செந்தாழம் பூவில்
![]()
உருவேறத் திருவேறும்
செந்தாழம் பூவில்
![]()
முருகன் குறித்த பொருள் பேசப்படும் போது எழும் தத்துவம் குறித்தவை இவ்விரண்டு பாடல்களும்
பாடல்
போக்கும் வரவும் இரவும் பகலும் புறம்பும் உள்ளும்
வாக்கும் வடிவும் முடிவும் இல்லாதது ஒன்று வந்துவந்து
தாக்கும் மனோலயம்தானே தரும் எனைத் தன் வசத்தே
ஆக்கும் அறுமுகவா சொல்ல ஒணாது இந்த ஆனந்தமே. – 73
பொருள்
ஆறு திருமுகங்களை உடைய திருமுருகனே, போதல், வருதல், இரவு, பகல், புறம், உள், வாக்கு, வடிவம், இறுதி ஆகிய எதும் இல்லா ஒன்று(ப்ரம்மம்) என்னிடம் வந்து வந்து என்னைச் சேர்ந்து, மனோ லயம் தானே தந்து என்னை தன் வசத்தே ஆக்குகிறது. இப்படிப்பட்ட ஆனந்தத்தை விவரிக்க இயலாது.
கருத்து
· மனிதன் முதலிய பிறவிகளுக்கே இருமைகள் உண்டு. இருமைகள் இல்லாதவன் முருகப் பெருமான் –
o போதல், வருதல்
o இரவு, பகல்
o புறம், உள்
· வாக்கும் வடிவும் – எண்ணங்களே வாக்காகவும் பின் அவைகள் வடிவமும் கொள்கின்றன என்பது துணிபு.இவைகள் இல்லாத ஒன்று – இவைகள் அனைத்தில் இருந்தும் விலகி இருப்பவன் (முருகன்)
· வந்து வந்து தாக்கும் – இறைமை நம்மை (விரும்பி) அழைத்துச் செல்கிறது.
· இது மனதினை லயப் படுத்துகிறது. – ஜப கோடி த்யானம், த்யான கோடி லயம் என்ற தியாகராஜ சுவாமிகளின் வரிகள் நினைவு கூறத் தக்கது.
· எனைத் தன் வசத்தே ஆக்கும் – இறைமையே நம்மை வசப்படுத்துகிறது
2.
பாடல்
தடக்கொற்ற வேள்மயி லேயிடர் தீரத் தனிவிடில்ந
ணவடக்கிற் கிரிக்கப் புறத்துநின் றோகையின் வட்டமிட்டுக்
கடற்கப் புறத்துங் கதிர்க்கப் புறத்துங் கனகசக்ரத்
திடர்க்கப் புறத்துத் திசைக்கப் புறத்துந் திரிகுவையே. 96
பொருள்
முருகனது மயிலே, உலகியல் துன்பம் நீங்க உன்னை தனியாக விடுவாராயின், வட திசையில் இருக்கும் மேரு மலையைத் தாண்டி, உனது தோகையினால் சுழன்று, கடல், சூரியன், தங்கச் சக்கரம் ஆகியவைகளைக் கடந்து, திசைகளைக் கடந்து உலவுவாயாக.
கருத்து
மயில் என்பது குறீயீடாக உருவகப்படுத்தப்பட்டிருக்கிறது. த்யான மார்க்க அனுபவங்கள் கூறப் பட்டிருப்பதால், குரு முகமாக அறிக.
![]()
—————————————————————————————————
![]()
![]()
—————————————————————
![]()
![]()
![]()
போகிப் பண்டிகை
பொது – பழைய பொருள்களை மற்றும் தேவை அற்ற பொருள்களை எரித்து சுத்தம் செய்யும் பண்டிகை
ஆன்மீகம் – பொருள்களை எரித்து சுத்தம் செய்யும் பண்டிகை அல்ல. அது ஒரு உருவகம். தன்னில் இருக்கும் தேவை அற்ற நினைவுகளை, மன கசப்புகளை, கோபங்களை, வருத்தங்களை இன்னும் பிற விஷயங்களை நீக்கி ஒரு புதிய தொடக்கத்திற்கான தொடக்கம் காட்டும் பண்டிகை.
புகை இல்லா போகிக் கொண்டாடி ஒரு வளரும் சமுதாயத்திற்கு வழி காட்டுவோம்.
Click by: Gayu Venkat
![]()
கந்தர் அலங்காரம்
தன் நிலை குறித்து புலம்பல்
1.
விளக்கம்
தோலால் சுவர் வைத்து – சுவர்கள் தோலால் எழுப்பப்பட்டிருக்கின்றன.
நாலாறு காலில் சுமத்தி – அவைகள் கால்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன.
இருகாலால் எழுப்பி – அவைகள் இருகாலால் எழுப்பபட்டிருக்கின்றன.
வளை முதுகோட்டி – அவற்றின் முதுகு வளைந்திருக்கிறது.
கைநாற்றி – கைகள் நாற்றப்பட்டிருக்கின்றன
நரம்பால் ஆக்கை இட்டு – அவைகள் நரம்பால் இணைக்கப்பட்டிருக்கின்றன.
தசை கொண்டு மேய்ந்த அகம் பிரிந்தால் – அவற்றின் மேற்கூரை தசையால் ஆக்கப்பட்டிருக்கிறது.
வேலால் கிரி துளைத்தோன் – முருகன்
அடித் தாளின்றி – பாதங்கள்
பொருள்
உடலின் இயல்புகளும் அவற்றின் அமைப்புகளும் விளக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட உடலில் உயிர் நீங்கும் போது முருகனின் அடித்தாள் அன்றி வேறு துணையில்லை.
கருத்து
நாலாறு காலில் சுமத்தி – அவைகள் கால்களின் மேல் சுமத்தப்பட்டிருக்கின்றன.
1.
4+6 = 10 (தச வாயுக்கள் என்றஒரு கருத்து உண்டு.உயிர்க்காற்று, மலக்காற்று, தொழிற்காற்று,ஒலிக்காற்று,நிரவுக்காற்று,விழிக்காற்று,இமைக்காற்று,தும்மல்காற்று,கொட்டாவிக்காற்று,வீங்கல்காற்று)
2.
சந்திரநாடி ,சூரியநாடி,நடுமூச்சு நாடி,உள்நாக்கு நரம்புநாடி,வலக்கண் நரம்புநாடி,இடக்கண் நரம்புநாடி,வலச்செவி நரம்புநாடி,இடதுசெவி நரம்புநாடி,கருவாய் நரம்புநாடி,மலவாய் நரம்புநாடி என்று பத்து வித நாடிக்களை குறிப்பது உண்டு.
அதுவும் தவிர கீழ்கண்ட கருத்தும் உள்ளது.
3. ஆறு ஆதாரங்களும் (மூலாதாரம், ஸ்வாதிஸ்டானம் ,மணிப்பூரகம் ,அனாகதம்,விசுத்தி , ஆக்ஞை ) அவற்றுடன் சேர்த்து அந்தக்கரணங்கள் 4ம் சேர்த்து(மனம், புத்தி, சித்தம் மற்றும் அகங்காரம்) 10 என்பாரும் உளர்.
உயிர் பிரியும் நேரத்தில் உற்ற துணையாக இருப்பது அவனது திருப்பாதங்களே என்கிறார் அருணகிரியார்.
நாற்றுதல் – நடுதல் என்ற பொருளில் வந்துள்ளது
2.
விளக்கம்
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன் – வினைகளின் வழியாக வரும் உடலை நீக்கி உயர் பதம் பெற ஒரு வழியையும் காண்கிலேன்.
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய் – வாழ்வு நதியினை ஒத்து இருக்கிறது.
நரம் பாற்பொதிந்த பொதிதனை – உடல் நரம்பால் ஆக்கப்பட்டிருக்கிறது.
திண்டாடு மாறெனைப் போதவிட்ட – என்னை திண்டாடுமாறு விட்ட
விதிதனை நொந்துநொந்து – இது விதியினால் நிகழ்த்தப்பட்டது அதனால் மனம் நொந்துவிடுகிறது.
என்மனம் வேகின்றதே – இதனால் என் மனம் வேகின்றது.
கதிதனை யொன்றையுங் காண்கின்றி லேன் கந்த வேல்முருகா
நதிதினை யன்னபொய் வாழ்விலன் பாய்நரம் பாற்பொதிந்த
பொதிதனை யுங்கொண்டு திண்டாடு மாறெனைப் போதவிட்ட
விதிதனை நொந்துநொந் திங்கேயென் றன்மனம் வேகின்றதே. 98
பொருள்
(கதி – நற்கதி) முக்தி பெறுவதற்கு உரிய ஒரு மார்கத்தையும் நான் அறியவில்லை. இவ்வாழ்வு நதியினை ஒத்து பொய் வாழ்வாய் இருக்கிறது. நரம்பால் ஆக்கப்பட்டிருக்கிறது. அதனால் உடல் கட்டப்பட்டிருக்கிறது. விதி வசப்பட்டு நிலையற்றவாழ்வால் மனம் நொந்து என் மனம் வேகின்றது.
கருத்து
தத்துவார்தமாக சொல்லும் போது நதியினை ஒரு குறியீடாக பயன்படுத்துவார்கள். காரணம் நதி பருவ காலங்களுக்கு உட்பட்டு தனது போக்கில் சென்று கொண்டிருக்கும். அது போல வினையின் காரணமாக உயிர்கள் பிறப்பெடுத்துக் கொண்டிருக்கும்.
அனைத்தும் வினையின் காரணமாக விதியாக உருவாகிறது. ‘என் செயல் யாதொன்றும் இல்லை’ என்ற பட்டினத்தாரின் வரிகள் நினைவு கூறத் தக்கது.
வேகின்றது என்ற பதம் இன்னும் முழுமை அடையவில்லை என்பதைக் குறிக்கிறது. இது அருணகிரியாருக்காக எழுதப்பட்டதல்ல. இது சாதாரண மக்களுக்காக எழுதப்பட்டது.
![]()
??
சாப்பாடு நல்லா இருக்கு(மாறுதலுக்காக – வேறு வழி)
நம்ம வூட்ட தவிர எல்லா வீட்டு சாப்பாடும் நல்லா இருக்கும். அப்படி இருக்கு நாக்கு. இது பக்கத்து வீட்டு சாம்பார்.
பெண்களுக்கான உலகில் என்றைக்கும் ஆண்களுக்கு அனுமதி இல்லை.
என்னலே நடக்குது.
என்ன கொடும சார் இது?
![]()
![]()
கந்தர் அலங்காரம்
நிலைலையாமைத் தத்துவம்
1.
வையிற் கதிர்வடி வேலோனை வாழ்த்தி வறிஞர்க்கென்றும்
நொய்யிற் பிளவன வேனும் பகிர்மின்க ணுங்கட்கிங்ஙன்
வெய்யிற் கொதுங்க வுதவா வுடம்பின் வெறுநிழல்போற்
கையிற் பொருளு முதவாது காணுங் கடைவழிக்கே. 18
விளக்கம்
வடிவேலோனை வாழ்த்தி – வடிவேலனை வாழ்த்தி
வறியவர்கென்றும் – வறியவர்களுக்கு
நொய்யிற் பிளவேனும் – மிகக் குறைந்த அளவு
பகர்மின்கள் – பகிராதவர்கள்
வெய்யிற்கு ஒதுங்க உதவா – உதவாது என்பது துணிபு.
இவ் வுடம்பின் வெறு நிழல் போல் – இந்த உடம்பின் நிழல்
கையிற் பொருளும் உதவாது – கையில் இருக்கும் பொருள் உதவாது
காணும் கடை வழிக்கே – இவைகள் கடை நாள் வரையினில் உதவாது.
பொருள்
வடிவேலனை வாழ்த்தி, வறியவர்களுக்கு மிகக் குறைந்த அளவு பகிராதவர்கள் பொருள்கள்,கடைசி நாள் வரையினில் இந்த உடம்பின் நிழல் வெய்யிற்கு ஒதுங்க உதவாது போல உதவாது.
கருத்து
நொய்யிற் பிளவேனும் – அரிசி உடைபடும் போது அதில் கிடைக்கும் மிக சிறிய அளவு உணவு நொய். அதில் மிக சிறிய அளவு கூட கொடுக்காதவர்கள். (யாவருக்கும் உண்ணும் போது ஒரு கைப்பிடி என்ற திருமந்திரம் இங்கு நினைவு கூறத் தக்கது.
காணும் கடை வழிக்கே – காதற்ற ஊசியும்….. வாரது காணும் கடை வழிக்கே என்ற பட்டினத்தாரின் பாடல் நினைவு கூறத் தக்கது.
2.
கோழிக் கொடிய னடிபணி யாமற் குவலயத்தே
வாழக் கருது மதியிலி காளுங்கள் வல்வினைநோய்
ஊழிற் பெருவலி யுண்ணவொட் டாதுங்க ளத்தமெல்லாம்
ஆழப் புதைத்துவைத் தால் வருமோநும் மடிப்பிறகே. 20
விளக்கம்
கோழிக் கொடியன் – அடி பணியாமல்
குவலயத்தே வாழ நினைக்கும் மதியிலி காள் – இந்த உலகத்தில் வாழ நினைக்கும் அறிவு அற்றவர்களே
வல்வினை நோய் – வினையாகிய நோய்
ஊழிப் பெருவலி – ஊழ் வினையில் காரணமான பெரும் வலி
அத்தம் – செல்வம் எல்லாம்
ஆழப் புதைத்து – ஆழப் புதைத்து வைத்தால்
பொருள்
கோழிக் கொடியை கொடியாக கொண்டிருக்கும் அவனது தாளினைப் பணியாமல் இந்த உலகத்தில் வாழ நினைக்கும் அறிவு அற்றவர்களே, வினையாகிய நோய்யும், ஊழ் வினையில் காரணமான பெரும் வலியும் சேர்ந்து வருகையில் ஆழப் புதைத்து வைத்த செல்வம் அடுத்த பிறவியிலும் வருமோ(வராது என்பது துணிபு).
கருத்து
இறைவனை தலைவனாகவும், உயிர்களை தலைவியாகவும் வைத்துப் பாடுதல் மரபு. எனவே கோழிக் கொடியன் (சேவல் ஆண் – கோழி பெண்).
வல்வினை நோய் – நோய் வலி தரக்கூடியது. அஃது ஒத்தே வினைகளும். மிக அதிக வினைகளின் காரணமாக வல்வினை
ஊழிப் பெருவலி – ஊழிப் பெருவலி யாவுள என்ற குறள் இங்கு நினைவு கூறத் தக்கது.
அத்தம் – அத்தம் எல்லாம் குழைக்கும் என்ற அபிராமி அந்தாதி நினைவு கூறத் தக்கது.
![]()
கந்தர் அலங்காரம்
கந்தனை, முருகனை, வடிவேலனை, சண்முகனை, கார்த்திகேயனை எப்படி பெயரிட்டு அழைத்தாலும் அழகு என்று பொருள் வரும் கடவுளை பாடல் வரிகளால் அழகு செய்து அலங்காரம் செய்யும் வரிகள்.
காப்புச் செய்யுளையும் சேர்த்து 108 பாடல்கள்.
கீழ் கண்ட தலைப்புகளில், தலைப்புக்கு 2 பாடல் என்று எழுத உள்ளேன்.
நிலைலையாமைத் தத்துவம்
தன் நிலை குறித்து புலம்பல்
சிவன்/பெருமாளின் மருமகன்
கம்பீரம்
தத்துவம்
காட்சி
நிலைலையாமைத் தத்துவம் தொடக்க நிலை
நிலைலையாமைத் தத்துவம் என்பது தன் நிலை குறித்து புலம்பல் ஏற்படுத்தும்.
அது சிவன்/பெருமாளின் சிந்தனைகளை ஏற்படுத்தும்.
சிந்தனைகள் கம்பீரம் ஏற்படுத்தும்
அதன் மூலம் தத்துவம் பிறக்கும்
காட்சி நல்கும்.
திருவருள் முன்னின்று நிற்கட்டும்.
![]()
மார்கழிக் கோலம் எதற்கு.
ஆன்மீகம்
மார்கழி மாதம் பீடு உடைய மாதம். சைவத்திலும், வைணவத்திலும் அது பற்றி மிகவும் சிறப்பாக சொல்லப் பட்டிருக்கிறது. தேவர்களின் துவக்க நாள். அதனால் அதைக் கொண்டாடுகிறோம்.
அறிவியல்
1. மார்கழி மாதத்தில் அதிக அளவு ஆக்ஸிஜன் விடியற் காலையில் வெளிப்படும். அதை சுவாசிப்பதால் உடற் பிணிகள் நீங்கும்.
2. இறை வழிபாட்டிற்கு செல்வதால் மற்றவர்களோடு கலந்து பழக வாய்ப்பு வரும். இதனால் நீண்ட நாள் மனக் கசப்புகள் விலகும்.
3. இந்தக் காலங்களில் சிறு சிறு விலங்குகளுக்கு இரை தேடுதல் கடினம். அதை எளிமையாக்கும் வழி. (பூசணிப் பூ – கோல நடுவில்)
Click by : Gayu Venkat
![]()
வடதிருமுல்லைவாயில் எழுதப்பட்ட சுந்தரர் தேவாரம்.
செய்த சபதம் மறந்து சங்கிலி நாச்சியாரை விட்டு திருவொற்றியூர் எல்லையைக் கடந்ததால் சுந்தரர் இரு கண்களையும் இழக்கிறார். காஞ்சிபுரம் செல்லும் வழியில் வடதிருமுல்லைவாயில் வருகிறார்.
இத்திருத் தலத்தில் 10+1 பாடல்கள் பாடுகிறார்.
அனைத்துப் பாடல்களும் அடியேன் படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே என்று முடிகின்றன.
இதில் ஒரு பாடல் மட்டும் இப்போது.
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார்? வள்ளலே! கள்ளமே பேசிக்
குற்றமே செயினும், குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்;
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய்! அடியேன்
பற்று இலேன்; உற்ற படு துயர் களையாய், பாசுபதா! பரஞ்சுடரே! .
இப்பாடல் சாதாரண மனிதனை வைத்து எழுதப் பட்டதாகவே தோன்றுகிறது.
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் – எனக்கு கிடைக்கப் பெற்றது யாருக்கு கிடைக்கும்.
வள்ளலே – பெறுபவரின் நிலை அறியாமல் விரும்பிய அனைத்தையும் கொடுக்கக் கூடியவன்.
கள்ளமே பேசிக் குற்றமே செயினும் – என் உள்ளம் கள்ளத் தன்மை உடையது, குற்றம் புரியக் கூடியது.
குணம் எனக் கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன் – இது எனது பிறவிக் குணம். ஆதலால் இன்னும் பல தீமைகள் புரிந்தேன்.
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லை வாயிலாய் – செருக்கு கொண்டவர்களின் கர்வத்தை திரிபுர தகனமாக(மும் மல காரியம்) செய்தவனே
அடியேன் பற்று இலேன் – பற்றுவதற்கு எதுவும் இல்லாதவன்.
என்னுடைய துயரத்தை களைவாய்.
![]()
(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).
சமீபத்தில் நான் படித்த என்னை பாதித்த விஷயம்.
வெளி நாட்டில் வாழும் ஒரு குழந்தையை சுமக்கும் ஒரு தாய்க்கு, அது செயல் அற்று விட்டதாத மருத்துவ முறைப்படி அறிவிக்கப்பட்டது.
தாய் மிகவும் கவலையுடன் இருந்திருக்கிறாள்.
அந்த நேரத்தில் இசைஞானி இசையை கேட்க நேரிடுகிறது. மிகக் குறுகிய காலத்துக்குள் வயிற்றில் இருக்கும் குழந்தை அசைய ஆரம்பிக்கிறது.
குழந்தை பிறந்த பிறகு கணவன், குழந்தை அனைவருடன் வந்து இசைஞானியிடம் ஆசி பெற்று சென்றதாக செய்தி.
![]()
காலையில் இருந்து பரபரப்பு இருவருக்கும்(மனைவிக்கும் எனக்கும்) தொற்றிக் கொண்டது.
‘ஏங்க அவனை கொஞ்சம் எழுப்புங்க’
‘இன்னும் 10 நிமிஷம் தூங்கட்டும்’
‘இன்னைக்கு தான் 2 மாசத்துக்கு பிறகு ஸ்கூல் தொரக்குது. 2 மாசமா தூங்கி தூங்கி காலைல எழுந்திருக்கி மாட்டான் இதுல பூஸ்ட் குடிச்சி காலைல சாப்பிடனும் வேற.
‘இரு எழுப்புறேன்’
‘எனக்கு என்னவோ கவலையா இருக்குங்க, அவன் அவ்வளவு சீக்கிரமா
எழுந்திரிக்கமாட்டான்’
‘இரு எழுப்புறேன்’
‘இருங்க, அடுப்புல கொஞ்சம் வென்னீர் போடுங்க, யூனிபார்ம் எடுத்து வைச்சிருக்குறேன். அத கொஞ்சம் அயன் பண்ணுங்க, ஷூவ எடுத்து வைங்க, சாக்ஸ் நல்லா இருக்கா பாருங்க ஸ்கூல் ரெசிப்ட் எடுத்து வச்சிருங்க, கொஞ்சம் பாட்டில்ல தண்ணி ஊத்தி வச்சிருங்க, ஸ்னக்ஸ் ஏதாவது இந்த டப்பால எடுத்து வச்சிருங்க’
எனக்கு தலை சுற்றியது.
‘எனக்கு ஒரே டென்ஷான இருக்குங்க, அவன் எப்படி கிளம்புவான்னு’
‘கவலப் படாத, நான் எழுப்புறேன்’
‘யேய், தம்பி எழுந்திரிடா’
சிறிய பால்பாயின்ட் பேனாவை கழட்டும் போது வெளியே விழும் ஸ்பிங் போல் கட்டிலில் இருந்து எழுந்தான்.
‘ஏன்டா’
‘இன்னைக்கு ஸ்கூல் தொறக்குதுல்ல, என் ப்ரெண்ஸ் எல்லாரையும் பாக்குணும் இல்ல அதான்’
வாழ்க்கை வழி எங்கும் விசித்திரங்களை விதைத்துச் செல்கிறது. விடை எழுதும் முன்னே வாசித்தல் விசித்திரமே.
Click by : Karthik Pasupathy
![]()
(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).
சமீபத்தில் தொலைக்காட்சியில் ஒரு காட்சி.
சங்கீதா: நீங்க ஏன் இப்ப இளையராஜாவோடு சேர்வதில்லை.
பாலா : இன்னைக்கு இருக்கிற எல்லா இசையிலும் ராஜா இருக்கிறார். அவரில் சாயல் அற்ற தனிப்பாடல் எதுவும் இல்லை. அதனால அவரை அவர் இசையை தனியா பார்க்கவில்லை.
![]()
தத்துவங்கள் அனைத்தும் நிலையாமை என்ற நிலையில் உருவாகின்றன.
சிவவாக்கியரின் கீழ்க் கண்ட பாடல் அதை விளக்குகிறது.
பாடல்
வடிவுகண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நந்தினால்
விடுவனோ அவனை முன்னை வெட்ட வேண்டும் என்பனே;
நாடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல்லுடல்
சுடலை மட்டும் கொண்டு போய்த் தோட்டிகைக் கொடுப்பரே!
விளக்கம்
அழகிய வடிவம் கொண்ட தான் விரும்பும் ஒரு பெண்ணை மற்றொருவன் விரும்புகிறான் என்றால் அவனை விடுவேனா, அவனை வெட்டி விடுவேன் என்று கூறுபவன் இருக்கிறான். அவன் எமன் வாயிலில் விழும் போது நாற்றம் கொண்ட இந்த உடல் மண்ணில் விழும். அதன் பிறகு இந்த உடலை மயானத்தில் இருக்கும் வெட்டியானிடம் கொடுத்து விடுவார்கள்.
இதில் பல கருத்துக்கள் அடங்கி உள்ளன.
அழகிய வடிவம் கொண்ட பெண்ணை விரும்புதல் – இயற்கை. அது காமத்துடன் கூடிய மாயையின் காரியம்.
விரும்புவனை வெட்டிவிடுவேன் – ஆணவம்
இறப்பு தீர்மானிக்கப்பட்டது. எனவே அதில் ஆணவம் கொள்ள எதுவும் இல்லை.
எனவே மும்மல காரியம் கொண்டவனுக்கு முக்தி இல்லை. நிலையற்ற எண்ணம் விடுத்து அஃதாவது மும்மலம் நீக்கி இறைவனை நாடச் சொல்கிறது இப்பாடல்.
![]()
(இசைஞானி பற்றிய சிறு சிறு செய்திகள். அவர் மூச்சுவிடுவது முதற்கொண்டு அவரைப்பற்றி எழுத ஆட்கள் உண்டு. என்றாலும் இது குழந்தைகள் பொம்மை வைத்து சமையல் செய்வது போன்றது இது).
பாரதிராஜா : நான் படம் எடுக்கிறேன். நீ மியுசிக் போடனும்.
இசைஞானி : கதய சொல்லு.
பாரதிராஜா முழு கதையும் சொல்லி முடிக்கிறார்.
இசைஞானி : படம் ஓடாதுடா.
பாரதிராஜா : உன் இசை மேல் எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இசைஞானி : அப்படீன்னா, எனக்கு சம்பளம் வேண்டாம்.
இன்று வரை அப்படத்திற்கு இசை அமைப்பிற்காக சம்பளம் வாங்கவில்லை.
படம் : முதல் மரியாதை.
![]()