மின்சாரம் தொலைந்து
விளக்குகள் அற்ற பொழுதுகளில்
விட்டத்தில் ஒட்டி இருக்கும்
நட்சத்திர குவியல் கண்டு
சொர்க்கம் எனில் என்னவென்றாள்
என் மகள்.
பதிலுக்கான புன்னகையில்
எதிர்ப்பட்டது எப்பொழுதுமான குரல்
போங்கப்பா நீங்க எப்பவுமே இப்படித்தான்.
உருவேறத் திருவேறும்
ஒரு முறை
எனக்கும் கடவுளுக்குமான
போட்டி சந்தோஷங்களை
பட்டியலிடுவதில் நிகழ்ந்தது.
தீர்ப்பு வழங்க சரசவாணி.
முதியவர்கள் உணவகங்களில்
ரசித்து உண்ணும் உணவானது,
தனது மகளின் முதல்
மூக்குத்தி அனுபவத்தை
அனுபவிக்கும் தாய்.
இசையை அனுபவிக்கும்
வாலிபனின் மனம்.
பட்டியல் தொடரவா என்று கூறி
வாய்பினை எனக்கு தந்தார்.
இரவின் கடைப் பொழுதுகளில்
வீடு திரும்புகையில்
விழித்திருந்து கன்னத்தில் கொடுக்கப்படும்
கடையவளின் முத்தமும்
காயத நினைவுகளும் என்றேன்.
சரசவாணியின் சிரிப்பு யாரை நோக்கி?
ஏதோ ஒரு தருணத்தில்
ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும்.
இல்லை எனில் நிகழ்ந்திருக்குமா
வாழ்க்கை வசந்தமாய்.
உன் மடியினில் படுத்து உறங்கி
கதை பேசி கருத்து பரிமாறி
கன்னத்தில் முத்தமிட்டு
வாழ்க்கை வசந்தமாய்.
இரண்டாம் கட்டிலிருந்து
ஓங்கி ஒலித்தது ஒரு குரல்.
கண்ண மூடிகிட்டு
தாடிய தடவிகிட்டு
தூங்கிற நாய கண்டாலே
பத்திகிட்டு வருதுன்னு சொல்லுடா
உங்கப்பன்ட.
படர்ந்து ஓடும் ஆறு,
மனதை வருடும் காற்று,
இரைச்சலைத் தாண்டி
குருவிகளின் ஒலிகள்,
உயரமான இடத்தில்
நட்சத்திர ஓட்டலில்
மனைவியான உன்னுடன் உணவு.
அனைத்தும் தாண்டி ஒர் குரல்.
நாடார் கடையில போய்
நாலு ரூவாயிக்கு கடன் சொல்லி
சக்கரை வாங்கி வாடா
உங்கப்பனுக்கு காப்பி தண்ணி
ஊத்தணும்.
பல தேசம் சென்றும்
பொருள் பெருக்கியும்
பல அனுபவம் பெற்றவன்
எனும் கர்வத்தோடு
கவிஞன் ஒருவனை
கர்வத்தோடு சந்தித்தேன்.
கவிஞனுக்கான வினாக்கள்
கொட்டும் அருவியாய்.
பொருளற்ற தருணங்களில்
நீரை உண்டு பசியாறி இருக்கிறாயா,
தவிக்கும் பொழுதுகளில்
தட்டுப்பட்ட ஒற்றை நாணயம் வைத்து
புகைத்திருக்கிறாயா,
கண்ணிரை கரைக்க
நீண்ட நேரம்
குளியலரையில் கழித்திருக்கிறாயா,
சந்தித்தலை மறுதலித்து
நெடு நேரம் கழித்து வீடு
திரும்பி இருக்கிறாயா,
அந்த தருணத்திலும் விழித்திருந்து
என்ன வாங்கி வந்திருக்கிறாய்
என்ற மகளின் கேள்விக்கு
இமை வழி கண்ணிரையும்
இதழ் வழி புன்னகையும்
இதய வலிகளுடன்
பரிசளித்திருக்கிறாயா
இன்னும் தொடரவா என்றான்.
விஷ்ணு முன்னான மகாபலி சக்ரவர்த்தியாய் நான்.