அமுதமொழி – விளம்பி – சித்திரை – 19 (2018)

பாடல்

போந்தனை தரியாமே நமன்றமர் புகுந்தென்னை
நோந்தனை செய்தாலும் நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை யாட்கொண்ட
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

 பதவுரை

இறக்கும் நிலையை  நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எனது துன்பத்தைச் சிறிதும் பொறாமல் அதை நீக்குதலுக்கு தகுதியானவன் நீயே அன்றோ! ஆதலினால் எமனுக்கு ஏவலராய் உள்ள தூதர்கள் வந்து எனக்கு துன்புறும் செயல்களைச் செய்யினும், யான் உன்னை அன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

தத்புருட மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன?
திரோபவம் எனும் மறைத்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 14 (2018)

பாடல்

காணும் பொருளும் கருதிய தெய்வமும்
பேணும் பதியும் பெருகிய தீர்த்தமும்
ஊணும் உணர்வும் உறக்கமும் தானாகக்
காணுங் கனகமும் காரிகை யாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

ஐம்புல நுகர்ச்சியின் காரணமாக உலகில் காணப்படுகின்ற பல பொருள்கள், கருத்தில் முற்றுப் பெற்று நினைக்கின்ற பலதெய்வங்களை வழிபடுதல், பிறரால் போற்றப்படுகின்ற திவ்ய தலங்களில் வாழ்தல், பெருகி ஓடும் நதி முதலிய புண்ணிய தீர்த்தங்களில் மூழ்குதல் மற்றும் அவற்றால் வரும் பயன்களுடன் நுகர்ச்சி, உண்ணும் உணவு, உணரும் உணர்வு, உறங்கும் உறக்கம், கருதப்படும் அளவான பொன் முதலிய செல்வங்கள் ஆகியவை திருவருள் அம்மையாகிய சாம்பவி மண்டலச் சக்கர வழிபாட்டினால் கிடைக்கும்.

விளக்க உரை

  • சாம்பவி சக்கர வழிபாடு எல்லாப்பயனையும் தருதல் பற்றி கூறப்பட்டப் பாடல்
  • தானாகக்காணும் கனகம் – பொன் பெற்றபிறகு அனைத்தும் உண்டாகும் என்பது பற்றி.
  • காரிகை – சாம்பவி

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

சிவனுக்குத் தத்புருட மந்திரம் எந்த உறுப்பாகும்?
முகம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 13 (2018)

பாடல்

நனவில் கலாதியா நால் ஒன்று அகன்று
தனி உற்ற கேவலம் தன்னில் தான் ஆகி
நினைவுற்று அகன்ற அதீதத்து உள் நேயம்
தனை உற்றிடத் தானே தற்பரம் ஆமே

பத்தாம் திருமுறை-  திருமந்திரம் – திருமூலர்

 பதவுரை

நனவுக் காலத்தே ஊழ், உழைப்பு, உணர்வு, உவப்பு, மருள்  என்னும் ஐந்தும் செய்படாது அகல ஆருயிர் தனித்து நிற்கும் தனிநிலை புலப்படும். அவ்வாறு தன்னில் தானாக நின்று அகன்ற அந்நிலையில் உணர்வுக்கு உணர்வாய் விளங்கப்படும் பொருளான சிவபெருமான் திருவடியினைத் திருவருள் நினைவால் கொள்ள அந்த உயிர் தற்பரசிவமாய்த் திகழும்.

விளக்க உரை

  • நாலொன்று – ஐந்து: கலை, வித்தை, அராகம், புருடன், மாயை.
  • நேயந்தனை – சிவத்தை.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

ஈசான மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன?
அருளல்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 10 (2018)

பாடல்

நிலனே நீர்வளிதீ நெடுவானக மாகிநின்ற
புலனே புண்டரிகத் தயன்மாலவன் போற்றிசெய்யும்
கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே அடியேனையும் அஞ்சலென்னே.

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

தீ ஏந்திய கையை கொண்டு, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி உள்ளவனே, நிலம், நீர், தீ, காற்று, நீண்டவானம் எனும் ஆகாயம் என்னும் ஐந்துமாகி உள்ளவனே, தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் மற்றும் மாயோன் ஆகிய திருமால் இருவரும் போற்றி நின்ற பொழுதில் நெருப்பாகி தோன்றியவனே, கற்பகத் தரு போன்றவனே, அடியேனையும், `அஞ்சதே` என்று சொல்லி அருள் புரிவாயாக.

விளக்க உரை

  • இத்தலத்தில் இறைவர்  ‘கற்பகநாதர்’  ஆதலின்  ‘கற்பகமே` எனும் சொற்றொடர். ஆறாம்  திருமுறையில் ‘கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே’ என்றும் பாங்கோடு வைத்து சிந்திக்கத் தக்கது.
  • அஞ்சலென்னே என்பதை `அஞ்சாதி` என்று சொல்லி அருள் புரிவாயாக என்று சில இடங்களில் விளக்கப்பட்டுளது.  ‘அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன …அஞ்சாதி யாதி அகம்புக லாமே’  எனும் திருமந்திரப் பாடலின் படி அஞ்செழுத்து சிவன் இருப்பிடம் இத்தலம் ஆகவே அஞ்செழுத்தாக சிவன் இத்தலத்தில் உறைகின்றான் என்றும் பொருள் தோன்றும். கற்றறிந்தோர் பொருள் கொண்டு உய்க.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 7 (2018)

பாடல்

நின்றாள் அவன்றன் உடலும் உயிருமாய்ச்
சென்றாள் சிவகதி சேரும் பராசத்தி
ஒன்றாக என்னுட் புகுந்துணர் வாகியே
என்றாள் பரஞ்சுடர் ஏடங்கை யாளே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

சிவனது செயல்களிலெல்லாம் உடன் சேர்ந்தே நிற்கின்ற மேலான சத்தியாகிய திரிபுரை, அச்சிவனோடு உடலும் உயிரும்போலப் பிரிப்பின்றி வாளாதும் இருப்பாள்; செயல்பட்டும் நடப்பாள். மேன்மை பொருந்திய ஞானமே யாகின்ற அவள், முதலில் புத்தகம் ஏந்திய கையினையுடைய நாமகளாய் நின்று எனக்கு நூலறிவைத் தந்தும், பின்பு எனது உணர்வினுள் உணர்வாய் இன்புறச் செய்தும் என்னைத் தன் அடியவனாக ஏற்றுக்கொண்டாள்.

விளக்க உரை

  • கதி – நடை; செயல். ‘சிவகதி’ – சிவ நடையுடன் மாற்று கருத்து இல்லாமல் ஒத்து. அஃதாவது சிவ கதியில் சேர்ந்திருக்கும் பராசத்தி, ‘அவன்றன் உடலும் உயிருமாய் நின்றாள்; சென்றாள்’ என மாற்றி உரைக்க.
  • ‘உணர்வு ஆகி’ என்பது ஞான அனுபவத்தை வழங்கி, அவ்வழிகளில் இன்பம் பெறப்பட்டதை குறித்தது.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருமாணிக்குழி

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருமாணிக்குழி

  • இறைவன்சுயம்புமூர்த்தி. லிங்கத் திருமேனியராக சிறிய ஆவுடையாருடன் கிழக்கு நோக்கிபடி, அம்பாள் சிவனாரின் வலப்புறம் தனிச் சன்னதியில் நின்ற கோலம் – கிழக்கு நோக்கி திருக்காட்சி
  • அகத்தியர் பூஜித்த ஆதிஜோதிர்லிங்கம் – இத்திருகோயிலின் எதிரே உள்ளமலையின் கீழ்பகுதியில் (மலை வேறு பெயர்கள் – ஜோதிகிரி, ரத்னகிரி, புஷ்பகிரி, ஔஷதகிரி) (கங்கை, உபமன்யுமுனி, வியாக்ரபாதர், அக்னிவழிபட்டது.-2கிமீதூரம்).
  • கைகளில் தாமரையும் , நீலோத்பலமும் ஏந்தியுள்ள வடிவில் அம்பாள்
  • திரைக்குப்பின் சுவாமியும் அம்மனும் இருப்பதால் நந்தி நேர் எதிர்திசையில், நேரான தலையுடன் கூடிய அமைப்பு
  • திருமால், பிரம்மசாரியாக வந்து (மாணி – பிரம்மசாரி) மகாபலியிடம் மூன்றடி மண்கேட்டு அவனையழித்த பழிதீர வழிபட்ட தலம்
  • சிவனார் கருவறை முன்பு எப்போதும் திரை (காரணம் 1 ) – தேவர்களுக்கு ஞானத்தைப் புகட்டவும், அவர்களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதாசர்வகாலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதாலும், கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதாலும் தனிபள்ளியறை இல்லாமல்  – அவர்களுக்கு காவல்புரிவதற்காக 11 ருத்ரர்களில் ஒருவரான ”பீமருத்ரர்” திரைச்சீலை வடிவில்
  • சிவனார் கருவறை முன்பு எப்போதும் திரை (காரணம் 2 ) – மகாவிஷ்ணு மாணி எனப்படும் பிரம்மச்சாரியாக வழிபடுவதற்கு காவலாக பீமருத்ரர் திரையாகஇருப்பது
  • வழிபாட்டில் முதல்மரியாதை பீமருத்ரருக்கு.
  • வாமனாவதார வரலாறு சிற்பங்களுடன் கூடிய மூலவர் கருவறைவாயில்
  • பஞ்சாட்சரம்பொறிக்கப்பட்டுள்ள நடராஜர் திருமேனி
  • வடநாட்டு ருத்ராட்ச வணிகனாகிய அத்ரியிடம் திருடர்கள் கொள்ளையடிக்கமுற்பட, இறைவன், அத்ரியை திருடர்களிடமிருந்து காத்து உதவிபுரிந்தத் தலம். எனவே இத்தலம் ‘உதவி ‘,  இறைவன் ‘உதவிநாயகர்’,  இறைவி ‘உதவிநாயகி ‘
  • கோஷ்டதுர்க்கைமகிஷன்இல்லாமல்கதையுடன்திருக்காட்சி
  • நாகத்தை கையில் ஏந்திய தோற்றத்துடன் தட்சிணாமூர்த்தி
  • சூரியனால் உண்டாக்கப்பட்டு அவரே வழிபாடு செய்த கோயில்
  • சோழர்காலக் கட்டமைப்பிலான கோயில்
தலம் திருமாணிக்குழி
பிற பெயர்கள் வாமனபுரி , இந்திரலோகம் , பீமசங்கர ஷேத்திரம்
இறைவன் வாமனபுரீஸ்வரர், உதவிநாயகர், உதவி மாணிகுழி மகாதேவர், மாணிக்கவரதர்,
இறைவி அம்புஜாட்சி, உதவிநாயகி, மாணிக்கவல்லி
தல விருட்சம் கொன்றை
தீர்த்தம் ஸ்வேத தீர்த்தம் (சரஸ்வதியின் அம்சமாக) , கெடில நதி (லட்சுமிதேவியின் அம்சமாக), தென்பெண்ணை  (பாகிரதி அம்சமாக )
விழாக்கள்

கார்த்திகை ரோகிணியில் தீபதரிசனம், கார்த்திகை பிரம்மோற்சவம்,  ஆடிப்பூரம், நவராத்திரி, மகாசிவராத்திரி, சஷ்டி, நடராஜர் அபிஷேகங்கள்

மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7.30 மணி முதல் 11 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோவில்
திருமாணிகுழி அஞ்சல், வழி திருவகீந்திரபுரம்
கடலூர் வட்டம், கடலூர் மாவட்டம். PIN – 60740104142-274485, 04142-224328, 99420-94516, 93626-38728, நடராஜன் : 8940730140
வழிபட்டவர்கள் திரிசங்கு மகாராஜா , அரிச்சந்திரன்,
பாடியவர்கள் அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் திருத்தலம்
1. கடலூர் – பண்ருட்டி சாலையில் திருவகீந்திரபுரம் – > சுந்தரர்பாடியை -> சாத்தாங்குப்பம் -> கெடிலநதிப்பாலத்தைக் கடந்து சென்று -> திருத்தலம்
2. கடலூர் – குமணங்குளம் சாலை வழியாக
3. கடலூர் – நடுவீரப்பட்டி சாலை வழியாக
கடலூரில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 207 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 17 வது தலம்

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         3
பதிக எண்          77
திருமுறை எண் 6            

 

பாடல்

மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே

 

பொருள்

திருமாணிகுழி எனும் திருத்தலமானது, சந்தன மரங்கள், கரிய அகில் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து வந்து விழுந்து, குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தாங்கிக்  கொண்டு வரும் கெடில நதியின்  மோதும் நீரானது பாயும் வயல்களில் நறுமணம் கமழ்வதுடன் கூடியதும், மலரும் நிலையிலுள்ள (அஃதாவது மொட்டான) மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரம்மச்சாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீல கண்டனான சிவபெருமான் வீற்றிருந்து அருளும் தலமும் ஆகும்.

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         3
பதிக எண்          77
திருமுறை எண் 9

பாடல்

நேடுமய னோடுதிரு மாலுமுண ராவகை நிமிர்ந்துமுடிமேல்
ஏடுலவு திங்கண்மத மத்தமித ழிச்சடையெம் மீசனிடமாம்
மாடுலவு மல்லிகை குருந்துகொடி மாதவி செருந்திகுரவி
னூடுலவு புன்னைவிரை தாதுமலி சேருதவி மாணிகுழியே

பொருள்

திருமாணிகுழி எனும் திருத்தலமானது, பிரமனும், திருமாலும் இறைவனின் அடிமுடி தேடியும் உணராவகை நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான்  தம் சடைமுடியில் வெண்தாமரை இதழ் போன்ற பிறைச்சந்திரனையும், ஊமத்தை, கொன்றை ஆகியவற்றையும் அணிந்து விளங்குவதும்,  மகரந்தப்பொடிகள் நிறைந்த மல்லிகை, குருந்து, மாதவி, செருந்தி, குரவம், புன்னை என்று மணம் கமழும் மலர்கள் நிறைந்த தலமும் ஆகும்.

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 5 (2018)

பாடல்

எலும்புங் கபாலமும் ஏந்தி எழுந்த
வலம்பன் மணிமுடி வானவ ராதி
எலும்புங் கபாலமும் ஏந்தில னாகில்
எலும்புங் கபாலமும் இற்றுமண் ணாமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

இறந்தவர்களது எலும்புகள் பலவற்றையும், எலும்புடன் கவசம் போன்ற மண்டையோடு பலவற்றையும் தாங்கி நிற்பவனும், பேரொளி ததும்பும் மணிமுடி தாங்கியவனுமான சிவபெருமான், அவ்வாறு காட்சியளிக்கின்ற அவன், தேவர் பலர்க்கும் மணிமுடி தரித்த மேலாலவர்களுக்கும் முதலானவனாய் இருந்தான். அது மட்டும் இன்றியும், அவன் அவற்றைத் தாங்காது ஒழிவனாயின், மாயா காரியப் பொருள்கள், சிவபெருமான் கைப்பற்றுதல் இன்றி உலகில் நிலைபெறாது அழிந்து ஒழியும்.

விளக்க உரை

  • எலும்பினையும் மண்டையோட்டினையும் ஏந்துதல் – தான் ஒருவனே அழிவில்லாத முழுமுதல்வன் என்பதைக் காட்டப் பெறும். ஏனைய மண்ணவர் விண்ணவர் அனைவர்களும் பிறந்து இறக்கும் உயிரினங்களே என்பதையும் அதுவே காட்டும்.
  • காரணமாயை என்றும் அழிவினை அடையாது, சிவபெருமான் தாங்குதலில் நிற்கும் என்பது ஆகும்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

வேக வடிவம் என்பது என்ன?
கால சம்ஹாரர் போல் உயிர்களுக்கு கொடியவரைத் தண்டிக்கும் திருமேனி

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 30 (2018)

பாடல்

ஆமே அனைத்துயிர் ஆகிய அம்மையும்
தாமேசகலமும் ஈன்றஅத் தையலும்
ஆமே அவளடி போற்றி வணங்கிடில்
போமே வினைகளும் புண்ணிய னாகுமே

பத்தாம் திருமுறை – திருமந்திரம் -திருமூலர்

பதவுரை

அம்மையானவள், அனைத்து உயிர்களாக நிற்கின்றவளும், எல்லாப் பொருள்களிலும் அதன் தன்மையில் தானே ஆகி நிற்பவளும், தம் இயல்பு தன்மையினால் எங்கும் நிறைந்திருந்து ஈன்றவளாகவும்  நிற்பாள். ஆகையால் பக்குவம் உடையவன் அவளை வணங்கி அவ்வழியே வினை நீக்கமும், தவப் பேறும் ஆன பயன்களை எய்துவான்.

விளக்க உரை

  • புண்ணியன் ஆகுதல் – தவம் உடையவன் ஆகுதல்

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவடுகூர்

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருவடுகூர்

  • மூலவர் லிங்கத்திருமேனியில் வடுக்களுடன் இடதுபுறம் சற்றே சாய்ந்தவாறு திருக்காட்சி.
  • அஷ்ட பைரவர்களில் ஒருவரான சம்ஹார பைரவர் எனும் வடுக பைரவர், முண்டகன் என்னும் அசுரனைக்கொன்ற பழிதீர ஈசனை வழிபட்டத் தலம்.
  • பிரம்மாவின் சிரத்தை சிவனார் கொய்த தலம் – மற்றொரு தல வரலாறு
  • கருவறை விமானம் தஞ்சை பெரிய கோவில் பாணி அமைப்பு

 

தலம் திருவடுகூர்
பிற பெயர்கள் வடுகூர், ஆண்டார்கோயில், ஆண்டவனார் கோயில், திருவாண்டார் கோயில்
இறைவன் வடுகீஸ்வரர், பஞ்சநதீஸ்வரர் , வடுகநாதர் , வடுகூர் நாதர்
இறைவி திரிபுர சுந்தரி, வடுவகிர்க்கண்ணி
தல விருட்சம் வன்னிமரம்
தீர்த்தம் வாமதேவ தீர்த்தம்
விழாக்கள்

கார்த்திகை அஷ்டமி, சித்திரைப் பெருவிழா ஏக தின உற்சவம், வைகாசி விசாகம், மகாசிவராத்திரி, திருக்கார்த்திகை, கந்தசஷ்டி, தைப்பூசம்

மாவட்டம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7 மணி முதல் 10 மணி வரை
மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரைஅருள்மிகு பஞ்சநாதீஸ்வரர் திருக்கோவில்
திருவாண்டார் கோவில் அஞ்சல்
வழி கண்டமங்கலம், புதுச்சேரி – 605102
வழிபட்டவர்கள்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர், ,அருணகிரிநாதர், வள்ளலார்
நிர்வாகம் தொல் பொருள் ஆய்வுத் துறை
இருப்பிடம் விழுப்புரம் – பாண்டிச்சேரி ரயில் பாதையில் உள்ள சின்னபாபு சமுத்திரம் ரயில் நிலையத்தில் இருந்து 4 கி.மி. தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 206 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  16    வது தலம்.

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         1
பதிக எண்          87
திருமுறை எண் 1            

பாடல்

 

சுடுகூ ரெரிமாலை யணிவர் சுடர்வேலர்
கொடுகூர் மழுவாளொன் றுடையார் விடையூர்வர்
கடுகூர் பசிகாமங் கவலை பிணியில்லார்
வடுகூர் புனல்சூழ்ந்த வடுகூ ரடிகளே

பொருள்

சுடும் தன்மை மிக அதிகமாக இருக்கும் தீபமாலையை அணிபவரும், ஒளி பொருந்திய சூலத்தினை உடையவரும், கொடிய மழு ஆயுதம் ஒன்றைக் கையில் உடையவரும், காளை மேல் ஊர்ந்து வருபவரும், மிக்க பசி காமம் கவலை பிணி ஆகியன இல்லாதவரும், நீர் வளம் மிக்க வடுகூர்  எனும் தலத்தில் உறையும் இறைவர் ஆவார்.

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         1
பதிக எண்          87
திருமுறை எண் 8

பாடல்

பிறையு நெடுநீரும் பிரியா முடியினார்
மறையும் பலபாடி மயானத் துறைவாரும்
பறையு மதிர்குழலும் போலப் பலவண்டாங்
கறையும் வடுகூரி லாடும் மடிகளே

பொருள்

அதிர்வுகளைத் தரும் பறையும், வேய் குழல் போலப் பல வண்டுகள் ஒலிக்கும் சோலைகளை உடைய வடுகூரில் ஆடும் அடிகளானவர், இளம்பிறை மற்றும் பெருகும் கங்கை நீர் ஆகியன பிரியாத திருமுடியை உடையவர். வேதங்களில் உள்ள சந்தங்கள் பலவற்றையும் பாடிக்கொண்டு இடுகாட்டில் உறைபவர்.

 

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 28 (2018)

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 28 (2018)

பாடல்

ஈசனடியார் இதயங் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசம தாயிடும் நம்நந்தி யாணையே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

ஈசனை வணங்கிடும் அடியாரது உள்ளம் எந்தவகையிலேனும் வருந்துமாயின், அதற்குக் காரணமாய் உள்ள மண்ணுலக தேசமும், அது சார்ந்த நாடும் அதன் சிறப்புக்களும் அழிந்திடும்; விண்ணுலக வேந்தனாகிய இந்திரன் ஆட்சி பீடம் மற்றும் மண்ணுலக மன்னன் ஆட்சி பீடமும் அழிந்து ஒழியும். இஃது நமது நந்திபெருமான்மேல் ஆணையாகச் சொல்லத்தக்க உண்மை.

விளக்க உரை

  • மாகேசுர நிந்தையால் விளையும் கேடு பற்றியும் சிவனடியாரது மனம் வருந்தாமல் காத்தல் நாடாளும் அரசர்க்கு முதற்கடமையாதல் என்பது பற்றியும் விளக்கும் பாடல்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

அருவுருவத் திருமேனியின் வேறு பெயர்கள் எவை?
சகளநிட்களத் திருமேனி, வியத்தாவியத்த லிங்கம்

Loading

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 23 (2018)

அறிவதற்கு அரியவராய், அனைத்திலும் நிறைந்தவராய், கருணை உருவானவராய்,  கணப் பொழுதும் சிந்தையில் சிவம் பிறழா நிலைப்பவராய் ஆன என் குரு நாதரின் உத்தரவின் பேரில் இன்று முதல் ‘அமுதமொழி ‘ என்ற தலைப்பில் இனி இப்பணி தொடரும்.

அமைப்பில் இருக்கும் மாறுதல்களும் குருநாதரின் கருணையின் அடிப்படையில் அருளப்பட்டவை.

எப்பொழுதும் போல் தொடர என் குருநாதரின் அன்பினையும் ஆசிகளையும் வேண்டி தொடங்குகிறேன்.

———————————————————————————————————————————–

பாடல்

ஒத்தடங் குங்கம லத்திடை ஆயிழை
அத்தகை செய்கின்ற ஆய பெரும்பதி
மத்தடை கின்ற மனோன்மனி மங்கலி
சித்தடைக் கும்வழி தேர்ந்துண ரார்களே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

பதவுரை

தன்னிடத்தில் அன்பு வைத்த அன்பர்களிடத்தில் ஒன்றி அவர்களுடன் இசைந்து, அவர்களது உள்ளத் தாமரையிலே நிற்கின்றவளும்,  அவ்வாறு நிற்கும் தன்மையில் உயர்ந்தவனும், பெரிய தலைவனாகவும் ஆன சிவனிடத்தில் நிறைந்து நிற்பவளும், மனோன்மனி தாயாகவும், என்றும் மங்களமானவளும் ஆகிய திரிபுரை நாயகி பல வகைச் சித்துக்களையும் உயிர்களிடத்தில் எவ்வாறு புரிந்து  நிற்கின்றாள் என்ற முறையை உலகர் ஆராய்ந்து அறியவில்லை.

விளக்க உரை
மத்து – நிறைவை உணர்த்தும் வடசொல்.
சித்து – அதிசயச் செயல்கள்
வழி – சிவத்தொடு நின்றே செய்தல்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – மைஞான்ற

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  மைஞான்ற

பொருள்

  • கரிய நிறம் வழிவது போலத் தங்கும்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பிறந்து மொழிபயின்ற பின்னெல்லாம் காதல்
சிறந்துநின் சேவடியே சேர்ந்தேன் – நிறந்திகழும்
மைஞ்ஞான்ற கண்டத்து வானோர் பெருமானே
எஞ்ஞான்று தீர்ப்ப திடர்.

பதினோராம் திருமுறை – அற்புதத் திருவந்தாதி – காரைக்காலம்மையார்

கருத்து உரை

கருமை நிறம் பொருந்திய கண்டத்தினை உடைய பெருமானாக நிற்கும் நீ, வானோர்கள் வணங்கிய உடனே அவர்களுக்கு அருள் செய்தாய்; யான் இவ்வுலகில் பிறந்து (அறியத் தக்கவற்றை அளிக்கும்) மொழியினை பயின்று பின் உன் திருவடிப் பேற்றில் அன்பு மிகுந்து நின் சேவடியே சேர்ந்தேன். என் பிறவித் துன்பத்தை எப்போது தீர்க்கப் போகிறாய்?

விளக்க உரை

  • பயின்ற பின் – பயின்று நன்கு உணர்ந்த பிறபட்டக் காலம்
  • சேர்ந்தேன் – தமது ஞானத்தின் இயல்பாக இறை அருளினால் துணையாக அடைந்தேன்
  • எஞ்ஞான்று தீர்ப்பது – அதனை அறியவில்லை எனும் பொருளில். அதாவது, `இப்பிறப்பிலோ, இனி வரும் பிறப்பிலோ` என்னும் பொருள் பற்றி

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

இறைவனின் எண்குணங்கள் யாவை?
1. தன் வயம் உடைமை, 2. தூய உடம்பு உடைமை, 3. இயற்கை உணர்வு உடைமை, 4. முற்றுணர்வு உடைமை, 5. இயல்பாகவே பாசமின்மை, 6. பேரருள் உடைமை, 7. முடிவில் ஆற்றல் உடைமை, 8. வரம்பில் இன்பம் உடைமை.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருத்துறையூர்

 தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருத்துறையூர்

  • சுந்தரர் இத்தலத்திற்கு வரும்போது தென்பெண்ணையாறு குறுக்கிடவே, கரையில் இருந்தே சிவனை வேண்டி பதிகம் பாடிய போது வயதான தம்பதியர் உருவில் வந்த சிவபெருமானும், பார்வதியும் சுந்தரரை படகில் ஏற்றிக்கொண்டு மறு கரைக்கு அழைத்து வந்து கரையில் இறங்கிய பிறகு இறைவன் சுந்தரர் கண்ணுக்கு தெரியாமல் மறைந்து கொண்டப் பின், “நீங்கள் தேடுபவர் மேலே இருக்கிறார்” என்று அசரீரி வாக்குக்கு இணங்க, சுந்தரருக்கு சிவன், அம்பாளுடன் ரிஷப வாகனத்தில் காட்சி தந்து தவநெறி உபதேசம் செய்த தலம்
  • சந்தானக் குரவர்களில் ஒருவரான அருணந்திசிவாச்சாரியார் முக்தித் தலம்). (சமாதிக்கோயில் கோயிலுக்கு நேரெதிரில்). (புரட்டாசி மாத பூர நட்சத்திரம் – அருணந்திசிவாச்சாரியார் குருபூஜை)
  • சுந்தரரை சிவனார் கிழவனார் வடிவில் தோன்றி ஆட்கொண்ட இடம் கிழப்பாக்கம். இத்தலத்திற்கு அருகாமையில்.
  • சிவன், சுந்தரருக்கு திருவடி சூட்டி குருவடிவுடன் எழுந்தருளி அருமறைகளை உபதேசித்த தலம்.
  • சித்திரைமாத முதல் வாரம் சூரிய வழிபாடு
  • அம்பாள் சந்நிதி எதிரில் உள்ள தல மரத்தின் அருகில் அகத்தியர் வழிபட்ட லிங்கத்திருமேனி.
  • அஷ்டபுஜ மகாகாளியம்மன் திருக்கோயில் – மாமன்னர் விக்ரமாதித்தன் மற்றும் மகாகவி காளிதாசர் ஆகியோருக்கு அருள்புரிந்த அம்மன் அமையப்பெற்றத் தலம்
  • சிற்ப சிறப்புகள்
  1. உற்சவத்திருமேனிகளுள் சாட்டை பிடித்த நிலையில் காட்சி தரும் குதிரைச்சொக்கர் வடிவம்
  2. கருவறை முன்மண்டப தூணில் சுந்தரர் ஓடத்தில் இத்தலம் வந்தடைந்த வரலாறு சிற்பம்
  3. தட்சிணாமூர்த்தி சந்நிதிக்குப் பக்கத்தில் உமாமகேஸ்வரர் சுந்தரருக்கு காட்சி தந்த சிற்பம்

 

தலம் திருத்துறையூர்
பிற பெயர்கள் திருத்தளூர்
இறைவன் சிஷ்டகுருநாதேஸ்வரர்,பசுபதீஸ்வரர், தவநெறியப்பர்
இறைவி சிவலோகநாயகி, பூங்கோதைநாயகி
தல விருட்சம் கொன்றை மரம்
தீர்த்தம் சூரிய தீர்த்தம்
விழாக்கள் வைகாசி விசாகம், மாசிமகம், பங்குனி உத்திரம், திருவாதிரை, நவராத்திரி, மகாசிவராத்திரி, கார்த்திகை தீபம், கந்தசஷ்டி, ஐப்பசி அன்னாபிஷேகம்
மாவட்டம் கடலூர்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு சிஷ்டகுருநாதர் திருக்கோவில்
திருத்துறையூர் அஞ்சல், பண்ருட்டி வட்டம்
கடலூர் மாவட்டம். 607205
04142-248498, 94448-07393
வழிபட்டவர்கள் நாரதர், வசிஷ்டர், அகத்தியர், சூரியன், ராமர், சீதை, திருமால், பிரம்மன், பீமன்
பாடியவர்கள் சுந்தரர், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம் பண்ருட்டியில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 205 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில்  15    வது தலம்.

பாடியவர்           சுந்தரர்
திருமுறை         ஏழு
பதிக எண்          13
திருமுறை எண் 2             

பாடல்

மத்தம்மத யானையின் வெண்மருப் புந்தி
முத்தங்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால்
பத்தர்பயின் றேத்திப் பரவுந் துறையூர்
அத்தாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே

பொருள்

மயக்கங்கொண்ட மதயானைகளின் தந்தங்களைத் தள்ளிக்கொண்டுவந்தும், அழகிய முத்துக்களைக் கரையில் எறிவதும் ஆகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் உள்ளதும், அடியவர் பலகாலமும் வந்து தொழுது வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தந்தையே! உன்னிடத்தில் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.

பாடியவர்           சுந்தரர்
திருமுறை         ஏழு
பதிக எண்          13
திருமுறை எண் 6        

பாடல்

மட்டார்மலர்க் கொன்றையும் வன்னியுஞ் சாடி
மொட்டாரக்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால்
கொட்டாட்டொடு பாட்டொலி ஓவாத் துறையூர்ச்
சிட்டாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே.

பொருள்

தேன் நிறைந்த மலர்களை உடைய கொன்றை மரம், வன்னி மரம் இவைகளை முறித்து, அவற்றின் அரும்புகளோடு நிரம்பக் கொணர்ந்து எறிவதாகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரையில், வாத்திய முழக்கமும், ஆடலும், பாடலும் நீங்காது விளங்குகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள மேலானவனே, உன்பால் அடியேன் தவ நெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவெண்ணைநல்லுர்

ஓவியம் : இணையம்

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவெண்ணைநல்லுர்

  • ஈசன் நஞ்சுண்ட காலத்தில் அது அவரை துன்புறுத்தாமலிருக்க உமையம்மை இத்தலத்தில் பசு வெண்ணெயால் கோட்டை கட்டி அதில் பஞ்சாக்கினி வளர்த்து அதன் நடுவிலிருந்து தவம் செய்த காரணத்தால் இத்தலம் வெண்ணெய்நல்லூர்
  • மறைகளும் , தாருகாவனத்து முனிவர்களும் தவஞ்செய்து அருள்பெற்ற தலம்
  • சுந்தரர், இறைவனை ‘பித்தன்’ என்று வசைவு பொழிய, காரணங்களை விளக்கியப்பின் இறைவர் சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு “பித்தனென்றே பாடுவாயென” மொழிய, சுந்தரமூர்த்தி சுவாமிகள் ‘பித்தாபிறைசூடீ’ எனப் முதல் தேவாரப்பதிகம் பாடி ஆட்கொள்ளப்பட்டு அருள்வாழ்வு பெற்ற தலம்
  • கோவில் உள்ளே – சுந்தரர் வழக்கு நடந்த ‘வழக்கு தீர்த்த மண்டபம்’
  • சிவனார் முதியவர் வடிவில் வந்து சுந்தரரை தடுத்தாட்கொள்ள வந்த போது அணிந்திருந்த பாதுகைகள் இன்றும் இக்கோயிலில் பாதுகாப்பாக இருக்கின்றன.
  • இத்தலத்திற்கு மிக அருகில் சுந்தரரின் திருமணம் நின்ற இடமான மணம் தவிர்ந்த புத்தூர் (மணப்பந்தூர்)
  • சடையப்ப வள்ளல் வாழ்ந்த தலம். அவர், கம்பரைக் கொண்டு ராமாயணம் பாடுவித்தத் தலம்.
  • அர்ஜுனனுக்கு குழந்தைவரம் அளித்த விஜயலிங்க சிவனாருக்கு சந்நிதி
  • நவக்கிரகங்கள் வழிபட்ட ஜோதிலிங்கம் தனிச்சன்னதி
  • இந்திரன் வழிபட்ட சுந்தரலிங்கர் சந்நிதி
  • மகாவிஷ்ணு வழிபட்ட சங்கரலிங்கர் சந்நிதி
  • அர்ஜுனன் தனது பாவங்களைப் போக்கிக்கொண்ட தலம்
  • சைவசமய சந்தனாசாரியராகிய மெய்கண்டதேவர் வாழ்ந்து உபதேசம் பெற்ற தலம்(அருள் செய்த மூர்த்தி பொல்லாப் பிள்ளையார்)
  • ஐப்பசி சுவாதியில் மெய்கண்டார் குருபூஜை (வடக்கு வீதியின் கோடி)

 

தலம் திருவெண்ணைநல்லுர்
பிற பெயர்கள் திருவருள்துறை, திருவருட்டுறை, திருவெண்ணெய்நல்லூர்
இறைவன் கிருபாபுரீஸ்வரர் ( வேணுபுரீஸ்வரர், அருட்டுறைநாதர், தடுத்தாட்கொண்டநாதர், அருட்கொண்டநாதர், ஆட்கொண்டநாதர் )
இறைவி மங்களாம்பிகை ( வேற்கண்ணியம்மை )
தல விருட்சம் மூங்கில்

தீர்த்தம்

தண்டுத்தீர்த்தம்,(சிவனாற்கேணி), பெண்ணை நதி தீர்த்தம், நீலி தீர்த்தம், சிவகங்கா தீர்த்தம், காம தீர்த்தம், அருட்டுறைத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், வைகுண்ட தீர்த்தம், வேத தீர்த்தம்

விழாக்கள் பங்குனி உத்திரம் , ஆடி சுவாதி, ஆருத்ரா தரிசனம் , ஆவணி மூல புட்டு உற்சவம் , கந்தசஷ்டி
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு கிருபாபுரீஸ்வரர் திருக்கோவில்
திருவெண்ணைநல்லூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம், விழுப்புரம் மாவட்டம்
PIN – 607203
04153-234548, 99942-70882, 93456-60711, 94424-22197 ( மெய்கண்டார் கோயில்)
வழிபட்டவர்கள் நவக்கிரகங்கள், இந்திரன், மகாவிஷ்ணு,அர்ஜுனன்
பாடியவர்கள் சுந்தரர், அருணகிரிநாதர்
நிர்வாகம்
இருப்பிடம்

திருக்கோவிலூரில் இருந்து தென்கிழக்கே சுமார் 20 கி.மி. தொலைவு, விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ தொலைவு

இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 200 வது தலம்

நடு நாட்டுத் தலங்களில் 14  வது தலம்.

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        ஏழாம்
பதிக எண்          1
திருமுறை எண் 1

பாடல்

பித்தாபிறை சூடீபெரு மானேயரு ளாளா
எத்தான்மற வாதேநினைக் கின்றேன்மனத் துன்னை
வைத்தாய்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அத்தாஉனக் காளாய்இனி அல்லேனென லாமே.

பொருள்

பித்தனே, சந்திர பிறையைக் தலையில் சூடிய பெருமை உடையவனே, அருளாலனே, பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ள திருவெண்ணெய்நல்லூர் சார்ந்ததான `அருட்டுறை` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தலைவனே, எனது நெஞ்சத்துள் உன்னை அகலாது வைத்து அருளினாய்; அதனால், எவ்வாற்றானும் உன்னை மறவாமலே நினைந்து, முன்பே உனக்கு அடியவனாகிய என்னை, இப்பொழுது, `உனக்கு அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேச வைத்தது பொருந்துமோ!

 

பாடியவர்          சுந்தரர்
திருமுறை        ஏழாம்
பதிக எண்          1
திருமுறை எண் 4

பாடல்

முடியேன்இனிப் பிறவேன்பெறின் மூவேன்பெற்றம் ஊர்தீ
கொடியேன்பல பொய்யேஉரைப் பேனைக்குறிக் கொள்நீ
செடியார்பெண்ணைத் தென்பால்வெண்ணெய் நல்லூரருட் டுறையுள்
அடிகேள்உனக் காளாய்இனி அல்லேன்என லாமே.

பொருள்

இடபத்தை ஊர்தியாக உடையவனே, ஒளி நிறைந்த பெண்ணையாற்றின் தென் கரையில் உள்ள  உள்ள திருவெண்ணெய்நல்லூர் சார்ந்ததான `அருட்டுறை` என்னும் திருக்கோயிலின்கண் எழுந்தருளியிருக்கும் தலைவனே, உனக்கு நான் முன்பே அடியவனாகி, இப்பொழுது, `அடியவன் அல்லேன்` என எதிர்வழக்குப் பேசியது பொருந்துமோ! அவ்வாறான பொருந்தாமையை அகற்றி என்னை நீ தெளிவித்து அருளியதால், இனி நான் இறக்கவும், மீளப் பிறக்கவும், இவ்வுலகில் வாழ்ந்து மூப்படைந்து வருந்தவும் ஆன துன்பங்களை அறுத்தேன். நெறி கெட்டவனாகி பொய்ம்மைகள் பலவற்றையே பேசுவேனாகிய என்னை நீ வெறுக்காமல் ஏற்றறு அருள்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ககாராதி

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ககாராதி

பொருள்

  • ‘க’ எனும் எழுத்தை முதன்மையாக் கொண்ட ஸ்ரீவித்தை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ககாராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகாராதி ஓர் ஆ றரத்தமே போலும்
சகாராதி ஓர்நான்கும் தாம்சுத்த வெண்மை
ககாராதி மூவித்தை காமிய முத்தியே.

திருமந்திரம் – 10 திருமுறை – திருமூலர்

கருத்து உரை

`ஸ்ரீ வித்தை` எனப்படும் பராவித்தையை மேற்கொள்ள முடியாத மெலியோர்க்குக்காக  அமைந்தது இந்த புவனாபதிச் சக்கரம்.  ககாரத்தை முதலில் உடைய ஐந்தெழுத்துக்களும் பொன்னிறம் உடையன; ஹகாரத்தை முதலில் உடைய ஆறெழுத்துக்களும் செந்நிறம் உடையன; ஸகாரத்தை முதலில் உடைய நான்கெழுத்துக்களும் தூய வெண்ணிறம் உடையன. ககாரத்தை முதலில் உடையது முதலிய இம்மூன்று வித்தைகளும் `போகம், மோட்சம்` என்னும் இரு பயன்களையும் தருவனவாம்.

விளக்க உரை

  • காரத்தை(ஐந்தாவன: `க, ஏ, ஈ, ல, ஹ்ரீம்`) முதலில் உடைமை பற்றி – `காதி வித்தை`. ஹகாரத்தையே தமிழ் முறையால், ‘அகாரம்’ . ஹகாராதி      ( `ஹ, ஸ, க, ஹ, ல, ஹ்ரீம்`). ஸகாரதி (`ஸ, க, ல, ஹரீம்` ) –  “சகாராதி’ . இப்பதினைந்தெழுத்தின் தொகுதியே `பஞ்ச தசாட்சரி`. `லலிதா திரிசதி தோத்திரம்` முந்நூறு நாமங்கள் கொண்ட கோவை. அந்நாமங்கள் இங்குக் காட்டிய எழுத்துக்களில் ஒவ்வொன்றை முதலாகக் கொண்டு ஓரெழுத்திற்கு இருபதாக (15 X 20)முந்நூறு உள்ளன. எனவே, அவற்றின் முதலெழுத்துக் களின் தொகுதியே இப்பஞ்ச தசாட்சரியாம்.
  • இப் பதினைந்தெழுத்தும் இம்மந்திரத்திற் சொல்லப்பட்டவாறு மூன்று பகுதிகளாகக் கொள்ளப்படுகின்றன. ஒவ்வொரு பகுதியும் `ஹ்ரீம்` என்பதை முடிவில் கொண்டு நிற்றல் அறியத் தக்கது. இம்மூன்று பகுதிகளும் முறையே, `வாக்பவ கூடம், காமராஜ கூடம், சத்தி கூடம்` எனப்படுகின்றன. இம் மந்திர மாலையின் பெருமை. இப்பகுதிகளின் பெருமை. இவ் வெழுத்துக்களின் பெருமை முதலி யவை இம்மாலையின் பூர்வ பாகம் ஆகியவை குறித்து விளக்கமான நூல்கள் உள்ளன. இது சத்திக்குரிய உபநிடதமாகிய திரிபுரோபநிடதம்.
  • இப் ‘பஞ்ச தசாட்சரி மந்திரம்’ காயத்திரியின் மற்றொரு வடிவம்`;காயத்திரியினும் இது மிக மேலானது; காயத்ரி போன்று வெளிப்படையாக கூறாமல் மிக மறை பொருளாகச் சில சங்கேத குறியீட்டுச் சொற்களால் கூறுகின்றது. இங்ஙனமாகவே, இவ் எழுத்துக்களைக் கொண்ட லலித திரிசதி தோத்திர வழிபாடே எல்லா வழிபாட்டின் பயனையும் தந்து, `ஸர்வ பூர்த்திகரி` யாகின்றது
  • `வாக்பவ கூடம்` முதலிய மூன்று பகுதி – `பிரளய கால அக்கினியின் நிறம், கோடி சூரியப்பிரகாச நிறம், கோடி சந்திரப்பிரகாசநிறம்`
  • காமிய முத்தி – இவற்றையும் தரும். இதனால், இது சத்தி வழிபாடாகிய ஸ்ரீவித்தைக்குரிய சிறந்த பஞ்ச தசாட்சர மந்திரத்தின் சிறப்பு.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அக சந்தானத்தின் வேறு பெயர் என்ன?
தேவப்பரம்பரை

 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருவிடையாறு

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருவிடையாறு

 

  • மூன்று நிலைகளை உடைய கோபுரம். கொடிமரம் அற்று 2 பலிபீடம் மற்றும் நந்தி
  • ஈசனுக்கும் அன்னைக்கும் நடுவில் கணபதி குழந்தை வடிவில். மேல் இரு கைகளில் லட்டும் பலாச்சுளையும். கீழ் இரு கைகளில் அபய முத்திரையும் கரும்பும்
  • முருகர் ‘கலியுகராமப் பிள்ளையார்’ என்று போற்றப்படுகிறார்.
  • அகத்தியர் வழிபட்ட லிங்கம் அகத்தீஸ்வரர். அகத்தியருக்கு தனி சிலையும் இங்குள்ளது.
  • கயிலையில் சிவபெருமான் உமாதேவியாருக்கு சிவ ரகசியத்தை உபதேசிக்கும் போது அதை சுகப்பிரம்ம முனிவர் ஒட்டு கேட்டதால் அவரை  பூமியில் பிறக்கும் படி சபித்தார். சாப விமோசனம் நீங்க அந்த சாப விமோசனம் நீங்க வேதவியாசருக்கு மகனாகப்பிறந்து பெண்ணை நதியின் தென்பகுதியில் அமைந்துள்ள இத்தலத்தில் இறைவனை பூஜித்து பூலோக வாழ்வு நீங்கப் பெற்றார்.
  • சுகப்பிரம்ம மகரிஷி வழிபட்டதால் இத்தலத்தில் எப்போதும் கிளிகள் பறந்து கொண்டே இருக்கின்றன.
  • சுந்தரர் பாடியுள்ள 39 வைப்புத் தலங்களுக்கு நிகரானது என்று அவரது பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • சந்தானச்சாரியர்களில் ஒருவரான மறைஞானசம்பந்தர் அவதாரத் தலம். இவருக்கு அருள் செய்த விநாயகர் இருப்பிடம் வயல்வெளியில் தனிக்கோயிலில்
  • மாசி மாதம் 15,16 தேதிகளில் மாலை 5 மணி முதல் 5.15 வரை சூரியக்கதிர்கள் சுவாமியின் மீது பட்டு சூரிய பூஜை நடக்கிறது.

 

தலம் திருவிடையாறு
பிற பெயர்கள் திரு இடையாறு, T. எடையார்
இறைவன் மருதீஸ்வரர், இடையாற்றீசர், இடையாற்றுநாதர், கிருபாபுரீஸ்வரர்
இறைவி ஞானாம்பிகை, சிற்றிடை நாயகி
தல விருட்சம் மருதமரம்
தீர்த்தம் சிற்றிடை தீர்த்தம்
விழாக்கள் தைமாதம் ஆற்றுத்திருவிழா
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு மருதீஸ்வரர் திருக்கோவில்,
மருதீஸ்வரர் தேவஸ்தானம்
டி.எடையார் அஞ்சல், திருக்கோவிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 607203
94424-23919, 98847-77078, 04146-216045, 04146-206515
வழிபட்டவர்கள் சுகமுனிவர் , பிரம்மன் , அகத்தியர் , சுந்தரர் , மறைஞான சம்பந்தர்
பாடியவர்கள் சுந்தரர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் திருக்கோயிலூரில் இருந்து சுமார் 13 கிமீ தொலைவில் அமைந்துள்ள சித்தலிங்க மடத்தை அடுத்து அமைந்துள்ளது இத்தலம் .
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 203 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 13 வது தலம்.

ஞானாம்பிகை உடனாகிய மருதீஸ்வரர்

                             மருதீஸ்வரர் ஞானாம்பிகை

புகைப்படங்கள் : தினமலர்

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்           31
திருமுறை எண்  8

பாடல்

தேச னூர்வினை தேயநின் றான்திரு வாக்கூர்
பாச னூர்பர மேட்டி பவித்திர பாவ
நாச னூர்நனி பள்ளிநள் ளாற்றை யமர்ந்த
ஈச னூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொருள்

ஒளிவடிவினனும், உயிர்களின் தீவினைகள் குறையுமாறு செய்து நிற்பவனும், திருவருளாகிய தொடர்பினை உடையவனும், மேலிடத்தில் இருப்பவனும், தூயவனும், பாவத்தைப் போக்குபவனும், `நள்ளாறு` என்னும் தலத்தை விரும்பி இருக்கின்ற முதல்வனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள்  ` ஆக்கூர், நனிபள்ளி, இடையாறு, இடைமருது` என்னும் இவைகளே.

கருத்து

தேசனூர் , பாசனூர் , நாசனூர் , ஈசனூர் ` என்பன வைப்புத் தலங்களின் பெயர்கள் என்பாரும் உளர்.

 

 

பாடியவர்            சுந்தரர்
திருமுறை          7
பதிக எண்           31
திருமுறை எண்  9

பாடல்

தேச னூர்வினை தேயநின் றான்திரு வாக்கூர்
பாச னூர்பர மேட்டி பவித்திர பாவ
நாச னூர்நனி பள்ளிநள் ளாற்றை யமர்ந்த
ஈச னூரெய்த மானிடை யாறிடை மருதே.

பொருள்

எல்லா உயிர்கட்கும் பேறாகின்றவனும், பிறையை அணிந்த சடையை உடையவனும், (மாயையை விளக்கி ஞானத்தை) தெளியப்படுபவனும், திருமகளுக்குத் தலைவனாகிய திருமாலை ஒரு பாகத்தில் உடையவனும், இடபத்தை உடையவனும், யாவராலும் அடையப்படும் பெருமானும் ஆகிய இறைவனது ஊர்கள் பெருவேளூர், குரங்காடுதுறை, கோவலூர், இடையாறு, இடைமருது` என்னும் இவைகளே.

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – தன்மம்

தமிழ் அன்னை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  தன்மம்

பொருள்

  • தருமம்
  • சலாசனவகை
  • நீதி
  • நன்மை
  • அறம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தன்னை அறியாது தாம்நலர் என்னாதிங்
கின்மை யறியா திளையரென் றோராது
வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
தன்மமும் நல்ல தவஞ்செய்யும் நீரே.

திருமந்திரம் – முதல் தந்திரம் – திருமூலர்

கருத்து உரை

கூற்றுவனாகிய எமன், தன்னைப் பிறர் காணாதவாறும், தன்னால் பற்றப்படுவர் நல்ல பண்பினை உடையர் என்றும், தம்மை அன்றித் தம் சுற்றத்தார்களை காணாதவர்கள் என்று எண்ணாமலும், இளையர் என்று எண்ணாமலும், பிறரால் தடுத்தற்கரிய ஆற்றலோடு வருவான். அவ்வாறு வரும் முன்னே நீங்கள் அறத்தையும், தவத்தையும் செய்து கொள்ளுங்கள்.

விளக்க உரை

  • உடல் நிலைத்திருக்கும் போதே அறம் செய்ய வலியுறுத்தல் வேண்டி இப்பாடல்
  • அறம் செய்தல் (அது பற்றி வாழ்தலும்) தவம் செய்தலுடன் தொடர்புடையன. எனவே இவை உம்மைத் தொகையால் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருஅறையணிநல்லூர்

274

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருஅறையணிநல்லூர்

  • அகழி அமைப்புடைய கருவறையில் மிகப்பழமையான சுயம்பு மூலவர்
  • அரை + அணி – பாறை + அழகு – பாறையில் அழகாக அமர்ந்திருப்பவர்
  • தனிச்சன்னிதியில், திருஞானசம்பந்தர் தாளமேந்தி நின்ற கோலத்தில்
  • சமணர்கள் இக்கோயில் கதவை அடைத்து திருஞானசம்பந்தரை நுழைய விடாமல் தடுத்த போது, அவர் பதிகம் பாடி கதவை திறந்த தலம்.
  • சம்பந்தர் சிவனாரை தரிசிக்க வசதியாக பிரதோஷ நந்தி வலதுபுறமாகவும், அதிகார நந்தி இடதுபுறமாகவும் சற்று சாய்ந்த அமைப்பு
  • சம்பந்தர் இங்கிருந்தே திருவண்ணாமலையை தரிசித்த தலம். (அடையாளமாக கொடிமரத்தின் அருகே 3 அடி உயர பீடத்தில் சம்பந்தரின் பாதம் )
  • ரமண மகரிஷியை திருவண்ணாமலைக்கு வருமாறு அம்பாள் ஆணையிட்ட தலம்
  • திருக்கோயிலூர் ஸ்ரீஞானானந்த சுவாமி இங்குள்ள கோபுரத்தில் அமர்ந்து தவஞ்செய்து அருள்பெற்ற தலம்
  • சனீஸ்வரர், காகத்தின் மீது காலை ஊன்றிய கோலம் , நின்ற கோலம் என இரு வடிவங்களில் காட்சி
  • பீமன் குளம் – கோயிலுக்கு வெளியில் பாறைகளுக்கு இடையில்
  • மூர்த்தங்கள் அற்று ராஜகோபுரத்தின் அடிவாயிலில் குடைவரைக்கோயில்களாக ஐந்து அறைகள்
  • மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி சன்னதி – ஸ்ரீதேவி கையில் முத்திரை பதித்த தண்டம் , இடப்புறத்தில் பெண், வலப்புறத்தில் விலங்கு முகம் கொண்ட ஆண்.

 

தலம் திருஅறையணிநல்லூர்
பிற பெயர்கள் அறையணி நல்லூர், அரகண்ட நல்லூர்
இறைவன் அதுல்யநாதேஸ்வரர், ஒப்பிலாமணீஸ்வரர் , அறையணிநாதர்
இறைவி சௌந்தர்ய கனகாம்பிகை , அருள் நாயகி , அழகிய பொன்னம்மை
தல விருட்சம் வில்வமரம்
தீர்த்தம் தென்பெண்ணையாறு
விழாக்கள் வைகாசியில் 1௦ நாட்கள் பிரம்மோற்சவம்,  மகாசிவராத்திரி , திருக்கார்த்திகை தீபம்
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 7.00 மணி முதல் 10.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 7.00 மணி வரைஅருள்மிகு ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் திருக்கோவில்
ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர் கோவில் தேவஸ்தானம்
அரகண்டநல்லூர் அஞ்சல்,
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 605752
04153-224745, 93456-60711, 99651-44849
வழிபட்டவர்கள் நீலகண்டமுனிவர் , கபிலர், பஞ்ச  பாண்டவர்கள், பிரசண்டமுனிவர், மெய்ப்பொருள் நாயனார், நரசிங்க முனையரையர், இராமலிங்க சுவாமிகள்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர்
நிர்வாகம்
இருப்பிடம் திருக்கோயிலூர் – விழுப்புரம் சாலையில் திருக்கோயிலூரில் இருந்து சுமார் 3 கிமீ தொலைவு,

விழுப்புரத்தில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவு

இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 202 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 12 வது தலம்.

அழகிய பொன்னம்மை உடனாகிய அதுல்யநாதேஸ்வரர்

                         அதுல்யநாதேஸ்வரர்  அழகிய பொன்னம்மை

புகைப்படங்கள் : தினமலர்

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை         2
பதிக எண்          77
திருமுறை எண் 3   

பாடல்

என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான்
பின்பினாற்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்று
முன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் றாள்களுக்
கன்பினாரறை யணிநல்லூர் அங்கையாற்றொழு வார்களே.

பொருள்

எலும்பு மாலையை அணிந்தவர்; கனலும் சூலத்தை ஏந்தியவர்; சிறந்த பிறைமதியை உச்சியில் சூடியவர்;. தலையின் பின்னே தாழ்ந்து தொங்கும் சடையினை உடைய  தலைக்கோலம் உடையவர்; பிறப்பற்றவர் என்று அறையணிநல்லூர் இறைவரைக் கைகூப்பித் தொழுபவரே வலிமைமிக்க மும்மூர்த்திகளும் தொழுது வணங்கும் முக்கண்மூர்த்தன் திருவடிகளில் அன்புடையவர் ஆவர்.

 

பாடியவர்          திருஞானசம்பந்தர்
திருமுறை         2
பதிக எண்          77
திருமுறை எண் 5         

பாடல்

தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழு தேவன்நீ
ஆயினாய்கொன்றை யாயன லங்கையாயறை யணிநல்லூர்
மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்
பாயினாயதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.

பொருள்

தீப்போல விளங்கும் செம்மேனி உடைவயனே! தேவர்களால் தொழப்பெறும் தேவனாக நீயே ஆனவன்! கொன்றை மலர் அணிந்தவனே! அனலைக் கையில் ஏந்தியவனே! அறையணிநல்லூரை அடைந்து வழிபடுபவரின் பழவினைகளைத் தீர்ப்பவனே! கொடிய காலனைக் அழித்தவனே! ஒலிக்கும் கழலணிந்தவனே! பரமனே உன் திருவடிகளைப் பணிகின்றேன்.

 (இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருக்கோவிலூர்

274

தல வரலாறு(சுருக்கம்) /  சிறப்புகள் – திருக்கோவிலூர்

 

  • அட்ட வீரட்டத் தலங்களில் இரண்டாவது தலம். சிவனார் அந்தகாசூரனை சம்ஹாரம் செய்த வீரச்செயல் புரிந்த தலம்.
  • அந்தாகசூரன் எனும் அசுரனை அழிக்க ஈசனால் 64 பைரவர்கள் மற்றும் 64 பைரவிகள் தோற்றுவிக்கப்பட்ட தலம்
  • முருகர் தெய்வீகன் என்ற இளவரசனாக பச்சைக்குதிரையோடு குகமுனிவரின் யாகத்தீயில் தோன்றி காரண்டன் வல்லூரன் என்ற இரு அசுரர்களை சம்ஹரித்து மக்களின் துயர்போக்கி பாரியின் மகள்களான அங்கவை , சங்கவையை மணந்த தலம்
  • முருகர் அசுரனைக் கொன்ற பாவம் தீர சிவனாரை வழிபட்ட தலம்
  • சுக்கிரன் சாப விமோசனம் பெற்ற தலம்
  • வாஸ்து சாந்தி என்ற ஐதீகம் தோன்றிய தலம்
  • அம்பாள் திரிபுர பைரவி அவதாரத்தலம்
  • சப்தமாதர்கள் அவதாரத்தலம்
  • ஔவையார் விநாயகர் அகவல் பாடியருளிய தலம்
  • ஔவையாரை சுந்தரருக்கு முன்பு கயிலாயத்தில் சேர்ப்பித்த கணபதியான பெரியானைக்கணபதிக்கு உள்பிரகாரத்தில் சந்நிதி
  • பைரவர் வாகனம் இல்லாமல் திருக்காட்சி
  • கோயிலுக்கு அருகின் ஸ்ரீமத் ஞானியார் சுவாமி மடலாயம்
  • அருகினில் குகை நமச்சிவாயர் சமாதி, சுவாமி ஞானானந்தகிரி சுவாமிகளின் தபோவனம், ஸ்ரீ ரகோத்தமசுவாமி பிருந்தாவனம்
  • மெய்ப்பொருள் நாயனார் அரசாண்ட தலம். (ஆலய நுழைவுவாயில் உட்புற மண்டபத்தூணில் மெய்ப்பொருள்நாயனார் சிற்பம்)
  • கபிலர் பாரிவள்ளலின் மகள்களை திருமுடிக்காரிக்குத் திருமணம் செய்வித்து , பின் வடக்கிருந்து உயிர்நீத்த தலம். ஆற்றின் நடுவில் கபிலர் குகை.
  • ராஜராஜ சோழன் பிறந்த தலம்.
  • குந்தவை நாச்சியார் திருப்பணிகள் செய்துள்ள தலம்.
  • பாடல் பெற்ற தலமான அறையணிநல்லூர் (அரகண்டநல்லூர்) இங்கிருந்து சுமார் 3 கி.மி. தொலைவு.

 

தலம் திருக்கோவிலூர்
பிற பெயர்கள் அந்தகபுரம், மலையமான் நாடு , கீழையூர், கோவலூர் வீரட்டம், திருக்கோவலூர்
இறைவன் வீரட்டேஸ்வரர், அந்தகாந்தர்
இறைவி சிவானந்தவல்லி, பெரியநாயகி , பிருஹன்நாயகி
தல விருட்சம் வில்வமரம் , சரக்கொன்றை
தீர்த்தம் தென்பெண்ணையாறு, தட்சிண பிணாகினி மற்றும் ருத்ர , கபில , கண்ணுவ , ராம , பரசுராம , யம , பிதிர் , சப்தஇருடியர் , சூரிய , அக்னி  தீர்த்தங்கள்
விழாக்கள் சித்திரையில் வசந்தோற்சவம், ஆனித்திருமஞ்சனம்,ஆடி வெள்ளிக்கிழமைகள், ஐப்பசி அன்னாபிஷேகம் , கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்,சஷ்டியில் லட்சார்ச்சனை, ஆருத்ரா தரிசனம், மார்கழியில் மாணிக்கவாசகர் திருவிழா, நவராத்திரி, மகாசிவராத்திரி, சூரசம்ஹாரம்
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 12.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.30 மணி வரைஅருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோவில்
கீழையூர், திருக்கோவிலூர் அஞ்சல்
திருக்கோயிலூர் வட்டம்
விழுப்புரம் மாவட்டம், PIN – 60575704153-253532 , +91-93448-79787 , +91-94862-80030 , +91-98426-23020 , +91-98423-10031 , +91-93456-60711
வழிபட்டவர்கள் விநாயகர், முருகர், ராமர், பரசுராமர், கிருஷ்ணன், காளி, ஏகாதச ருத்ரர், இந்திரன், யமன், காமதேனு, சூரியன், குரு, கண்வர், ரோமசமுனிவர், கபிலர், மிருகண்டு முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர், காமன், குபேரன், வாணாசூரன், சப்தரிஷிகள், ஆதிசேஷன்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம், திருநாவுக்கரசர் 1 பதிகம் சுந்தரர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் திருவண்ணாமலையில் இருந்து சுமார் 37 கிமீ, விழுப்புரத்தில் இருந்து சுமார் 37 கிமீ
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 201 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 11 வது தலம்.

அருள்மிகு பெரியநாயகி  உடனாகிய வீரட்டேஸ்வரர்

                                    வீரட்டேஸ்வரர்         பெரியநாயகி

புகைப்படங்கள் : தினமலர்

 

பாடியவர்             திருஞானசம்பந்தர்
திருமுறை          1
பதிக எண்            46
திருமுறை எண்  8

 

பாடல்

கல்லார் வரையரக்கன் றடந்தோள் கவின்வாட
ஒல்லை யடர்த்தவனுக் கருள்செய் ததிகையுள்
பல்லார் பகுவாய நகுவெண் டலைசூடி
வில்லா லெயிலெய்தா னாடும்வீரட் டானத்தே.

பொருள்

கயிலை மலையை பெயர்த்து எடுத்த இராவணனின் பெரிய தோள்களின் அழகு வாடுமாறும் அவனை வருந்துமாறும் செய்து பின் அவனுக்கு அருள் பல செய்தும், முப்புரங்களை வில்லால் எய்து அழித்தும், தனது பெருவீரத்தைப் புலப்படுத்திய பற்கள் பொருந்திய பிளந்தவாயை உடைய வெள்ளிய தலைமாலையைச் சூடிய இறைவன் இத்திருவதிகை வீரட்டானத்தே ஆடுவான்.

கருத்து

கல்லார் வரை – கயிலையை
கவின் – அழகு
ஒல்லை – விரைவாக
காலந் தாழ்க்க அடர்ப்பின் அவனிறந்தேபடுவான் என்னுங் கருணையால்.
பல் ஆர் பகுவாய – பற்கள் பொருந்திய பிளவுபட்ட வாயையுடைய.

 

பாடியவர்           சுந்தரர்
திருமுறை         7
பதிக எண்           17
திருமுறை எண்  10         

பாடல்

மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்
   தான்வலி யைநெரித்தார்
அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்
   வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்
தடுக்கஒண் ணாததோர் வேழத்
   தினையுரித் திட்டுமையை
நடுக்கங்கண் டார்க்கிடம் ஆவது
   நந்திரு நாவலூரே.

பொருள்

தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி கயிலை மலையைப் பெயர்த்தவனாகிய இராவணனது வலிமையை நெரித்து அவன் கர்வத்தை அழித்தவரும், மூல ஆவணத்தை மறைவாக வைத்திருந்து அதனை நடுவுநிலையாளர் உள்ள திருவெண்ணெய் நல்லூரில் மிகவும் அடக்கமாக  இருந்து அதை பிறரிடம் காட்டி என்னை அடிமையும் கொண்டவரும், தடுக்க இயலாத வலிமையுடைய யானை ஒன்றினை உரித்து உமையையும் நடுங்கச் செய்தவருமாகிய இறைவற்கு இடமாயிருப்பது நமது திருநாவலூரேயாகும்.

கருத்து

நடுக்கங் கண்டார் – அஞ்சுவித்தார்

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

 

Loading

சமூக ஊடகங்கள்

சைவத் திருத்தலங்கள் 274 – திருநெல்வெண்ணை

274

 

தல வரலாறு(சுருக்கம்)/ சிறப்புகள் – திருநெல்வெண்ணை

  • ஈசன் சுயம்பு மூர்த்தி
  • 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டத் தலம்
  • இறைவழிபாட்டை மறந்திருந்த மக்களை, ஈசன் மழையை பெய்வித்து, ஏரி குளம் ஆகியவற்றை உடைத்து நெல்லைப் பெற்றுக் கொண்டு மழையை நிறுத்தி அவர்களுக்கு பரிசாக தங்கம் நிரம்பிய குடங்களை பரிசாக அளித்தத் தலம்.
  • சிவன், நெல்லை அணையாக கட்டியத் தலம் ‘நெல் அணை’
  • திருஞான சம்பந்தர் திருத்தல யாத்திரை வரும் போது இருட்டியதால், ஈசன் அம்பாளிடம் சொல்லி அவருக்கு வழிகாட்டி அழைத்துவரப்பட்டத் தலம்.
  • அம்பாள் திருஞானசம்பந்தர் எதிரில் நின்று அழைத்ததால் ‘எதலவாடி’
  • சனகாதி முனிவர்கள் ( சனகர் , சனந்தனர் , சனாதனர் , சனற்குமாரர் ) வழிபட்ட தலம்
  • ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று அதிகாலையில் சிவனாருக்கு சூரியவழிபாடு நடைபெறும் தலம்.
  • ஞானசம்பந்தர் கையில் தாளமின்றி, கை கூப்பிய நிலையில் உள்ள வடிவம், சுந்தரர், நடன சுந்தரரான வடிவம், அப்பர் பெருமானும் கை கூப்பிய நிலையில் உள்ள வடிவம்
  • அதிகார நந்தி இரண்டு காலகளையும் இணைத்து கை கூப்பி வணங்குவது போன்ற அமைப்பு.

 

தலம் திருநெல்வெண்ணை
பிற பெயர்கள் நெல்வெண்ணெய், ‘நெல் அணை, எதலவாடி
இறைவன் சொர்ணகடேஸ்வரர், வெண்ணெயப்பர் , நெல்வெண்ணெய்நாதர்
இறைவி பிருஹன்நாயகி, நீலமலர்க்கண்ணி
தல விருட்சம் புன்னைமரம்
தீர்த்தம் பெண்ணையாறு
விழாக்கள் மகா சிவராத்திரி , சனிப்பெயர்ச்சி,கார்த்திகை தீபம், மாசிமகம், மார்கழி திருவாதிரை
மாவட்டம் விழுப்புரம்
திறந்திருக்கும் நேரம் / முகவரி காலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை,
மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரைஅருள்மிகு சொர்ணகடேஸ்வரர் – நெல்வெணெயப்பர் திருக்கோயில்
நெய்வெயைகிராமம் – கூவாடு அஞ்சல்
(வழி) எறையூர் – உளுந்தூர்ப்பேட்டை வட்டம்
விழுப்புரம் மாவட்டம் – 607 20104149-209097, 04149-291786, 94862-82952
கிருஷ்ணமூர்த்தி குருக்கள் 9047785914
வழிபட்டவர்கள்
பாடியவர்கள் திருஞானசம்பந்தர் 1 பதிகம்
நிர்வாகம்
இருப்பிடம் உளுந்தூர்பேட்டையில் இருந்து சுமார் 15 கிமீ தொலைவு
இதர குறிப்புகள் தேவாரத் தலங்களில் 200 வது தலம்
நடு நாட்டுத் தலங்களில் 10 வது தலம்.

நீலமலர்க்கண்ணி உடனாகிய சொர்ணகடேஸ்வரர்

சொர்ணகடேஸ்வரர்       நீலமலர்க்கண்ணி

புகைப்படங்கள் : தினமலர்

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         3
பதிக எண்           96
திருமுறை எண் 6

பாடல்

நெற்றியோர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
பெற்றிகொள் பிறைநுத லீரே
பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல்
கற்றறி வோர்கள்தங் கடனே

பொருள்

நெற்றிக்கண்ணை உடையவரும், திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருள்பவரும், அடியவர்கட்கருளும் பண்புடைய பிறை போன்ற நெற்றியையுடைய உமாதேவியை உடைய வருமாகிய சிவபெருமானே! அவ்வாறு பிறைபோன்ற நெற்றியுடைய உமா தேவியை உடைய உம்மை வழிபடுதலே ஞான நூல்களைக் கற்றறிந்த அறிஞர்களின் கடமையாகும்.

 

பாடியவர்           திருஞானசம்பந்தர்
திருமுறை         3
பதிக எண்           96
திருமுறை எண் 8

 

பாடல்

நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்
றரக்கனை யசைவுசெய் தீர
அரக்கனை யசைவுசெய் தீருமை யன்புசெய்
திருக்கவல் லாரிட ரிலரே

பொருள்

நெருங்கிய சோலைகள் சூழ்ந்து அழகுடன் விளங்கும் திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்ருது அருள்பவரும், அரக்கனான இராவணனை வலிகுன்றச் செய்தவருமான சிவபெருமானே! அவ்வாறு அரக்கனை வலிகுன்றச் செய்தவரான உம்மை அன்புடன் வணங்குபவர்கள் துன்பமே இல்லாதவர்கள் ஆவர்.

(இத் திருத்தலம் பற்றி மேலும் தகவல் இருந்தால் தெரியப்படுத்தவும்)

Loading

சமூக ஊடகங்கள்