அமுதமொழி – விளம்பி – ஆனி – 31 (2018)

பாடல்

தங்கிய மாதவத்தின் தழல்
வேள்வியி னின்றெழுந்த
சிங்கமும் நீள்புலியுஞ் செழு
மால்கரி யோடலறப்
பொங்கிய போர்புரிந்து பிளந்
தீருரி போர்த்ததென்னே
செங்கயல் பாய்கழனித் திரு
நாகேச் சரத்தானே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

செங்கயல் எனும் ஒரு மீன்வகையான கயல்மீன்கள் துள்ளுகின்ற வயல்களை உடைய திருநாகேச்சரத்தில் எழுந்தருளியிருப்பவனே, நீ, மாற்றம் இல்லாத, நிலையான பெரிய தவத்தினால், வேள்வித் தீயினியில்  இருந்து தோன்றிய சிங்கமும், மிகப் பெரியதான புலியும், திருமாலின் நிறம் ஒத்த பருத்த பெரிய யானையும் கதறி ஒடும்படி செய்தும், அழியும்படி செய்வதுமான மிக்க போரைச் செய்து கிழித்து, அவற்றினின் தோலை உரித்தும், அத்தோலைப் போர்த்தியும் செய்தற்குக் காரணம் யாது?

விளக்க உரை

  • ‘உன்னை உணரும் உணர்வில்லாதோர்க்கும் உணர்வு உண்டாக்குதல்’ என்பது பற்றிய பாடல்.
  • தவம் – தாருகாவன முனிவர்களுடையது. அட்ட வீரட்டான செயல்களில் ஒன்றான இவ்வரலாற்றினை வழுவூர் திருத்தல பெருமை கொண்டு அறிக.
  • போர்த்தல் – மறைத்தல் என்னும் பொருளில்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – வைகாசி – 14 (2018)

 

பாடல்

தண்டேர்மழுப் படையான்மழ

   விடையான்எழு கடல்நஞ்

சுண்டேபுரம் எரியச்சிலை

   வளைத்தான்இமை யவர்க்காத்

திண்டேர்மிசை நின்றான்அவன்

   உறையுந்திருச் சுழியல்

தொண்டேசெய வல்லாரவர்

   நல்லார்துயர் இலரே

 

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

 

பதவுரை

மழுப்படையைத் தண்டு போல கொண்டு ஏந்தியவனும், இளமையான இடபத்தை உடையவனும், தேவர்களுக்காக கடலில் எழுந்த நஞ்சினை உண்டு அவர்களை காத்தவனும், திரிபுரங்கள் எரியும்படி வில்லை வளைத்துத் வலிமையானதும் உறுதியானதுமான தேரின்மேல் நின்றவனும் ஆகிய சிவபெருமான் எழுந்தருளியிருக்கின்ற திருச்சுழியலில் சென்று அவனுக்குத் தொண்டு செய்ய வல்லவர்கள், இன்பம் உடையவரும் துன்பம் இல்லாதவரும் ஆவார்கள்.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 27 (2018)

பாடல்

உரைப்பார் உரைப்பவை உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்காடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
காரைக்கால் முதலையைப் பிள்ளைதரச் சொல்லு காலனையே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

உன்னை இடையறாது நினைத்து, உன்னைப் பற்றி அறிந்து, அதன் உட்பொருளை பொருள் மாறாது உரைக்கும் அடியார்கள் தங்கள் தலை உச்சியாக இருப்பவனே, இடுப்பில் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லா வகையிலும் முதலும் முடிவும் ஆனவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள `அவினாசி` என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, காலனையும், முதலையையும், இக்குளக்கரையில் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.

விளக்க உரை

  • `காலனை முதலையிடத்தும், முதலையைக் கரையிடத்தும் தரச்சொல்லு ` என்ற பொருளில் சுந்தரர் இவ்வாறு இப்பாடலை அருளிச்செய்து முடிக்குமுன்பே, நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அங்கு வந்து, சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை  பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது வரலாறு
  • உள்குதல் – உள்ளுதல், நினைதல், ஆராய்தல், நன்கு மதித்தல், மீண்டும் நினைத்தல், இடைவிடாது நினைத்தல்
  • ‘உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே’ எனும் பொருளில் பல இடங்களில் விளக்கப்பட்டுளது. இறைவன் புகழ் சொல்லை விரும்பாதவன் எனும் பொருளிலும், உரைப்பார், உரைப்பவை உரைப்பார், உள்கி உரைப்பவை உரைப்பார் எனும் பொருளிலும் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
  • தங்கள் உச்சியாய் – யோக தொடர்புள்ளவர்கள் குரு மூலமாக அறிக

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 19 (2018)

பாடல்

போந்தனை தரியாமே நமன்றமர் புகுந்தென்னை
நோந்தனை செய்தாலும் நுன்னல தறியேன்நான்
சாந்தனை வருமேலுந் தவிர்த்தென்னை யாட்கொண்ட
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீயன்றே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

 பதவுரை

இறக்கும் நிலையை  நீக்கி என்னை ஆட்கொண்ட தலைவனே, திருக்குருகாவூர் வெள்ளடைக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எனது துன்பத்தைச் சிறிதும் பொறாமல் அதை நீக்குதலுக்கு தகுதியானவன் நீயே அன்றோ! ஆதலினால் எமனுக்கு ஏவலராய் உள்ள தூதர்கள் வந்து எனக்கு துன்புறும் செயல்களைச் செய்யினும், யான் உன்னை அன்றி வேறொருவரைத் துணையாக அறியமாட்டேன்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

தத்புருட மந்திரத்தால் செய்யும் தொழில் என்ன?
திரோபவம் எனும் மறைத்தல்

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – விளம்பி – சித்திரை – 10 (2018)

பாடல்

நிலனே நீர்வளிதீ நெடுவானக மாகிநின்ற
புலனே புண்டரிகத் தயன்மாலவன் போற்றிசெய்யும்
கனலே கற்பகமே திருக்கற்குடி மன்னிநின்ற
அனல்சேர் கையினனே அடியேனையும் அஞ்சலென்னே.

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

தீ ஏந்திய கையை கொண்டு, திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி உள்ளவனே, நிலம், நீர், தீ, காற்று, நீண்டவானம் எனும் ஆகாயம் என்னும் ஐந்துமாகி உள்ளவனே, தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமன் மற்றும் மாயோன் ஆகிய திருமால் இருவரும் போற்றி நின்ற பொழுதில் நெருப்பாகி தோன்றியவனே, கற்பகத் தரு போன்றவனே, அடியேனையும், `அஞ்சதே` என்று சொல்லி அருள் புரிவாயாக.

விளக்க உரை

  • இத்தலத்தில் இறைவர்  ‘கற்பகநாதர்’  ஆதலின்  ‘கற்பகமே` எனும் சொற்றொடர். ஆறாம்  திருமுறையில் ‘கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே’ என்றும் பாங்கோடு வைத்து சிந்திக்கத் தக்கது.
  • அஞ்சலென்னே என்பதை `அஞ்சாதி` என்று சொல்லி அருள் புரிவாயாக என்று சில இடங்களில் விளக்கப்பட்டுளது.  ‘அஞ்சுள வானை அடவியுள் வாழ்வன …அஞ்சாதி யாதி அகம்புக லாமே’  எனும் திருமந்திரப் பாடலின் படி அஞ்செழுத்து சிவன் இருப்பிடம் இத்தலம் ஆகவே அஞ்செழுத்தாக சிவன் இத்தலத்தில் உறைகின்றான் என்றும் பொருள் தோன்றும். கற்றறிந்தோர் பொருள் கொண்டு உய்க.

சமூக ஊடகங்கள்

அமுதமொழி – ஹேவிளம்பி – பங்குனி – 26 (2018)

பாடல்

ஓவு நாள்உணர் வழியும்நாள் உயிர்
   போகும் நாள்உயர் பாடைமேல்
காவு நாள்இவை என்ற லாற்கரு
   தேன்கி ளர்புனற் காவிரிப்
பாவு தண்புனல் வந்தி ழிபரஞ்
   சோதி பாண்டிக் கொடுமுடி
நாவ லாஉனை நான்ம றக்கினுஞ்
   சொல்லும்நா நமச்சி வாயவே.

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

பதவுரை

மேலான ஒளிவடிவமாய் ஆனவனே, மிகுந்து வருகின்றதும், பரந்த வெள்ளம் வந்து பாய்கின்றதும் ஆன  நீரையுடைய காவிரியாற்றின் கரையில் அமைந்திருக்கும் `திருப் பாண்டிக் கொடுமுடி` என்னும் கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற நாவலனே, அடியேன் உன்னை நினையாத நாள்களை, என் உணர்வு அழிந்த நாளாகளாகவும், உயிர்போன நாளாகளாகவும், தன்னை விட உயரமாக தோளின் மேல்  உயரத்தோன்றும் படி பாடையின்மேல் வைத்துச் சுமக்கப்படும் நாள்களாகவும் கருதுதல் அன்றி  வேறு நல்ல நாளாகக் கருதமாட்டேன்; ஆதலினால் உன்னை நான் மறந்தாலும், என் நாவானது உனது திருப்பெயராகிய ` நமச்சிவாய` என்பதனை இடையறாது சொல்லும்.

விளக்க உரை

  • நாவலன் – மறைகளையும் , மறைகளின் பொருளையும் பற்றி சொல்பவன்

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

அருவத் திருமேனியின் வேறு பெயர்கள் எவை?
நிட்களத் திருமேனி, அவ்வியத்த லிங்கம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – ஒறுத்தல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  ஒறுத்தல்

பொருள்

  • தண்டித்தல்
  • கடிதல்
  • வெறுத்தல்
  • இகழ்தல்
  • அழித்தல்
  • துன்புறுத்தல்
  • வருத்துதல்
  • ஒடுக்குதல்
  • நீக்கல்
  • குறைத்தல்
  • அலைத்தல்
  • நோய்செய்தல்
  • பேராசை செய்தல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

ஒறுத்தாய் நின்னருளில் லடியேன்பி ழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையுந் நாயேனைப் பொருட்படுத்துச்
செறுத்தாய் வேலைவிடம் மறியாமல் உண்டுகண்டங்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே.

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

குளிர்ந்த வயல்களையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, உனது கருணையினால் ஒரு முறை என்னை தண்டித்தலின் பொருட்டு கடிந்து, வெறுத்து என்னை இகழ்ந்தாய்; நாய் போன்ற அடியேன் செய்த பிழைகளை பொருட்படுத்தாது அவை அனைத்தையும் ஒரு பொருளாக வைத்துப் பொறுத்துக் கொண்டாய்; தேவர்கள் இறக்காமல் இருக்கும் பொருட்டுக் கடலில் பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கண்டத்தில் நிறுத்தி கண்டம் கரிய நிறமுடைவனாய்; இவை உன் அருட்செயல்கள் அன்றி வேறு என்ன!

விளக்க உரை

  • ஒறுத்தது – வானுலகில் இருந்த போதும் சிறு மயக்கம் கொண்டதால் நில உலகில் பிறப்பித்தது, பொறுத்தது – ‘பித்தா’ என வன்மை பேசியது. இரண்டும் அருளினாலே என்பது பொருள்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

அறிவிக்க அறியும் சித்து எது?
ஆன்மா

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – போந்த

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  போந்த

பொருள்

  • தகுந்த
  • பழகின
  • தீர்மானமான

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

வேதியர் விண்ணவரும் மண்ணவ ரும்தொழநற்
சோதிய துருவாகிச் சுரிகுழ லுமையோடும்
கோதிய வண்டறையுங் கூடலை யாற்றூரில்
ஆதிஇவ் வழிபோந்த அதிசயம் அறியேனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

வேதங்களைப் பின்பற்றி நடப்பவராகிய அந்தணரும், விண்ணில் வாழும் தேவரும், மனிதர்களும் வணங்கி தொழுது நிற்க, நல்ல ஒளி உருவமாய், சுருண்ட கூந்தலையுடைய உமாதேவியோடும், பூக்களில் உறையும் வண்டுகள் ஓசையைச் செய்கின்ற திருக்கூடலையாற்றூரில் எழுந்தருளியிருக்கின்ற முதல்வன், இந்த வழியே  என்முன் வந்த வியத்தகு செயலை அடியேன் அறியாதே ஒழிந்தேன்; இஃதே என்னே ஏழ்மை!

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்கள் எதனிடத்தே செய்யப்படுகின்றன?
மாயை ஆகிய சடப் பொருளில்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – நொடித்தல்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ –  நொடித்தல்

பொருள்

  • சொல்லுதல்
  • கோள்சொல்லுதல்
  • பழித்தல்
  • அழித்தல்
  • கட்டுக்குலைதல்
  • நடக்கும்போது கால் சிறிது வளைதல்
  • ஒடித்தல்
  • உறுப்பாட்டுதல்
  • பால் முதலியன சுரத்தல்
  • இழப்படைதல்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

தானெனை முன்படைத்தான் அத
  றிந்துதன் பொன்னடிக்கே
நானென பாடலந்தோ நாயி
  னேனைப் பொருட்படுத்து
வானெனைவந் தெதிர்கொள்ள மத்த
  யானை அருள்புரிந்து
ஊனுயிர் வேறுசெய்தான் நொடித்
  தான்மலை உத்தமனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

வினைகளை அழிக்கும் கடவுளது மலை என்றும் திருக்கயிலை மலைக்குப் பெயரானதும் ஆன நொடித்தான் மலை எனும் தலத்தில்  வீற்றிருந்தருளும் முதல்வன், தானே முன்பு என்னை இவ்வுலகில் படைத்தான்; அக் குறிப்பினை உணர்ந்து அவனது பொன்போன்ற திருவடிகளுக்கு, என்னளவில் பாடல்கள் செய்தேன் ! நாய் போன்ற இழிவான என்னின் அத்தகைய குறையை எண்ணாது, என்னை அடியவர்களுள் ஒருவனாக வைத்து எண்ணி, வானவர்களும் வந்து எதிர்கொள்ளுமாறு, பெரிய யானை ஊர்தியை எனக்கு அளித்து, எனது உடலொடு உயிரை உயர்வுபெறச் செய்தான்; என்னே அவனது  திருவருள்!

விளக்க உரை

  • எண்ணில்லாத தேவர் யாவரையும் வந்து எதிர்கொள்ளுமாறு அருள் செய்தல் – கடைப்பட்ட எனக்கும் அருளினான்; அவ்வண்ணமே உங்களுக்கும் அருளுவான் எனும் பொருளில் இயற்றப்பட்டது.

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – அந்தரம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  அந்தரம்

பொருள்

  • வெளி
  • உள்வெளி
  • இருள்
  • ஆகாசம்
  • நடு
  • இடம்
  • இடுப்பு
  • நடுவுநிலை
  • தேவலோகம்
  • பேதம்
  • விபரீதம்
  • தீமை
  • கூட்டம்
  • முடிவு

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மந்திரம் ஒன்றறியேன் மனை
  வாழ்க்கை மகிழ்ந்தடியேன்
சுந்தர வேடங்களால் துரி
  சேசெயுந் தொண்டன்எனை
அந்தர மால்விசும்பில் அழ
  கானை யருள்புரிந்த
துந்தர மோநெஞ்சமே நொடித்
   தான்மலை உத்தமனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

நெஞ்சமே, அடியேன் ஆகிய யான், மந்திரங்களை ஓதுதல் செய்யாதவன்; இல்வாழ்க்கையில் மயங்கியவன்; அடியவர் வேடத்தை மேற்கொள்ளாது, அழகைத் தரும் வேடங்களால் அலங்கரித்துக் கொண்டவன்;  இவ்வாறெல்லாம் பொருந்தாதனவற்றையே செய்து வாழும் ஒரு குற்றம் உடைய தொண்டன்; எனக்கு திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் முதல்வன், வெளியாகிய பெரிய வானத்தில் செல்லும் அழகுடைய யானை ஊர்தியை அளித்தருளியதும் என் தரத்ததோ!

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை – மத்தம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  மத்தம்

பொருள்

  • களிப்பு
  • மயக்கம்
  • யானைமதம்
  • பைத்தியம்
  • செருக்கு
  • ஊமத்தஞ்செடி
  • எருமைக்கடா
  • குயில்
  • மத்து

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

மத்தம்மத யானையின் வெண்மருப் புந்தி
முத்தங்கொணர்ந் தெற்றிஓர் பெண்ணை வடபால்
பத்தர்பயின் றேத்திப் பரவுந் துறையூர்
அத்தாஉனை வேண்டிக்கொள் வேன்தவ நெறியே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

மயக்கங்கொண்ட மதயானைகளின் தந்தங்களைத் தள்ளிக்கொண்டுவந்தும், அழகிய முத்துக்களைக் கரையில் எறிவதும் ஆகிய ஒப்பற்ற பெண்ணையாற்றின் வடகரைக்கண் உள்ளதும், அடியவர் பலகாலமும் வந்து தொழுது வழிபடுகின்ற திருத்துறையூரில் எழுந்தருளியுள்ள தந்தையே! உன்னிடத்தில் அடியேன் தவநெறியையே வேண்டிக் கொள்வேன்; வேறொன்றையும் வேண்டேன்.

துக்கடாசைவ சித்தாந்தம் வினா விடை

காணும் உபகாரத்தின் பயன் எது?
உயிரின் அறிவிச்சை செயல்கள் பொருளுடன் கலத்தல்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – வாணன்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை ‘ –  வாணன்

பொருள்

  • வசிப்பவன்
  • ஏதேனும் ஒரு தொழிலால் வாழ்பவன்.
  • பாவாணன்
  • மகாபலி வம்சத்தில் தோன்றிய அரசன்
  • நெல்வகை
  • ஒரு சிவகணத் தலைவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

அரவொலி ஆகமங்கள் அறி
வார்அறி தோத்திரங்கள்
விரவிய வேதஒலி விண்ணெ
லாம்வந் தெதிர்ந்திசைப்ப
வரமலி வாணன்வந்து வழி
தந்தெனக் கேறுவதோர்
சிரமலி யானைதந்தான் நொடித்
தான்மலை உத்தமனே

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

‘அரகர’ என்று சிவபெருமானைத் துதித்து எழுப்பும் ஒலியும், ஆகமங்களினின் பொருளை முழுமையாக உணர்ந்து ஓதும் ஒலியும், அறிவுடையோர் அறிந்து பாடும் பாட்டுக்களின் ஒலியும், ஆகாயம் முழுதும் நிறைந்துவந்து எதிரே ஒலிக்கவும், மேன்மை நிறைந்த  ‘வாணன்’ என்னும் கணத்தலைவன் வந்து முன்னே வழிகாட்டிச் செல்லவும், ஏறத்தக்கதான முதன்மை நிறைந்த யானையை  திருக்கயிலையில் வீற்றிருந்து அருளும் முதல்வன் எனக்கு அளித்து அருளினான் என்னே அவனது திருவருள்!

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

கருதல் அளவையின் வேறு பெயர் என்ன?
அனுமானப் பிரமாணம்

சமூக ஊடகங்கள்

அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை – சழக்கன்

ஓவியம் : இணையம்

‘அறிவோம் அழகுத் தமிழ் வார்த்தை’ –  சழக்கன்

பொருள்

  • தீயவன்

குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு

பாடல்

காடேல்மிக வாலிது காரிகை யஞ்சக்
கூடிப்பொந்தில் ஆந்தைகள் கூகை குழறல்
வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்
கோடிக்குழ காஇடங் கோயில்கொண் டாயே.

தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்

கருத்து உரை

கோடிக்கரையில் எழுந்தருளியுள்ள அழகனே! இங்கு இருக்கும் காடோ மிகப் பெரிது; உன் தேவி அச்சம் கொள்ளுமாறு எப்பொழுதும் மரப் பொந்தில் உள்ள ஆந்தைகளும், கூகைகளும் பல கூடி இடையறாது கூக்குரல் இட்டுக் கொண்டு இருக்கின்றன. வேட்டைத் தொழில் செய்தும், வஞ்சனையுடையவராகவும் இங்கு வாழ்பவர் மிகவும் கொடியவர்கள்; இவ்விடத்தை உறை விடத்தைக் கொண்டாயே இது என்?

துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை

பிரபஞ்சத்தின் முதற் காரணம் எது?
மாயை

சமூக ஊடகங்கள்