பெரு நீர்ப்பரப்பின் மேல் பறத்து
மீனைக் கொத்திச் சென்றபின்னும்
அமைதியாக இருக்கிறது நீர்ப்பரப்பு.
Click by : Karthik Pasupathy
உருவேறத் திருவேறும்
யாரும் அற்ற நிலவொளி
Click by : Karthik Pasupathi
வினைகளின் வழியே
பிறந்து பார்,
வேறு என்ன இருக்கிறது?
புழுதி நிறைந்த தெருக்களில்
விளையாடு,
வேறு என்ன இருக்கிறது?
உறவுகளோடு சொந்தம்
கொண்டாடு,
வேறு என்ன இருக்கிறது?
கற்றல் தவிர்த்து
அனைத்து விஷயங்களையும் செய்,
வேறு என்ன இருக்கிறது?
பெரு மிருகங்களால்
துரத்தப்படும் சிறு மிருகமாய்
வேலை தேடு,
வேறு என்ன இருக்கிறது?
தனிமை விலக்க
தவறா மணம் செய்,
வேறு என்ன இருக்கிறது?
மனைவியின் வார்த்தைகளால்
வலி கொள்,
வேறு என்ன இருக்கிறது?
குளிரில், ஊன் முழுவதும்
புண்ணாகி குரைத்துச்
செல்லும் நாயினைப் பார்,
வேறு என்ன இருக்கிறது?
தவறாது தமிழ் இலக்கியம் படித்து
தவித்துப் போ,
வேறு என்ன இருக்கிறது?
மகிழ்வின் விளைவாய்
மகிழும் குழந்தை கொள்,
வேறு என்ன இருக்கிறது?
பெருங்குரலுடன் கரைந்து
செல்லும் காகத்தினை உணர்,
வேறு என்ன இருக்கிறது?
கனவுகளில் வாழ்வினை நடத்து
வேறு என்ன இருக்கிறது?
ஒட்டு பீடியும் ஊறுகாயும் கொள்,
வேறு என்ன இருக்கிறது?
மனிதர்களால் விலக்கப்படு,
வேறு என்ன இருக்கிறது?
தடம் மாறாது தனித்துச் செல்லும்
பறவைக் கூட்டங்களை காண்,
வேறு என்ன இருக்கிறது?
தனிமைகளுடன் தனித்திரு,
வேறு என்ன இருக்கிறது?
யாருமற்ற இரவில்
தடயங்கள் அற்று
மரணம் அறிந்து மரித்துப் போ.
வேறு என்ன இருக்கிறது
வாழ்வினை கொண்டாடுதல் தவிர?
Photo : Devadhai Thozhan (a) Mahendran Thiru
தனித்த அறையில்
தகிக்கும் தனிமையில்
இருக்கும் ஒருவனை
சந்திக்க நேர்ந்தது.
யாவரும் கண்டு உணர முடியா
செடிகளும் மரங்களும் அவனிடத்தில்.
அவன் கண்களில், காதுகளில்,
மூச்சுக் குழல்களில், செவிகளில்.
அவைகள் தாண்டி
மேனி முழுவதும்.
காரணம் அறிய விரும்பி
கேள்விகளைத் தொடுத்தேன்.
பிறந்து காலமுதல்
அவைகள் தன்னிடத்தில் இருப்பதாக உரைத்தான்.
தோன்றி மறையும் இயல்பு
அவைகளுக்கு உண்டு என்று உரைத்தான்.
இயல்பான தனிமைகளில்
எதிர்பாரா அளவு பரவும் என்று உரைத்தான்.
பேச்சுக்களில் அவைகள்
விருட்சங்களாக ஆவதும் உண்டு என்றும்
அவைகள் இயல்பெனவும் உரைத்தான்.
பேச்சுக்களின் முடிவில்
சில மரங்கள் என்னுள்ளும் வேறூன்றி இருந்தன.
எவ்வித இசையும் இன்றி நெஞ்சினில் கத்தி வைப்பது போல் ஆரம்பமாகிறது பாடல். நீ என்பதே நான் தானடி..,
ஒரு வாகனம் நகர ஆரம்பமாவதில் கவிதைகள் (மன்னிக்கவும்) பாடல் ஆரம்பமாகிறது.
ஊடல் பற்றிய நிகழ்வுகள் பல திரைப்படங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன. ஆனாலும் இது தனியாக தெரிகிறது.
ஊடல் கொண்ட வேளை. கணவன் தன் நினைவு இன்றி தலைவாருகிறான். மனைவி சீப்பினை எடுத்ததால் அவளுக்கு மிகக் கோபம். கோபத்தில் கண்களை மூடிக் கொள்கிறான்.
மனைவியை சந்திக்க நோயாளியாக நுழைகிறான். மெல்லிய புன்னகை இருவருக்கும்.
சிறு பயணத்தில் சில தீண்டல்கள்,
வாழ்த்து அட்டைகள், தன்னை தருவதாக முடிகிறது.
மனைவி கணனி கற்றுத்தருகிறாள். தன்னை அறியாமல் தீண்டிவிடுகிறாள். கள்ளப்புன்னகை கணவனுக்கு.(விக்ரமால் மட்டுமே முடியும்).
கணவன் மனைவியின் ஊடல் மிகச் சரியாக, மிகச் சிறந்த கவிதையாக வடிவம் பெற்றிருக்கிறது.
காலம் பெயரிட்டு அழைக்கும் கவிதையில் இது நிச்சயம் இடம் பெறும். வீட்டில் இருந்து மழையை ரசிப்பது போல், யாருமற்ற இரவுகளில் மனதை அதன் வழிகளில் இட்டுச் செல்லும் பாடல்களில் இது நிச்சயம் இடம் பெறும்.