‘அறிவோம் அழகுத் தமிழ் சொல் / வார்த்தை’ – ஒறுத்தல்
பொருள்
- தண்டித்தல்
- கடிதல்
- வெறுத்தல்
- இகழ்தல்
- அழித்தல்
- துன்புறுத்தல்
- வருத்துதல்
- ஒடுக்குதல்
- நீக்கல்
- குறைத்தல்
- அலைத்தல்
- நோய்செய்தல்
- பேராசை செய்தல்
குறிப்பு உதவி / இலக்கிய பயன்பாடு
பாடல்
ஒறுத்தாய் நின்னருளில் லடியேன்பி ழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையுந் நாயேனைப் பொருட்படுத்துச்
செறுத்தாய் வேலைவிடம் மறியாமல் உண்டுகண்டங்
கறுத்தாய் தண்கழனிக் கழிப்பாலை மேயானே.
தேவாரம் – ஏழாம் திருமுறை – சுந்தரர்
கருத்து உரை
குளிர்ந்த வயல்களையுடைய திருக்கழிப்பாலையில் விரும்பி எழுந்தருளியிருப்பவனே, உனது கருணையினால் ஒரு முறை என்னை தண்டித்தலின் பொருட்டு கடிந்து, வெறுத்து என்னை இகழ்ந்தாய்; நாய் போன்ற அடியேன் செய்த பிழைகளை பொருட்படுத்தாது அவை அனைத்தையும் ஒரு பொருளாக வைத்துப் பொறுத்துக் கொண்டாய்; தேவர்கள் இறக்காமல் இருக்கும் பொருட்டுக் கடலில் பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு கண்டத்தில் நிறுத்தி கண்டம் கரிய நிறமுடைவனாய்; இவை உன் அருட்செயல்கள் அன்றி வேறு என்ன!
விளக்க உரை
- ஒறுத்தது – வானுலகில் இருந்த போதும் சிறு மயக்கம் கொண்டதால் நில உலகில் பிறப்பித்தது, பொறுத்தது – ‘பித்தா’ என வன்மை பேசியது. இரண்டும் அருளினாலே என்பது பொருள்.
துக்கடா – சைவ சித்தாந்தம் வினா விடை
அறிவிக்க அறியும் சித்து எது?
ஆன்மா