மீண்டும் ஒரு முறை எனக்கும் கடவுளுக்குமான எண்ண பரிமாற்றம் உன் வலியை உள் வலியை உணர்கையின் என்னைக் காண்பாய் என்றார். வலி உண்டாக்கி தருணத்தை விவரிக்க சொன்னார். தெருவில் நடந்து செல்பவனை அப்பா என்று எனது மகள் முதல் முறையாய் அழைத்ததை செவிலித் தாய் சொன்ன போது என்றேன். பதில் அளித்த தருணதில் உண்ர்ந்தேன் கடவுளை.
எனக்கும் கடவுளுக்குமான எண்ண பரிமாற்றத்தில் பதில் அளிக்க விரும்பா தருணங்களில் புன்னகைப்பேன் என்று உடன்பாடு உண்டானது. நெஞ்சினில் கை வைத்து வாலிபத்தின் சாயலில் வாழ்ந்து காட்டுவேன் என்று சபதமிட்ட மனிதர்கள் மண்ணில் மறைந்து போனது குறித்ததுவே என்ற எனது கேள்விக்கு பதில் கிடைத்தது மந்தஹாசப் புன்னகை.
கட்டப்பட்ட கைப்பேசி கோபுரங்களின் எண்ணிக்கை குறித்தும் வர்த்தகம் குறித்தும் விரிவடைகின்றன முதன்மை செய்திகள் எவரும் அறியா இடத்தில் செய்திகள் தேய்ந்து வரும் தேனீக்களின் எண்ணிக்கை குறித்து
வழி தவறிய நாய் குட்டியாய் எதோ ஒரு கணத்தில் வந்து சேர்ந்தது கிழிந்த ரூபாய் நோட்டு உலகின் நடனம் கண்டு வியக்கும் பொழுதுகளில் செவிகளில் செய்தி ‘நெத்தியில எழுதி ஒட்டியிருக்கும் போல இளித்த வாயன் என்று’
கோபம் கொண்ட தருணங்களில் கண்களை உருட்டி கைகளை காட்டி மிகப் பெரிய மிருகமொன்று உன்னைக் கவ்விச்செல்லும் எனும் தருணங்களில் உங்களை விடவா அப்பா எனும் மகளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வது
என்ன வாங்கி வந்திருக்கிறாய் மகள் கேட்கையில் மறுதலித்து கைகளை ஆட்டுகிறேன் யேய் பொய் சொல்ற என்று கைகளை ஆட்டி எதிர்ப்படும் வார்தையில் தென்படுகின்றன என்றைக்குமான கடவுளின் பரிச்சயம்