மகேசுவரமூர்த்தங்கள் 2/25 நடராஜர்

வடிவம்
கேசாதி பாதமாக
முகம் – சாந்த சொருபம்
கூந்தல் அருகினில் நாகம் – கால சக்கரம்
கங்கை – அருளுதலை முடிவறச் செய்பவன்.
பிறைச் சந்திரன் – தீங்கு இழைத்தவர்களையும் மன்னித்து அருளுதல்
வலப்புற மேற்கை – டக்கா என்ற உடுக்கை(ப்ரணவ நாதம் தோற்றம்) – படைத்தல் 
இடப்புற மேற்கை – தீச்சுவாலை – அழித்தல் 
வலப்புற கீழ்க்கை – அபய முத்திரை – காத்தல் 
இடப்புற  கீழ்க்கை  – தும்பிக்கை நிலை (கஜ ஹஸ்தம்) – மறைத்தல்
சில இடங்களில் கைகளில் மான் – மனம் நிலையற்று இறைவனிடத்தில் மட்டும் ஒடுங்குதலைக் குறிக்கும்.
ஊற்றிய வலது கால் – த்ரோதண சக்தி – உயர் ஞானத் தேடல்
வலது கால் கீழ் – அபஸ்மாரன் அசுரன்(முயலகன் என்றும் கூறுவாரும் உண்டு) – முற்றுப்பெறா காமம்
தூக்கிய இடது கால் – ஆணவம் மற்றும் மாயை
குண்டலி சக்தி என்று குறிப்பிடப்படுவதும் உண்டு.
புலித்தோல் – இயற்கையை அணிதல்
நெருப்பு வட்டம் – ப்ரபஞ்ச நடனம்
நெருப்பு வட்டம் ஒவ்வொன்றும் மூன்று சிறு ஜ்வாலைகள் கொண்டது. அவை முறையே தோற்றம், இருப்பு மற்றும் முடிவு.
நெருப்பு வட்டத்திற்கும் எண்ணிக்கை உண்டு.
உடுக்கை ஒலி முனிவர்களுக்கு ஏற்றவாறு
பரதமுனி – நாட்டியம்
நாரதமுனி – சங்கீதம்
பாணினிமுனி – வியாகரணம்
பதஞ்சலிமுனி – யோகம்
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
திருவாலங்காடு  – ரத்தின சபை –கால் மாற்றி நடனம்
சிதம்பரம் – கனகசபை 
மதுரை  – ரஜிதசபை (வெள்ளி சபை) – கால் மாற்றி நடனம்(பாண்டிய மன்னன் வேண்டுகோளுக்கு இணங்கி)
திருநெல்வேலி – தாமிரசபை – திருநெல்வேலி
சித்திரசபை – திருக்குற்றாலம்
திரு உத்திரகோச மங்கை – மரகதத்திருமேனி
ஸ்ரீவில்லிபுத்தூர்  மடவார் விளாகம் –  ஒரே கல்லில் செய்யப்பட்ட நடராஜர்
பேரூர் பட்டீஸ்வரர்
தஞ்சை பெரிய கோவில்
மற்றும் எல்லா சிவாலயங்கள் ((பட்டியல் முடிவற்றதாகிறது)
சிறப்புகள்
கூத்தன் – கூத்துக்களை செய்பவன்
அம்பல வாணன் – அம்பலத்தில் ஆடுபவன்
நட ராஜன் – ஆடல் கலையில் அரசன்
சபேசன் – சபைகளில் ஆடுபவன்.(5 சபைகள் )
இதரக் குறிப்புகள்
அருணகிரி நாதருக்கு திருச்செந்தூரில் காட்சி
ஒன்றி இருந்து நினைமின்கள்! உம் தமக்கு ஊனம் இல்லை; 
கன்றிய காலனைக் காலால் கடிந்தான், அடியவற்கா; 
சென்று தொழுமின்கள், தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்!-
“என்று வந்தாய்?” என்னும் எம்பெருமான் தன் திருக்குறிப்பே.
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், 
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால் 
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
Image : Internet
உதவி : சைவ சித்தாந்தம் மற்றும் வலைத் தளங்கள்

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் 1/25 சோமாஸ்கந்தர்

 
வடிவம்
இறைவனான சிவனுக்கும், இறைவியாகிய பார்வதிக்கும் இடையே முருகப் பெருமான் வீற்றிருக்கும் திருக்கோலத்தை குறிப்பிடுவதே இது
அடர்ந்த திருக்கோலம். இடது கால் மடித்து, வலது கால் தொங்கவிட்டு.
நான்கு திருக்கரங்கள்
பின் இரு திருக்கரங்களில் மான், மழு.
முன் இரு திருக்கரங்களில் அபய முத்திரை, வரத முத்திரை
அம்பிகைஎதிர் மறை கால் மடித்து
வடிவம் அமையப் பெற்ற திருக்கோயில்கள்
  • திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்
  • காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயில்
  • குமரக்கோட்டம்
  • காமாட்சியம்மன் கோயில்
  • தென்காசி காசி விஸ்வநாதர் கோயில்
  • திருக்கேதீஸ்வரம்இலங்கை
  • திருக்கருகாவூர்
  • திருக்கள்ளில்
சிறப்புகள்
இல்லற வாழ்வினையும் அதன் சிறப்புகளையும் மக்கட்பேறு முதலியவற்றை குறிக்கும்.
இதரக் குறிப்புகள்
சிறு தொண்டருக்கு இவ்வடிவ காட்சி
1.
ஏவலார் குழல் இறைவிக்கும் எம்பிரான் தனக்கும்
பாலன் ஆகிய குமரவேள் நடுவுறும் பான்மை
ஞால மேலுறும் இரவோடு பகலுக்கும் நடுவே
மாலை யானதொன்று அழிவின்றி வைகுமாறதொக்கும்
 – கந்தபுராணம்
2.
தம்மேனி வெண்பொடியால் தண்ணளியால் ஆரூரர்
செம்மேனி கங்கைத் திருநதியேஅம்மேனி
மானே யமுனை; அந்த வாணி நதியும் குமரன்
தானே குடைவேம் தனித்து
திருவாரூர் நான்மணிமாலைகுமர குருபர சுவாமிகள்
 
Image : Internet

Loading

சமூக ஊடகங்கள்

மகேசுவரமூர்த்தங்கள் – முன்னுரை

சிவன் என்ற சொல் சிவந்தவன் என்ற பொருளில் ஆளப்படுகிறது. ஆதி சித்தன், ஆதி தேவன், ஆதி நாதன், ஊழி முதல்வன் என்று எந்தப் பெயர் இட்டு அழைத்தாலும் அது முழுவதும் சிவன் பெயரே ஆகும்.
 
சிவன் பெரும்பாலும் அழித்தல் தொழிலுக்கு உரியவன் என்று கூறப்படுகிறது. அது நிச்சம்தான். ஊழ் வினைகளை அழிப்பவன்.
ருத்ரன், மகாதேவன் சதாசிவம் என்று பல பெயர்களில் அழைத்தாலும் அது வேறு வேறு வடிவங்களையே குறிக்கிறது.
சிவனுக்கான தொழில்கள் 5.
ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல் மற்றும் அருளுதல்.
சிவபெருமானின் இருபத்து ஐந்து சிவமூர்த்தங்கள் மகேசுவரமூர்த்தங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
சிவனுக்கான வடிவங்களும் பெயர்களும் எண்ணிக்கையில் வேறுபட்டாலும் சைவ சித்தாந்தக் கருத்துப்படி 25 ஆகும்.
அவையாவன (தருமை ஆதீனம் – சைவ சித்தாந்தப்படி)
  1. சோமாஸ்கந்தர்
  2. நடராஜர்
  3. ரிஷபாரூடர்
  4. கல்யாணசுந்தரர்
  5. சந்திரசேகரர்
  6. பிட்சாடனர்
  7. லிங்கோற்பவர்
  8. சுகாசனர்
  9. சக்திதரமூர்த்தி
  10. அர்த்தநாரீஸ்வரர்
  11. சக்ரவரதர்
  12. திரிமூர்த்தி
  13. ஹரிஹர்த்தர்
  14. தட்சிணாமூர்த்தி
  15. கங்காளர்
  16. காமாரி
  17. காலசம்ஹார மூர்த்தி
  18. சலந்தாரி
  19. திரிபுராரி
  20. சரபமூர்த்தி
  21. நீலகண்டர்
  22. திரிபாதர்
  23. ஏகபாதர்
  24. பைரவர்
  25. கங்காதர மூர்த்தி
ஒவ்வொரு கட்டுரையிலும் இறைவனின் வடிவங்கள் அதற்குரிய ஊர் , சிறப்புகள் போன்ற விஷயங்களை எழுத உள்ளேன்.
‘அவன் அருளாளே அவன் தாள் வணங்கி’  என்பதற்கு ஏற்ப அவன் துணை கொண்டு அவன் பற்றிய வடிவங்களை அவனே அருளட்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவிற்கோலம்

தல வரலாறு(சுருக்கம்)/சிறப்புகள் – கூவம்
 
·   சிவன் சுயம்பு மூர்த்தி
·   மூலவர் – தீண்டா திருமேனி
·   இறைவன் மேருவை கையால் வில்லாக பிடித்த தலம் – திரு+வில்+கோலம்
·   சிவன் – காளிக்காக ரக்க்ஷா(காத்தல்) நடனம் ஆடிய இடம்
·   சிவனால் வதம் செய்யப்பட்ட தாரகன், வித்யுன்மாலி – துவார பாலகர்கள்
·   கஜபிருஷ்ட விமானம்
·   இயற்கை பேரழிவுகளான மழை, வெள்ளம் வரும் போது சுவாமி வெண்மையாகவும், போர்நிகழும் காலத்தில் செம்மை நிறம் உடையதாகவும் மாறும் அதிசயம் நிகழும்..
·   அம்பாளுக்கு முன் புறத்தில் ஸ்ரீசக்கரம்
·   கூரம்(ஏர்க்கால்) முறிந்த இடமாதலால் இது கூரம். பின்னாளில் மருவி கூவம் என்றானது.
·   பைரவர் – நாய் வாகனம் இல்லாமல் காட்சி 
 
தலம்
கூவம்
பிற பெயர்கள்
கூவரம், திருவிற்கோலம், கூபாக்னபுரி
இறைவன்
திரிபுராந்தகர், சோமாஸ்கந்தர், புராந்தகேசுவரர்
இறைவி
திரிபுராந்த நாயகி, புராந்தரியம்மை
தல விருட்சம்
தனியாக ஏதுமில்லை. நைமிசாரண்ய ஷேத்திரம்
தீர்த்தம்
அக்னி, அச்சிறுகேணி மற்றும் கூபாக்கினி தீர்த்தம்
விழாக்கள்
·         சித்திரைபிரம்மோற்ஸவம்
·         ஆடிபூ பாவாடை திருவிழா
·         சிவராத்திரி
·         ஆருத்ரா தரிசனம்
மாவட்டம்
திருவள்ளுர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி
காலை 6 மணி முதல் 12 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை
அருள்மிகு திரிபுராந்தகேஸ்வரர் திருக்கோயில்,
கூவம் – . பேரம்பாக்கம் வழி,திருவள்ளூர் மாவட்டம்.
பாடியவர்கள்
திரு ஞான சம்பந்தர், கூவப்புராணம்
நிர்வாகம்
திரு ராஜேந்திரன் – 93818-65515
இருப்பிடம்
சென்னையில் இருந்து அரக்கோணம் செல்லும் வழியில் கடம்பத்தூர் ரயில் நிலையத்தில் இருந்து 9 கி,மீ தூரத்தில் உள்ளது
இதர குறிப்புகள்
தேவாரத் தலங்களில் வது தலம்
தொண்டை நாட்டுத் தலங்களில் இது   14 வது தலம்.
திரிபுராந்தகர்
 
 
 
திரிபுராந்த நாயகி
 

(இப்பதிகத்தில் 8வது பாடல் இல்லாததால் 5வது பாடலும், 9வது பாடலும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது)
பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    3ம் திருமுறை 
பதிக எண்                    023
திருமுறை எண்               5
பாடல்
 
முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்
கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்
அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை
சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே 


பொருள்
இறைவன் எல்லாவற்றிக்கும் முற்பட்டவன்.படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழிகளை உடைய மூவருக்கு முதலாவது ஆனவன். கொத்தாக பூக்கும் சோலைகளை உடைய கூகம் என்ற ஊரில் உறைபவன். அந்தி வானத்தில் தோன்றும் பிறை சந்திரனை தன் தலையில் சூடியவன். அடியவர்களுடைய வினைகளை முழுவதுமாக நீக்குபவன். அவன் உறையும் இடம் திருவிற்கோலம் ஆகும்.
* * * * * * * * * * * * * * * * * * * *
பாடியவர்                     திருஞானசம்மந்தர்
திருமுறை                    3ம் திருமுறை 
பதிக எண்                    023
திருமுறை எண்               9
பாடல்
 
திரிதரு புரம்எரி செய்த சேவகன்
வரியர வொடுமதி சடையில் வைத்தவன் 
அரியொடு பிரமனதாற்ற லால் உருத்
தெரியலன் உறைவிடம் திருவிற் கோலமே
பொருள்
இறைவன் முப்புரங்களை அழித்து தேவர்களைக் காத்தவன். வரிகள் உடைய பாம்பினையும் சந்திரனையும் தலையில் தரித்தவன். தங்களது கர்வத்தால் தங்களை பெரிதாக்கிக் கொண்டதால் ப்ரம்மா மற்றும் திருமால் இவர்களால் காணமுடியாதவன். இப்படிப்பட்ட இறைவன் வீற்றிருக்கும் இடம் திருவிற்கோலம்.
கருத்து
திருதரு – வானத்தில் பறந்து திருந்து கொண்டிருந்த; அட்டவீரட்டானத்தில் ஒன்று – திரிபுர தகனம்
சேவகன் – சிவன் எளிமையானவன் என்பதைக் குறிக்கிறது.
வரி அரவோடு – வரிகள் உடைய பாம்பு(மிகுந்த நஞ்சு உடையது)

புகைப்பட உதவி : தினமலர்

Loading

சமூக ஊடகங்கள்

அபயாம்பிகை சதகம்

சுமார் 200 ஆண்டுகளுக்கு முன், பெற்றோர் செய்த புண்ணியத்தால் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு  கிருஷ்ணசாமி என்று பெயர் இட்டனர்.

சிறு வயதிலே பெற்றோரை இழந்தார் கிருஷ்ணசாமி.

ஒரு முறை அவரது அழுகுரல் கேட்டு அம்பிகை வந்தாள். அமுது ஊட்டினாள். ஆறுதல் படுத்தினாள். அவ்விடம் அகன்றாள்.

ஒருமுறை கோவிலில் தன் சன்னதிக்கு அழைத்து சென்று மறைந்தாள்.

ஒரு முறை அர்த்த ஜாம வழிபாட்டை முடித்து வரும் போது, கால் இடறி விழுந்தார். விழும் போது ‘அம்மா அம்மா’ என்று அலறினார்.

அன்று முதல் அர்த்த ஜாம வழிபாடு முடிந்த உடன், யாரும் இல்லாமல் கைவிளக்கு மட்டும் தொடந்து வந்து கொண்டிருந்தது. இதனை கண்ட ஊர் மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

தன் நிலை குறித்து வருந்தி ‘உன்னை எப்படிப் பாடுவது’ என்று புலம்பினார்.
‘நீ பாடு, பாட்டு தன்னால் வரும் ‘ என்று உத்திரவிடுகிறாள் அம்பிகை.
உள்ளம் உருகி பாடிய பாடல்களே ‘அவயாம்பிகை சதகம்’. மொத்தம் 100 பாடல்கள்.

இவருக்கு திருமணம் நடைபெற்றது, ஆனால் இல்லறம் ஆன்மீகம் சார்ந்த சாக்த வழிபாடாகவே இருந்தது. ஊர் மக்கள் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஒரு அர்த்த ஜாம வழிபாட்டிற்குப் பின் ஜோதியில் கலந்தார்.

கனிந்து கனிந்துன் றனைப்பாடிக் கசிந்தே இருகண் புனல்பெருகக்
காது உபயம் உனதருளாம் கதையைக் கேட்க உனதடியார்
இனந்தான் உறவாய் மனம்புதைய எந்த நாளும் அவர் இருந்த
இடத்தை இருதாள் சுற்றிவர இரவும் பகலும் நினதருளை
நினைந்த படியே சிந்தைசெயும் நெறியை உதவி எனைக்காப்பாய்
நித்யா னந்தப் பழம் பொருளே நிமலி அமலை புகழ்விமலி
வனைந்த சடலத் தொழில்உனது அடிக்கே இதமாய் அருள்புரிவாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத்தாயே.


பச்சை முழுப்பொன் னிறமுடனே பளிங்கு பவள முடன்நீலம்
பருத்த மேக முடன்ஆறாய்ப் பரவி யிருக்கும் பசுங்கிளியே
அச்ச மறவே அதன்மீதில் அருண வுதய ரவிகோடி
அகண் டாகார ரூபமதாய் அமர்ந்த சிவமோ கனமாதே
செச்சை யதன்மேல் அணிச்சிலம்புஞ் சிறுகிண் கிணித்தண் டைகளொலிக்கச்
சிவனோ டிருக்குங் கொலுமுகத்தைச் சிறியேன் காண அருள்புரிவாய்
வச்ச உனது பொருள்எனக்கு வரத்தாற் கருத்தில் உரைத்தருள்வாய்
மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே

பாடல்கள் மிக அழகான தமிழில் இருக்கின்றன. சுமார் 200 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் என்பதால் மிகப் பெரிய விளக்க உரைகள் தேவை இல்லை. ஆனால் அப்பாட்டின் கருத்துக்கள் மிக ஆழமானவை.

பாடல்கள் அனைத்தும் ‘மயிலா புரியில் வளரீசன் வாழ்வே அபயாம் பிகைத் தாயே’ என்றே முடிகின்றன.

உலக அன்னையின் அனுபவங்களை உணர்ந்தவர்கள் எவ்வாறு மீள முடியும்.

Loading

சமூக ஊடகங்கள்

அரைஞாண் கயிறு அணிவது ஏன்?

அரைஞாண் கயிறு அணிவது ஏன்?

ஆன்மீகம்எல்லாரும் கட்டும் போது உனக்கு மட்டும் என்ன கேள்வி?

அறிவியல் :
1. பொதுவாக ஆண்களுக்கு குடல் இறக்கம் ஏற்படும். இதை தடுப்பதில் அரைஞாண் கயிற்றின் பங்கு மிக அதிகம்.

2. ஆண்களுக்கு  கால மாற்றத்தால் பொதுவாக விதைப் பைகள் இறக்கம் ஏற்படும். அரைஞாண்  கயிறு கட்டி கோமணம் () லங்கோடு கட்டும் போது இது தடுக்கப்படுகிறது. இதனாலே மலட்டுத் தன்மை என்பது போன தலைமுறையில் மிகக் குறைவாகவே இருந்தது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

கர்மத்தை அனுஷ்டிப்பதால் ஒருவன் சொர்க்கத்தையும், ஞானத்தை அனுஷ்டிப்பதால்  ஒருவன் மோட்சத்தையும் அடைய முடியும்.
இதை போதிப்பதில் உண்டாகும் வேறுபாடுகளூம் பிரிவுகளும் என்ன?

கர்மத்தை போதிப்பது வேதம்
ஞானத்தை போதிப்பது வேதாந்தம்
வியாசரின் சிஷ்யரான ஜைமினி செய்தது கர்ம சூத்திரம். இது கர்மம் என்பது பிரதானம். அதை மறுத்து வியாசர் செய்தது வேதாந்த சூத்திரம். இது ஞானம் என்பது பிரதானம்.
வியாசரது சூத்திரத்திற்கு பலர் விளக்கம் தந்திருக்கிறார்கள். ஸ்ரீகண்டாச்சாரியார், சங்கராச்சாரியார், பண்டிதாச்சாரியார், இராமானுஜாச்சாரியார் மற்றும் மத்துவச்சாரியார்.
இவர்களில் முதல் மூவரும் சிவனை சிவபிரமானம் உள்ளவர்கள். மற்றவர்கள் விஷ்ணு பிரமானம் உள்ளவர்கள்.
இவர்களின் விளக்கங்கள்
ஸ்ரீகண்டாச்சாரியார்சமவாதி
சங்கராச்சாரியார்விவர்த்தவாதி
பண்டிதாச்சாரியார்ஐக்கியவாதி
இராமானுஜாச்சாரியார்  – விசிஷ்ட்டாத்துவைதி
மத்துவச்சாரியார்துவைதி
இதில் முதல் மூவரும் பதி, பாச விசாரணையில் பேதப்பட்டாலும் சிவனைப் பரம்பொருள் என்று கொண்டதால் அவர்கள் சைவர்கள் என்று பேசப் படுகிறார்கள். என்றாலும் ஸ்ரீகண்டாச்சாரியார் ஸ்வாமிகளே சைவச்சாரியார் என பிரசித்தி பெற்றிருக்கிறார்கள்.
இது தவிர ஆயுர் வேதம், அர்த்த வேதம், தனுர் வேதம் மற்றும் காந்தர்வ வேதம் என்ற வகைகளும் உண்டு. இவைகள் கர்ம காண்டங்களோடு கூடி பயன் தரத் தக்கவை ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

வேதசிவாகமவியல்
பதியினது உபதேசம் பற்றி விளக்கும் வகையில் இருக்கும் உபதேசங்கள். இது உலகத்தின் இயல்புகளையும், ஆன்மாக்களையும் அது பற்றி நிற்கும் பாசத்தை பற்றியும் விளக்கும்பிறகு அப்பாச இயல்பில் இருந்து விலகுவதற்கான வழியையும் கூறும்.
 
இவைகள் ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்று வகைப்படுத்தப்படுகிறது. (இவற்றிற்கான விளக்கங்களுக்கு நாம் செல்லவில்லை)
 
இவ்வேதங்கள் இரண்டு காண்டங்கள் உடையது. கர்ம காண்டம் மற்றும் ஞான காண்டம்.
 
இவற்றுள் கர்ம காண்டம்(செய்த வினையின் விளைவு) அவற்றை மாற்ற ஜோதிடம் போன்ற புண்ணிய கர்மங்களை அறிந்து சொர்க்கத்தை விரும்பி செய்யப்படுவது)
 
ஞானகாண்டம்உலகம், உடல், உயிர் போன்ற நிலையாமைத் தத்துவங்களை கண்டு, தன்பற்று நீங்கி முக்தி அடைதலுக்கு உரிய உண்மை ஞானத்தை உணர்த்துவது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்

இவ்வாறு அந்த ஈஸ்வரன் சர்வ சுதந்திரத்துடன் இருக்கிறார். இதனை விளக்குவோம்.

சுதந்திரம் என்பது தன்னாலும் பிறராலும் தனக்கும் தடை இல்லாமல் இருத்தல். சீவன்கள் கன்மானுபவம் கூடி அதை அனுபவிக்க உரியவர்கள். வரம்பிற்கு உட்பட்ட அறிவு தொழில் உடையவர்கள். இவ்வாறு அவர்களுக்கு விதிக்கப்பட்டவைகளை முடித்தும், அவைகளை கெடும்படியாக தடுத்தும் செய்வதால் தனக்கு மேல் கர்த்தா இல்லாமல் அவர் சுதந்த்ரத்துடன் செயல்படுகிறார்.



அவ்வாறு செயல்படும் ஆன்மாக்கள் தனது குற்றம் நீங்கி குணப்படுதல் நிகழும். இதனை விளக்குவோம்.

சித்துப் பொருளாகிய ஆன்மாக்கள் தனது குற்றத்தை தானே நீக்குதல் ஆகா. தனுக் கரணங்களைக் கொடுத்து ஈஸ்வரன் தனது குற்றங்களை உணர வைக்கிறான். இவ்வாறு சிவாகமங்களை அறியும் ஆன்மாக்கள் அதிலிருந்து குற்றம் விலகி சுகிக்கும்.

இத்துடன் சித்தியல் நிறைவு பெறுகிறது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவ சித்தாந்தம் – சில சிந்தனைகள்





சைவசித்தாந்தம்சில சிந்தனைகள்













சர்வ வியாபகம் 

எல்லா பொருள்களிலும் நீக்கமற நிறைவுற்று இருத்தல்.

எல்லா பொருள்களிலும் நீக்கமற  நிறைவுற்று இருத்தல் முதல் தன்மை. அதோடு தளைகளை அறிவிக்கவும் அதோடு ஆன்மாக்களை தளைகளில் இருந்து விடுவிக்கும் பொருளாகவும் இருத்தல். அஃது பிரபஞ்சம் முழுவதும் நிறைந்தது.

இதைஉண்மை என்பதை பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட திருவிளையாடல் புராணம் உணர்த்தும்.
நித்யதத்துவம் 

அழிவில்லாது.

தனக்கான செயல்களை வினைகளில் வழியே கூட்ட பதி ஒன்று வேண்டும். அவ்வாறு செயவதற்கு தனக்கு மேல் ஒரு பதி இல்லாத பரம் பொருள்.
சுவையினை உணரும்  பசுக்கள் அவற்றின் தன்மைக்கு ஏற்ப அவற்றை அனுபவிப்பது போல், ஈஸ்வர அனுபவிப்பதை அனுபவிப்பதால் அவன் நித்ய  ஆனந்தராக இருத்தல் வேண்டும்.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – சிறு குறிப்பு

திருஞான சம்மந்தர் தனது எல்லா பாடல் அமைப்புகளிலும் ஒரு ஒழுங்கு முறையைக் கையாண்டிருக்கிறார்.

8 வது பாடல்இராவணன் பற்றிய நிகழ்வு

9 வது பாடல்ப்ரம்மா மற்றும் திருமால்

10 வது பாடல்சமணர்

11 வது பாடல்நூல் பயன்

இராவணன் சிறந்த சிவபக்தன் என்றாலும் அவனிடத்தில் அதிகமாக ஆணவமும், மாயையும், கண்மமும் இருந்தது.

இதனால் சிவத்தலங்கள் பற்றிய பாடல்கள்களில், திருஞான சம்மந்தர் பாடி இருப்பின் அதில் 8 பாடலை விளக்கப் பாடலாக எடுக்க உள்ளேன்.

கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 3 ஆச்சார்ய தேவோ பவ:

பள்ளி நாட்களைப் பற்றிய நினைவு எப்போதும் விலகுவதில்லை.
அப்போது எலிமன்டரி(ஆமாம் தானே) ஸ்கூலில் இருந்து பெரிய( higher secondary) ஸ்கூல் வந்த புதிது.
மீனாட்சி டீச்சர் எங்கள் கிளாஸ் மிஸ்
.
நான் நடந்து போகக் கூடாது என்பதற்காக என் அப்பா சைக்கிள் ரிக்க்ஷா வில் அனுப்புவார்கள். நான் திருவிழந்துதூர் மேட்டுத் தெரு அவர்கள் பெருமாள் கோவில் மேல வீதி.
அவர்கள் எப்போதுமே மிக அழகாக உடை உடுத்துவார்கள். (அது அம்பாளுகே உரித்தானது என்று இப்போது தான் தெரிகிறது. பாடம் நடத்துவே ஒரு கம்பீரம். சொற்கள் காத்திருந்து அப்படியா வரும்..  எத்தனை குடம் தேன் அபிஷேகமோ)
டீச்சர் : இன்னைக்கு தமிழ் பாடம். வாக்கியத்தில் அமைத்து எழுதுவது எப்ப்டீன்னு கத்துத் தரேன்.
கூட்டம் : …..(வேற யாரு நாங்க தான்)
டீச்சர் : இப்படித்தான் எழுதனும், புரிஞ்சுதோன்னோ. இப்ப எல்லாரும்குறிக்கோள்என்பது குறித்து வாக்கியத்தில் எழுதுங்கள்.
நான் : ‘ஒழுக்கமே உயிர்என்பது நம் பள்ளியின் குறிக்கோள்.
டீச்சர் :  ரொம்ப நன்னா இருக்குடா, எல்லாரும் இவனை மாதிரி எழுதுங்க பாக்கலாம். (முதல் பாராட்டு.. )
விதி விளையாட ஆரம்பித்தது.
ரிக்க்ஷாகாரர் : இன்னைக்கு லேட், அதால டீச்சர் வீட்டுக்கு நான் வந்தேன்னு சொல்றேன். நீயும் அப்படியே சொல்லு என்னா?
நான் : சரிங்க.
இது நடந்து ஒரிரு நாள் கழித்து டீச்சர் அழைதார்கள். (பச்சை நிறப்புடவை.. மறுபடியும் அம்பாள்) குலை நடுங்க ஆரம்பித்தது.
டீச்சர் : ஏன்டா, உன்னைய நல்ல பையன்னு நினைச்சுண்டு இருந்தேன். இப்படி பண்ணிட்டையே.
நான்
டீச்சர் : இதுக்கு தண்டனை உண்டு தெரியுமா. இனிமே நீ எங்கிட்ட பேசக் கூடாது. (உலகம் தலையில் விழுதல் இது தானா). பசங்களா யாரும் இவனோட பேசாதீங்க. இனிமே என் சேர்ருக்கு கீழ தான் நீ உக்காரணும்.
நான் :  டீச்சர், டீச்சர் இனிமே இப்படி செய்யல டீச்சர், பேச மாட்டேன்னு மட்டும் சொல்லிடாதீங்க
டீச்சர்.
டீச்சர் : (தெய்வத்தின் கண்களில் ஒளிக் கீற்று), தப்பே பண்ணக் கூடாது, தெரியாம செஞ்சிருந்தா தப்ப ஒத்துண்டு இனிமே நடக்காம சரி பண்ணிக்கணும்.
வெகு நீண்ட வருடங்களுக்குப் பின் வீட்டை அடையாளம் கண்டு அவர்களை சந்திதேன்.
டீச்சர் :  நீங்க யாருன்னு தெரியலையே
நான் : நீங்கங்கறத விட்டுடுங்க. நான் உங்க பழைய மாணவன். (பழைய நினைவுகள்.. பரிமாற்றங்கள்..)
டீச்சர் : இருடா காப்பி போட்டு எடுத்துண்டு வரேன், நானே மிஷின் வச்சிருக்கேன். (காபியாஅது தேவாமிருதம்னா)
நான் : டீச்சர் நான் நம்ஸ்காரம் பண்ணனும்.
டீச்சர் : ஏன்னா சித்த இங்க வாங்கோ(அம்பாளுக்கு உரியவர் வேறு எப்படி இருக்க முடியும்). இவன் என் கிட்ட படிச்சான். நம்ஸ்காரம் பண்ணனுமாம். நன்னா இருடா. நல்லா வருவடா.
விதைகள் விருட்சங்கள் ஆகும். அந்த அடிப்படை விதைகள் அவர்களால் விதைக்கப்பட்டவை.
அனைத்தும் ஒன்றில் தோன்றி ஒன்றில் ஒடுங்குகின்றன. ‘ஆச்சார்ய தேவோ பவ:’
 
Click by : SL Kumar

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 6

முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் காட்சி குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்





1.
விளக்கம்
கிரௌஞ்சமலையை பிளந்தவன்
அவுணர்கள் தலை அற்றவனாக செய்தவன்
கடல் வற்றச் செய்தவன்
ஐந்து பூதங்களையும் நீக்கச் செய்து
உரை அற்று உணர்வு அற்றுசொற்கள் அற்று, உணர உணர்வுகள் அற்று
உடலற்று உயிரற்றுஉடல் நீக்கி, உயிர் அற்று
உபாயம் அற்று
கரையற்று
இருளற்றுநீக்கமற நிறைந்திருக்கும் ஒளி
எனதற்றுமும்மலத்தில் முக்கியமானதான கர்வத்தால் உண்டாகும்தான்என்னும் அகங்காரம்.
பாடல்
வரையற் றவுணர் சிரமற்று வாரிதி வற்றச்செற்ற
புரையற்ற வேலவன் போதித் தவா, பஞ்ச பூதமுமற்
றுரையற் றுவர்வற் றுடலற் றுயிரற் றுபாயமற்றுக்
கரையற் றிருளற் றெனதற் றிருக்குமக் காட்சியதே. 61
பொருள்
சமாதி நிலையின் காட்சிகளும் அதற்கு முருகன் எவ்வாறு உதவினான் என்பதும் இங்கு விளக்கப்பட்டுள்ளது.
கருத்து
கிரௌஞ்சமலையை பிளந்தவனும், அவுணர்கள் தலை அற்றவனாக செய்தவனும், கடல் வற்றச் செய்தவனுமான முருகன் எனக்கு போதனை செய்தருளினான். இதனால் பஞ்ச பூதங்களில் செய்கைகள்(சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்ஒசை) நீங்கப் பெற்றன.அஃதாவது புறக்கருவிகள் செயல்கள் நீங்கப் பெற்றன. புறக்கருவிகளில் செயல்பாடுகள் நீங்கும் போது உணர்வு நீங்கப் பெற்றும், உடல் நீங்கப் பெற்றும், முக்தி என்கிற நிலையும் அழிந்து, கரைகாணமுடியாதும், மிக ஓளி பொருந்திய அக்காட்சியை அவன் எனக்கு அருளினான்.
2
விளக்கம்
துருத்திகாற்றை உட்செலுத்த பயன்படும் கருவி
.
பாடல்
துருத்தி யெனும்படி கும்பித்து வாயுவைச் சுற்றிமுறித்
தருத்தி யுடம்பை யொறுக்கிலென் னாஞ்சிவ யோக மென்னுங்
குருத்தை யறிந்து முகமா றுடைக்குரு நாதன்சொன்ன
கருத்தை மனத்தி லிருந்துங்கண் டீர்முத்தி கைகண்டதே. 71
பொருள்
கடினமான யோக மார்கங்களால் அடையப் படும் முக்தி நிலையையும், அதற்கு மாற்றாக எளிதான வழியில் அடையும் எளிய வழியும் இப் பாடலில் குறிப்பிடப்படுகிறது.
கருத்து
துருத்தி என்ற கருவி போன்று காற்றை உட் செலுத்தி, கும்பகம் செய்து(காற்றை உள்ளே நிறுத்துதல்பூரக கும்பம் மற்றும் ரேசக கும்பம்) உட் செல்லும் பிராண வாயுவை முறித்து, அதை உணவாக கொண்டு முக்தி அடைதலை எதற்காக செய்ய வேண்டும். ஆறு திரு முகங்களை உடைய குருநாதன் சொன்ன சொல்லின் உட் கருத்தை மனதில் பதிய வைப்பவர்கள் முக்தி அடைவார்கள்.

இத்துடல் முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் பகுதிகள் நிறைவு பெருகின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 5




முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் தத்துவம் குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்

பாடல்

போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும் முடிவும் இல்லாதது ஒன்று வந்துவந்து
தாக்கும் மனோலயம்தானே தரும் எனைத் தன் வசத்தே
ஆக்கும் அறுமுகவா சொல்ல ஒணாது இந்த ஆனந்தமே. – 73

பொருள்

ஆறு திருமுகங்களை உடைய திருமுருகனே, போதல், வருதல், இரவு, பகல், புறம், உள், வாக்கு, வடிவம், இறுதி ஆகிய எதும் இல்லா ஒன்று(ப்ரம்மம்) என்னிடம் வந்து வந்து என்னைச் சேர்ந்து, மனோ லயம் தானே தந்து என்னை தன் வசத்தே ஆக்குகிறது. இப்படிப்பட்ட ஆனந்தத்தை விவரிக்க இயலாது.

கருத்து

·         மனிதன் முதலிய பிறவிகளுக்கே இருமைகள் உண்டு. இருமைகள் இல்லாதவன் முருகப் பெருமான் –
o    போதல், வருதல்
o    இரவு, பகல்
o    புறம், உள்

·         வாக்கும் வடிவும் – எண்ணங்களே வாக்காகவும் பின் அவைகள் வடிவமும் கொள்கின்றன என்பது துணிபு.இவைகள் இல்லாத ஒன்று – இவைகள் அனைத்தில் இருந்தும் விலகி இருப்பவன் (முருகன்)
·         வந்து வந்து தாக்கும் – இறைமை நம்மை (விரும்பி) அழைத்துச் செல்கிறது.
·         இது மனதினை லயப் படுத்துகிறது.  – ஜப கோடி  த்யானம், த்யான கோடி லயம் என்ற தியாகராஜ சுவாமிகளின் வரிகள் நினைவு கூறத் தக்கது.
·         எனைத் தன் வசத்தே ஆக்கும் – இறைமையே நம்மை வசப்படுத்துகிறது

2.

பாடல்

தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்ந
ணவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துத் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. 96

பொருள்

முருகனது மயிலே, உலகியல் துன்பம் நீங்க உன்னை தனியாக விடுவாராயின், வட திசையில் இருக்கும் மேரு மலையைத் தாண்டி, உனது தோகையினால் சுழன்று, கடல், சூரியன், தங்கச் சக்கரம் ஆகியவைகளைக் கடந்து, திசைகளைக் கடந்து உலவுவாயாக.

கருத்து

மயில் என்பது குறீயீடாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. த்யான மார்க்க அனுபவங்கள் கூறப் பட்டிருப்பதால், குரு முகமாக அறிக.

Loading

சமூக ஊடகங்கள்

காற்றில் ஆடும் சருகுகள் – 2

———————————————————————————————————
யாசிக்கையில், கைகளைவிட கண்கள் கனமாக இருக்கின்றன.
—————————————————————————————————
தனது பெண், முதல் முறை மூக்குத்தி அணியும் அழகை கண்டு ரசிக்கும் தாயின் கண்கள் சிறப்பானவை. இருவரையும் ரசிக்கும் தகப்பனின் கண்கள் அதை விட அழகானவை.
———————————————————————————————————

தனது குழந்தையை பள்ளிக்குள் அனுப்பிவிட்டு திரும்பும் தாயின் கண்ணில் யாரும் அறியாமல் இருக்கும் நீர்த்துளிகள் கனமானவையாக 

—————————————————————————————————

சித்திர குப்தன்இவன் சிறு தவறு செய்திருக்கிறான்.
ப்ரம்மாஇவன் தமிழனாக பிறக்கட்டும்.
சித்திர குப்தன்இவன் நிறைய தவறுகள் செய்திருக்கிறான். இவனை எப்படி தண்டிப்பது?
ப்ரம்மாஇவனை …. க்கு கணவணாக்கி விடு.
உயிர்அது மட்டும் வேண்டாம், வேற எந்த தண்டனையும் கொடுங்கள்.

செத்தான்டா சேகர்

————————————————————————————————————————————————————————————————————
டெம்போவில் தினக் கூலிக்கு நின்று செல்லும் மனிதர்கள், மற்றவர்களை விட சந்தோஷத்துடன்செல்கிறார்கள்
————————————————————————————————————————————————————————————————————

குளிரில் உறங்கும் குழந்தையை கண்டு ரசித்து, குளிர் படாமல் போர்வையால் மூடி செல்லும் தாயின் ரகசிய புன்னகையுடன் கண்கள் விசித்ரமானவை.
————————————————————————————————————————————————————————————————————
இன்று நான் உணவு சமைக்கவாஎன்று கணவன் கேட்கையில் மனைவியின் கண்களில் தெரிகிறது கோடி சூரியன்கள்.
————————————————————————————————————————————————————————————————————
தனது நீண்ட கருங் கூந்தலை, கைகளால் சரி செய்தபடி சூரியனை பார்க்கும் கன்னியின் கண்கள் சூரியனை விட பிரகாசிக்கின்றன.
————————————————————————————————————————————————————————————————————
மன்னிக்கப் பட்ட கண்களில் இருந்து யாரும் அறியாமல் வழியும் கண்ணீர் துளிகள் இதயத்தில் நிலைபெறுகின்றன.
————————————————————————————————————————————————————————————————————
மிகச் சிறிய குழந்தைகளின்கண்களில் ஒட்டி இருக்கிறது தெய்வங்களின் தன்மைகள்.
 
Click by : SL Kumar
 

Loading

சமூக ஊடகங்கள்

இச்சா மரணம் – பீஷ்மர்

எண்ணற்ற கதா பாத்திரங்களை உள்ளடக்கியது மகாபாரதம். அதில் சிறந்த தலையாய படைப்புகளில் ஒன்று பீஷ்மர்.
பீஷ்மர் சந்தனு மகாராஜாவிற்கும், கங்கைக்கும் புதல்வனாக பிறந்தவர். இவர் அஷ்ட வசுக்களில் ஒருவர். பெற்ற சாபம் தீர தேவ விரதனாக அவதாரம் செய்தவர்.
ஒரு நாள் தனது தந்தை மிக்க மனவருத்தத்துடன் இருப்பதைக் காண்கிறார். சந்தனு காரணத்தை கூற விரும்பவில்லை. எனவே சந்தனுவின் தேரோட்டியை அழைத்து உண்மையை அறிகிறார்.
தந்தை சத்யவதி என்ற மீனவப் பெண்ணின் மீது காதல் கொண்டது தெரியவருகிறது.
எனவே அவர்களின் தலைவனை சந்தித்து தனது தந்தைக்கு சத்யவதியை மணம் முடித்துத்தர கேட்கிறார்.
 
சத்யவதியின் தந்தை மறுத்து விடுகிறார். காரணம் வினவுகிறார்.
பட்டத்து அரசியே தலைமை பீடப் பொறுப்புக்கு உரியவராகவும், அவர்களில் வாரிசுகளே ஆட்சி செய்ய தகுந்தவர்கள்  என்றும் இருப்பதால் சத்தவதியை சந்தனுவுக்கு மண முடிக்க விருப்பமில்லை என்று தந்தை உரைக்கிறார்.
இந்த நாள் முதல் பிரமச்சாரிய ஒழுக்கத்திலிருந்து தவறாதவனாகவும், திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பவனாகவும் இருப்பேன், இது சத்தியம் என்று சத்தியம் செய்கிறான் தேவவிரதன்.
‘பீஷ்ம பீஷ்ம’ என்று தேவர்கள் ஒலி எழுப்புகிறார்கள். பீஷ்ம என்ற சொல்லுக்கு ‘ யாராலும் செய்ய முடியாத காரியத்தை செய்பவன்’ என்று பொருள்.
இந்த தியாகத்திற்காக சந்தனு பீஷ்மருக்கு தந்த வரம் – விரும்பிய பொழுது மரணம் .
சிகண்டியை முன்னிருத்தி அர்ஜுனன் அம்பு எய்தி பீஷ்மரை வீழ்த்தினான். அவர் தரையில் வீழ்ந்து விடக் கூடாது என்பதற்காக அம்பினால் படுக்கை செய்து(சரதல்லபம்), அவர் மரணம் வரும் வரை அதில் இருத்தினான்.
இது நடை பெற்றது, தஷ்ணாயன புண்ணிய காரம், உத்ராயண புண்ணியகாலம் வரை அவர் அம்புப் படுக்கையில் இருந்தார்.
பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் அக்காலம் வரை அவரை அணுகி உலகின் மிக நுட்பமாண மற்றும் சூட்சமான சாத்திரங்களையும் கற்று அறிந்தார்கள்.
விஷ்ணு சகஸ்ரநாமம் இவரால் எழுதப்பட்டது.
ரதசப்தமி – பீஷ்மாஷ்டமி – 06-02-2014/07-02-014
Image : Internet 

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 3

 
 
சிவனின் மைந்தன் / பெருமாளின் மருமகன் என்ற வகையில் இக்கட்டுரை.
 
 
 
 
 
 
 
 
 
 
1.
பாடல்
மாகத்தை முட்டி வருநெடுங் கூற்றன்வந்தா லென்முன்னே
தோகைப் புரவியிற் றோன்நிற் பாய்சுத்த நித்தமுத்தித்
த்யாகப் பொருப்பைத் த்ரிபுராந் தகனைத் த்ரியம்பகனைப்
பாகத்தில் வைக்கும் பரமகல் யாணிதன் பாலகனே. 80
விளக்கம்
மாகம் – ஆகாயம்
கூற்றன் – எமன்
த்ரிபுராந் தகன் – மூன்று புரங்களையும் அழித்தவன் – சிவன்
பொருள்
எமன் வருங்காலத்தில் மாசு அற்றவரும், நிலைத்த முக்தியை அளிப்பவரும் முப்புரங்களை அழித்தவரும், கொடைத் தன்மை உடையவரும் மூன்று கண்களை உடையவருமான சிவனை வலது பாகத்தில் கொண்ட மேலான கல்யாண குணங்களை உடைய பார்வதியின் புத்திரரே, ஆகாயம் தொடும் அளவு கொண்ட எமன் வரும் காலத்தில் தோகைகளை உடைய மயில் மீது வந்து நின்று அருள் புரிவீர்.


கருத்து
முப்புரம் அழித்தல் – மும்மல காரியம் (விளக்கம் – திருமந்திரம்)
முக்தி – ஜீவன் முக்தி, விதேஹ முக்தி என்று பலவகைப்பட்டாலும் அழியாத முக்தியை அருள்பவர்
சிவனை வலப்பக்கம் வைத்திருக்கும் – பார்வதியைக் குறிக்கும்.
கல்யாணி – கல்யாண் என்பதன் பெண் வடிவம்.
கல்யாண என்னும் வடசொற்கு அழகிய, மனத்திற்கேற்ற,சிறந்த, உயர்ந்த, நல்ல, நலமான, மங்கல, மகிழ்ச்சியான, ஆக்கமான என்னும் பொருள்களும், மகிழ்ச்சி, ஆக்கம், தழைப்பு, நல்லொழுக்கம், அறப்பண்பு என்னும் பொருள்களும் கூறப்பட்டிருக்கின்றன. மங்கலம் என்ற தன்மையில் ஆளப்படுகிறது. அஃதாவது, இப்படிப்பட்ட குணங்களை உடைய பரம கல்யாணியின் பாலகன்
தோகைப் புரவி – வெகு விரைவில் வந்து என்னை ஆதரிப்பாய் என்பதன் வெளிப்பாடு.
இப்பாடல் சோமாஸ்கந்த மூர்த்தத்தை நினைவு கூறும்.
2. 
பாடல்
பாலே யனைய மொழியார்த மின்பத்தைப் பற்றியென்றும்
மாலே கொண்டுய்யும் வகையறி யேன் மலர்த்தாள் தருவாய்
காலே மிகவுண்டு காலே யிலாத கணபணத்தின்
மேலே துயில்கொள்ளு மாலோன் மருகசெவ்வேலவனே. 41
விளக்கம்
காலே இலாத – பாம்பு
மாலோன் மருக – திருமாலில் மருமகனே
பொருள்
காற்றை உண்டு கால்கள் அற்ற ஆதிசேஷன் மீது துயில் கொள்ளும் பள்ளி கொண்டிருக்கும் மாலோனில் மருமகனே, செந்நிறமுடைய வேலை உடையவரே, பால் போன்ற இனிமையான மொழிகள் பேசும் பெண்களுடன் கலந்து(சிற்றின்பத்தில் மூழ்கியவனாக) அதை விரும்புவனாக இருக்கிறேன். அதில் இருந்து விலகி முக்தி மார்கம் அடைய வழிகாட்டுவாயாக. ஆதலால் உன் மலர் பதத்தை தருவாயாக. (இறைவனின் பாதங்கள் முக்தியை தரும் என்பது துணிபு)
சீரடி சென்னி வைக்க – அபிராமி அந்தாதி
நாதன் தாள் வாழ்க – மணிவாசகப் பெருமான்
கருத்து
காலே இலாத – பாம்பு
மாலோன் மருக – திருமாலில் மருமகனே
காலே மிக உண்டு – காற்றை ஏற்று, இது சித்தர்கள் வழி காற்றினை சுவாத்தலைக் குறிக்கிறது. இங்கு உள் இழுத்தலை மட்டுமே குறிக்கிறது. சுவாசித்தலில் அளவு குறையும் போது, வாழும் காலம் அதிகரிக்கும்.
ஆண்டிற்கு ஒன்றாய் மூவாயிரம் பாடல் எழுதிய திருமூலரது வாழ்வு இங்கு நினைவு கூறத்தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

நகர மறுக்கும் நினைவுகள் – 1

டேய், சீக்கிரம் வாடா.
எதுக்குடா?
வாடக சைக்கிள் எடுக்கணும். கத்துக்கத்தான்.
யாரு கடையில, மீசக் காரங்க கடையிலயா?
ஆமாம்டா.
யாருடா பசங்களா நீங்க
கடைசி மெத்த வீட்டுப் பசங்க.
அவன் யாருடா?
டெய்லர் பையன்.
யாரு, யாருக்கு கத்துக் குடுக்கப் போறீங்க.
நான் அவனுக்கு சார்.
ஒரு மணி நேரத்துக்கு 60 காசு. ஒரு நிமிஷம் அதிகமானாலும் இன்னொரு 60 காசு குடுக்கணும். கண்களில் சிரிப்பு.
கரைக்டா கொடுத்துடுவோம் சார்.
லேடிஸ் வண்டியா, ஜென்ஸ் வண்டியா.
நீ என்னடா சொல்ற? – ஒருவன் மற்றொருவனிடம். குழப்பம் இருவருக்கும்.
ஜென்ஸ் வண்டின்னாத்தான் குரங்கு பெடல் போட்டு பார்ல ஏற முடியும், அதால ஜென்ஸ் வண்டி தாங்க.
சைக்கிள் கைகளில்.
வண்டியை தள்ளிகிட்டு நம்ம தெருவுக்கு போவோம்.
இந்த வழியில பஸ் நிறைய வரும்(மணிக்கு ஒரு டவுன் பஸ்). அதால ராஜா தெரு வழியா போய்டுவோம்.
முது தண்ட வளைக்காம தலைய நேர பாருடா
கொஞ்சம் தண்ணி குடிக்கலாமாடா.
எடுத்ததே ஒரு மணி நேரம். இதுல தண்ணி குடிச்சா நேரம் போய்டும்.
டேய், எடுக்கும் போது மணி பாத்தியா?
பாத்தேன். 4.46 டா.
டேய், கம்னாட்டி, அது அவரு கடை கடிகாரம், உங்க வீட்டு கடிகாரத்ல என்ன மணி. அத வச்சித்தான் ஒரு மணி நேரத்ல திருப்பி கொடுக்கணும்.
பாக்கலடா.
போடா பன்னி.
முகம் மற்றும் உடல் முழுவதும் வியர்வை இருவருக்கும்.
சரி வாடா, கொண்டு போய் கொடுத்துட்டு வந்துடுவோம்.
என்னடா பசங்களா, பத்து நிமிஷம் முன்னாடியே வந்துட்டீங்க.
இருவருக்கும் 100 வாட் பல்பு பிரகாசம்.
இன்னொரு ரவுண்ட் போய்ட்டு வரோம் சார்.
கரக்டா, பத்து நிமிஷம் தான். இல்லன்னா இன்னொரு ஒரு மணி நேரம் கணக்கு.
ஓகே சார்.
சரியாய் பதினோராவது நிமிடம் திருப்பிக் கொடுக்கும் போது கலவரம் இருவருக்கும்.
எவ்வளவு சார்.
60 பைசா.
நிம்மதிப் பெரு மூச்சு – இருவருக்கும்.
ஏம்பா, என் ப்ரெண்ட் ஒரு கியர் வைத்த சைக்கிள் வாங்கி இருக்கான். ஜஸ்ட் 5999 ஒன்லி தாம்பா, அதமாதிரி எனக்கும் ஒன்னு வாங்கிக் கொடுப்பா. என்னப்பா நாம்பாட்டுக்கு பேசிகிட்டு இருக்கேன். நீ முழிக்கிற. – மூன்றாவது படிக்கும் மகன்.
 
Click by : Karthik Pasupathy

Loading

சமூக ஊடகங்கள்

போகிப் பண்டிகை

போகிப் பண்டிகை

பொது – பழைய பொருள்களை மற்றும் தேவை அற்ற பொருள்களை எரித்து சுத்தம் செய்யும் பண்டிகை

ஆன்மீகம் – பொருள்களை எரித்து சுத்தம் செய்யும் பண்டிகை அல்ல. அது ஒரு உருவகம். தன்னில் இருக்கும் தேவை அற்ற நினைவுகளை, மன கசப்புகளை, கோபங்களை, வருத்தங்களை இன்னும் பிற விஷயங்களை நீக்கி ஒரு புதிய தொடக்கத்திற்கான தொடக்கம் காட்டும் பண்டிகை.

புகை இல்லா போகிக் கொண்டாடி ஒரு வளரும் சமுதாயத்திற்கு வழி காட்டுவோம்.

Click by: Gayu Venkat

Loading

சமூக ஊடகங்கள்

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 2

கந்தர் அலங்காரம்

தன் நிலை குறித்து புலம்பல்

1.
விளக்கம்

தோலால் சுவர் வைத்து – சுவர்கள் தோலால் எழுப்பப்பட்டிருக்கின்றன.
நாலாறு காலில் சுமத்தி – அவைகள் கால்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன.
இருகாலால் எழுப்பி – அவைகள் இருகாலால் எழுப்பபட்டிருக்கின்றன.
வளை முதுகோட்டி – அவற்றின் முதுகு வளைந்திருக்கிறது.
கைநாற்றி – கைகள் நாற்றப்பட்டிருக்கின்றன
நரம்பால் ஆக்கை இட்டு – அவைகள் நரம்பால் இணைக்கப்பட்டிருக்கின்றன.
தசை கொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால் – அவற்றின் மேற்கூரை தசையால் ஆக்கப்பட்டிருக்கிறது.
வேலால் கிரி துளைத்தோன் – முருகன்
அடித் தாளின்றி – பாதங்கள்

பாடல்
தோலாற் கவர்வைத்து நாலாறு காலிற் சுமத்தியிரு
காலா லெழுப்பி வளைமுது கோட்டிக்கைந் நாற்றிநரம்
பாலார்க்கை யிட்டுத் தசைகொண்டு மேய்ந்த அகம்பிரிந்தால்
வேலாற் கிரிதொளைத் தோனிடி தாளன்றி வேறில்லையே. 44



பொருள்
உடலின் இயல்புகளும் அவற்றின் அமைப்புகளும் விளக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட உடலில் உயிர் நீங்கும் போது முருகனின் அடித்தாள் அன்றி வேறு துணையில்லை.

கருத்து
நாலாறு காலில் சுமத்தி – அவைகள் கால்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன.
1.
4+6 = 10 (தச வாயுக்கள் என்றஒரு கருத்து உண்டு.உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று,ஒலிக்காற்று,நிரவுக்காற்று,விழிக்காற்று,இமைக்காற்று,தும்மல்காற்று,கொட்டாவிக்காற்று,வீங்கல்காற்று)

2.
சந்திரநாடி ,சூரியநாடி,நடுமூச்சு நாடி,உள்நாக்கு நரம்புநாடி,வலக்கண் நரம்புநாடி,இடக்கண் நரம்புநாடி,வலச்செவி நரம்புநாடி,இடதுசெவி நரம்புநாடி,கருவாய் நரம்புநாடி,மலவாய் நரம்புநாடி  என்று பத்து வித நாடிக்களை குறிப்பது உண்டு.
அதுவும் தவிர கீழ்கண்ட கருத்தும் உள்ளது.

3. ஆறு  ஆதாரங்களும் (மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம் ,மணிப்பூரகம் ,அனாகதம்,விசுத்தி , ஆக்ஞை ) அவற்றுடன் சேர்த்து அந்தக்கரணங்கள் 4ம் சேர்த்து(மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம்) 10 என்பாரும் உளர்.

உயிர் பிரியும் நேரத்தில் உற்ற துணையாக இருப்பது அவனது திருப்பாதங்களே என்கிறார் அருணகிரியார்.

நாற்றுதல் – நடுதல் என்ற பொருளில் வந்துள்ளது

2.
விளக்கம்
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன்  – வினைகளின் வழியாக வரும் உடலை நீக்கி உயர் பதம் பெற ஒரு வழியையும் காண்கிலேன்.
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய் – வாழ்வு நதியினை ஒத்து இருக்கிறது.
நரம் பாற்பொதிந்த பொதிதனை  – உடல் நரம்பால் ஆக்கப்பட்டிருக்கிறது.
திண்டாடு மாறெனைப் போதவிட்ட – என்னை திண்டாடுமாறு விட்ட
விதிதனை நொந்துநொந்து – இது விதியினால் நிகழ்த்தப்பட்டது அதனால் மனம் நொந்துவிடுகிறது.

என்மனம் வேகின்றதே – இதனால் என் மனம் வேகின்றது.

பாடல்


கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன் கந்த வேல்முருகா
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே. 98

பொருள்


(கதி – நற்கதி) முக்தி பெறுவதற்கு உரிய ஒரு மார்கத்தையும் நான் அறியவில்லை. இவ்வாழ்வு நதியினை ஒத்து  பொய் வாழ்வாய் இருக்கிறது. நரம்பால் ஆக்கப்பட்டிருக்கிறது. அதனால் உடல் கட்டப்பட்டிருக்கிறது. விதி வசப்பட்டு  நிலையற்றவாழ்வால் மனம் நொந்து என் மனம் வேகின்றது.
கருத்து
தத்துவார்தமாக சொல்லும் போது நதியினை ஒரு குறியீடாக பயன்படுத்துவார்கள். காரணம் நதி பருவ காலங்களுக்கு உட்பட்டு தனது போக்கில் சென்று கொண்டிருக்கும். அது போல வினையின் காரணமாக உயிர்கள் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும்.

அனைத்தும் வினையின் காரணமாக விதியாக உருவாகிறது. ‘என் செயல் யாதொன்றும் இல்லை’ என்ற பட்டினத்தாரின் வரிகள் நினைவு கூறத் தக்கது.

வேகின்றது என்ற பதம் இன்னும் முழுமை அடையவில்லை என்பதைக் குறிக்கிறது. இது அருணகிரியாருக்காக எழுதப்பட்டதல்ல. இது சாதாரண மக்களுக்காக எழுதப்பட்டது.

முத்தமிழ் முருகனும் அவன் அலங்காரமும் – 1

Loading

சமூக ஊடகங்கள்