நீண்ட இரவுப் பொழுதுகளில்
மகளுடன் கூடிய
நெடும் பயணத்தில்
தலையை திருப்பி நிலாவினை
காண்பித்த பொழுதுகளில்
உணர ஆரம்பித்தேன்
நான் தொலைத்துவிட்ட குழந்தைப் பருவங்களை.
உருவேறத் திருவேறும்
ஒரு சிறந்த கணத்தில்
நிலம் பெறப்பட்டது.
கட்டிடம் உருவானது
கணப் பொழுதுகளில்.
அனைத்து பொழுதுகளிலும்
உறவினர் கூட்டம்.
களித்த பொழுதுகளையும்
கவிதை பொழுதுகளையும்
சந்தித்தது அவ்வீடு.
கால மாற்றத்தில்
கரைந்தன காரை சுவர்கள்.
நீண்ட நெடும் பயணத்திற்கு பிறகு
வீட்டின் சுவாசம்
அண்டப் பெருவெளியில்.
காலத்தின் சாட்ஷியாக
கனவுகளையும் கவிதைகளையும்
சுமந்து அவ்வீடு.
நீண்ட நாட்களுக்குப் பின்
நண்பர்களுடன் சந்திப்பு நிகழ்ந்தது.
வாழ்க்கை குறித்த எண்ணங்கள்.
நல்ல உணவிற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
போகங்களை அனுபவிற்பதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
பொருள் ஈட்ட வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
கற்று தெளிவதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
இறப்பதற்காக வாழ்கிறேன்
என்றான் ஒருவன்.
பதில் பெற்ற பொழுதுகளில்
கொப்பு விட்ட குரங்காய் மனமும் நானும்.