அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – பாசம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  பாசம்

பொருள்

  • வஞ்சம்
  • அழகு
  • அன்பு
  • இருள்
  • கண்ணி
  • கயிறு
  • கவசம்
  • மாயை
  • காலபாசம் – பாசக்கயிறு – (பகைவர்களின் கையையும் கால்களையும் கட்டப் பயன்படும். ஒரு கயிறு. இரண்டு / மூன்று கயிறுகள் சேர்ந்து அமைந்ததாகும். எளிதில் அவிழ்க்கும் சுருக்கு முடிச்சு இடப்பட்டு இருக்கும்)

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

படையும் பாசமும் பற்றிய கையினீர்
அடையன் மின்நம தீச னடியரை
விடைகொ ளூர்தியி னானடி யார்குழாம்
புடைபு காதுநீர் போற்றியே போமினே.

தேவாரம் – ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

படைக்கலமும் பாசக்கயிறும் பற்றிய கைகளை  உடைய நம் தூதுவர்களே! நம்முடைய ஈசன் அடியரை சென்று அடையாதீர்கள்; நீங்கள், இடபத்தை ஊர்தியாகக் கொண்ட இறைவன் அடியார் குழுமத்தின் பக்காமல் போகாமல் அவர்களை வழிபட்டு செல்வீராக!

விளக்க உரை

  • பெரும்பாலான தெய்வங்களின் கைகளில் இருக்கும் ஒருவகை ஆயுதம்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

மறைந்து நிற்கும் பொருளை அறிந்த ஒன்றின் மூலம் அறிவது என்ன அளவை?
கருதல் அளவை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – வயிரவன்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  வயிரவன்

பொருள்

  • பைரவரின்  பலவேறு பெயர்களில் ஒன்று
  • பிரம்ம சிரேச்சிதர்
  • உக்ர பைரவர்
  • க்ஷேத்ரபாலகர்
  • வடுகர்
  • ஆபத்துதாரனர்
  • சட்டைநாதர்
  • கஞ்சுகன்
  • கரிமுக்தன்
  • நிர்வாணி
  • சித்தன்
  • கபாலி
  • வாதுகன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

நடந்த வயிரவன் சூல கபாலி
கடந்த பகைவனைக் கண்ணது போக்கித்
தொடர்ந்த உயிரது உண்ணும் பொழுது
படர்ந்த உடல்கொடு பந்தாடல் ஆமே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

இச்சக்கரத்தில்(வைரவச் சக்கரத்தில்) விளங்கும் வயிரவ மூர்த்தியானவர், சூலம் மற்றும் கபாலங்களை ஏந்திய வேக வடிவ மூர்த்தி ஆவார். அவர் தம் அடியவர் தவச் செயலுக்குப் பகையாய் நிற்பவரை தாமே முன்னின்று சூழ்ச்சி அற்றவராகச் செய்து, அவர்களது உயிரையும் போக்கித் தமது வெற்றிக்கு அறிகுறியாக பகைவர்களின் உயிர் நீங்கிய உடலங்களைப் பந்துபோல எறிந்து வீர விளையாட்டுச் செய்தருளுவர்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

ஐயம் இல்லாமல் விஷத்தை நேர அறிவது என்ன அளவை
காட்சி அளவை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வார்சடை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  வார்சடை

பொருள்

  • நீண்டசடை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன் ஓருவம னில்லி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே.

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

இறைவன், நீண்ட சடை உடையவனும், ‘மைபூசிய கண்களை உடைய உமையுடன்  தானுமாகிக் கச்சி மயானத்து வாழ்பவனும்  ஆவான்’ என்று கூறினால் அவன் அவ்வளவே அத்தன்மை மட்டும்  உடையவன் அல்லன்; (ஏனெனில் அஃது அவனது பொது இயல்பு ஆகும்).அவன் எந்தபொருளையும் தன்பொருட்டு ஏற்க விருப்பம் உடையான் அல்லன். உலகில்  இருக்கும் பொருள்களில் ஒருவன் அல்லன்;  ஓரு ஊருக்கு மட்டும்  உரியவன் அல்லன். எந்தப் பொருளாலும் தனக்கு இணையாக உவமை காட்ட இயலாதவன். அதனால் அவனுடைய அந்தத் தன்மையையும், அந்த நிறத்தையும், அந்த வடிவத்தையும் அவன் திருவருளையே கண்ணாகப் பெற்றுக் காணலாமே ஒழிய அவ்வாறு இல்லாமல் மற்றைப் பொருள்கள் போலப் இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன், இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லாகவோ எழுத்தாகவோ எழுதிக் காட்டல் இயலாது.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

உரை அளவையின் வேறு பெயர்கள் என்ன?
ஆகமப் பிரமாணம், சப்தப் பிரமாணம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வாணன்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  வாணன்

பொருள்

  • வசிப்பவன்
  • ஏதேனும் ஒரு தொழிலால் வாழ்பவன்.
  • பாவாணன்
  • மகாபலி வம்சத்தில் தோன்றிய அரசன்
  • நெல்வகை
  • ஒரு சிவகணத் தலைவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அரவொலி ஆகமங்கள் அறி
வார்அறி தோத்திரங்கள்
விரவிய வேதஒலி விண்ணெ
லாம்வந் தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந்து வழி
தந்தெனக் கேறுவதோர்
சிரமலி யானைதந்தான் நொடித்
தான்மலை உத்தமனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

‘அரகர’ என்று சிவபெருமானைத் துதித்து எழுப்பும் ஒலியும், ஆகமங்களினின் பொருளை முழுமையாக உணர்ந்து ஓதும் ஒலியும், அறிவுடையோர் அறிந்து பாடும் பாட்டுக்களின் ஒலியும், ஆகாயம் முழுதும் நிறைந்துவந்து எதிரே ஒலிக்கவும், மேன்மை நிறைந்த  ‘வாணன்’ என்னும் கணத்தலைவன் வந்து முன்னே வழிகாட்டிச் செல்லவும், ஏறத்தக்கதான முதன்மை நிறைந்த யானையை  திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் முதல்வன் எனக்கு அளித்து அருளினான் என்னே அவனது திருவருள்!

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

கருதல் அளவையின் வேறு பெயர் என்ன?
அனுமானப் பிரமாணம்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வெஞ்சம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  வெஞ்சம்

பொருள்

  • வஞ்சம்
  • பழி
  • சினம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அஞ்சுமுகம் தோன்றில்
  ஆறு முகம்தோன்றும்;
வெஞ்சமரில் அஞ்சல்என
  வேல்தோன்றும் ;- நெஞ்சில்
ஒருகால் நினைக்கில்
  இருகாலும் தோன்றும்;
முருகா என்று ஒதுவார் முன்

திருமுருகாற்றுப்படை – நக்கீரர்

கருத்து உரை

‘முருகா’ என்று ஓதுவார் மனதில் எப்பொழுதாவது அச்சம் வந்து தோன்றும் போது ஆறுமுகம்   தோன்றும்; கடுமையான மனப் போராட்டத்தில் இருக்கும் போது ‘அஞ்சேல்’  என்று வேல் தோன்றும்! மனதில் ஒரு பொழுது நினைத்தால் அவனது திருத் தாள் தோன்றும்.

விளக்க உரை

  • எண்ணலங்காரம் சார்ந்தது இப்பாடல் – ஐந்து முகம், ஆறுமுகம், ஒருக்கால், இருக்கால்
  • அஞ்சு முகம் (ஈசானம், தத்புருடம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம்) எனும் சிவ பெருமானின் ஐந்து முகம் தோன்றும் பொழுதினில் மேல் குறிப்பிட்ட ஐந்து முகங்குகளுடன் ஆறாவது முகமாகிய அதோமுகமும் உடைய முருகப் பெருமான் தோன்றுவான். (சடாட்சரம் என்று பொருள் கொள்வாரும் உண்டு). அஃதாவது சிவபெருமான் இருக்கும் இடத்தில் எல்லாம் முருகப் பெருமான் சிவ வடிவமாகத் தோன்றுவான்!
  • யோக மார்க்கம் முறைப்படி
  1. சிவ வடிவம் கண்ணுறும் போது ஆறு ஆதார நிலைகளும் காட்சி பெறும்.
  2. வாசியினை கால் என்று அழைப்பது சித்தர் மரபு. சுழுமுனை (ஒரு கால்) வழியாக வாசி செல்லும் போது திருத்தாள் (இரு கால்) காட்சி தோன்றும்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

காட்சி அளவையின் வேறு பெயர்கள் என்ன?
பிரத்தியட்சப் பிரமாணம், காண்டல் அளவை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இடைதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  இடைதல்

பொருள்

  • சோர்தல்
  • மனந்தளர்தல்
  • பின்வாங்குதல்
  • விலகுதல்
  • தாழ்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

கைக்கும் பிணியொடு, காலன் தலைப்படும்ஏல்லையினில்
எய்க்கும் கவலைக்(கு) இடைந்தடைந்தேன்,வெம்மை நாவளைக்கும்
பைக்கும் அரவரை யான்தந்த பாய்மதயானைபத்துத்
திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே

மூத்த நாயனார் திருஇரட்டை மணிமாலை

கருத்து உரை

உடலால் ஏற்படும் பிணியொடு, மனதால் ஏற்படும் கவலையால் மனம் தளர்ந்து, சோர்ந்து யான் பாம்பினை இடையில் அணிந்தவனும், நெற்றிக்கண்களை உடையவனுமாகியவன் தந்த யானை முகம் கொண்ட திருவாளனது திருவடிகளையே புகலிடமாக அடைந்தேன்’. அதனால், யான் பிணியும் கவலையும் இல்லாதவன் ஆயினேன். (ஆதலால் நீவிரும் அவனது அடிகளையே புகலிடமாக அடையுங்கள்’ – என்பது குறிப்பு).

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

காட்சி அளவையின் வேறு பெயர்கள் யாவை?
பிரத்தியட்சப் பிரமாணம், காண்டல் அளவை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மாடை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  மாடை

பொருள்

  • பொன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மக மாயை களைந்திட வல்ல பிரான்
முகம் ஆறும் மொழிந் தொழிந்திலனே
அகம் மாடை, மடந்தையர் என்(று) அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே.

கந்தர் அனுபூதி – அருணகிரிநாதர்

கருத்து உரை

மிகப் பெரியதான வலிமைமிக்க மாபெரும் மாயைகளை எல்லாம் நீக்க வல்லவராக முருகப் பெருமான், தன் அறுமுகத்தில் இருக்கும் ஆறு வாயினால் உபதேசங்களை தந்து அருளிய போதிலும், வீடு, பொன் (செல்வம்), மாதர் என்று இவைகளை எப்பொழுதும் நினைத்து சோர்வு அடையச் செய்கிற உலக மாயைக்குள் கிடந்து கலங்குவதை நான் இன்னும் விடவில்லையே.

விளக்க உரை

  • முருகப் பெருமான் தன்னுடைய திருவாக்கால் ஷடாச்சர உபதேசம் செய்தும் நான் தேறவில்லையே என்கிறது மற்றுமொரு உரை.
  • ‘எனக்கு சம்சார மாயை நீங்கவில்லையே’ என பொருள் கொண்டால் முருகனின் பரதத்துவத்திற்கு இழுக்கு ஏற்படும் என்றும் உபதேசம் செய்தவர் எப்படிப்பட்டவர், செய்த உபதேசம் எப்படிப்பட்டது என்பதின் தரமே குறைந்துவிடும் என்று சில குறிப்புகளில் காணப்படுகிறது. அருளாளர்களின் பாடல்கள் அனைத்தும் அவர்களுக்காக எழுதப்பட்டவை அல்ல. சாதாரணமாக இருக்கும் கடை நிலை மனிதர்களின் நிலையில் இருந்து அவர்கள் உய்வதன் பொருட்டு எழுதப்பட்டவை.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

மூவகை அளவைகள் எவை?
காட்சி, கருதல், உரை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கொழுத்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  கொழுத்தல்

பொருள்

  • செழித்தல்
  • உடற்கொழுப்பு மிகுதல்
  • வளம்மிகுத்தல்
  • குழம்பாயிருத்தல்
  • திமிர்கொள்ளுதல்
  • பூமி மதர்த்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

முழக்கி எழுவன மும்மத வேழம்
அடக்க அறிவென்னும் தோட்டியை வைத்தேன்
பிழைத்தன ஓடிப் பெருங்கேடு மண்டிக்
கொழுத்தன வேழம் குலைக்கின்ற வாறே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

மும்மலமாகிய ஆணவம், கன்மம், மாயை ஆகியவை கொண்டு ஐந்து இந்திரியங்களும் மத யானைகள் போன்று தறியில் கட்டுபடாது பிளிறிக்கொண்டு தாம் நினைத்தபடி செல்லும் இயல்பான தன்மை உடையவை. அதை அறிந்து நான் அவைகளை அடக்கி நேர் வழியில் செலுத்துவதன் பொருட்டு அறிவு எனும் ஞானமாகிய அங்குசத்தைப் பயன்படுத்தினேன். எனினும் அவைகள் அதையும் மீறித் தம் விருப்பப்படி ஓடித் தமக்கு விருப்பமானவைகளை மிகுதியாக பெற்று, அதனால் மேலும் மதம் மிகுந்து தீய குணத்தை மிக அடைந்து என்னை நிலைகுலையச் செய்யுமாறு பெரிது.

விளக்க உரை

  • ஞானத்தின் வழி சென்றாலும் ஐந்து இந்திரியங்களை அடக்காமல் புறக்கணித்தால் அவற்றால் பெருங்கேடு விளையும் எனும் பொருள் பற்றியது இப்பாடல்.
  • இந்திரியங்களால் அடைப்பெறும் சுகங்கள் அனைத்தும் மேலும் மேலும் துன்பம் தருபவையே.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

ஞேயம் என்பது என்ன?
அறியப்படும் பொருள்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – கடந்தை

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  கடந்தை

பொருள்

  • திருப்பெண்ணாகடம்
  • ஒரு குளவிவகை
  • பெருந்தேனீ

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆவா சிறுதொண்ட னென்னினைந் தானென் றரும்பிணிநோய்
காவா தொழியிற் கலக்குமுன் மேற்பழி காதல்செய்வார்
தேவா திருவடி நீறென்னைப் பூசுசெந் தாமரையின்
பூவார் கடந்தையுட் டூங்கானை மாடத்தெம் புண்ணியனே.

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

செம்மையான தாமரைப் பூக்கள் நிறைந்த கடந்தை என்றும் திருப்பெண்ணாகடம் என்றும் அழைக்கப்பெறும் தூங்கானைமாடத்தில் உறையும் எம் புண்ணியனே! இரக்கக்துடன் கூடிய ஆனந்தம் கொண்டு ‘இச்சிறு தொண்டன் என்னை விருப்புற்று நினைத்தான்’ என்று திருவுளம் பற்றிப் பெரிய பிணிகளும் நோய்களும் தாக்காதவாறு அடியேனைப் பாதுகாக்காமல் விடுத்தால் புண்ணியனாகிய உனக்குப் பழி வந்து சேரும். ஆதலினால் விரும்பும் அடியவர் தலைவனாகிய நீ உன் திருவடிகளில் பற்றித் தோய்ந்த திருநீற்றினை அடியேன் மீது பூசுவாயாக.

விளக்க உரை

  • சிறு தொண்டன் – தொண்டர்களில் சிறியேன்; சிறு தொண்டு புரிவேன்
  • அரும் பிணி நோய் – அகற்றுதற்கு இயலா பிணியையும் நோயையும்
  • எம் புண்ணியனே – எமது சிவபுண்ணியப் பயனாக உள்ளவனே

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

ஞானம் எதைக் குறிக்கும்?
அறியும் கருவி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துளக்கு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  துளக்கு

பொருள்

  • அசைவு
  • வருத்தம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.

தேவாரம் – இரண்டாம் திருமுறை – திருஞானசம்பந்தர்

கருத்து உரை

பூம்பாவாய்! வளையல்கள் அணிந்த கன்னிப் பெண்கள் வாழும் வளமான தெருக்களைக் கொண்டுள்ள திரு மாமயிலையில், தளர்வற்ற கபாலீச்சரம் என்னும் கோயிலில் விளங்கும் கபாலிச்சரர் எனும் பெருமானை பூச்சுக்களை உடைய இளமகளிர் கொண்டாடும் திருவிழாவாகிய கார்த்திகைத் திங்களில் நிகழும் கார்த்திகை விளக்கீடு  விழாக்களின்போது  திருவிளக்குகள் ஏற்றிக் கொண்டாடும் காட்சியைக் காணாது செல்வது முறையோ?

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

ஞாதுரு என்பது யார்?
அறிபவன்

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – மட்டு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  மட்டு

பொருள்

  • எல்லை
  • கள்
  • தேன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

விட்டார் புரங்கள் ஒரு நொடி வேவ ஓர் வெங்கணையால்
சுட்டாய்; என் பாசத்தொடர்பு அறுத்து ஆண்டுகொள்!-தும்பி பம்பும்
மட்டு ஆர் குழலி மலைமகள் பூசை மகிழ்ந்து அருளும்
சிட்டா! திருச் சத்திமுற்றத்து உறையும் சிவக்கொழுந்தே!

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

சிவக்கொழுந்தே!  வண்டுகள் விரும்பிச் செல்லும் தேன் பொருந்திய மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதியின் வழிபாட்டினை விரும்பும் மேம்பட்டவனே! பகைவருடைய மூன்று மதில்கள் கைந்நொடிப் பொழுதாகிய ஒரு மாத்திரையில் வெந்து போகுமாறு கொடிய அம்பினால் சுட்டு நீறாக்கினாய், அதுபோல் அடியேனுடைய உலகப்பற்றாகிய தொடர்பை நீக்கி அடிமை கொள்வாயாக!

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

பிரமாதா என்பது எவரைக் குறிக்கும்?
அளப்பவன்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – இணர்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  இணர்

பொருள்

  • ஒழுங்கு
  • தொடர்ச்சி
  • பூங்கொத்து

வாக்கிய பயன்பாடு

இணஞ்சி போனாத்தான் வாழ்க்க, அத நீங்க நல்லா புரிஞ்சிக்கணும்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புலவி அவனே
இணரும் அவன் தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் துன்னிநின் றானே.

பத்தாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

ஒரு பிரபஞ்ச பொருள்களை உணர்வதற்கு கருவியாகிய இருக்கும் உணர்வும், அந்த உணர்வினால் பொருள்களை உணர்கின்ற உயிரும், உணரப்பட்ட பொருள்களை விரும்பும் விருப்பமும், வெறுக்கின்ற வெறுப்பும் எல்லாம் ஆகியவன் சிவன். அனைத்துப் பிரபஞ்சப் பொருள்களையும் ஒன்றாக்கி இணைத்து செயற்படுத்துகின்ற அவன் பிறர் ஒருவராலும் பிரபஞ்சத்தில் இருந்து தனியே வேறுபடுத்தி நினைக்க வரமாட்டான். ஆயினும் கொத்தாய் உள்ள வாசனை மிக்க மலர்களிடம் இருந்து மணம் கமழ்வது போல அனைத்துப் பொருளின் செயல் பாட்டிலும் அவன் விளங்குகிறான்.

விளக்க உரை

  • எல்லாப் பொருள்களிலும் அவன் நீக்கமற நிறைந்து நிற்றல் பற்றியும், அனைத்துப் பொருள்களின் செயல் பாட்டையும் அவனது செயலாக உணர்தல் பற்றியதும் குறித்தது இப்பாடல்.
  • புணர்வு – விடாது விருப்பம் கொண்டு பற்றுதல்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

பிரமேயம் என்பது என்ன?
அளக்கப்படும் பொருள்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – குலாலன்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  குலாலன்

பொருள்

  • குயவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

காரிய காரணங்கள் முதல்துணை நிமித்தம் கண்டாம்
பாரின்மண் திரிகை பண்ணுமவன்முதல் துணைநி மித்தம்
தேரின்மண் மாயை யாகத் திரிகைதன் சத்தி யாக
ஆரியன் குலால னாய்நின் றாக்குவன் அகில மெல்லாம் .

திருநெறி 2 – சிவஞான சித்தியார்

கருத்து உரை

ஒரு காரிய நிகழ்ச்சிக்கு முதல் காரணம், துணை காரணம், நிமித்த காரணம் என்னும் மூன்று காரணங்கள் தேவைப்படும். இவைகளில் முதல் காரணமும், துணை காரணமும் தனியே தனித்து இயங்காது. காட்சிக்கு புலப்படும் குடம் முதலிய காரியத்திற்கு பஞ்ச பூதத்தில் ஒன்றான மண் முதல் காரணமாகவும், குலாச் சக்கரம் எனும் திரிகை துணைக் காரணமாகவும் இருக்கும். குயவன் நிமித்த காரணமாக இருப்பான்.  ஆராய்ந்து பார்ப்பின் மண் மாயையாகவும், திரிகை அருட்சக்தியாகவும், குயவனை சிவனாகவும் எடுத்து உலகம் தோற்றுவிக்கப்படும்.

விளக்க உரை

  • உலக படைப்பிற்கு சிவனே நிமித்த காரணம் என்பதை விளக்கும் பாடல்
  • மாயையில் இருந்து சிவன் தனது அருள் தன்மையினால் உலகங்களை தோற்றுவிக்கிறான் என்பது விளங்கும்.
  • புறப்புறச் சமயம், புறச் சமயம், அகப்புறச் சமயம் கொள்கைகள் மறுதலிக்கப்பட்டு அகச்சமய கருத்துக்கள் நிலை நிறுத்தப் பெறும்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அளவை எனும் பிரமாணத்திற்கு அடிப்படை எவை?
அளவை, அளக்கும் கருவி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – துறத்தல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  துறத்தல்

பொருள்

  • கைவிடுதல்
  • பற்றற்றுத் துறவுபூணுதல்
  • நீங்குதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

துறக்கப் படாத வுடலைத் துறந்துவெந் தூதுவரோ
டிறப்ப னிறந்தா லிருவிசும் பேறுவ னேறிவந்து
பிறப்பன் பிறந்தாற் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர்
மறப்பன்கொ லோவென்றென் னுள்ளங் கிடந்து மறுகிடுமே .

தேவாரம் – நான்காம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

எந்த விதமான பற்றும் இல்லாமல் விட்டு  ஒழிப்பதற்கு அரிதான இவ்வுடம்பை விடுத்துக் கொடிய காலதூதருடைய செயல்களால் இறப்பேன். அவ்வாறு இறந்தால் மேலுலகம் அடைவேன். மேலுலகம் சென்று வந்து மீண்டும் பூமியில் இறங்கி மீண்டும் பிறப்பேன். அவ்வாறு பிறந்தால் பிறைச்சந்திரனை அணிந்த நீண்ட சடையை உடைய தலைக்கோலத்தை அணிந்த பெருமானுடைய பெயரை மறந்து விடுவேனோ என்று என் உள்ளம் கிடந்து வருந்துகிறது.

விளக்க உரை

  • துறக்கப்படாத உடல் – மும்மலங்களின் காரணமாக பற்று இல்லாமல் விட்டொழிக்க எளியதாக இல்லாத உடம்பு..

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

அளவை என்பது என்ன?
பொருள் உண்மையை கண்டறியும் கருவி

Loading

சமூக ஊடகங்கள்

மெய்ப் பொருள் – 2. தருண கணபதி

தருண கணபதி

 

ஒவியம் : இணையம்

 

வடிவம் யானை முகம், எட்டுத் திருக்கரங்கள்
மேனி வண்ணம் நண்பகல் சூரியன் போன்ற நல்ல சிவந்த திருமேனி
திருக்கைகள் எட்டுத் திருக்கரங்கள் – செழிப்பையும், வளத்தையும் முன் வைத்து ஒவியங்கள் / சிற்பங்கள்

பாசம், அங்குசம், மோதகம், விளாம்பழம், நாவற்பழம், ஒடிந்த தன்கொம்பு, நெற்கதிர், கரும்பின் துண்டு

பலன் தியானம் கைகூடுதல்

மந்திரம்

பாசாங்குசா பூபகபித்த ஜம்பூ
ஸ்வதநதசாலீஷூமபி ஸ்வஹஸ்தை:|
தத்தே ஸதா யஸ்தருணாருணாப:
பாயாத் ஸ யுக்ஷ்மாந் தருணோகணேச : ||

விளக்கம்

கைகளில் பாசம், அங்குசம், அபூபம்(அப்பவகை), விளாம்பழம், நாவல்பழம், தனது ஒரு தந்தம், நெற்கதிர் மற்றும் கரும்பு ஆகிய இந்த எட்டு பதார்த்தங்களையும் வைத்துக் கொண்டிருப்பவரும், நண்பகலில் விளங்குகின்ற கதிரவனின் ஒளியைக் கொண்டவருமான தருண கணபதி எப்பொழுதும் உங்களைக் காப்பாற்றுவாராக.

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – பரதுரியம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  பரதுரியம்

பொருள்

  • முத்துரியத்தில் ஒன்று (சீவதுரியம், பரதுரியம், சிவ துரியம்)
  • விழிப்பு, கனவு, உறக்கம்  எனும் மூன்றிற்கும் அப்பாற்பட்ட நான்காவது நிலை துரியம்; இதற்கு மேல் அதி நுட்பமானது பரதுரியம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

பரதுரி யத்து நனவும் படிஉண்ட
விரிவில் கனவும் இதன்உப சாந்தத்(து)
உரிய சுழுனையும் ஓவும் சிவன்பால்
அரிய துரியம் அசிபதம் ஆமே.

எட்டாம் திருமுறை – திருமந்திரம் – திருமூலர்

கருத்து உரை

பரதுரியத்தில் உலகத்தை அனுபவிக்கும் கேவல சகல அஞ்சவத்தைகள் ஆகிய (விழிப்பு, உறக்கம், கனவு, துரியம், துரியாதீதம்) எப்பொழுதும் நிகழாது முழுவதுமாக நீங்கும். ஆயினும் நின்மல துரியத்தில் அவை ஒரு சில நேரங்களில் நிகழ்ந்தாலும் நிகழும். ஆகவே, நின்மல துரியம் என்பது `அசி` பத அனுபவமாய் நிற்பதே ஆகும்.

விளக்க உரை

  • அதையும் கடந்த அனுபவம் ஆதல் இல்லை’ எனும் பொருளில் இப்பாடல்.
  • நின்மல துரியம் – கேவல அவத்தைகள் நீங்கி, அருளாலே தன்னையும் கண்டு அருளையும் கண்டு அதன் வயமாய் நிற்கும் நிலை.
  • நனவு, கனவு, சுழுத்தி, துரியம் ஆகிய நான்கு வேறு வேறு நிலைகள் ஒன்றோடு ஒன்று முடியும் இடத்திலேயே மற்றொன்று (சீவதுரியம், பரதுரியம், சிவ துரியம்) தொடங்கிவிடும்.
  • அதனால் பன்னிரண்டு நிலைகள் (குணம் மூன்றும் ( சாத்வீகம், ராட்சத, தாமச), நான்காகிய அந்தக்கரணங்கள்(மனம், சித்தம், புத்தி, அகங்காகரம்) இவைகள் ஐம்பொறிகள் வழியே கலந்து) சுருங்கிப் பத்து நிலைகள் (மெய், வாய், கண்,மூக்கு,செவி,பகுத்தறிவு ஆகிய ஆறறிவு மற்றும் குறிப்பறிவு, மெய்யறிவு, நுண் மாண் நுழை புலம் என்னும் அறிவு (சிற்றம்பலம் நுழைய தேவையான அறிவு), வாலறிவு (இறை அறிவு)) ஆகக் குறைந்துவிடும். சீவதுரியம் முடியும் இடத்தில் பரநனவு நிலை தொடங்கும். பரதுரியம் முடியும் இடத்தில் சிவதுரியத்தின் நனவு நிலை தொடங்கி விடும்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

காரணத்தில் இருந்து தோன்றும் காரிய வளர்ச்சி வகைகள் எவை?
பரிணாமம், விருத்தி

 

(இச்சொல் சித்தர்கள் பரிபாஷைச் சொல் என்பதாலும், யோக மார்கத்துடன் சம்மந்தப்பட்டது என்பதாலும் அதை விளக்க முற்படுகையில் பிழை ஏற்பட்டிருப்பின் அது எனது பிழை. நிறை எனில் அது குரு அருள்.)

 

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஆசு

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  ஆசு

பொருள்

  • விரைவு
  • ஆசுகவி
  • குற்றம்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆசு இல் பர தாரம்அவை அம் சிறை அடைப்பேம்;
மாசு இல் புகழ் காதலுறுவேம்; வளமை கூரப்
பேசுவது மானம்; இடை பேணுவது காமம்;
கூசுவது மானுடரை; நன்று, நம் கொற்றம்!

கம்பராமாயணம் – யுத்த காண்டம்

கருத்து உரை

ஒரு குற்றமும் இல்லாத ஒருவன் மனைவியை அழகிய சிறையில் அடைத்து  வைப்போம்; குற்றமற்ற  புகழ் அடையவும் விரும்புவோம்; மற்றவர்கள் பெருமைப்படும் படியாக  பேசுவதோ  வீர உரைகள்; அதற்கிடையிலே விரும்புவது காமம்; மானிடர்களைப் கண்டு அஞ்சுகிறோம்; நமது வெற்றி நன்றாய் இருக்கிறது.

விளக்க உரை

  • இராவணனைப் பார்த்து கும்பகர்ணன் கூறியது இப்பாடல். ‘நாம் உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவதே நம் பெருமை, என்ன ஓர் ஆட்சி!’ என இடித்துரைக்கிறான்.
  • வாக்கிய அமைப்பில் எதிரும் புதிருமான கருத்துக்கள் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. ஆட்சியாளர்களின் / மனிதர்களின் மனநிலையை எடுத்துக்காட்டும் பாடல்
  • ‘நன்று’ இகழ்ச்சி குறித்தது

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

பிரபஞ்சத்தின் நிமித்த காரணம் எது?
இறைவன்

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஆகம்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஆகம்

பொருள்

  • உடல்
  • மார்பு
  • மனம்
  • சுரை

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஆகத்தோர் பாம்பசைத்து வெள்ளே றேறி
அணிகங்கை செஞ்சடைமே லார்க்கச் சூடிப்
பாகத்தோர் பெண்ணுடையார் ஆணு மாவர்
பசுவேறி யுழிதருமெம் பரம யோகி
காமத்தால் ஐங்கணையான் தன்னை வீழக்
கனலா எரிவிழித்த கண்மூன் றினார்
ஓமத்தால் நான்மறைகள் ஓதல் ஓவா
ஒளிதிகழும் ஒற்றியூ ருறைகின் றாரே

தேவாரம் – ஆறாம் திருமுறை – திருநாவுக்கரசர்

கருத்து உரை

அசையும் பாம்பினை மார்பில் சூடி, வெண்ணிறக் காளையில் அமர்ந்து உலகங்களைச் சுற்றி உலவும் மேம்பட்ட யோகியாய்,  ஆரவாரிக்குமாறு  இருக்கும் கங்கையைச் சடையில் சூடியவராய், பார்வதி பாகராய், ஆண்மையின் இலக்கணம் கொண்டவராய், காமவேட்கையை தரும்  ஐந்து மலரம்புகளை உடைய மன்மதன் சாம்பலாகி விழுமாறு வெகுண்டு மூன்றாம் கண்ணில் இருந்து  தீப் புறப்பட விழித்த பெருமானாய், வேள்விகளோடு நான்கு வேதம் ஓதுதலும் நீங்காத ஞான ஒளி விளங்கும் ஒற்றியூரில் உகந்து அருளுகின்றார்.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

பிரபஞ்சத்தின் துணைக் காரணம் எது?
திருஅருட்சக்தி

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சழக்கன்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  சழக்கன்

பொருள்

  • தீயவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

காடேல்மிக வாலிது காரிகை யஞ்சக்
கூடிப்பொந்தில் ஆந்தைகள் கூகை குழறல்
வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்
கோடிக்குழ காஇடங் கோயில்கொண் டாயே.

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

கோடிக்கரையில் எழுந்தருளியுள்ள அழகனே! இங்கு இருக்கும் காடோ மிகப் பெரிது; உன் தேவி அச்சம் கொள்ளுமாறு எப்பொழுதும் மரப் பொந்தில் உள்ள ஆந்தைகளும், கூகைகளும் பல கூடி இடையறாது கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்கின்றன. வேட்டைத் தொழில் செய்தும், வஞ்சனையுடையவராகவும் இங்கு வாழ்பவர் மிகவும் கொடியவர்கள்; இவ்விடத்தை உறை விடத்தைக் கொண்டாயே இது என்?

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

பிரபஞ்சத்தின் முதற் காரணம் எது?
மாயை

Loading

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – ஏலுதல்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  ஏலுதல்

பொருள்

  • இயலுதல்
  • பொருந்துதல்
  • தகுதியாதல்
  • கூடுதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

இல்லை நின்கழற் கன்ப தென்கணே
  ஏலம் ஏலுநற் குழலி பங்கனே
கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்
  டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய்
எல்லை யில்லைநின் கருணை யெம்பிரான்
  ஏது கொண்டுநான் ஏது செய்யினும்
வல்லை யேயெனக் கின்னும் உன் கழல்
  காட்டி மீட்கவும் மறுவில் வானனே.

எட்டாம் திருமுறை – திருவாசகம் – மாணிக்கவாசகர்

கருத்து உரை

நான் எதனைக் கருவியாகக்கொண்டு (ஐம் புலன்கள்) எத்தீய செயலைச் செய்தாலும் (புலன் வழி தொழில்கள்), இனியும் உன்னுடைய திருவடியை எனக்குக் காட்டி மீட்டு ஆட்கொள்ளவும் ஆற்றலுடையவனே! ‘மறு இல்லாத வானம் எனப்படும்’ ஐம் பெரும் பூதங்களும் பொருள் பிரபஞ்சமாகத் தோன்ற இடம் தந்து நிற்கும் குற்றமில்லாத வானமாகிய சிவலோகத்தை உடைய சிவமே! வாசனை திரவியங்கள் பொருந்திய அழகிய கூந்தலையுடைய தேவியை தன்னுடைய ஒருபாகமாக உடையவனே! எம் பெருமானே! உன்னுடைய திருவடியை போற்றுவதற்கு உரிய அன்பு என்னிடம் இல்லை (எனினும்) கல்லை உண்பதற்கு ஏற்ற பழமாகச் செய்கின்ற வித்தையைக் கொண்டு என்னை உன்னுடைய திருவடிக்கு அன்புடையனாகச் செய்தாய் உன்னுடைய திருவருளுக்கு ஓர் அளவுவே இல்லை.

விளக்க உரை

  • இதனால், பசு கரணத்தை, பதி கரணமாக மாற்றித் ‘திருவடி இன்பத்தை நல்கும் ஆற்றலுடையவன் இறைவன்’ என்பது கூறப்பட்டது.
  • எட்டுவகையான குணங்களில் ஒன்றான ‘பேரருள் உடைமையை’ முன்வைத்து சிவபெருமான் தான் படைத்த எல்லா உயிர்கள் மீதும் வைத்த எல்லையில்லா பெரும் கருணையினால் அந்த உயிர்களுக்கு அவனே தலைவன் ஆகிறான்.
  • ‘கல் நார் உரித்தென்ன’ எனவும் ‘கல்லா மனத்துக் கடைப்பட்ட நாயேனை வல்லாளன் தென்னன் பெருந்துறையான் பிச்சேற்றிகல்லைப் பிசைந்து கனியாக்கி தன் கருணை வெள்ளத்து அழுத்தினான் ” எனும் வரிகளும் ஒப்பு நோக்கி சிந்திக்கத் தக்கது.
  • ‘விச்சைகொண்டு’ – வித்தை கொண்டு – கல்லை மென்கனியாக்குதல் வித்தையால் நிகழ்தப் பெறும். அதைப் போல எனது வன்மையான மனத்தை நெகிழ்வித்து நின்தாளுக்கு உரிய அன்பனாக்கியது பெரிய வித்தை எனும் பொருள் பற்றி.
  • ‘வல்லையே’ எனும் ஏகாரம் தேற்றம் பற்றி நின்றதால் `இனியும் என்னை மீட்க நீ வல்லாய் என்னும் துணிவுடையவன் ஆனேன்` எனும் பொருள் பற்றி.

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

காரியத்தை உண்டாக்கும் கர்த்தா எது? அதன் வேறு பெயர் என்ன?
நிமித்த காரணம், காரண கர்தா.

Loading

சமூக ஊடகங்கள்