சலனத்தில் இருந்து மௌனம் நோக்கி – ‘கணபதியும், பைரவரும்’

 

வினா :
சில நாமாவளிகள் கணபதிக்கும், பைரவருக்கும் பொதுவாக இருக்கின்றன.

உ.ம்
ஓம் நாக யக்ஞோபவீதவதே நமஹ

இது போன்றவைகளை முன்வைத்து கணபதியை உக்ர வழிபாட்டு தெய்வமாக (தாந்திரிக் வழிபாடு) எண்ணலாமா?

அறிதலின் பொருட்டே இக்கேள்வி.

 

திரு. ஸ்ரீனிவாசன் :
Even Bhairavar is not ugra devata in all the forms.

 

அடியேன்:
யோக, போக மற்றும் வேக வடிவங்களில் பைரவர் வேக வடிவமாக தான் குறிப்பிடப்படுகின்றது.

 

மதனா அண்ணா :
மிக மிக சுருக்கமாக கூற வேண்டுமென்றால் கணபதி ஆதி பைரவர் அந்தம். இந்த இரு தெய்வ வடிவங்களுமே வாசியுயர்த்தும் முயற்சிகளுக்கு ஆதாரமாக விளங்குகின்றன. நாகம் என்பது மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினி சக்தியைக் குறிக்கும். இதை வாசியோகத்தால் உயரெழுப்பி சகஸ்ராரமாகிய அந்தத்தை அடையச் செய்வதே யோகத்தில் தலையுயர்ந்த யோகமாக குறிக்கப்படுகிறது. காணாபத்யம் மற்றும் வைரவ வழிபாடுகளின் குறிக்கோள் இதுவே ஆகும். பாதை மாறினும் பயணக் குறி ஒன்றே.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 28 (2018)

பாடல்

ஈசன் அவனல்லாது இல்லை எனநினைந்து
கூசி மனத்தகத்துக் கொண்டிருந்து – பேசி
மறவாது வாழ்வாரை மண்ணுலகத் தென்றும்
பிறவாமை காக்கும் பிரான்

பதினொன்றாம் திருமுறை – திருஇரட்டைமணிமாலை – காரைக்காலம்மையார்

பதவுரை

ஐசுவரியம் உயைவன் எனவும் உயிர்களாகிய அறிவுடைப் பொருள்களை அடிமைகளாகவும், ஏனை அறிவிலாப் பொருள்களை உடைமைகளாகவும் உடையவனும், முழு முதல் தலைவனும் ஆன ஈசன் அல்லாது பிற தெய்வம் இல்லை எனத் துணிந்து, தம்மையும் தான் அல்லாத ஏனையோரையும் முதன்மையானவர்களாக எண்ணிக் கொள்வதற்கு வெட்கப்பட்டு, அவனையே மனத்தில் வைத்திருந்து, மறவாமல் அவன் புகழ் பேசுபவர்களை, ஒருபோதும் பிறவித் தளையில் சிக்கவிடாமல் காப்பவர் நம் இறைவன்.

விளக்க உரை

  • சிவனை நினைந்து, அவனை மறவாது நினைவாரை அவன் பிறவி வராமல் காப்பான்` என்பதை விளக்கும் பாடல்.
  • கூசுதல் – தம்மையும் ஏனையோரையும் முதன்மையானவர்களாக எண்ண நாணுதல்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 27 (2018)

பாடல்

அருட்டிரட் செம்பொற் சோதி
   யம்பலத் தாடு கின்ற
இருட்டிரட் கண்டத் தெம்மான்
   இன்பருக் கன்பு செய்யா
அரட்டரை அரட்டுப் பேசும்
   அழுக்கரைக் கழுக்க ளாய
பிரட்டரைக் காணா கண்வாய்
   பேசாதப் பேய்க ளோடே

ஒன்பதாம் திருமுறை – திருமாளிகைத் தேவர்

பதவுரை

அருள் திரண்டு, செம்பொன் போன்ற நிறமுடைய ஒளியை கொண்ட சிற்றம்பலத்தில் ஆனந்தக் கூத்தாடும் நீலகண்டனாகிய எம்பெருமானுடைய அடியவர்கள் மீது அன்பு செலுத்தாமல் துடுக்கு உடையவர்களையும், துடுக்கான வார்த்தைகளைப் பேசும் குற்றம் உடையவர்களையும், கழுகுகள் போன்று பிறர் பொருளை நயவஞ்சமாகப் பறித்து உண்ணும் நெறி தவறியவர்களையும் என் கண்கள் காணது; என் வாய் அப்பேய்களோடு உரையாடாது.

விளக்க உரை

  • `அருளினது திரளாகிய அம்பலம்` எனவும், `இருளினது திரளாகிய கண்டம்` எனவும் மாற்றி உரைக்க.
  • அரட்டர் – துடுக்குடையவர்.
  • பிரட்டர் – புரட்டர் (வடமொழி பிரஷ்டர்) – நெறிதவறியவர். ஒதுக்கப்பட்டவர், வஞ்சகர்

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 26 (2018)

பாடல்

காண்டல் வாயில் மனம்தன்வே தனையோ(டு) யோகக் காட்சியென
ஈண்டு நான்காம் அனுமானம் தனக்கும் பிறர்க்கு மென்றிரண்டாம்
மாண்ட உரைதந்த் ரமந்த்தரத்தோ டுபதே சச்சொல் லெனமூன்றாம்
பூண்ட அளவைக் கெதிர்புலன்தன் னியல்பு பொதுவென் றிரண்டாமே

திருநெறி 2 – சிவஞானசித்தியார்

பதவுரை

பொருளை அறிவதற்குக் கண்ணால் காணுகின்ற நிலையைக் கருவியாக்கிப் பொருளை அறிவதை குறிப்பிடும் பிரத்தியட்ச பிரமாணம் என்றும் காண்டல் அளவை என்றும் குறிக்கப் பெறும் காட்சியளவை வாயிற்காட்சி, மானதக்காட்சி, தன்வேதனைக்காட்சி, யோகக்காட்சி என நான்கு வகைப்படும்; கருதலளவை தன்பொருட்டு எனவும், பிறர் பொருட்டெனவும் இருவகைப்படும்; உரையளவை தந்திரகலை, மந்திரக்கலை, உபதேசக்கலை என மூன்று வகைப்படும்; இதுவே பிரமாணங்கள் என்று அறியப்படும். பிரமேயங்கள் சிறப்பியல்பு, பொதுவியல்பு என இருவகைப்படும்.

விளக்க உரை

  • காட்சி அளவை, கருதல் அளவை மற்றும் உரையளவை ஆகியவற்றின் பாகுபாடுகள் பற்றி கூறப்பட்டது

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 25 (2018)

பாடல்

பஞ்சா பரணி1 நவபூர்ணி2
        பரணா பரணி தவசரணி
     பரமேஸ் வரியே ஈஸ்வரியே
        பஞ்சா ஷரத்தி பங்கயத்தி3

எண்சாண் உடம்பில் தொண்ணூற்றா
       றிசைந்த தத்வா திகமுகமே
     இறையோ னிடத்தில் நடனமிடும்
       இமையோர்க் கரசே ஏகவெளிக்

கஞ்சா சனத்தின் நிலையாளே4
        கருணா லயத்துள் உறைபவே
     கன்னற் சிலையும் ஐங்கணையும்
        கரத்தில் சிறந்த பரைத்திருவே

அஞ்சா ணவங்கள் அகன்றடியார்
        மனதில் உறையும் அருட்கடலே
     மயிலா புரியில் வளரீசன்
        வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

சஞ்சலமும், சலனமும், குழப்பமும் பின்னிப் பிணைந்து இருக்கும் மனித வாழ்க்கையை புறந்தள்ளி வெற்றி அடையச் செய்பவளாகவும், வளர்பிறை ஏகாதசி திதிக்கும் தேய்பிறை பஞ்சமி திதிக்கும் அதிதேவதை ஆகியவளும் ஐந்து திருமுகம் கொண்டவளும் ஆன ஸ்ரீ நீலபதாகா நித்யா எனும் தேவி ஆனவளும், ஒன்பது எனும் எண்ணிக்கையை குறிக்கும் நவ வகையான சக்தியாக ஆகி பூரணமாக இருப்பவளும், தவ வாழ்வினை நிறைவு செய்யும் பாதத் தாமரைகளை உடையவளும், உலக உயிர்களை காப்பதற்காக காவல் மேடையில் வீற்றிருப்பவளும், பரமேஸ்வரின் வாம பாகமாக இருக்கும் பரமேஸ்வரியாக இருப்பவளும், ஈஸ்வரனின் அங்கமாக இருக்கும் ஈஸ்வரியாக இருப்பவளும், பஞ்சாட்சரமாக இருப்பவளும், தாமரையில் வீற்றிருப்பவளும், எண்சாண் உடம்பில் இருக்கும் தொண்ணூற்று ஆறு தத்துவங்களும் ஒன்றாக இணைந்து புலப்படுத்தும் ஏக தத்துவ முகம் உடையவளாகவும், இறைவன் இடத்தில் நடனம் இடும் இமைக்காதவர்கள் எனும் பெயர் பெற்ற தேவர்களுக்கு தலைவியாகவும் இருப்பவளேஅண்ட வெளி ஆகிய ஆகாயத்தில் கைத்தாளம் இட்டு நிலையாக இருப்பவளும், அருள், கருணை ஆகியவற்றை எப்பொழுதும் கொண்டு அதில் உறைபவளும், கரும்பு வில்லையும், மன்மதனுக்குரிய ஐந்து அம்புகளாகிய தாமரை மலர், அசோக மலர், குவளை மலர், மாம்பூ, முல்லை மலர் ஆகியவற்றை கொண்டவளும், அன்னமய கோசம், பிராணமய கோசம், விஞ்ஞானமய கோசம்,  மனோமயகோசம்,  ஆனந்தமய கோசம் என்பதை நீங்கிய அடியார்கள் மனதில் உறையும் அருள் கடவுளாகவும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் விளங்குகிறாள்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • 1ஐந்து முகங்களுக்கும் ஐந்து ஆபரணங்கள் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.
  • 2நவ சக்தி பீடங்களில் வசிப்பவள் என்றும் பொருள் கொள்ளலாம்.
  • 3தாமரை போன்ற ஆயுதம் கொண்டவள்  என்றும் கூறலாம்.
  • 4கஞ்சம் என்பது கைத்தாளம் எனும் பொருளில் விளக்கப்பட்டுள்ளது.

 

 

அம்மையை பற்றி எழுத ஆரம்பிக்கும் போதே தொடக்கமும் முடிவும் இல்லாமல் போவதால் இயன்ற அளவில் பதம் பிரித்து எழுதப்பட்டு இருக்கிறது.

குறை எனில் வினைப்பற்றிய மனிதப்பிறவி காரணம்; நிறை எனில் குரு அருள்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 24 (2018)

பாடல்

உற்றவன்காண் உறவெல்லா மாவான் றான்காண்
   ஒழிவறநின் றெங்கு முலப்பி லான்காண்
புற்றரவே யாடையுமாய்ப் பூணு மாகிப்
   புறங்காட்டி லெரியாடல் புரிந்தான் றான்காண்
நற்றவன்காண் அடியடைந்த மாணிக் காக
   நணுகியதோர் பெருங்கூற்றைச் சேவ டியினால்
செற்றவன்காண் திருமுண்டீச் சரத்து மேய
   சிவலோகன் காண்அவனென் சிந்தை யானே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

திருமுண்டீச்சரத்தில் கோயில் கொண்ட சிவனாவன், உயிரோடு உடல் இயைந்து நின்றவனாகவும், எல்லா உறவுகளுமாக ஆனவனாகவும், ஒருவரிடத்தும் தனக்குப் பின் உரிமையாக இல்லாத வகையில் எவ்விடத்தும் நிறைந்து நின்றவனாகவும், அழிவில்லாதவனாகவும், புற்றில் வாழும் பாம்பை ஆடை மேல் கட்டப்படும் கச்சாகவும் ஆபரணமாகவும் கொண்டவனாகவும், சுடுகாட்டில் எரியேந்தி ஆடுதலைச் செய்தவனாகவும், நல்ல தவ வேடங்கொண்டவனாகவும், சரணடைந்த மார்கண்டேயனுக்காக  பெருங்கூற்றுவனைச் சேவடியால் உதைத்து அழித்தவனும்  ஆனவனாகவும் ஆகி கைலாச மலையில் வீற்றிருப்பவனாகவும் இருந்து  என் சிந்தைக்கு உரியவன் ஆவான்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 23 (2018)

 

பாடல்

எடுத்தவன் றருக்கை யிழித்தவர் விரலா லேத்திட வாத்தமாம் பேறு
தொடுத்தவர் செல்வந் தோன்றிய பிறப்பு மிறப்பறி யாதவர் வேள்வி
தடுத்தவர் வனப்பால் வைத்ததோர் கருணை தன்னருட் பெருமையும் வாழ்வும்
கொடுத்தவர் விரும்பும் பெரும்புகழாளர் கோணமா மலையமர்ந் தாரே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

கயிலைமலையை பெயர்த்து எடுத்த இராவணனின் செருக்கைத் தம் திருப்பாதவிரலை ஊன்றி அழித்தவரும், தவறு உணர்ந்து பின் அவன் புகழ்ந்து போற்ற அவனுக்கு  விருப்பத்துடன் வெற்றி வாளும், நீண்ட வாழ்நாளும் அருளியவரும், விலகாத செல்வத்தோடு கூடியவரும்,  பிறப்பு இறப்பும் அறியாதவரும், சிவனை நினையாது தக்கன் செய்த வேள்வியைத் தடுத்தவரும், வனப்பு மிகுந்த உமாதேவியை ஒருபாகமாக கொண்டவரும், உயிர்களிடத்துக் கருணைகொண்டு தன்னுடைய அருள்பெருமையும், வாழ்வும் கொடுத்தவரும் ஆன பெரும்புகழையுடைய சிவபெருமான் திருக்கோணமலையில் வீற்றிருந்து அருளுகின்றார்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 22 (2018)

 

பாடல்

முந்தினான் மூவருள் முதல்வன் ஆயினான்

கொந்துலா மலர்ப்பொழிற் கூக மேவினான்

அந்திவான் பிறையினான் அடியர் மேல்வினை

சிந்துவான் உறைவிடம் திருவிற் கோலமே

 

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

 

பதவுரை

காலத்தால் முற்பட்டு வரையறை செய்ய இயலாதவனாகவும், படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் தொழில்களை உடைய மூவருக்கு முதலாவதாக ஆனவனாகவும், கொத்து கொத்தாக பூக்கும் சோலைகளை உடைய கூகம் என்ற ஊரில் உறைபவனாகவும், அந்தி வானத்தில் தோன்றும் பிறை சந்திரனை தன் தலையில் சூடியவனாகவும் அடியவர்களுடைய வினைகளை முழுவதுமாக நீக்குபவனாகவும் ஆன இறைவன் உறையும் இடம் திருவிற்கோலம் ஆகும்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 21 (2018)

பாடல்

தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி
   சித்திரப் பந்தர் சிக்கென இயற்றச்
சுருண்ட செஞ்சடை யாய்அது தன்னைச்
   சோழ னாக்கிய தொடர்ச்சிகண் டடியேன்
புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம்
   போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி
அரண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன்
   ஆவ டுதுறை ஆதிஎம் மானே

தேவாரம் – ஏழாம்  திருமுறை – சுந்தரர்

பதவுரை

சுருண்ட, சிவந்த சடையை கொண்டு திருவாவடுதுறையில் எழுந்தருளியுள்ள ஆதி ஆகிய எங்கள் முதற்கடவுளே, தெளிவுபெற்ற சிலந்தி ஒன்று,  தனது வாயினின்று உண்டாகும் நூலால் உறுதியான அழகிய பந்தல்  ஆக்க முற்பட்ட அச் சிலந்தியை, சோழனாய்ப் பிறக்கச் செய்த திருவருளை அறிந்து, அடியேன் பழவினையாகிய சஞ்சிதம் தொலையப் பெற்றாரையும் வந்து பற்றும் வன்மையுடைய ஆகிய ஆகாமியம்  எனவும் எதிர்வினை எனவும் ஆகிய இனிச் செய்யப்படும் வினை குறித்து  அஞ்சி, உனது அழகிய மலர்போன்ற திருவடியில் விழுந்து புரண்டு, `போற்றி! போற்றி!` என்று துதித்து,  உன்னை வந்து அடைந்தேன்!  என்னை ஏற்று கொண்டு அருள்.

விளக்க உரை

  • சிலந்திக்குச் செய்த திருவருளை எடுத்து இயம்பும் பாடல்.
  • சிலந்தி,  கோச்செங்கட் சோழ நாயனார் ஆக பிறந்து வந்த வரலாற்றை பெரிய புராணத்துள் கண்டு உணர்க.
  • தெருளுதல் – உணர்வுறுதல், தெளிதல், விளங்குதல், பூப்படைதல்

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 20 (2018)

பாடல்

படையானைப் பாசுபத வேடத் தானைப்
   பண்டனங்கற் பார்த்தானைப் பாவ மெல்லாம்
அடையாமைக் காப்பானை யடியார் தங்கள்
   அருமருந்தை ஆவாவென் றருள்செய் வானைச்
சடையானைச் சந்திரனைத் தரித்தான் தன்னைச்
   சங்கத்த முத்தனைய வெள்ளை யேற்றின்
நடையானை நம்பியை நள்ளாற் றானை
   நானடியேன் நினைக்கப்பெற் றுய்ந்த வாறே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

பதவுரை

பிற உயிர்கள் போல் படைக்கப்படாதவனை, அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்க வேட வடிவம் கொண்டவனை, மன்மதனை நெற்றிக் கண்ணால் நோக்கி அவனை சாம்பலாகுமாறு அவனை செய்தவனை, விதி வழி வரும் பாவங்கள் அடையாமல் காப்பவனை, அடியவர்களுக்கு அருமருந்தாகி அவர்களின் துன்பம் விலகுமாறு அருள் செய்பவனாய், தனது திருமுடிகளில் சந்திரனை தரித்தவனை, சங்கின் நிறம் ஒத்து முத்தினை கொண்டு இருப்பது போன்ற தனித்துவமான வெள்ளை நிற காளையின் நடை உடையவனை, பூரணம் நிறைந்த இறைவனை, திருநள்ளாறு எனும் திருத்தலத்தில் இருப்பவனை அடியேன் நினைந்து உய்ந்தேன்.

விளக்க உரை

  • அனங்கன் – மன்மதன்.
  • ‘ஆவா’ – இரக்கக் குறிப்பிடைச் சொல்.
  • படையானை – பலபடைக்கலங்களை உடையவனாய் என்று சில விளக்கங்களில் கூறப்பட்டு இருந்தாலும், ‘உடையாளை ஒல்கு செம்பட்டுடையாளை ..இங்கு என்னை இனிப் படையாளை உங்களையும் படையா வண்ணம் பார்த்திருமே’ எனும் அபிராமி அந்தாதி வரிகள் பற்றியும் படைக்கப்படாதவன் எனும் பொருளில் இங்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • பாசுபத வேடத் தானைப் – ‘பாசுபதமதத்தில் கூறப்படும் வேடத்தனாய்’ என்று சில விளக்கங்களில் கூறப்பட்டு இருந்தாலும், திருவேட்டக்குடி திருத்தலத்தில் அர்ஜூனனைச் சோதிக்க சிவபெருமான் வேடுவ கோலத்தில் வந்தது பற்றி தலபுராணத்தில் இருப்பதாலும்,  அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்கப்பட்ட காதை கொண்டும் அர்ஜுனனுக்கு பாசுபத அஸ்திரம் வழங்க வேட வடிவம் கொண்டவன் எனும் பொருளில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 19 (2018)

பாடல்

விதியாய் விளைவாய் விளைவின் பயனாகிக்
கொதியா வருகூற் றையுதைத் தவர்சேரும்
பதியா வதுபங் கயநின் றலரத்தேன்
பொதியார் பொழில்சூழ் புகலிந் நகர்தானே

தேவாரம் – முதலாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

மார்க்கண்டேயருக்கு விதிக்கப்பட்ட விதியானது அவரது வாழ்நாள் வயது பதினாறு எனவும், அந்த விதியின் விளைவாக வந்த மரணத்தினை, அவர் இறை வழிபாடு செய்து, விதியின் விளைவாய்  வெளிப்பட்டுச் சினந்து வந்த கூற்றுவனை உதைத்து சிவபிரான் எழுந்தருளிய தலம், தாமரை மலர்கள் மலர்ந்த நீர்நிலைகளும், தேன்கூடுகள் நிறைந்த சோலைகளும் சூழ்ந்தது புகலிநகர் எனும் திருத்தலமாகும்

விளக்க உரை

  • கூற்றுதைத்தார் பதியாவது புகலிநகர் என்பது பற்றிய பாடல்.
  • ‘கொதியாவருகூற்றை உதைத்தவர்’  –  விதியென்னும் நியதியைப்பற்றி வந்த கூற்றுவனின் அந்நியதிக்கும் காரணம் இறைவன் என்பதை உணர்ந்து கொள்ளவைத்த பெருங்கருணை எனும் பொருள் பற்றியது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 18 (2018)

பாடல்

தேனே பாலே சருக்கரையே
      தெவிட்டா அமுதே கற்கண்டே
   சீனி யுடன்முப் பழச்சாற்றில்
      சிறந்த ரசமே செம்பொன்மலை

மானே மடலே மடக்கொடியே
     வளர்ந்த வனமே திருவதன
   மயிலே குயிலே அன்பரெல்லாம்
     வாரிச் சொரியும் மணிநிதியே

ஊனே என்றன் உயிர்க்குயிரே
     உள்ளும் புறம்பும் உறுமொழியே
  ஒளிசேர் கனகக் கற்பகமே
     உதித்த சுடரே திருப்பரமே

வானே வானின் வளிக்கனலே
     வனமே பூவே வரைமகளே
  மயிலா புரியில் வளரீசன்
     வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

தேனாகவும், பாலாகவும், இனிப்பான சர்க்கரையாகவும், செறிவு உடைய அமுதமாகவும், கற்கண்டாகவும், மா, பலா மற்றும் வாழை இவற்றை சர்க்கரையுடன் பழச் சாற்றில் சேர்த்து செய்த ரசமாகவும், செம்பொன்மலை போன்றவளாகவும், மான் போன்றவளாகவும், வாழை மடல் போன்றவளாகவும், கொடி போன்றவளாகவும், வனத்தில் வசிப்பவளாகவும், மயில் போன்ற வதனம் உடையவளாகவும், குயில் போன்ற குரல் உடையவளாகவும், அன்பர்களுக்கு எல்லாச் செல்வங்களையும் வாரிச் சொரிபவளாகவும், இந்த ஊனைப் படைத்தவளாகவும், அதனுள் உறையும் உயிருக்கு உயிராகி விளங்குபவளாகவும், அகத்திலும் புறத்திலும் ஒன்றான மொழியினை உடையவளாகவும், ஒளி வீசக்கூடிய தங்க நிறமான கற்பத்தினை போன்றவளாகவும், அக இருளை நீக்கும் ஒளி வடிவமாகவும், உணவாகவும், ஆகாயமாக இருப்பவளாகவும், வானில் தோன்றும் கனல் காற்றாக இருப்பவளாகவும், வனத்தில் இருப்பவளாகவும் *, இமவான் மகளாகவும், மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் விளங்குகிறாள்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • * வனத்தில் இருப்பவளும் – வன தேவதைகள் சூழ இருப்பவளும் என்றும் கொள்ளலாம்.

 

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 17 (2018)

பாடல்

தன்னில் ஆசறு சித்தமும் இன்றித்
   தவம்மு யன்றவ மாயின பேசிப்
பின்ன லார்சடை கட்டிஎன் பணிந்தாற்
   பெரிதும் நீந்துவ தரிதது நிற்க
முன்னெ லாம்முழு முதலென்று வானோர்
   மூர்த்தி யாகிய முதலவன் றன்னைச்
செந்நெ லார்வயல் திருத்தினை நகருட்
   சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மனமே, தன்னிடத்துக் குற்றமின்றி நிற்கும் மனத்தை அடையாமல், தவத்தொழிலைச் செய்து,  பயனில்லாத சொற்களைப் பேசி  பின்னுதல் உடைய  சடைகளைச் சேர்த்துக் கட்டிக்கொண்டும், எலும்பினை அணிந்து கொள்ளுதலாகிய வேடத்தைப் பூண்டு கொண்டு மட்டுமே  மக்கள்  பிறவியாகிய கடலை முற்றிலும் கடந்துவிடுதல்என்பது  இயலாது; ஆதலின், அந்நிலையில் இருந்து வேறுபட்டு  நிற்க  நீ  தேவர்களுக்குத் தேவனாய் உள்ளவனும் பெருந்தேவனாகியும் ஆனவனும் கொண்டு  செந்நெற் பயிர்கள் நிறைந்த வயல்களையுடைய திருத்தினை நகரில் எழுந்தருளியிருக்கின்ற  நன்மையின் மேல் எல்லையாய் உள்ள பெருமானை  அணுகச் சென்று  இவனே  தொன்மையான முழுமுதற் கடவுள் என்று துணிந்து அடைவாயாக.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 16 (2018)

பாடல்

மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே

தேவாரம் – மூன்றாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

திருமாணிகுழி எனும் திருத்தலமானது, சந்தன மரங்கள், கரிய அகில் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து வந்து விழுந்து, குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தாங்கிக்  கொண்டு வரும் கெடில நதியின்  மோதும் நீரானது பாயும் வயல்களில் நறுமணம் கமழ்வதுடன் கூடியதும், மலரும் நிலையிலுள்ள (அஃதாவது மொட்டான) மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரம்மச்சாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீல கண்டனான சிவபெருமான் வீற்றிருந்து அருளும் தலமும் ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 15 (2018)

பாடல்

கற்று அறியேன் கலை ஞானம்; கசிந்து உருகேன்; ஆயிடினும்,
மற்று அறியேன் பிற தெய்வம்; வாக்கு இயலால், வார் கழல் வந்து
உற்று, இறுமாந்து இருந்தேன்; எம்பெருமானே! அடியேற்குப்
பொன் தவிசு நாய்க்கு இடும் ஆறு அன்றே, நின் பொன் அருளே!

திருவாசகம் – எட்டாம் திருமுறை – மாணிக்கவாசகர்

பதவுரை

எம்பெருமானே! ஞானத்தினை வழங்கும் நூல்களைப் படித்து அவற்றின் பொருள்களை அறியவில்லை; அதன் பொருள் பற்றி மனம் கசிந்து உருகவும் இல்லை; கற்று அறிந்தது கொண்டு, வாக்கின் தன்மையால் வேறு தெய்வங்களை துதித்தும் அறியவில்லை; ஆனாலும் ஆராய்ந்து, தங்களுடைய நீண்ட திருவடிகளை பெருமிதத்துடனும், செருக்குடனும் வந்து அடைந்து  இருந்தேன் என்பதைத் தவிர எதுவும் செய்யவில்லை. அதன் பொருட்டு அடியேனாகிய எனக்கு,  உன் பொன் போன்ற திருவருளைக் காட்டியது,  நாயினுக்கு,  பொன்னால் ஆகிய ஆசனத்தை  இடுவது போன்றது அல்லவா?

விளக்க உரை

  • இறைவன் தன்னையே நினைப்பவர்களுக்கு  பேரருள் செய்வான் என்பது குறித்து கூறப்பட்டப் பாடல்.
  • கற்றறியேன் கலைஞானம் – அறிவால் பெறப்படுவதுமான கலைஞானத்தினை கற்றலாலும் கேட்டலாலும் வளர்த்துக் கொண்டாலும் அது இறைவனடி சேர்க்க துணை செய்யும் என்பது உறுதியாக கூற இயலாது.  எல்லாக் கலைகளுக்கும் மூலமாக உள்ள பொருள் எது என்ற முறையில் சிந்தனையைச் செலுத்தி, உய்யும் கதிக்கு வழிகாட்டி, அதன் இறுதிப் பயனாகவுள்ள இறையருளைப் பெறக் கூடுமேயானால் அத்தகைய ஒரு கலைஞானம் ஏற்றுக் கொள்ளக் கூடியதே என்பது பற்றியது.
  • ஒரு தகுதியும் இல்லாத எனக்கு இத்துணை அருமையான கருணையைப் புரிந்தது என்பது நாய்க்குப் பொன்னாசனம் இட்டது போன்றது என்று உவமையைச் சொல்லி விளக்கியது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கொடிமாடச் செங்குன்றூர்

 

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருச்செங்கோடு

 

  • அர்த்தநாரீஸ்வராக விளங்கும் தலம்
  • வெள்ளை பாஷாணத்தால் ஆன அர்த்தநாரீஸ்வரர் மூலவர். திருவடிவம் நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி திருக்காட்சி. (இலிங்க வடிவமில்லை) பாதி புடவை – பாதி வேஷ்டி அலங்காரம்; இந்த கோலத்திலேயே (மூலவர்) காட்சி முழு வடிவமும் வெள்ளைப் பாஷாணத்தால் ஆனது.
  • அர்த்தநாரீஸ்வரர் பாதத்தின் அடியில் தேவ தீர்த்தம் எனப்படும் நீர் சுரந்தவாறு உள்ள அமைப்பு
  • ஆண் பாகமான வலக்கையில் தண்டம் ஏந்தியும், பெண் பாகமான இடக்கையை இடுப்பிலும் வைத்தவாறும் கால்களிலும் ஒருபுறம் சிலம்பும் , மறுபுறம் கழலும் அணிந்தவாறு திருக்காட்சி கொண்ட அர்த்தநாரீஸ்வரர் உற்சவ திருமேனி
  • வெள்ளைபாஷாணத்தால் செய்யப்பட்ட திருவடிவம் ஆன செங்கோட்டு வேலவர் வலக்கையில் வேல் ஏந்தி , இடக்கையை இடுப்பில் வைத்தவாறு நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி திருக்காட்சி; அடியில் உள்ள பீடம் சதுர வடிவிலானது
  • கேதாரகௌரியம்மை மரகதலிங்கத்தை வழிபாட்டு சிவனாரின் இடப்பாகத்தை பெற்ற தலம்
  • கிழக்கு நோக்கிய ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆதிகேசப்பெருமாள் சந்நிதி
  • ஆமை வடிவத்தின் மேல் அமைந்த நந்தி மண்டபம்
  • ஆதிசேஷனுக்கும், வாயுவிற்கும் நடந்த சண்டையில் சிதறிய மேருமலையின் சிகரங்களில் இத்தலமும் ஒன்று
  • மேலமாடவீதியிலிருந்து பார்ப்பதற்கு நாகம் போன்று காட்சியளிப்பதால் நாகாசலம், நாககிரி.
  • மலை சிவந்த நிறமாக காட்சியளிப்பதால் செங்கோடு
  • விறன்மிண்ட நாயனார் பிறந்து, வாழ்ந்து, முக்திப்பெற்ற தலம்
  • திருஞானசம்பந்தர், திருநீலகண்டப்பதிகம் பாடிய தலம்
  • திருஞானசம்பந்தர், கொங்கு நாட்டுத் தல யாத்திரையின் போது, முதலில் இப்பதியை வணங்கி, பின்பு சில தலங்களுக்குச் சென்றுவிட்டு திரும்பவும் இங்கு வந்த போது, அவருடன் வந்த அடியார்களை ‘நளிர்சுரம்’ பற்றி வருத்த ‘அவ்வினைக் கிவ்வினை’ என்னும் பதிகம் பாடி, ‘தீவினைவந்தெம்மைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்’ என ஆணையிட்டு அந்நாடு முழுவதும் பிணிதீர்த்தார் என்பது பெரியபுராண வரலாறு.
  • பாண்டிப்புலவரேறு என்ற புலவருடன் குணசீலர் என்ற புலவர் புலமையை நிருபிக்கும் போது  “சமரமுகத் திருச்செங்கோடு சர்ப்பசயிலமெனில் அமரிற்படம் விரித்து ஆடாததென்னே” – என்று பாடி அதற்குமேல் எழுதமுடியாது திண்டாடிய போது, குணசீலர் என்ற அந்த புலவருக்காகச் செங்கோட்டுவேலர் மாடு மேய்கும் சிறுவனாக வந்து குணசீலரின் கடைமாணாக்கர் என்று தன்னைக் கூறிக்கொண்டு  “அஃது குமரன் திருமால் முருகன் மயில்வாகனம் கொத்துமென்றே” என்று பாட்டினை முடித்து   திரும்பிப் போகும்படிச் செய்தார்
  • 1200 படிகள் மேல் திருக்கோயில் உள்ளது. பாம்பு உருவங்கள் கொண்ட படிக்கட்டுகள்; ஓரிடத்தில் நீளமான 20 அடி பாம்பு வடிவத்திலேயே ஏறும் வழி
  • இத்தலம் பற்றிய குறிப்புக்கள் உள்ள நூல்கள் – சிலப்பதிகாரம், தேவாரம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம்
  • கிழக்கு நோக்கிய ஸ்ரீதேவி மற்றும் பூதேவியருடன் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமாள் ஆதிகேசப்பெருமாள் சந்நிதி

 

தலம் திருக்கொடிமாடச் செங்குன்றூர்
பிற பெயர்கள் திருச்செங்கோடு, தெய்வத் திருமலை, நாகமலை, உரசகிரி, நாககிரி செம்மலை, மேருமலை, சிவமலை, நாகாசலம், பனிமலை, கோதைமலை, அரவகிரி, பிரம்மகிரி, வாயுமலை, கொங்குமலை, வந்திமலை, சித்தர்மலை, சோணகிரி மற்றும் கந்தகிரி
இறைவன் அர்த்தநாரீஸ்வரர்
இறைவி பாகம்பிரியாள்
தல விருட்சம் இலுப்பை, வன்னி
தீர்த்தம் தேவ தீர்த்தம்
விழாக்கள் சித்ரா பௌர்ணமி , வைகாசி விசாகம் , மாசிமகம் , பங்குனி உத்திரம்
மாவட்டம் நாமக்கல்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை

அருள்மிகு அர்த்தநாரீசுவரர் கோயில், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம். :Pin. 637211.

04288-255925, 93620-23163, 93620-22900, 93642-29181

வழிபட்டவர்கள்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் ஈரோட்டில் இருந்து சுமார் 18 கிமீ தொலைவு , நாமக்கல்லில் இருந்து சுமார் 32 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில்  வது தலம்

கொங்கு நாட்டுத் தலங்களில் 4 வது தலம்.

 

அர்த்தநாரீஸ்வரர்

 

 

புகைப்பட உதவி : arthanareeswarar.com

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை         1
பதிக எண்          107
திருமுறை எண் 2

பாடல்

அலைமலி தண்புனலோ டரவஞ் சடைக்கணிந் தாகம்
மலைமகள் கூறுடையான் மலையா ரிளவாழைக்
குலைமலி தண்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் நின்ற
தலைமக னைத்தொழுவார் தடுமாற் றறுப்பாரே

பொருள்

அலைகள் நிறைந்ததும், குளிர்ந்த கங்கை நதி, பாம்பு ஆகியவற்றை தனது திருச்சடையில் அணிந்து, தனது திருமேனியில் மலைமகளை ஓர் பாகமாகக் கொண்டுள்ளவனும், மலையில் வளரும் குலைகள் நிறைந்துள்ள இளவாழை மரங்களை உடையதும், குளிர்ந்த சோலைகள் சூழ்ந்து விளங்கும் கொடிமாடச் செங்குன்றூரில் எழுந்தருளிய தலைவனுமாகிய சிவபிரானைத் தொழுபவர்களது தடுமாற்றம் விலகும்.

 

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை         1
பதிக எண்          107
திருமுறை எண் 6

பாடல்

ஓங்கிய மூவிலைநற் சூல மொருகையன் சென்னி
தாங்கிய கங்கையொடு மதியஞ் சடைக்கணிந்து
கோங்கண வும்பொழில்சூழ் கொடிமாடச் செங்குன்றூர் வாய்ந்த
பாங்கன தாள்தொழுவார் வினையாய பற்றறுமே

பொருள்

மேம்பட்டதான மூவிலை வடிவான நல்ல சூலத்தை ஒரு கையில் ஏந்தியவனாய், திருமுடியில் தடுத்த கங்கையோடு சந்திரப் பிறையையும் சடையில் அணிந்தும், கோங்க மரங்கள் நிறைந்தும், தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கொடிமாடச் செங்குன்றூரில் பொருந்திய தோழனாய் விளங்கும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுபவர்களின் வினைகள் அடியோடு நீங்கும்.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் விபரம் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 14 (2018)

 

பாடல்

சுழிந்தகங்கை தோய்ந்ததிங்கட் டொல்லராநல் லிதழி
சழிந்தசென்னிச் சைவவேடந் தான்நினைந் தைம்புலனும்
அழிந்தசிந்தை யந்தணாளர்க் கறம்பொருளின் பம்வீடு
மொழிந்தவாயான் முக்கணாதி மேயதுமு துகுன்றே

தேவாரம் – முதல் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

சுழித்து ஓடக்கூடிய கங்கை, அதனோடு ஒத்து காணப்படுவதாகிய திங்கள், மிகவும் பழமையான பாம்பு, நல்ல கொன்றை மலர் ஆகியன நெருக்கமாக உள்ள சிறப்புகளை தலையில்  உடைய முக்கண்ணனும் ஆதியும் ஆகிய சிவபிரானுடைய சைவ வேடத்தை விருப்புற்று நினைத்து, ஐம்புலன்களும் மனமும் அழிந்த சிந்தையினை உடையர்களும், இணைந்த திருவடிகளை உடையவனும், அந்தணர் குலத்தினை உடையவருமான பிரம்மாவின் மனதில் தோன்றிய மகன்களான சனகர், சனத்குமாரர், சதானந்தர் மற்றும் சனாதனர் முதலியவர்களுக்கு  அறம், பொருள், இன்பம், வீடு ஆகியவற்றை உபதேசித்த திருவாயினனாய் எழுந்தருளியிருப்பது திருமுதுகுன்றம் ஆகும்.

விளக்க உரை

  • தாள் இணைத்து – கால்களைப் பத்மாசனம் முதலிய ஆசனவகைகள் பொருந்தப் பின்னி என்றும் கூறலாம். சிவசக்தி ரூபமாக எனவும் கொள்ளலாம்.
  • சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல்அரா நல்லிதழி, சழிந்த சென்னிச் சைவவேடம் என்பதை மட்டும் நினைந்து ஐம்புலனும் அழிந்த சிந்தை உடைய அந்தணர்கள்  என்ற பாடம் புதுவை பிரெஞ்சு இந்தியக் கலை நிறுவன ஆய்வுப் பதிப்பில் காணப்படுகிறது.
  • சுழிந்த கங்கை, தோய்ந்த திங்கள், தொல்அரா நல்லிதழி, சழிந்த சென்னிச் சைவவேடம் என அகமுகமாக யோக மரபில் காணுதலும் உண்டு. ஆன்றோர் பொருள் உணர்ந்து உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 13 (2018)

பாடல்

ஈதல் அறம் தீவினைவிட்டு ஈட்டல்பொருள் எஞ்ஞான்றும்
காதல் இருவர் கருத்து ஒருமித்து – ஆதரவு
பட்டதே இன்பம் பரனை நினைந்து இம்மூன்றும்
விட்டதே பேரின்ப வீடு

தனிப்பாடல் திரட்டு – ஔவையார்

பதவுரை

தானம் கொடுத்தலே அறமாகும். தீவினைபற்றி தீயவழியில் பொருள் ஈட்டுதல் விடுத்து நல்வழியில் பொருள் ஈட்டுதலே பொருளாகும். எக்காலத்தும் காதலர் இருவர் கருத்து ஒருமித்து ஒன்றாக் கூடி முடிவு எடுப்பதே  இன்பமாகும். பரனை நினைந்து அவன் அருளால் இம்மூன்றையும் விட்டதே பேரின்ப வீட்டினை நல்கும்.

விளக்க உரை

  • சைவ சித்தாந்த கருத்துப்படி வீடு என்பது துன்ப நீக்கத்தினையும்,  பேறு என்பது இன்ப ஆக்கம் என்பதையும் குறிக்கும்.
  • செயல்கள் அனைத்தும் பரமன்  என்பதால் பரமனை நினைந்து செய்யப்படும் ஈதல் அறமாகி விடுகிறது;  தீவினைகள் விலகி நல்வினைப்பட்டு பொருளீட்டுதல் இயல்பாக நிகழும். காதலர் இருவர் கருத்து ஒருமித்தல் நிகழும்; அவன் நினைவாலே இம்மூன்றையும் விட்டு வீடுபேறடையவும் இயலும். அஃதாவது உலகியல் செயல்களும், ஆத்ம செயல்களும் பரமனாகிய ஈசனாலேயே நிகழ்கின்றன.
  • எல்லாப் பொருள்களும் பரமனது உடைமைகள் என்பதால் அவற்றை நமது உழைப்பிற்கு எற்ப அவன் அநுமதிக்கும் அளவிற்கு அநுபவிக்கலாமே தவிர, நாமாகப் பிறர்க்கு வழங்க நமக்கு உரிமை இல்லை. எனவே அவனுடைய பொருள் என்னும்போது அவனை நினைந்து ஈதலே முறையாகும். ஆகவேஅது அறமாகி விடுகிறது. ‘பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை பிறந்து மண்மேல் இறக்கும்பொழுது கொடுபோவதில்லை’ எனும் பட்டினத்தாரின் பாடல் வரிகளுடன் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 12 (2018)

பாடல்

ஏவும் படைவேந் தனிரா வணனை
ஆவென் றலற அடர்த்தா னிடமாந்
தாவும் மறிமா னொடுதண் மதியம்
மேவும் பொழில்சூழ் வேணு புரமே

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

பதவுரை

இலக்குத் தவறாது சென்று வினையாற்றும் ஆயுதம் ஆகிய கணைகளொடுகூடிய விற் படையை உடைய இராவணனை ‘ஆ’ என்று அலறுமாறு தாக்கி அருளிய சிவபிரானுக்குரிய இடமும், தாவிச்செல்லும் மான்கன்றுகளை உடையதும், குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததுமான வேணுபுரம் ஆகும்.

விளக்க உரை

  • மறிமான் – மான்கன்று; ஆடுகளும், மான்களும் எனவும் கூறலாம்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – ஆடி 11 (2018)

 

பாடல்

பண்டு மறையின் முடிவினுள்ளே
     பழுத்த பழமே அருட்பழமே
   பரிபா கத்துப் பத்தர்நெஞ்சில்
     படர்ந்த பழமே நவமுடிமேல்

என்றுங் கனிந்த திருப்பழமே
     இமையோர் தேடித் தேடியுமே
   எட்டாப் பழமே காசினியில்
     எவர்தாம் தனையே உணர்ந்தோர்கள்

கண்டு புசிக்கும் பதிப்பழமே
     கருணைப் பழமே சிவப்பழமே
   கயிலா யத்தில் அரன்முடிமேல்
     கனிந்த பழமே கதிப்பழமே

மன்றுள் மணக்கும் அடியவர்க்கும்
     மாயோ கியர்க்கும் உதவிநிற்கும்
   மயிலா புரியில் வளரீசன்
     வாழ்வே அபயாம் பிகைத்தாயே

அபயாம்பிகை சதகம் – நல்லத்துக்குடி கிருண்ணய்யர்

பதவுரை

காலத்தால் முற்பட்ட மறையின் முடிவாக இருந்து அதன் விளைவாக பழுத்த பழமாகவும், அடியவர்களுக்கு அருளை வழங்கும் அருட்பழமாகவும், முதிர்ச்சி உடைய பக்தர்கள் நெஞ்சில் படர்ந்த பழமாகவும், புதுமையாக சூடப்பட்ட முடி மேல் என்றும் கனிந்திருக்கும் மேன்மை பொருந்திய பழமாகவும், இமைத்தலை செய்யா தேவர்கள் தேடித் தேடியும் காண இயலாமல் அவர்களுக்கு  எட்டாத பழமாகவும், தன்னைத் தானே உணர்ந்தவர்கள் கண்டு புசிக்கும் பழமாகவும், பக்தர்களுக்கு வேண்டியதை அருளுவதால் கருணைப் பழமாகவும்! சிவ சக்தி ரூபமாக் இருப்பதால் சிவப் பழமாகவும், கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவன் முடிமேல் இருக்கும் கனிந்த பழமாகவும், அருளை வாரி வழங்கி நல் கதிக்கு அழைத்துச் செல்வதால் கதிப்பழமாகவும், சிதம்பரத்துள் உள்ள கனகசபை தனில் மணம்வீசிக் கொண்டிருக்கும்  அடியவர்களுக்கும், மாபெரும் யோகியர்களுக்கும் உதவி நிற்கக் கூடிய அருள் பொழியும் மயிலாபுரி எனும் மயிலாடுதுறை திருத்தலத்தில் வீற்றிருக்கும் ஈசனின் வாழ்வானவள் எனப்படும் அபயாம்பிகை தாயானவள் ஆகிறாய்.

விளக்க உரை

  • அபயாம்பிகை சதகம் – சதகமரபிற்கு ஏற்றவாறு ‘மயிலாபுரியில் வளரீசன் வாழ்வே அபயாம்பிகைத் தாயே’ என்று அந்தமாக முடியும் பாசுர அமைப்பு கொண்ட பாடல்கள்
  • அர்த்தஜாம வழிபாட்டை வழிபாடாகக் கொண்ட இந்த சாக்தருக்கு கல் தடுக்கி கீழே விழ களைப்பாற்றி அருள் கொடுத்து ‘பாதாம் புயத்திற் சிறுசதங்கை’  என்று முதலடி எடுத்துக் கொடுத்த அன்னையாள் அருளப் பெற்றது
  • அருட்பழமாக அன்னையை கண்டு வியத்தல் பற்றியது இப்பாடல்
  • ‘பண்டாய நான்மறையும் பாலணுகா மாலயனுங் கண்டாரு மில்லை’ எனும் மாணிக்கவாசகரின் திருவாசக வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • ‘இம்மணியா லிழைத்துநவ முடிசூட்டி யிச்சிங்க விளவெ றன்ன’  எனும் திருவிளையாடற் புராண வரிகள் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது. சில இடங்களில் ‘நவமணியால்’ இழைத்தது எனவும் பொருள் விளக்கப்படுகிறது.
  • ‘நவமுடிமேல் என்றுங் கனிந்த திருப்பழமே’ என்றும் ‘கயிலா யத்தில் அரன்முடிமேல் கனிந்த பழமே’  என்பதும் ஒன்று போலவே தோன்றும். பொருள் விளக்கத்தில் அதன் தன்மையை அழுத்தி கூறுமிடத்து அவ்வாறு இருமுறை கூறுதல் மரபு. அன்றியும் அம்மையைக் கண்டதும் தன்நிலை மறந்து புத்தி பேதலித்து இருந்த அவர் வாழ்வியல் முறை வைத்தும் இரு முறை வந்திருக்கலாம்.

Loading

சமூக ஊடகங்கள்
error: Content is protected !!