
பாடல்
மூலம் – 18
இலையென் றொருவர்க் கிதம்சொல்லி யென்றும்இரங்கிநில்லா
நிலையென்று நீஅளித் தாண்டருள் வாய்நித்த னேபுகலி
மலையொன் றியவடு கேச கங்காள வயிரவனே
தலையொன் றியகைய னேகாழி யாபதுத் தாரணனே
பதப்பிரிப்பு – 18
இலையென்று ஒருவர்க்கிதம் சொல்லியென்றும் இரங்கிநில்லா
நிலையென்று நீ அளித்தாண்டருள்வாய் நித்தனே புகலி
மலையொன்றிய வடு கேச கங்காளவயிரவனே
தலையொன்றியகையனே காழியாபதுத்தாரணனே
ஸ்ரீ ஆபதுத்தாரணர் மாலை – தருமை ஆதினம் 10 வது குருமூர்த்திகள் ஸ்ரீ ல ஸ்ரீ சிவஞான தேசிக சுவாமிகள்
*கருத்து – யாசிக்கும் நிலை ஏற்படாமலும், யாசிப்பவர்க்கு இல்லை எனும் நிலை ஏற்படாமலும் காக்க வேண்டி வயிரவரைத் துதிக்கும் பாடல்*
பதவுரை
இறைவனாகவும், சிவனாகவும் இருப்பவனே, புகலி எனும் சீகாழி எனும் திருத்தலத்தில் இருக்கும் மலையில் ஒன்றி இருப்பவனே, எலும்புக் கூட்டினை கேசத்தில் அணிந்த வயிரவப் பெருமானே, ஈசனின் மனதில் இருந்து வெளிப்பட்டு கர்வம் கொண்ட பிரம்மனின் தலையைக் கொய்து அதனை கைகளில் கொண்டவனே, காழிப்பதி எனும் சீகாழியில் உறையும் ஆபதுத்தாரணனே! யாசித்து ஒருவர் வரும்போது அவரிடத்தில் இல்லை என்பதை இதமாய் சொல்லாமலும் எவரிடத்தும் எக்காலத்தும் பொருள் பற்றியும் மற்றைய எதன் பொருட்டும் இரங்கி நிற்கா நிலையை நீ எனக்கு அளித்து எனை ஆண்டு அருள்வாய்.
விளக்க உரை
- நித்தன் – அருகன், கடவுள், சிவன்
- கங்காளம் – ஒரு பெரிய பாத்திர வகை, தசை கழிந்த உடலின் எலும்புக்கூடு-சிறப்பாக முதுகெலும்பு, பிணம், குளம்,குட்டை, உணவருந்தும் பெரிய தட்டு