
பாடல்
கள்ளிக் கவட்டிடைக் காலை நீட்டிக்
கடைக்கொள்ளி வாங்கி மசித்து மையை
விள்ள எழுதி வெடுவெ டென்ன
நக்கு வெருண்டு விலங்கு பார்த்துத்
துள்ளிச் சுடலைச் சுடுபி ணத்தீச்
சுட்டிய முற்றும் சுளிந்து பூழ்தி
அள்ளி அவிக்கநின் றாடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங்காடே
பதினொன்றாம் திருமுறை – காரைக்காலம்மையார் – மூத்த திருப்பதிகம்
கருத்து – பேய்களின் செயல்களைக் கூறி அவ்வாறான இடத்தில் ஈசன் உறைகிறான் என்று கூறும் பாடல்.
பதவுரை
கள்ளி மரத்தின் கிளைகளுக்கு இடையில் காலை நீட்டி, எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டையை வாங்கி மசிய அரைத்து குழையாக்கி, அதை மசியாக கண்களில் எழுதி, மசியானது கண்களில் இருந்து வேறுபடுமாறு தோற்றம் கொண்டு பிறர் நடுநடுங்குமாறு சிரித்து, மருட்சி அடைந்து, நேரே பாராமல் வலமாகவும், இடமாகவும் திரும்பித் திரும்பிப் பார்த்து குறுக்கே நோக்கி, கோபம் கொண்டு குதித்து,சுடலை எனப்படும் சுடலையில் எரிந்து கொண்டிருக்கும் பிணத்தின் தீயானது சுடவும், சினக் குறிப்புக் கொண்டு மணலை அள்ளி அவிக்க, பேய்கள் நின்று ஆடுகின்ற எங்கள் அப்பன் தங்கியிருக்கும் இடம் திரு ஆலங்காடாகும்.
விளக்கஉரை
- இறையின் மீது நாட்டம் அன்றி புவியின் மீது மனிதர்கள் ஆணவம் கொண்டு ஆடுதலை குறிக்கும் என்றும் கொள்ளலாம்.
- கள்ளிக் கவடு – கள்ளி மரத்தின் கிளைகள்.
- கடைக்கொள்ளி – எரிந்து முடிந்த கொள்ளிக் கட்டை.
- மசித்தல் – மசிய அரைத்தல்.
- விள்ள – கண்ணினின்றும் வேறு தோன்ற.
- `வெடு, வெடு` – சினக் குறிப்பு. நகுதல் கோபச் சிரிப்பாயிற்று.
- சுளித்தல் – கோபித்தல்.