
பாடல்
கெதியாக உந்தனைக் கொண்டாடி நினதுமுன்
குறைகளைச் சொல்லி நின்றும்,
கொடுமையா யென்மீதில் வறுமையை வைத்துநீ
குழப்பமா யிருப்ப தேனோ
சதிகாரி என்றுதான் அறியாமல் உந்தனைச்
சதமாக நம்பினேனே
சற்றாகிலும் மனது வைத்தென்னை ரட்சிக்க
சாதக முனக் கிலையோ
மதிபோல வொளியுற்ற புகழ்நெடுந் கரமுடைய
மதகஜனை யீன்ற தாயே
மாயனிட தங்கையே பரமனது மங்கையே
மயானத்தில் நின்ற வுமையே
அதிகாரி யென்றுதா னாசையாய் நம்பினேன்
அன்பு வைத்தென்னை யாள்வாய்,
அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
அம்மை காமாட்சி உமையே
காமாட்சியம்மை விருத்தம்
கருத்து – அன்னையின் பெரும் கருணைகளை சொல்லி தன்னை ரட்சிக்க ஆளும் அதிகாரம் உடையவள் என்று கூறி இன்னும் தன்னை ரட்சிக்க வரவில்லை என்பதை கூறும் பாடல்.
பதவுரை
அழகிய நகரமான காஞ்சித் திருத்தலத்தில் மங்கா புகழ் கொண்டவளாக வாழ்ந்திடும் அன்னை ஆகிய காமாட்சி உமையே, என் அன்னையே, சந்திர ஒளியினைப் போன்றதும் நீண்டதும் நெடுங்கரம் உடையதும் ஆன ஆனைமுகனை ஈன்ற அன்னையே, மாயன் எனப்படுவதாகிய திருமாலின் தங்கையே, பரமனுக்கு உரித்தானவளே, சுடுகாடு எனப்படும் மயானத்தில் நின்ற உமையே! உன்னை மட்டுமே கதியாக கொண்டு உன்னைக் கொண்டாடியதுடன் உன்முன் எனது குறைகளைச் சொல்லி நின்றும் கொடுமை செய்யத் தக்கதான வறுமையை எனக்கு தந்ததும் , எனக்கு அருள் புரியாமல் குழப்பம் கொண்டிருப்பது ஏனோ? அனைத்தையும் அறிந்து என் மீது கருணை காட்டாமல் இருப்பதால் நீ சதிகாரி என்பதையும் அறியாமல் உன்னை முழுமையாக நம்பினேன்; கொஞ்சம் கருணை கொண்டு என் நிலை அறிந்து என்னை ரட்சிக்க உனக்கு மனம் வரவில்லையோ? என்னை வழிநடத்தும் அதிகாரம் உடையவள் என்று ஆசை வைத்து உன்னை நம்பினேன், என்னிடத்தில் அன்பு கொண்டு என்னை ஆள்வாய்.
விளக்க உரை
- சதிகாரி என்றுதான் அறியாமல் உந்தனைச் சதமாக நம்பினேனே என்பதற்கு பதிலாக சில இடங்களில் விதியீது, நைந்துநான் அறியாம லுந்தனைச் சதமாக நம்பி னேனே என்று பதிக்கப்பட்டு இருக்கிறது. சதிகாரி என்பதை ஏற்காமல் இவ்வாறு மாற்றப்பட்டு இருக்கலாம். அது அன்னையிடம் உள்ள அளவற்ற அன்பினால் சதிகாரி என்று அழைத்து இருக்கலாம். ஆன்றோர் பொருள் அறிந்து உய்க.
- சதிக்கு பார்வதி எனவும் காரிக்கு கருப்பானவள் எனவும் பொருள் கொண்டு உரைப்பவர்களும் உளர். இத்தகைய கருமை நிறம் கொண்டவளாகிய உன்னைப் போய் நம்பினேனே! பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ என்று அதிகாரமாய் கேட்கிறார் என்று கூறுபவர்களும், உன் உடலில் பாதியாய் விளங்கும் ஈசனை மறந்து, உன்னை மட்டுமே சதமாக நம்பினேனே, என்னைச் சொல்லவேண்டும் என்றும் சில இடங்களில் கவித்துவமாக விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.