‘ஏன் இப்பொழுது மழை அடிக்கடி பெய்வதில்லை’ என்கிறாய். வினாக்களோடு என் விழிகள் உயர்வடைகின்றன. ‘காகிதக்கப்பல் செய்யக் கற்றுக் கொண்டேன். விடுவதற்கு நீர் வேண்டும்’ என்று விழி நீரை இறைக்கிறாய். வெப்ப சலனத்தில் இடம் மாறுகின்றன சந்தோஷ நீர் ஓடைகள் வாழ்வின் முழுமைக்கும்.
பரிகாரங்களுக்காக கோயிலை வலம் வருதல் வழக்கமாக இருப்பது ஏன்?
ஆன்மீகம் – எல்லா கோவில்களுக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றல் இருக்கும். அவைகள் நம்மீது படும் போது நம்மில் செயல் இழந்து இருக்கும் ஆற்றல் வலிமை பெறும்.
அறிவியல் – 1. பழமையான கோவில்களின் சுற்றளவுகள் மிகவும் பெரியவை. நடந்து செல்லுதல் அல்லது வலம் வருதல் என்பது இரத்த ஓட்டதை அதிகப்படுத்தும். 2. முழுமையான சுவாசம் நடைபெறும். அதனால் இதயத் துடிப்புகள் சீராகும்.
3.புதிய மனிதர்களை/பழைய நண்பர்களை சந்திப்பதால் மன நிலையில் மிகப் பெரிய மாறுதல் நிகழும்.
ஆதியில் விசித்திரங்களை ஈனும் பூமியில் நான் விழுந்த போது எனக்கு சிறகுகள் இருந்தன. அப்போது நீர்ப் பரப்பு சலனமற்று இருந்தது. சில பறவைகளுக்கு சிறகுகள் இருந்தன பல பறவைகளுக்கு சிறகுகளில் முட்களும் இருந்தன. பல பறவைகள் சிறகுகள் அற்று. ஏன் இந்த நிகழ்வுகள் என்றேன் அவைகளிடம். மாயையின் தோற்றம் படா இடங்களில் சிறகுகள் இருக்கும்; சந்தோஷ வாழ்வுடன் கோபங்களை வீசியவைகளுக்கும், கோபத்தில் தடித்த வார்த்தைகளை வீசியவைகளுக்கும், சிறகுகளில் முட்கள் இருக்கும்; வாழ்வினை கொண்டாடத் தெரியாதவைகளுக்கு சிறகுகள் அற்று இருக்கும் என்றும் பகர்ந்தன. பதிலின் வசிகரத்தில் ‘எனக்கு என்ன ஆகும்’ என்று வினா ஒன்று எழுப்பினேன் ‘விடை தேடுதல் தான் வாழ்வு’ என்று கூறி அவ்விடம் விட்டு அகன்றன. தொலை தூரத்தில் மேகக் கூட்டங்களின் சாயைகள் நீரினில். அப்போதும் நீர்ப் பரப்பு சலனமற்று இருந்தது.
விடுதலையை விரும்பா இறக்கைகள், காற்று அடித்தால் தான் காசு சிலருக்கு, எதிர் வழியில் தான் காசு பலருக்கு, வீசும் காற்று எங்கும் வெம்மைகள் வயிற்றின் வலி நீக்கும் பொருட்டு.
காதலில் பல வகைகள் உண்டு. பக்தி இலக்கியங்கள் அதனை பெரிதும் பின்பற்றுகின்றன. தன்னை தலைவியாகவும், இறைவனை தலைவியாகவும் இந்த இலக்கிய காதல்கள் போற்றுகின்றன.
திருநாவுக்கரசரின் பின்வரும் பாடல் அதனை நன்கு விளக்குகிறது.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அகன்றாள் அகலிடத்தார் ஆசாரத்தை தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே.
கேட்டு, கண்டு, உணர்தல் அங்கே நிகழ்கிறது. காட்சிகள் விரிகின்றன. தோழியினடத்தில் கேட்கிறாள்.
முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள் – முதலில் அவனது பெயர் என்ன என்று கேட்கிறாள். மூர்த்தி அவன் இருக்கும் வண்ணம் கேட்டாள் – அவனது உருவ அமைப்புப் பற்றி கேட்கிறாள் பின்னை அவனுடைய ஆரூர் கேட்டாள் – அவனது சொந்த ஊர் பற்றி கேட்கிறாள் பெயர்த்தும் அவனுக்கே பிச்சி ஆனாள் – பின் அவன் பொருட்டு பைத்தியமாகிறாள்.
இவ்வடிவத்தில் முக்கியமானதொரு விஷயம் ‘கேட்கிறாள்’.’கேட்கிறாள்’ என்ற நிலை தன்னை இழந்த நிலை. காதும் மனமும் வேறு வேறு வேலையைச் செய்கின்றன். காதல் எத்தனை விஷயங்களை செய்கிறது என்ற பட்டியல்.
அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்தாள் அன்னையையும், மற்ற எல்லாவற்றையும் விலக்குகிறாள். ‘நீத்தாள்’ – மீண்டும் திரும்ப முடியாத நிலை. (உ.ம் நீத்தார் விண்ணப்பம் – மாணிக்கவாசகர். அன்னையை எவ்விதத்திலும் விலக்க முடியாது என்பது துணிபு. ஆதிசங்கரர், பட்டினத்தார்)
எல்லா இடங்களுக்கும்/வீடுகளூக்கும் என்று சில ஆசாரங்கள் இருக்கின்றன. இங்கே ஆசாரங்கள் என்பது பழக்க வழக்கங்கள். அதை விட்டு விலகினாள். தன்னை மறந்து விடுகிறாள். தன் பெயரையும் மறந்து விடுகிறாள். இரண்டும் வெவ்வேறு நிலைகள். முதல் வகை குறுகிய காலம் குறித்தது. இரண்டாவது நீண்ட காலம் குறித்தது.
அவனது தாளை சரணடைந்தாள். வாருங்கள் நமது பொக்கிஷங்களை பேணிக்காப்போம்.
ஆதியில் அன்றொரு நாள். எனக்கான குழந்தையாக நீ. ஒரு பெயரிட்டு என்னை அழைக்கிறாயே, வேறு பெயர்கள் இல்லையா என்கிறாய். ஸ்ரீ மாதா, ஸ்ரீ மஹாராக்ஞீ ஸ்ரீ மத்ஸிம்ஹாசனேச்வரீ
.. கோவிந்த ரூபினி. .. .. மகா பைரவ பூஜிதாய .. அம்மா,அப்பாவ பாரேன், பேசிகிட்டு இருந்தார், மயங்கி விழுந்துட்டாரு.
சைவ சித்தாந்தம் பற்றிய சில கருத்துக்களை பகிர இருக்கிறேன்.
சைவ சித்தாந்தம் மிகப்பெரிய ஒரு கடல். இது பற்றி தெரிந்து கொள்ளவும்/தெளிந்து கொள்ளவும் கூடிய ஒரு முன்னுரை மட்டுமே இப்பதிவுகளும் இதன் தொடர்ச்சியான பதிவுகளும்.
த்வைதம் – இருமைப்பற்றி பேசும் அத்வைதம் – -ஒருமைப்பற்றி பேசும் விசிஷ்டாத்வதம் – இருமை ஒன்றாதல் பற்றி பேசும் சைவம் – மூன்றும் அதன் செயல்பாடுகளும் (பதி, பசு, பாசம்) பற்றி பேசும்
பதி – இறைவன் பசு – உயிர்கள் பாசம் – இறைவனுக்கும் உயிர்களுக்கும் உள்ள தொடர்பு.
ஆதி சங்கரர் கருத்துப்படி அறுவகை சமயமாக இருந்தாலும் (காணாபத்தியம் – கணபதி முதன்மை, கௌமாரம் – முருகன் முதன்மை, சௌரம் – சூரியன் சைவம் – சிவன் முதன்மை, வைஷ்ணவம் – விஷ்ணு முதன்மை, சாக்தம்- அம்பாள் முதன்மை ) சைவம் காலங்களுக்கு முற்பட்டது.
இவைத்தவிர பைரவர், வீரபத்திரர் – என அனைத்தையும் சேர்த்து பேசப்படும் தொகுதி – பதி.
விபூதி தயாரிக்கும் முறை.(சைவ சித்தாந்த முறைப்படி) 1. கற்ப விதி 2. அனுகற்ப விதி 3. உப கற்ப விதி
1. கற்ப விதி பங்குனி மாதத்தில் ஈசான்ய மூலையில் நன்கு மேய்ந்து வந்த பசுக்களை தொழுவத்தில் கட்ட வேண்டும். பின்னர் அவைகள் இடுகின்ற சாணத்தை பூமியில் விழாமல் தாமரை இலையில் எடுத்து வந்து, உண்டையாக்கி நெருப்பில் இட்டுப் பின் புதுப்பானையில் இட்டு, பிறகு பயன்பாட்டிற்கு எடுத்துக் கொள்ளவேண்டும்.
2. அனுகற்ப விதி காட்டினில் இருக்கும் பசுவின் சாணத்தை எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.
3. உப கற்ப விதி காய்ந்த சாணத்தினை(பொதுவாக வீட்டு பசு) எடுத்து மேற்கண்ட முறைப்படி தயாரிப்பது.
பலன்கள். தலையினில் இருக்கும் நீரை உறிஞ்சி விடும். அனுஷ்டானம் செய்பவர்கள் 16 இடங்களில் தரிப்பார்கள்.(12 எனக் கொள்வாரும் உண்டு)
களைப்போடு வீட்டிற்குள் நான். இரண்டு முறை சுற்றி வந்து காற்றில் கைகளை மூடி ‘என்ன இருக்கிறது தெரியுமா’ என்று என் கைகளை விரிக்க சொல்கிறாய். வினாக்களோடு விடுபடுகின்றன கைகள். பெரிய வண்ணத்துப் பூச்சியும், சில சிறிய வண்ணத்துப் பூச்சிக் கூட்டமும் என்கிறாய். வண்ணத்துப் பூச்சிகளின் இடமாறுதலில் தெரிகிறது, நான் தொலைத்து விட்ட குழந்தைப் பருவங்கள்.
யாருமற்ற இரவில் வெற்றுப் புள்ளியாய் நீ. மனம் காட்டி மோனமிட்டிருக்கிறாய். உன் கண்ணசைப்பில் கைக்குழந்தையாகிறேன். என் காதலைச் சொல்ல துணிகிறேன். ‘ஸ்துலத்தையா, சூட்சமத்தையா’ என்கிறய். விழி அருவி மடைதாண்டி பெரும் சப்தத்தோடு விரைந்து செல்கிறது. இராவணன் இராமனான பொழுதினை ஒத்து தன்னை இழத்தல் நிகழ்கிறது. ஊழிப் பெருங்காற்றின் ஓலிகள் என் காதினில். “கிழத்துக்கு இழுக்குது, இருக்கிற காசை அழிக்கிறத்துக்குன்னு வந்திருக்கிறான் செத்தாலும் நிம்மதியாய் இருப்பேன், போய் டாக்டர கூட்டிகிட்டு வாடா”.