
பாடல்
மூலம்
இடர்களையா ரேனும் எமக்கிரங்கா ரேனும்
படரும் நெறிபணியா ரேனும் – சுடருருவில்
என்பறாக் கோலத் தெரியாடும் எம்மானார்க்
கன்பறா தென்நெஞ் சவர்க்கு
பதப்பிரிப்பு
இடர் களையாரேனும் எமக்கு இரங்காரேனும்
படரும் நெறி பணியாரேனும் -சுடர் உருவில்
என்பறாக் கோலத்து எரியாடும் எம்மானார்க்(கு)
அன்பறா தென்நெஞ் சவர்க்கு
பதினொன்றாம் திருமுறை – அற்புதத் திருவந்தாதி – காரைக்கால் அம்மையார்
*கருத்து – எம்மானிடம் நெஞ்சினில் கொண்ட அன்பு மாறாது என்பதைக் கூறும் பாடல்.*
பதவுரை
வினைப் பற்றி நின்று எனக்கு ஏற்படும் துன்பங்களை அவர் தீர்க்காவிட்டாலும், அவ்வாறு நான் படும் துன்பங்கள் கண்டு இரக்கம் கொள்ளாவிட்டாலும், உன்னை நினைத்தும், பாடுதலும் உன் மீது அன்பு கொண்டு உன்னைப் பின்பற்ற வேண்டிய வழி பற்றி எனக்கு உணர்த்தாவிட்டாலும், எலும்பு மாலை அணிந்த கோலம் கொண்டு, சுடுகாட்டு நெருப்பினிடையே தானும் ஒரு சுடர் வடிவம் கொண்டவராகக் கையில் தீ ஏந்தி நடனம் ஆடுகின்ற எம்மானிடம் நான் நெஞ்சினில் கொண்ட அன்பு மாறாது.
விளக்க உரை
- படர்தல் – ஓடுதல், கிளைத்தோடுதல், பரவுதல், பெருகுதல், அகலுதல், விட்டு நீங்குதல், வருந்துதல், அடைதல், நினைத்தல், பாடுதல்
- படரும் நெறி – செல்லும் கதி, நற்கதி