்கே உண்மை கைவல்யமாகும் என்றும் பொருள் உரைப்பர்)*. ஞானமானது கைவரப் பெற்ற நிலைதனில் இதன் உண்மைப் பொருளினை அறிவாயாக.
மாந்தர்களே! பருத்தியை முறுக்கி திரிக்க பஞ்சு நூல் மாறி நூல்திரியாக வரும்; அதன் பின் பஞ்சு இருக்காது; அதுபோல,காற்று தங்கும் இடமான இந்த தோல்பை போன்ற உடலில் சூரிய கலை, சந்திரகலை ஆகியவற்றை கருத்தில் வைத்து முருக்கி மேலேற்றி அக்கினி கலையுடன் கலக்கச் செய்து சிவாய எனும் ஐந்தெழுத்தினை ஓதும் போது தொந்த வினைகளை நீக்கி காலத்தினை கடந்துவிடலாம்.
செல்வத்தினை தருவதும் செல்வம் என்று அழைக்கபடுவதுமான மாடும், வசிக்கத் தகுந்த இடமான மனைகளும், தனக்கு உறவான தம்மக்களும், தன்னைச் சார்ந்த சுற்றமும், வானளவாக இருக்கக்கூடியதான் பொருளும், வீடும், மணிகளும், வெண் பொன் என்பதான வெள்ளியும், செம்மையான பொன் என்பதான் தங்கமும், வெண்கலமும், உணவு தரத்தக்கதான் வயல்வெளிகளும், அதனை சூழ்ந்த நிலப்பரப்பும் கொண்டிருத்தலால் ஐராவதம் போன்ற யானையால் வணங்கப்படும் இந்திரப் பதவி ஒத்ததான நிலையும், தேடும் பலவகையானப் பொருள்களும் நில்லாமல் செல்வதால் அவைகளை விலக்கி சிவகதியினை அடையுங்கள்.
இந்த உலகத்தில் பிறவிகள் கோடி ஆகும்(எண்ணிக்கை அற்றவை என்பதைக் குறிக்கும், 84 லட்சம் என்பது சைவ சித்தாந்த வரையறை); அந்த பிறவி சாந்து வரும் படைப்புகளோ கோடி கோடியாக நீட்சி கொள்ளும் ((எண்ணிக்கை அற்றவை என்பதைக் குறிக்கும்); புழுவானது அதன் கூட்டில் இருந்து தப்பாதவாறு வலைப்பின்னல்கள் இருப்பதைப் போன்று இந்த அண்டத்திலும் பிறவிகள் கோடி ஒத்து இருக்கின்றன; அதில் எண்ணற்ற வகையான மாற்றங்கள் தினந்தோறும் நடைபெற்று கொண்டு இருக்கிறன; இதை புறக் கண்களால் கொண்டு அதை உற்று கவனிப்பாயாக; அவ்வாறு கவனிக்கும் போது இந்த அண்டத்தில் இருப்பது பிண்டம் எனப்படும் உடலில் இருக்கின்றது என்பது புலப்படும்; அதனை குருவின் அருளினால் சத்தியமாக உணர வேண்டும்.
மாலை, சந்தியா காலம் என்றெல்லாம் அழைக்கப்படும் அந்தி, மதியத்திற்கும் இரவிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியான மாலை, உச்சிக்காலம் ஆகிய காலங்களில் காலம் தவறாமல் தீர்த்தங்களில் நீராடியும், மாலையில் செய்யப்படுவதான தர்பணங்களும், புறத்தால் செய்யப்படுவதாகிய ஜெபம், ஆன்மீக முன்னேற்றத்திற்காக உடலாலும், வாக்காலும், மனதாலும் செய்யப்படும் அனைத்து சாத்விகமான ஆன்மீக சாதனைகளாகிய தவமும், சிறந்த சிந்தனை உடையவர்களும், ஞானமும் கொண்டவர்களால் நித்தமு ஜெபிக்கப்படும் மந்திரம் எம் தலைவன் ஆகிய ராமனின் நாமமாகிய ராம ராம ராம எனும் நாமமே.
மாலுந் திருவும் வசித்திருக்கும் இடம் வணங்கி இப்பால் செல்லும்போது மேலும் உருத்திரன் ருத்திரி சேவையை மேவியே காண்பாய் ஆனந்தப் பெண்ணே
அருளிய சித்தர் : சங்கிலிச் சித்தர் எனும் மதங்க நாதர்
பதவுரை
ஆனந்தத்தைத் தரும் மனமாகிய பெண்ணே! தனது தேவியாகிய அன்னையுடன் திருமால் வசிக்கக் கூடிய ஆதாரத்தானமாகிய மணிபூரகம் கடந்து அதை வணங்கி, மேலும் செல்லும் போது மற்றொரு ஆதாரமாகிய அனாகதத்தில் தனது தேவியாகிய ருத்ரியுடன் ருத்ரன் வீற்றிருந்து அவர் அருளும் சேவையினை மேன்மையாகக் காண்பாய்.
காதல் எனும் பற்றுக் கொண்டு அதில் உறைந்து நிற்கும் நெஞ்சமே முன்னோர்களால் அளிக்கப்பட்டதும், தம் வினை கொண்டு ஈட்டிய செல்வம் நீங்கில் இப்பூவுலகில் தாயும் பகை கொள்வர்; கொண்ட மனைவியும் பகை கொள்வர்; தன்னுடைய சேய்களும் பகை கொள்வர்; உறவினர்களும் பகை கொள்வர்; இந்த உலக மக்கள் முழுவதும் பகை கொள்வர்; ஆனால் சுதந்திரத்தினை மட்டும் தருபவன மருதீசரின் பொற்பாதங்கள் மட்டுமே.
என் கண்ணம்மா! ஆக்கினையை வில்லாக்கி(அமுத தாரணையினை அந்தரம் என்று குறிப்பிடுவதும் உண்டு, குரு முகமாக அறிக), பஞ்சாட்சர மந்திரத்தினை அம்பாகவும் ஆக்கி, அதில் மந்திரங்களை ஏற்றி, (சூட்சம பஞ்சாட்சரம், காரண பஞ்சாட்சரம், மஹா காரண பஞ்சாட்சரம், மஹா மனு ஆகிய முறைகளில்), இரவி எனும் சூரியக் கலை நாடியும், மதி எனும் சந்திரக்கலை நாடியும் வந்து உறையும் காட்டில் விளையாடி, மனமெனும் மனதினை வேட்டை ஆடி அதனால் மனம் மகிழ்ந்து பார்ப்பது என்றோ?
மனமாகிய பேயே! மனம், மொழி, காயம் ஆகியவை விட்டு மௌனம் பற்றி நிற்கும் இடம் சுட்டி உணர்த்தப்பட்டதைக் கண்டாயே, இதுவே உனக்கான சூத்திரம் என்று சொன்னேன். அதை கேட்டு மறந்துவிடாமல் இருப்பாயாக.
வாதங்கள் செய்வது வேரொன்றும் இல்லை வாசி அறிந்தோர்க்கு நாதம் பிறந்திடக் கண்டறிந் தோர்கள் நான் என்று சொல்லுவரோ?
அருளிய சித்தர் : ஏகநாதர் என்ற பிரம்மானந்தச் சித்தர்
பதவுரை
வாசிக் கலையினை அறிந்தவர்கள் ஒருவரின் கூற்றுக்கு மறுமொழி கூறி வாதங்கள் செய்வது இல்லை; அது போலவே தன்னுள் நாதத்தினை பிறந்திடக் கண்டவர்களும் (சங்கை ஒலிக்கச் செய்தல், தச தீட்சை ஒலி கேட்டல் என பலவும் அடங்கும்) தான் எனும் அகங்காரம் கொண்டு நான் எனும் அந்த வார்த்தையினைச் சொல்வார்களா?
சக்தியும், பராபரம் வேறு வேறு தெய்வம் அல்ல; இரண்டும் ஒன்றே. அது அண்டத்தில் உள்ள அனைத்து பொருள்களிலும் சீவனாக இருக்கிறது; இதை தன் முயற்சி செய்து சுய புத்தியாலோ அல்லது குருவருளால் கிடைக்கப் பெற்றவர்களோ புண்ணியர்கள்; கோடி பேர்களில் ஒருவர் மட்டுமே இந்த உலகில் அது குறித்த அனுபவங்களைப் பெறுகிறார்கள்; அவர்கள் பக்தி செலுத்துவதால் மனமானது பஞ்ச இந்திரியங்கள் வழி செல்லாமல் மனம் அலையாமல் அடங்கி இருப்பார்கள்; ஆணவம், மாயை, கன்மம் எனும் பாழ்படுத்துகின்றதில் மனத்தினை விடாமல் பரம் ஞானியாக இருபார்கள்; அவர்கள் மனம் சுற்றி அலைவதில்லை. இன்னொரு முக்கியமானதும் அதி சூட்சத்தில் சூட்சமான விஷயத்தினை சொல்கிறேன். அண்ட உச்சி எனப்படும், பொன்னம்பலத்தான் ஆடும் இடமாகிய சுழியத்தின் நிலை அறிந்தால் அவர்களுக்கு மோட்சம் கிட்டும்.
மின்னல் போல் தோன்றக் கூடியவள் ஆன அன்னையானவள், எண்ணற்ற எண்ணங்களைக் கொண்டு தம் மனதை குப்பையாக வைத்திருக்கும் மனிதர்களிடத்தில் அவைகளை நீக்குதல் பொருட்டு இவள் பூத்திருப்பாள்; பொன் போன்ற மேனியினைக் கொண்டு நிற்பாள்; தர்பை கொண்டு செய்யக் கூடியதான் அக்கியில் எழும் தழல் போல் சிவப்பு நிறம் கொண்டவளாக இருப்பாள்; காட்டில் சரணடைந்த பாம்பானது எவரும் அறியாமல் இருப்பது போல் இருக்கும் இவளை நேசமுடன் கொண்டு அவளிடத்தில் நட்பு கொண்டால் நம்முடைய அனைத்து வினைகளையும் எரித்துவிடுவாள்; பிறப்பு உடையவள் என்றும் பிறப்பு அற்றவள் என்றும் அவள் தோற்றம் பற்றி அறிய இயலாமல் சித்தர்கள் பலரும் வாதம் செய்தார்கள்.