எவர் அறியக்கூடும்,
கண்ணுக்கு தெரியும்
உடைந்த பொம்மைகளின்
பின்னால் இருக்கும்
பெற்றவர்களின்
நிறைவேறாமல்
உடைந்த கனவுகள்.
![]()
உருவேறத் திருவேறும்
விழியில் விழுந்து – இந்த பாடலை பல ஆயிரம் முறை கேட்டிருப்பேன். ஆனாலும் ஒவ்வொரு முறையும் புதுமையாகத்தான் இருக்கிறது. காட்சியா, இசையா, பாடலை பாடிய சசிரேகாவா அல்லது வரிகளா தெரியவில்லை. என் சிறு பிராயத்தின் வரிகள் என்பதாலா. எனக்கு மட்டும் சொந்தம் உந்தன்… என்ற வார்தைகளின் தொகுப்பா. கோடையில் குளிரினையும், குளிரினில் ஒரு வெம்மையையும் தரும் இந்த பாடலை உங்களுக்கு பிடிக்குமா?
![]()
வண்ணம் தீட்ட
துவங்கிய தருணத்தில்
வரிசையாக மனிதர்கள்.
சிகையை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
முகத்தை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
கண்கள் கலக்கமுற்றிருப்பதாக
சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
ஆடையை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
நடையை சீர் படுத்த சொன்னான் ஒருவன்.
மற்றவர்களுக்கா வரைந்து
முடித்த ஓவியத்தில்
முழுமை பெறாமல் ஓவியமும்
ஓவியனின் கனவுகளும்.
![]()
ஒரு வசந்த காலத்தின்
தொடக்கத்தில் ஒரு பயணம்.
நினைவு அடுக்குகளை
பிரித்துக் காட்டும் வாய்ப்பு உனக்கும்
காணும் வாய்ப்பு எனக்கும்.
இது சிறு வயது அடுக்குகள்,
இது பதினென் பிராயத்தின் அடுக்குகள்,
இது உறவுகளின் அடுக்குகள்,
இது அலுவலகத்தின் அடுக்குகள்
என்று அடுக்கிக் கொண்டே சென்றாய்.
எங்கே
காதல் அடுக்குகளைக் காணோம் என்றேன்.
மவுனப் புன்னகை வீசி பின் சொன்னாய்
தனித்து இருப்பதை பிரிக்க முடியும்.
கலந்து இருப்பதை அல்ல என்றாய்.
ஆண் என்பதன் அடையாளம் துறந்து
அழுகை ஒலி.
![]()
சுத்தத்தின் பொருட்டு
நீராடல் நதிகளில்.
பார்த்தல் நிகழ்ந்தது
வகை வகையான மீன்களிடம்.
இயற்கையின் பொருட்டு
மீன் ஓன்று கையினை கடித்தது.
எதிர்ப்புகள் அற்ற நிலையில்
மற்ற மீன்களும்.
சில மீன்கள் கால்களை கடித்தன.
சில மீன்கள் முதுகினை கடித்தன.
சில மீன்கள் முடியினையும் கடித்தன.
எதுவும் அற்ற பொழுதுகளில்
எலும்புகளின் தோற்றம்.
ருசியின் பொருட்டு
அவற்றையும் உண்டன சில மீன்கள்.
அம்புகள் தைத்து தேரின் அடியில்
கிடக்கும் கர்ணனாய் நான்.
ஈரம் படிந்த இதயம் மட்டும்
இன்னமும் இருப்பதை
நீ உணர்த்தினாய்.
கரை ஓதுங்கியது எதுவோ?
![]()
இராவணண் பற்றி சில செய்திகள். அவன் மிகப் பெரிய சிவ பக்தன் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். அவனது கொடி முத்திரை என்ன தெரியுமா? வீணை. அரக்கனாக இருந்தும் மிகப் பெரிய/கடினமான இசைக் கருவியை தன் கொடியாக உடையவன். அவனுக்கு பத்து தலை என்பது உருவமாகப் படுகிறது. பத்து விஷயங்களை ஓரே நேரத்தில் செய்பவர்களை தசாவதானி என்று அழைப்பார்கள். அப்படிதான் தோன்றுகிறது. வரலாற்றுப் பதிவுகளில் சில சதாவதானிகள்(நூறு விஷயங்களை ஓரே நேரத்தில் செய்பவர்கள்) இருக்கிறார்கள்.
மீண்டும் தியானிப்போம்.
![]()